இராஜாமணி/நிலவும் மலரும்

நிலவும் மலரும் – சிறுகதைத் தொகுப்புபற்றி, சிறந்த எழுத்தாளரும், வாசகரும், விமர்சகருமான திரு.ராஜாமணி அவர்களின் மதிப்பாய்வு (Spoiler alert)
+++++++++++++++

எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் 21 சிறுகதைகள் கொண்ட நிலவும் மலரும் என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வாசிப்பு அனுபவத்தை. தந்தது.
இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளும் வேறு வேறு கதைக் கருவைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆசிரியரின் எழுத்தில் ஈர்ப்பும், எளிமையும் இயல்பாக இருக்கிறது. வாசகர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் தக்க வைத்துக் கொள்வது எளிதான காரியம் இல்லை. ஆசிரியர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கதையாக இருந்தாலும், கட்டுரையாக இருந்தாலும் ஆசிரியரையும் சில செய்திகள் படைப்பிற்குள்ளேயே வந்துவிடும். வாசகனின் பார்வையில் கதை அல்லது படைப்பு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்படும்.

இனி எனது பார்வையில்.
முதல் கதையான ‘’அல்லது நீங்கும்’’ – மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு மத்தியதரக் குடும்பத்தில் ஏற்படும் மாமியார், மருமகள் பிரச்சனைபோலத் தோன்றும். புதிதாக அந்த வீட்டிற்கு வரும் மருமகள், தனக்கான இடத்தைக் கண்டறிவதும், அதிகாரத்தையும் அல்லது பொறுப்பையும் கண்டுணர்ந்து உராய்வு ஏற்படாத வண்ணம் ஒரு புதிய சமநிலையை (Equilibrium) எப்படி ஏற்படுத்துகிறார்? என்பதுதான் இந்தக் கதை. ஏற்கனவே அதிகார மையத்தில் இருக்கும் மூத்தவர்களின் அகங்காரம் (ego) பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கான ஒரு (comfort zone) சுக வட்டத்தை உருவாக்கிக் கொடுத்து, கௌரவ தலைவர்போல் உணரச் செய்து, எல்லா பொறுப்புகளையும் கையாளவது, என்பது பெரிய சவால்தான். நிர்வாக மேலாண்மைக்கான கதையாகவும் இதைப் பார்க்கலாம். (Natural leader and leader by position ) mother- in- law is a leader by position.

காட்சிப்பிழை என்ற கதை நடக்கும் காலம் 2500. இந்தக் கதையைப் படித்ததும், காரல் மார்க்ஸ் இறந்தபொழுது அவருடைய நண்பர் ‘ஏங்கெல்ஸ்’ சொன்னது நினைவுக்கு வந்தது ;
‘‘மாபெரும் சிந்தனையாளர், தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்..’’
அப்படி என்றால் மனிதன் சிந்தித்துக் கொண்டிருக்கும்வரை, அவன் வாழ்கிறான் என்று அர்த்தமாகிறது. மனிதனுக்கு அவனுடைய சிந்தனையைச் செயல்படுத்த பௌதீக உடல் தேவையாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து சிந்திப்பதற்கு, உடல் தேவையில்லை என்ற நிலை உருவானால், மனிதன் மரணிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று கருத முடியுமா?உடல் மறைந்த பிறகு வேறு வடிவில் ஒரு மனிதன் தொடர்ந்து சிந்தித்து கொண்டு கொண்டிருக்க முடியும் என்றால் அவன் இறந்தனா? அல்லது வாழ்கிறானா? என்ற கேள்வியை முன்வைக்கும் நல்ல கதை.

இந்தக் கேள்வியை நோக்கி வாசகர்கள் பயணிக்க, ‘குடந்தை ஜோதிடர்’ கதாபாத்திரத்தைப் பயன்படுத்தயிருப்பது நல்ல யுத்தி. வித்தியாசமான கதை.
சற்று முன் கதை வெகுஜன ரசனைக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளது. கதை முடியும்பொழுது திரில்லர் கதையாக மாறிவிடுகிறது, கதைக்களத்தில் வரும் மனிதர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், பரிவு, கதைச் சூழல் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

மலர்கள் நனைந்தன பனியாலே

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால், இளம் பருவத்தினர் நேரடியாக வெளிப்படுத்த முடியாத காதல் உணர்வுகள் எப்படி இருந்தன?
ஓர் இளைஞன், ஒரு பெண்ணை தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும்.
நெருங்கிப் பேசவோ பழகவோ முடியாத ஒரு காலகட்டத்தில் வெளிப்படுத்தாத காதலோடு இருந்த நபர்கள், வாழ்வின் பின்பகுதியில் சந்திக்கும்பொழுது, எதிர்பாராத அதிர்ச்சிகளையும், எப்படிப்பட்ட தவறான புரிதலோடு இளமைக் காலத்தில் இருந்தோம் என்பதையும் கதை மாந்தர்கள் உணர்வதுதான் கதை. ஒரு காலகட்ட சமூக சூழலைக் காட்டுகிறது.

பொய் வழிச் சாலை

எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில், தான் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும். தன் இருப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கும். மற்றவர்களைத் தன்பால் ஈர்க்கும் தோற்றப்பொலிவும், அழகும் தன்னிடம் இல்லை என்று நினைக்கும் ஒரு பெண் நிச்சயமாக மன உளைச்சலுக்கு உள்ளாவாள்.
அதி நவீன தொழில்நுட்பம் அதற்கு வடிகாலாக அவளுக்கான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொடுத்தாலும் அது மகிழ்ச்சியைத் தருமா? அல்லது கூடவே அங்கும் பிரச்சனைகள் வருகிறதா? எவ்வளவுதான் அதி நவீனதொழில்நுட்பம் என்றாலும், கட்டமைக்கப்பட்ட உணர்வுகள்/ புரிதல்களிலிருந்து விடுபட முடியுமா? மனித உணர்வுகளையும், செயற்கை நுண்ணறிவையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்க முடியுமா? என்பதை சோதித்துப் பார்க்கும் கதை.

துள்ளித் திரிந்த பெண் ஒன்று

கொஞ்சம் கடினமான பொருளாதார சூழ்நிலையில் படித்த ஒரு தலைமுறையினர், விரும்பிய பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து கொள்வதா? அல்லது எதிர்காலப் பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு முடிவெடுப்பதா? என்ற பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. கூடுதலாக ஆத்ம திருப்திக்காகவும், சமூக/ இறைப்பணியாகவும் செய்து வந்த விஷயங்கள் ( உதாரணமாக, வேத பாடசாலை….) இன்றைய சூழ்நிலையில் எப்படி மாற்றமடைந்துள்ளது? என்பதையும் கதையில் காணலாம்.
சுருக்கமாகச் சொல்வதானால் சமூக மதிப்பீடுகளின் மாற்றங்கள் இந்தக் கதையில் பதிவாகி இருக்கிறது.

நிலவும் மலரும்

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் அட்டைப்பட கதை! மிகச் சிறிய வயதில் இருக்கும் குழந்தைக்கு, நினைவி்ல் மனிதர்களின் உருவங்களைப் பதிவு செய்து கொள்வது இயலாத காரியம். குழந்தைகள் தாயைத் தொடுஉணர்ச்சியாலும் (Warmth) நுகர்வுணர்ச்சியாலும் (வாசனை) மட்டுமே அடையாளம் கண்டு கொள்ளும்.
இந்த தொடுஉணர்ச்சியின் மூலம் தந்தை தன்னை குழந்தையின் நினைவில் பதிவு செய்து கொள்வதைக் காட்டி இருப்பது மிகச் சிறப்பு. குறிப்பிட்ட கால பிரிவிற்குப் பிறகு, மீண்டும் குழந்தையை, தந்தை தொடும்பொழுது, ஸ்பரிச உணர்வால் குழந்தை அடையாளம் கண்டு கொள்ளும். குழந்தையைப் பிரிந்து இருப்பதால் ஏற்படும் வருத்தத்தை மையமாக வைத்து நிறைய கதைகள் வந்திருக்கின்றன. குழந்தையின் மூளையில் அல்லது நினைவில் தொடு உணர்ச்சிமூலம் ஒருவர் தன்னை பதிவு பண்ணிக் கொள்வது என்ற கோணத்தில் எழுதப்பட்ட சிறந்த கதை இது.

ஆசையே அலை போலே

கடற்கரையில் பஜ்ஜி வாங்கி சாப்பிட யாருக்குத்தான் ஆசை இருக்காது?
ஆனால் சிலருக்கு அது எளிதான காரியமாக இல்லையே?. கொஞ்சம் நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட கதை. இதில் அடிநாதமாக இருப்பது, வாழ்க்கையில் நாம் பெரும் எல்லாவற்றிற்கும் ஒரு விலை கொடுத்தாக வேண்டும் (There is no free lunch). வாழ்க்கையில் சில உயரங்களை அடைந்த பிறகு, பொதுவெளியில் ஒரு சாதாரண இயல்பான மனிதனாக நடந்து கொள்ள முடிவதில்லை.

தலைப்பு

நெருக்கடியான நேரங்களில் மனிதநேயம் வெளிப்படாவிட்டால், பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடும். பள்ளியில் அழைத்துச் செல்வதற்கு, தந்தைக்காகக் காத்திருக்கும் மாணவியைப் பற்றிக் கவலைப்படாமல், தனியாக விட்டுவிட்டு, தன் குழந்தையைக் கூட்டி வரும் தாய் பவித்ரா. பிறகு குற்ற உணர்ச்சியாலும், எதிர்மறை எண்ணங்களாலும் அவஸ்தை படுகிறாள். மாணவிக்கு, இன்னொரு மாணவியிடம் இருக்கும் அக்கறையும், கவலையும் பெரியவர்களுக்கு எப்படி இல்லாமல் போனது?
இந்த நிலைமைக்கு யார் அல்லது எது காரணம்? இந்தக் கதையில் சமூகத்தில் நிலவும் பொது புத்தியை, மனப்போக்கை விவாதப் பொருளாக்கியது, மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

டைகர் பட்டோடியைத் தெரியுமா?

1990 வரை எல்லாத் துறைகளிலும் ஏற்பட்ட மாற்றங்களெல்லாம் பழையவற்றின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகவோ அல்லது நீட்ச்சியாகவோத்தான் இருந்தது. ஆனால்,
அதன் பிறகு இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பழையனவற்றை சுத்தமாகப் புறந்தள்ளிவிட்டு, அந்த இடத்தில் அமர்ந்து கொள்கிறது. பழையன இருந்ததிற்கான சாட்சியங்களே இல்லாமல் மறைந்து போகிறது. இந்த செய்தியை குறியீடாகச் சொல்வதாகவே இந்த கதையைப் பார்க்கிறேன்.

இந்தக் கோணத்தில், இந்த கதையைப் பார்த்தால் அமானுஷ்யத் தன்மையோடு சிறப்பான கதையாக அமைந்து விடுகிறது.

தன் நிலம் தேடி

பள்ளிக்கூட காலங்களில் காடாகப் பார்த்த இடங்களில் எல்லாம் இப்போது வீடாக இருந்தால், என்ன ஆகும்? இயற்கையோடு இயந்து (Coexistence) வாழ மறுக்கும் மனிதன், எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்? என்பதை கொஞ்சம் திகிலோடு சொல்லும் கதை.

இலக்கு

காதலித்தவளால் நிராகரிக்கப்படும் சரவணன். அவனது வலிக்கு தீர்வாகக்
காதலியை கொலை செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வருகிறான். புகழுக்கும், பெரும் பணத்திற்கும் ஆசைப்படும் ஆராய்ச்சியாளர் ப்ரொபசர் ஆர்கேயிடம் தொற்றுக்காலத்தில் சோதனை எலியாகச் சிக்கிக் கொள்ளும் சரவணன். இரண்டு கதைகள் / இரு வேறு இலக்குகள் சந்திக்கும் புள்ளி.

இருவரும் அவரவர்கள் இலக்கை அடைந்தார்களா? இயற்கையை மனிதன் வெல்ல முடியுமா? என்ற கேள்வியோடு கதை முடிகிறது. இயற்கையின் ஒரு அங்கம்தானே மனிதன். இயற்கைக்கு, வெளியே தனியாக நின்று இயற்கையை மனிதனால் வெல்ல முடியுமா? பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் பிரபஞ்சத்தை அடக்கியாள ஆள முடியுமா? விறுவிறுப்பாகச் சொல்லப்பட்ட கதை.

அது

இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன்தான், அதிபுத்திசாலியான படைப்பா? அல்லது மனிதனே ஒரு அதிபுத்திசாலித்தனமான உயிரியின் படைப்பா? இன்று வரை இந்த ஆர்வமும், அறிந்து கொள்ளும் வேட்கையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது அந்தக் கோணத்தில் எழுதப்பட்ட ஒரு விஞ்ஞான புனைவு.

ஒரு நாள் போதுமா?

பெற்றோருக்குப் பணத்தாலும், பொருளாலும், வசதியாலும், பெறமுடியாத ஒன்றை, அவர்களோடு நாம் செலவழிக்கும் 10 நிமிடம் தந்துவிடும். ஆனால் இதைப் புரிய வைக்க இந்தக் கதையில் வரும் முதியவர்போல சில நேரங்களில் தூண்டுதல்கள் தேவையாக இருக்கிறது. “பணத்தைக் கிள்ளித் தரலாம், ஆனால் அன்பை அள்ளித் தான் தர வேண்டும்” – என்று கதையில் வரும் வரிகள் – அருமை.

மழை நாளில் ஒரு ரோஜா

கடந்த தலைமுறையினருக்குக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் வளர்ப்பதும் வாழ்க்கையின் ஒரு அம்சம் (part of life). ஆனால்,
இன்றைய தலைமுறையினர்க்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டு வளர்ப்பது என்பது பெரிய ப்ராஜெக்ட். சில நெகிழ்வான நிகழ்வுகள் உறுதியான முடிவைக் கூட மாற்றிவிடும். அப்படிப்பட்ட நிகழ்வைச் சந்திக்கிறாள் அகல்யா.
பல இடங்களில் கதையைச் சொல்லும் விதம் பிரமாதம். (உ-ம்) :கணவன் மனைவி இடையே சண்டை. ‘’வார்த்தைகள் வளர்ந்து, குறுகி மௌனமாகின’’
கிழவி மழைக்கால பஜ்ஜியை சூடாக எடுத்தபடி பார்கோடு அட்டையை வந்தவரிடம் நீட்டினாள். இதுபோல பல இடங்கள் உண்டு (எல்லா கதைகளிலும்).

முனிப் பள்ளம்

பிசாசுகள், ஆவிகள்……உண்டா? இன்றும் பழங்குடி மக்களிடையே குறிப்பாக மலைவாழ் பழங்குடியினர் மத்தியில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை வைத்து எழுதப்பட்ட சுவாரசியமான திரில்லர் கதை முனிப் பள்ளம்.

கிளை

பெங்களூரில் தனியாக இருக்கும் பேத்தி, திருநெல்வேலியில் தனியாக இருக்கும் பாட்டியைத் தன்னோடு வந்து விடும்படி அழைக்கிறாள்
‘’சொந்த ஊர், தாமிரபரணி, கோவில், தனிமை தரும் ஏகாந்தம்’’ எனப் பழகிப்போன வாழ்க்கையிலிருந்து விடுபட்டுச் செல்ல, பாட்டியால் முடியாது. கோவிலுக்குச் செல்லும் பாட்டி அங்கு உபன்யாசம் கேட்கிறார் .அந்த நிகழ்வுக்குப் பிறகு பாட்டி வேறு விதமாக முடிவு எடுக்கிறார், முடிவெடுக்கிறார் என்பதை காட்டிலும் ஞானம் பெற்றார் என்று சொல்லலாமா? உபன்யாசமும், கதாகாலட்சேபமும், வீட்டில் பெரியவர்கள் சொல்லும் கதைகளும் மனிதனை ஆற்றுப்படுத்துகிறது. வாழ்வின் நிலையாமையை உணர வைக்கிறது. பற்றற்ற தன்மைக்குத் தயார் படுத்துகிறது.
பிரச்சாரநெடியோ, போலிக் கலாச்சாரப் பெருமைவாதமோ இல்லாமல், மிக அழகாக, கலாச்சாரத்தின் சிறந்த கூறுகளை இந்தக் கதை பேசுகிறது.
கதையின் பிரதான நிகழ்வுகளைக் காட்டிலும், நிகழ்வுகளுக்காகச் சொல்லப்படும் செய்திகள் முதன்மை பெறுவது கதைகளில் அபூர்வம். அப்படிப்பட்ட அபூர்வமான கதை, இந்தக் கதை. சூப்பர்..!

நிஜங்களின் தரிசனம்

ஒவ்வொரு காலகட்டத்திலும், காதல் பல சமூக தடைகளை எதிர் கொண்டே வந்திருக்கிறது. சென்ற தலைமுறை காலத்தில், ஒரு ஆண் பெண்ணோடு எளிதாகப் பழக முடியாது, குடும்ப, சமூகச் சூழல்.. பல காரணங்களால் நிறைவேறாத அதே நேரத்தில் மனதில் சாஸ்வதமாக அந்தக் காதல் உணர்வு இருக்கும்.
அந்தக் காதல் உணர்வு, அந்த மனநிலையில் இருக்கும் இருவரை, புதிய தலைமுறையினர் எப்படிப் பார்க்கிறார்கள்? இந்தத் தலைமுறையினரின் (மெச்சூரிட்டி) மனமுதிர்ச்சியை கதையில் பார்க்க முடியும்.

காவாய் கனகத் திரள்

ஆட்டோவில் விட்டுச் சென்ற கைப்பையை அவரது வீடு தேடி கொடுத்துவிட்டு வருகிறார், ஆட்டோ டிரைவர் ராஜ வேலாயுதம். கைமாறாக வாடிக்கையாளர், ஆட்டோ டிரைவரின் மனைவியின் கனவான ‘கைலாய யாத்திரை’க்கு, செலவு இல்லாமல் கூட்டிச் செல்வதாகச் சொல்கிறார். ஆட்டோ டிரைவரின் மனைவி அதனை ஏற்றுக் கொண்டாரா? நேர்மைக்கு விலை உண்டா?
ஆட்டோ டிரைவரின் மனைவி மீனாட்சி சொல்லும் செய்தி அல்லது வரிகள் ரொம்ப அழுத்தமானவை.
‘’பெருசா நீ என்ன செஞ்சுட்ட? தொலைந்து போன பையை வாடிக்கையாளர்கிட்ட திருப்பிக் கொடுப்பது தானே நேர்மை.
அதுல விலையுர்ந்த பொருள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்’’ சிறப்பு!

மாயன்

ரோபோ மனிதனைப் போலச் செயல்படத் தொடங்கலாம். ஆனால், மனிதன் ரோபோவாக முடியுமா? படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பூந்தொட்டி
வீட்டில் இருக்கும் பூந்தொட்டியில், அடைகாத்து, குஞ்சுபொரித்து, பின் குஞ்சுகளை ஆளாக்கி……பறந்து போகும் குருவியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஏழு வயது யாமினி, அதுகுறித்து பெற்றோரிடம் யாமினி சொல்லும் செய்தி / வெளிப்படுத்தும் உணர்வு!
அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் எடுக்கும் முடிவு இதுதான் கதை. பல பெரிய விஷயங்களைக் குழந்தைகள் எளிதாகப் புரிய வைத்து விடுகிறார்கள்.
1.காட்சி 2. பொய் வழிச்சாலை 3. டைகர்பட்டோடியைத் தெரியுமா? 4.மாயன் இந்த நான்கு கதைகளையும் படித்தபொழுது எனக்கு ஒரு கவிதை நினைவிற்கு வந்தது.

‘’சிலந்தி ஒரு பொழுதும்
தான் பின்னிய வலையில்
தானே சிக்கிக் கொள்வதில்லை’’

ஆனால் மனிதன் அப்படியா?


எல்லா தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் வகையில் விறுவிறுப்பாகவும், ரசிக்கத் தக்க வகையிலும், இந்திரநீலன் சுரேஷ் அவர்களுக்கு எழுத வருகிறது. வாழ்த்துக்கள்!

நிலவும் மலரும்
(சிறுகதைத் தொகுப்பு)
மொத்த பக்கங்கள் : 208

விலை ரூ.200
கலைமகள் பப்ளிகேஷன்ஸ்
35/13, ராபர்ட்சன் சந்து மந்தை வெளி

சென்னை 600 028

போன்: 044 24981699
வாட்ஸ் அப் எண்: 944450 89079