
சாயாவனம் நாவலைப் படித்து முடிக்க மூன்று நாட்கள் ஆகியிருக்கின்றன.
மூன்று கட்டங்கள் கொண்ட விமானப் பயணத்தின் கடைசிக்கு முந்தைய ஆனால் சற்றே நீண்டதாக இருந்த கட்டத்தில் அருகில் அமர்ந்து இருந்த வெள்ளைக்காரன் நேர்த்தியான உடைகள் அணிந்து இருந்தான். என்னை விட நிச்சயமாக வயது குறைவு. பெருத்த உடம்பு வாகை இருத்திக் கொள்ள இருக்கை நிறையவே சிரமப் பட்டது.
பதினோரு மணிநேரமும் அதில் அநேகமாக நிறைந்திருந்த இரவுப் போதிலும் அவன் தூங்காது விழித்தே இருந்தான்.
விமானத்தில் பரிமாறப்படும் விதம் விதமான திராவகங்களின் ஒவ்வொரு வகையையும் ருசி பார்த்து விடுவதே அவனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.
ஆரெஸ்பதி பாட்டில் போன்ற ஒன்றிலிருந்து பெரிய சைஸ் டெட்டால் பாட்டில் வரை ருசிபார்க்க ஒவ்வொரு முறையும் அதனோடு உடன் உட்கொள்ள அலுமினிய டப்பாக்களில் உலா வரும் நுரைத்துப் பொங்கும் திரவங்கள் தேவைப்பட்டன.
நான் கணக்கிட்ட வரை அந்த மனிதன் குடித்ததை ஒரு சிவப்பு நிற பக்கெட்டில் வார்த்து வேட்டி முதல் கோவணம் வரை தோய்த்துப் பிழிந்து உலர்த்தியுமிருக்கலாம்.
இத்தனை குடித்தாலும் அந்த மனிதன் அவ்வளவு நீண்ட பிரயாணத்தில் ஒரு முறை கூட எழுந்து அற்ப சங்கைக்கு செல்லவில்லை. திருவாரூர் தேர் போல வீதியை அடைத்து இருந்ததால் சங்கோஜத்தால் பீடிக்கப்பட்டு இருந்த என்னையும் போகவிடவில்லை.
நான் சாயாவனத்தை வாசித்தது இந்த மனிதன் திரவங்களை ருசித்தது போல துளித் துளியாக இல்லை. பஸ் நிறுத்தங்களில் அவசரம் அவசரமாக மோர் குடிப்பது போல மடக்கு மடக்கென்று தான் குடித்தது. ஆனாலும் மூன்று நாட்களை விழுங்கி விட்டது வாசிப்பு.
நூற்றி எண்பத்து நான்கே பக்கங்கள் நீள்கிற நாவலும் ஒட்ட ஒட்ட ஆறு பக்கங்கள் நிறைந்து இருக்கும் பாவண்ணனின் தவிர்க்க இயலாத முன்னுரையும் சேர்த்து நூற்றித் தொண்ணூறு பக்கங்கள்.
பாவண்ணனின் முன்னுரை அசத்தலாக இருந்தது. இரவில் குழந்தைகளுக்குச் சொல்வது போல அநேகமாக முழுக்கதையையும் தனது நேர்த்தியான நடையில் சொல்லி விட்டார் அவர். நல்ல வேளையாக இது துப்பறியும் கதையாக இல்லாமல் போனது என்று தோன்றியது. இந்த முன்னுரையை எழுத அவர் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்திருக்க வேண்டும். சா கந்தசாமியை மேக்கரிக்கும் அல்லது சமமான எழுத்தாளர் தான் என்பதை நிரூபிக்கும் அவர் தனது முன்னுரையை அமைத்துக் கொண்டதாக அதைப் படித்ததும் தோன்றியது.
ஏற்கனவே சொன்னது போல நேரமின்மை தான் நாவலை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கக் காரணம்.
சாயாவனம் ஒரே மூச்சில் படிக்க வேண்டிய அல்லது படித்தாக வேண்டிய நாவல்.
மழைநீர் கல்லில் பட்டுத் தெறிப்பது போல இடைவெளி விட்டுப் படிக்க நேர்ந்தால் நிறைய கதாமாந்தர்களிடமிருந்து விலகி விடும் அபாயம் உண்டு.
பதினைந்து நாட்களுக்கு முன் பத்து நாட்களாகப் படித்து முடித்திருந்த எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலுக்கும் இதற்கும் ஏகப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு.
இரண்டிலும் நிறைய கதாபாத்திரங்கள். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே நிலப்பரப்பைக் களமாகக் கொண்டவை. இரண்டுமே ஒற்றை நாயகனைச் சுற்றியே பின்னப்பட்ட வலை.
ஆனால், முன்னதில் ஏகத்திற்கு நிறைந்திருந்த கதாபாத்திரங்களில் ஏதேனும் திரும்ப வருகிற போதில், அது யாரென்று தெரிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் முன்னே போய் அவர்களைத் தேடும் ஆர்வம் ஐம்பது பக்கங்கள் தாண்டிய உடன் நீர்த்துப் போய்விட்டது. ஒரு வித ஆயாசமும் அது திணித்த ஆர்வமின்மையும் அவ்வாறு தோன்ற வைத்து விட்டது.
சாயாவனம் அப்படியல்ல. இதை எழுதிய போது சா கந்தசாமிக்கு இருபத்தெட்டு வயது என்பதை நம்ப முடியவில்லை. மரப்பசுவில் திஜாவிடமிருந்த முதிர்ச்சி இந்த நாவலில் நெடுக இழைந்தோடுகிறது. சுவாரசியமும்.
இந்த மூன்று பெரிய எழுத்தாளர்களின் கதை மாந்தர்களின் பேச்சு வழக்கு சிறு வயதில் அன்றாடம் கேட்டுப் பழகியது என்பதில் சுவை கூடியது உண்மை.
சாயாவனம் நாவலில் ஒரு தெளிவு இருக்கிறது.
சொல்ல வந்ததை, பாவண்ணன் ஆரம்பத்திலேயே போட்டு உடைத்தும் கூட, அது எவ்வாறு காட்சிப் படுத்தப் பட்டு இருக்கிறது என்று படிக்கும் ஆவல் கடைசி வரி வரை உந்திக் கொண்டே தான் இருந்தது.
சாயாவனம் என்பதை ச்சாயாவனம் என்று தான் நானும் மகேஷூம் நாற்பது வருடங்களாக உச்சரித்து வந்தோம். வாணகிரியைச் சேர்ந்த ஒரு நண்பன் தான் ஒருமுறை நாங்கள் பேசிக் கொண்டு இருந்ததை இடைமறித்து அது ச்சாயாவனம் இல்லை ஸாயாவனம் என்றான். இது நடந்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும். புத்தகம் வாங்கியும் பத்து வருடங்கள் ஆகியிருக்கலாம்.
சா கந்தசாமியின் வேறு படைப்புகள் சிலவற்றை ஏற்கெனவே படித்தது தான். தொலைந்து போனவர்கள…
கடைசி வரை கூடவே இருந்த பழனியாண்டி என்னும் சிறுவன் கரும்பாலைக்குக் கரும்புக் கட்டு ஏற்றி வந்து வெள்ளம் பெருக்கெடுத்த காவிரியில் துணிச்சலாக வண்டியை இறக்கி உடல் கூடக் கிடைக்காமல் ஆற்றோடு போனது, முத்தாய்ப்பாக வள்ளல் செட்டியாரின் மனைவி ஆச்சியின் கூற்றாக அவரவர் வீட்டிற்குத் தோதாக வருடாவருடம் வந்து கொண்டிருந்த புளி நின்று போய் பலமரத்துப் புளி கிடைத்து சுவை கிடைக்காமல் போனது என்று நிறைய அடுக்குகள் தென்படுகின்றன.
இவற்றில் பழனியின் மரணம் துர்பாக்கியமானது. வனமழிந்து ஆலை எழுந்து அதனால் அவன் இறந்து போனதை முடிச்சுப் போடுவது என்பது அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு டெல்லி கணேஷை சாகடிக்க ஒரு கோலிக்குண்டை உபயோகித்து, அது கடைசியில் ஒரு அம்பைப் பிரயோகிக்க வைக்கும் உத்திக்கு இணையானது.
மற்றபடி சொல்லப்பட்ட அனைத்துமே ஒரு விதத்தில் வேடிக்கையானது தான்.
சந்தடி சாக்கில் சாதிகளையும் மத வழக்கங்களையும் சாடி வைக்கிறார்.
தேவரின் பேத்தியின் திருமணம் தடபுடலாக நடக்கிறது. அதில் கடைப்பிடிக்கப்பட்ட கிரமங்களும் அச்சுப் பிசகாது வர்ணிக்கப்பட்டு, நம்மை கைத்தாங்கலாக அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
திருமணத்தில் பெரும்பங்கு எடுத்துக் கொள்ளும் சிதம்பரம், அவனது அம்மா இறந்த உடன் மதம் மாறியவன். டேவிட் சிதம்பரமாக மாறிய அவன் வெறும் சிதம்பரமாக வாழ வேண்டிய நிர்பந்தம். ஆனாலும், அவன் தான் குடிபோகும் புது வீட்டில் ஐயர் வைத்து செய்யும் சம்பிரதாயங்களை மறுக்கிறான்.
தேவரின் பேத்திக்கும் அவள் கணவனுக்குமான சீதனமாக ஆளுக்கு ஒரு பவுன் தங்கக் காசு தருகிறான்.
இதைப் பார்த்து விட்டு பதஞ்சலி சாஸ்திரியும் சுப்பு ஐயரும் வீடு திரும்பும் போது வம்பளக்கின்றனர். அதில் ஊடாக சிதம்பரம் இவ்வளவு செல்வந்தனாக இருக்கக் காரணம், அவன் கொழும்புவில் தனது எஜமானனான ஒரு வெள்ளைக்காரனைக் கொன்று அவன் சம்பத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்தவன் என்பது. அதற்கு சாஸ்திரி சொல்கிறார், “கள்ள ஜாதி.. எல்லாம் பண்ணும்”.
இதே சாதியை சிலாகித்து சிதம்பரமும் சிவனாண்டித் தேவரும் முந்தைய சில அத்தியாயங்களில் சிலாகித்துக் கொள்வர்.
பொருளாதார முன்னேற்றம் என்பது மக்கள் தொகை பெருக்கத்தோடு தொடர்புடையது. காடுகளை அழிக்காமல் மனிதன் வாழ முடிவதில்லை.
மலைகள் தோறும் வியாபித்து இருந்த காடுகள் எல்லாம் அநேகமாக அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களுக்கு இடம் கொடுத்து விட்டன.
இந்த அழிவு ஆட்சேபணைக் குறியது. தேயிலை உபயோகத்தை விடக் காடுகள் தரும் உபயோகம் பலமடங்கு உயர்ந்தது.
ஆனால், பன்னெடுங்காலம் முன்பே நாகரீகம் தோன்றியிருக்கும் நிலத்தில் கவனிப்பாரற்று ஊர் நடுவே புதர் மண்டி வனமாக அடர்ந்து கிடந்த ஒரு இடத்தை சுத்திகரிப்பதை அழிவாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் அமைந்த கரும்பாலை கண்டிப்பாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த நெட்டிலிங்கமும் தாழம்புதரும் எந்தக் காலத்திலும் யாருக்கும் தராத நல்லதைத் தரவல்லது.
இந்த நாவலின் களமாக சாயாவனமும் அதன் சுற்றுப்பட்டு கிராமங்களும் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.
ஆனால், இந்த மாதிரி இடங்களில் வர்ணிக்கப் படுகிற ஊர்கள் சாயாவனம் அல்லாத வேறொரு நிலப்பரப்பை, இந்தப் பகுதியை வெகுவாக அறிந்த என் போன்றவர்களுக்கு அறிவிப்பது தடுமாற்றம் அடையச் செய்கிறது.
உதாரணமாக, சாயாவனத்தில் இருந்து பெரிய கோயிலின் கலசம் தெரிவதாகச் சொல்கிறார். அது சாயாவனம் சிவன் கோயிலாக இருப்பதில் எந்த ஆட்சேபணையும் கிடையாது. திருவெண்காடு கோயிலாக இருப்பதை நம்புவதற்குக் கொஞ்சம் சிரமப் பட வேண்டும். ஆனால், மாயவரம் அவயாம்பாள் கோபுரக் கலசம் என்பதாக ஒரு காட்சி அமைகிறது. என்ன தான் வெறும் புதர்களும் வயல்களும் சூழ்ந்த இடமாக கதை நடந்த காலம் என்றாலும் இருபத்தி இரண்டு கிலோமீட்டர் தூரம் தாண்டி நூற்றியம்பதடி கோபுரம் தெரிய சாத்தியம் இல்லை.
அதே போல், நெய்விளக்கு, தோப்புத்துறை, சித்தமல்லி என்னும் ஊர்கள் எல்லாம் வேதாரணியம் திருத்துறைப்பூண்டி நிலப்பரப்பில் இருப்பவை. இதில் சித்தமல்லி ஒரு விதிவிலக்கு. நிறைய இடங்களில் இந்தப் பெயரில் கிராமங்கள் உள்ளன. ஆனால், தோப்புத்துறை அனுமார் கோவில் பிரசித்தி பெற்றது. அதற்கு முந்தைய ரயில்வே ஸ்டேஷன் நெய்விளக்கு. சித்தமல்லி போல இவ்விரண்டு இடங்கள் வேறொரு நிலப்பரப்பில் இருக்கும் சாத்தியங்கள் உண்டு என்றாலும் கோடிக்கரை போலவே அதே போல அடுத்தடுத்து பூம்புகார் சீர்காழி மார்க்கத்தில் இருக்குமா என்ன?
முன்னரே சொன்னது போல், பார்த்துப் பார்த்து லயித்திருந்த நமக்கு உரிமையில்லாத ஒரு காட்சிப்பொருள் கலைந்து போவதைத் தடுக்க இயலாமல் அந்த துக்கத்தைப் பிரமாதமாகப் பதிவு செய்ததில் இந்த நாவல் பெரு வெற்றி அடைந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அதைத் தவிர ஆசிரியரின் அதியற்புதமான நடை. இருபத்தெட்டு வயதில் எண்பத்தி இரண்டு வயதிற்கான அனுபவம். இயற்கையின் மீதான காதல். அழகியல் மீது கொண்ட லயிப்பு. வாசகரைக் குறைந்த பட்சம் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பாக அழைத்து செல்ல வல்ல டைம் மெஷின் லாவகம் என்று நிறைய இலக்கிய அனுபவங்கள்.
அந்த வகையில் பதினெட்டாவது அட்சக்கோடு, ஒரு புளிய மரத்தின் கதை, பள்ளி கொண்டபுரம் போன்ற இலக்கியப் பிரமிடுகளோடு ஒப்பீடு செய்கிற அளவிற்கான நாவலைக் கண்டிப்பாக எழுதியிருக்கிறார் சா கந்தசாமி அவர்கள்.
படித்து முடித்தவுடன், எழுதினால் இந்த மாதிரி ஒன்றை எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை எழுப்பி விடுவதுதான் இந்த நாவலின் மாபெரும் வெற்றி.
h

Arumai 🌺🙇♀️🙏