பால் சக்கரியா/ யேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு விண்ணப்பம்

ஐயா,

எத்தனையோ நூற்றாண்டுகள் பழமையான ஒரு பெரிய நிறுவனம் தான் யேசுபுரம் பொதுநூலகம். இந்த நிறுவனம் இப்போது சிதைந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலை தொடர்ந்தால் இது தாமதமின்றி அழிந்து விடும். அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மேலான கவனத் திற்காக யேசுபுரம் நூலகத்தைப் பற்றிய சில விஷயங்களை நான் இங்கே வரிசைப் படுத்துகிறேன்.
நான் நூலகத்தின் ஒரு ஆயுட்கால உறுப்பினர். அதாவது நான் மரணமடையும்வரை இந்த நூலகத்தின் உறுப்பினராக இருப்பேன். ஒரு நாள் நான் இறந்து போவேன். ஆனால் இந்த நூலகம் அழியக் கூடாது. அது தொடர வேண்டும். யேசுபுரம் பொது நூலகத்தில் பல ஆயுட்கால உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுள் ஒருவன் என்ற நிலையில் அவர்களையும் என்னையும் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்னை பற்றி முதலில் நான் விவரிக்கிறேன். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், இந்த நூலகத்தின் அழிவும் வீழ்ச்சியும் ஓர் ஆயுட்கால உறுப்பினரான என்னை மிகவும் பயமுறுத்துகின்றன. காரணம் இந்த நூலகத்தின் எதிர்காலம் என்னுடைய இருத்தல் பிரச்னை.
நான் இங்கே ஒரு ஆயுட்கால உறுப்பினரான நிமிடம் முதல் என்னுடைய ஆயுளுக்கும் இந்த நூலகத்துக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு ஏற்பட்டிருக்கிறது. மனந்திறந்து சொல்கிறேன் இந்த
நூலகம் இல்லையென்றால், அதனோடு தண்டுபோல இணைக்கப் பட்டுள்ள நானும் மற்ற ஆயுட்கால உறுப்பினர்களும் நிலைத் திருப்போம் என்பதில் என்ன உறுதி? எனக்கு எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்னால் சாக முடியாது. நீங்கள் மரணத்தை விரும்பு வீர்களா? விரும்ப மாட்டீர்கள். நாமெல்லாரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம்.
இந்த நூலகத்திற்கு அழிவு ஏற்பட்டால் இதன் ஆயுட்கால உறுப்பினர்கள் என்ன ஆவார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கருணை யுடன் சிந்திக்க வேண்டுமென்று, சகோதர மனோபாவத்துடன் சிந்திக்க வேண்டுமென்று, நான் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். யேசுபுரம் நூலகத்தின் சாதாரண உறுப்பினர்களிடம் எனக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் உண்டு. நீங்கள் பத்திரமானவர்கள். ஆனால் அதனால் நீங்கள் எங்களை மறந்துவிடக் கூடாது. உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நூலகத்திலிருந்து விடுதலையடைவதற்கான வாய்ப்பு உண்டு. ஒரு மாதத்திற்கு கூடுதலாக உறுப்பினராக இருக்கவும் உரிமையுண்டு.
ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகளெல்லாம் இல்லை. எங்கள் வாழ்க்கை யேசுபுரம் நூலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. யேசுபுரம் நூலகம் நீடித்து நிலைத்திருக்க வேண்டியது எங்களுடைய முக்கியத் தேவை. சமீபத்தில் நான் ஆயுட்கால உறுப்பினர்களின் ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். இந்தக் கூட்டத்தில் நூலகத்தோடு தொடர்பில்லாத பொதுமக்களும் நூலகத்தின் சாதாரண உறுப்பினர்களும் பார்வையாளர்களாக பங்கேற்றிருக்கலாமே என்று நான் ஆசைப்பட் டேன். யேசுபுரம் நூலகத்தின் ஆபத்தான எதிர்காலம் எங்களின் முகங் களில் வரைந்து வைத்திருந்த பீதியையும், கடுந்துயரத்தையும், குழப்பத்தை யும் நீங்கள் பார்த்திருந்தால் வெறும் கருணையின் பேரிலாவது இந்த நூலகம் நாசமடைவதை அனுமதிக்கமாட்டீர்கள்.
ஆயுட்கால உறுப்பினர்களின் இந்தக் கூட்டத்தில் ஓர் உறுப்பினர் சொன்ன ஒரு விஷயம், முக்கியமாகக் கருதத்தக்கது. இதை மிக முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன். அதாவது இந்த நூலகம் காலாகாலத்திற்கும் நீடித்து இருக்கிறதென்றால் ஆயுட்கால உறுப்பினர் களாகிய நாங்களும் அதனுடன் நீடித்திருக்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? நம்முடைய நூலகத்தின் உறுப்பினர்களில் வயதிலும் அனுபவ அறிவிலும் மூத்த முக்கியமான ஒருவர்தான் இந்த அபிப் ராயத்தை முன் வைத்தார். ஆயுட்கால உறுப்பினர்களான நாங்கள் உடலாலும், தெளிவான திட்டங்களுடனும் முயன்றால் ஒரு வேளை இந்த நூலகத்துடன் இணைந்து நாங்களும் எக்காலமும் தொடர்ந்து இருக்க மாட்டோம் என்று யார் சொல்ல முடியும்? இப்படிப்பட்ட ஒரு தீர்க்கமான முயற்சி செய்ய நாங்கள் தயார். ஆனால் முதலில் நூலகமாவது நிலைத்திருக்க வேண்டுமே.
இப்படிச் சொல்வதனால் என்னை ஒரு சுயநலமி என்றும் மற்ற அனைத்து ஆயுட்கால உறுப்பினர்களையும் சுயநலமிகள் என்றும் தயவு செய்து எண்ணி விடாதீர்கள். உங்கள் அனைவரையும் போல நாங்களும் இருத்தலின் நிச்சயமின்மை குறித்த பயத்தோடு வாழ்பவர்கள் மட்டுமே. எங்களுக்குக் குறிப்பாக ஒரு காரணம் உருவாகி இருக்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். நூலகம் நீடித்து நிலைத்திருப்பதில் நாங்கள் காட்டும் ஆர்வம், உண்பதற்கும் நலம் அடைவதற்குமான உங்களுடைய ஆர்வத்தைப் போன்றதுதான் என்று புரிந்து கொள் ளுங்கள். இல்லாமல் ஆவதைப் பற்றிய பயம் யாருக்குத்தான் இல்லை.
நீங்களும் ஏதாவதொன்றின் ஆயுட்கால உறுப்பினராக இருந்தீர் களென்றால் உங்களால் எங்களை இன்னும் கூடுதலாகப் புரிந்து கொள்ள முடியும். நீங்களோ வாழ்க்கையின் ஆயுட்கால உறுப்பினராக மட்டுமே இருக்கிறீர்கள். உங்களுடைய சந்தாகாலம் தீரும் நாள், தொலைவில் எதிர்காலத்தில் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக் கிறது. நீங்கள் அதைச் சுலபமாக மறந்து விடலாம். ஆனால் எங்க ளுடைய விஷயம் அப்படியல்ல. நாங்கள் மருத்துவர்களால் நாள் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளைப் போன்றவர்கள். நோயாளிகளின் வாழ்க்கையைப் போல இந்த நூலகமும் நலிந்து கொண்டிருக்கிறது. இது நலிந்தால் எங்களுக்கு என்ன நடக்கும்? நோயாளிகளுக்கு மரணம் என்பது சர்வ நிச்சயம். ஆனால் எங்களுக்கோ? எதுவும் தெரியாத இந்த நிலை மிகவும் கொடூரமானது.
யேசுபுரம் பொது நூலகத்தின் வீழ்ச்சி பல வழிகளில் தம் பாதை களைத் திறந்து உள்ளே கடந்து வந்திருக்கிறது. புத்தகங்கள் வழங்கும் பிரிவை எடுத்துக் கொள்வோம். இந்த இடம் ஒரு பைத்தியம் பிடித்த பெரிய புத்தகக் குவியலாக இருக்கிறது. பீரோக்களில் வைக்கப்பட் டிருக்கும் புத்தகங்களுக்கும் அதன் தலைப்பிற்கும் எந்த வித தொடர்பு மில்லை. அகர வரிசையிலோ, பொருளடக்கத்திலோ, ஏன் புத்தகத்தின் தடிமனுக்கோ நிறத்திற்கோ ஏற்றாற்போல் கூட புத்தகங்களுக்குள் ஒரு தொடர்பும் இல்லை. ஒரு புத்தகத்துக்கும் மற்றொரு புத்தகத்துக்கு மான உறவு அவற்றை அந்தந்த இடங்களில் வைக்கும் பியூனுக்கு அந்தந்த நேரத்தில் தோன்றும் எண்ணங்களை மட்டுமே சார்ந்தது.
பலமுறை, நான் ஒரே பொருளடக்கத்தைப் பற்றிய, இல்லை யென்றால் ஒரே எழுத்தாளர் எழுதிய, அதுவுமில்லையெனில் ஒரே பதிப்பாளரின் இரண்டு புத்தகங்களை அடுத்தடுத்து பார்த்திருக் கிறேன். ஆமாம் ஆனால் இது நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் காணப்படும் விதியின் விளையாட்டுகளினால் நிகழும் அற்புதம் மட்டும்தான். ஏதோ ஒரு பீரோவில் ஒரு முறை சஞ்சயனின் முதல் மற்றும் ஐந்தாம் தொகுதிகளைக் கண்டு, நான் அடைந்த மகிழ்ச்சி இப்போதும் நினைவிருக்கிறது. இன்னொரு நாள் ஷேக்ஸ்பியரின் இரண்டு நாடகங்கள் அருகருகே இருப்பதைப் பார்த்தேன்.
ஒரு தடவை இளைஞனான ஒரு பியூன் ஒரே அளவும் ஒரே நிறமும் உள்ள புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தேன். அப்போதைய அடுக்குகளில் ஏதோ, ஒரு வித அழகு இருந்ததாகப்பட்டது. ஆனால் வெகு சீக்கிரமே, கொஞ்சம் கொஞ்ச மாக வேண்டுமென்றே செய்யாமல் உறுப்பினர்களும் மற்ற பியூன்களு மாக அந்த அடுக்கைக் கலைத்தார்கள். தான் ஒரு முறை உருவாக்கிய ஒழுங்கை அழகைத் திரும்பக் கொண்டு வர பல வீணான முயற்சி களும் செய்து பார்த்தான் அந்த இளைஞன். ஆனால் அவனுடைய வெற்றிகள் ஒரு போதும் ஓரிரண்டு நாட்களுக்கு மேல் நீடித்திருக்க வில்லை. ஒரு நாள் அவன் காரணமேதுமின்றி வேலையை விட்டு நின்று விட்டான்.
ஆனால் புத்தகம் வழங்கும் பிரிவின் இந்த வழிமுறையைப் பற்றி வேறொரு விதத்தில் சிந்திப்பவர்களும் உண்டு. இவர்களின் கருத்திலும் சில எதிர்பாராத உண்மைகள் உள்ளன. காரணம் இவர்களின் பார்வையில் யேசுபுரம் நூலகத்தின் ஒவ்வொரு அலமாரியும் ஒவ்வொரு பிரபஞ்சங்கள். பிரபஞ்சத்தின் அனைத்துக் குணங்களையும் கொண்ட காகிதப் பிரபஞ்சம். இதை யேசுபுரம் நூலகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பாகவோ, நன்மையாகவோ எடுத்துக் காட்டலாம். வேறெந்த நூலகங்களிலும் இப்படிப்பட்ட ஒரு சிறப்பினை உங்களால் பார்க்க முடியாது.
ஒரு அலமாரியில் எதாவது ஒரு புத்தகத்தைத் தேடும் ஒருவன், தன் தேடல்களுக்கிடையில் என்னவெல்லாம் செய்திகளையும் ஞானங் களையும் கண்டுபிடிப்புகளையும் சென்றடைகிறான் தெரியுமா? தான் அதிந்த விஷயங்களைத் தவிர தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கடலளவு இருக்கிறது என்ற எண்ணத்தையாவது அவனுக்குள் உருவாக்க இந்த நிலை உதவுகிறது என்பது இவர்களின் வாதம்.
`புவியியல்’ என்று எழுதி வைக்கப்பட்டுள்ள அலமாரியில் நான் கண்டுபிடித்த தலைப்புகள் என்னவென்று கீழே பட்டியலிடு இறேன் பாருங்கள். வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம், உயிரியல் இலக்கிய விமர்னம், கணிகம், தத்துவம், இசை, சமூகவியல், அழகுக் கலை, சிறுகதை, தாவரங்களின் அறிவியல் நகைச்சுவை பொருளாதரம் பாலியல், நாட்டியக்கலை, போர்க்கலை.
வரலாறு, ஆன்மீகம்,
சுயசரிதம், ஆட்சியமைப்பு முறை ஆய்வுகள், கிரிக்கெட், மேஜிக் சுயமுன்னேற்றம், வைத்தியம், நாடகம் இயற்கை மருத்துவம், மனோதத்துவம், சர்க்கஸ், துப்பாக்கி செய்வது எப்படி? தற்காப்பு என்ற இப்படிப்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள், புவியியல் அடுக்கில் காணப்பட்டன. புவியியல் மட்டும் இல்லை.
மேற்சொன்ன பார்வையிலிருந்து பார்க்கும்போது இந்தக் குவறு படியில் நன்மையும் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு சங்கடமில்லை. ஆனால் ஒருவன் ஒரு நூலகத்தில் செலவழிக்கக் கூடிய நேரம் எவ்வளவு குறைவானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தனக்குக் கிடைத்துள்ள சிறிது நேரத்திற்குள் ஒரு புத்தகத்தைத் தேடி தொடர்பில்லாத ஆயிரக்கணக்கான புத்தகங்களுக் கிடையில் அலைவது ஒரு கொடூரமல்லவா? நமக்குக் கிடைத்திருக் கும் குறைந்தபட்ச நேரத்திற்குள் நமக்கு மிகவும் தேவையான நாம் மிகவும் விரும்பும் ஒரு புத்தகத்தை மிக விரைவில் காண்பதில் தானே நம்முடைய ஆர்வம் இருக்கும்?
நமக்குச் சற்றும் பயன்தராத இந்தத் தேடலில் இழக்கும் நோத்தின் அளவைப் பார்க்கும் போது, அலமாரியிலுள்ள மற்ற புத்தகங்கள் எல்லாம் தரும் உலக அறிவு, முக்கியத்துவம் அற்றது என்பதே என் னுடைய எண்ணம். இறுதியாக தேடல்களுக்கு எல்லாம் பிறகு நமக்குக் தேவையான புத்தகம் இவற்றிற்கிடையில் கிடைக்காமல் போனால் ஒரு வேளை அதற்கு முன்பாகவே நூலக நேரம் முடிந்தால் நமக்குத் தெரியாத இவையெல்லாவற்றையும் கண்டதால் மட்டும் என்ன
பயன்? அனுமதியும் இல்லை. நூலக உறுப்பினர்கள் அவ்வாறு இருபரிணாம இழப்பைப் பொறுத்துக் கொள்கிறார்கள். கடந்த காலத்தில் சேகரித்ததையும் நிகழ்காலத்தில் புதிதாக உருவாக்கியதையும் அவர்கள் ஒரே நேரத்தில் இழக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே நிலைமை, இப்படித் தான் இருக்கும் என்பது உறுதியென்றால், அவர்கள் உறுப்பினர்களாக இருப்பது பொருளற்றதல்லவா?
பெரும்பாலான உறுப்பினர்கள் இக்காரணங்களால் தங்கள் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. அவர்கள் இப்போது கடந்த காலமும், நிகழ்காலமுமில்லாத இந்த நிச்சயமின்மைகளிலிருந்து தங்களின் தேடல்கள் பயனற்றுப் போகலாம் என்ற பயங்கரமான புரிதல்களிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்கள். ஆனால் நாங்கள்? ஆயுட்கால உறுப்பினர்களான நாங்கள்?
இந்த வளைந்த சக்கரத்தில் நாங்கள் கட்டப் பட்டிருக்கிறோம். இதன் வளைவை நிமிர்த்த முடியவில்லையென்றால் எங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும். இதன் சுழற்சி நின்று போனால்? இதொரு பகடி தானே, சார்?
பழைய புத்தகங்கள் காணாமல் போவது எப்படி என்று நான் கண்டுபிடித்து விட்டேன். ஒரு உறுப்பினர் வாசித்த பின்னர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவுடன் அது மேஜைக்குக் கீழே உள்ள ஒரு குவியலில் போடப்படுகிறது. பல நாட்களின் தொடர்ச்சியில் அந்தக் குவியல் ஒரு கோபுரத்தைப் போல் மாறுகிறது. இறுதியில் மேஜையின் உயரத் திற்கு மேல் தலையை நீட்டுகிற, தொட்டால் சரிந்து விடுவதைப் போன்ற பல கோபுரங்கள், அங்கே அரைவட்டத்தில் நிறைந்தவுடன் அவை பல கட்டுகளாகக் கட்டப்பட்டு அலுவலகத்தின் உள்ளேயே உள்ள வேறொரு பெரிய அறைக்கு மாற்றப்படுகிறது. தற்காலிகமான மாற்றம் என்றுதான் சொல்லப்படுகிறது.
அதாவது அவற்றை அங்கே வைத்துத் தரம் பிரித்து, திரும்பவும் அலமாரிகளில் அடுக்கி வைப்பதுதான் இப்படிக் கொண்டு போகப் படுவதன் முதல் நோக்கம். ஆனால் இந்த நோக்கம் எத்தனையோ வருடங்களாக கண்டுகொள்ளப் படாமலேயே உள்ளது. எதற்காகத் திரும்பி வரும் புத்தகங்கள் அந்த அறைக்குக் கொண்டு செல்லப்படு கிறது என்று கேட்டால் இன்றைக்கு யாருக்கும் பதில் தெரியாது. கொண்டு போவது என்ற செயல் மட்டும் நடைபெறுகிறது.
உண்மையில் பல உறுப்பினர்களும் இப்போது குறிப்பிட்ட ஒன்றைத் தேடுவதை நிறுத்தியுள்ளனர். அவர்கள் அலமாரிகளுக்கிடை யில் இரு புறமும் பார்த்துக் கொண்டு அலைந்து நடக்க மட்டுமே செய்கிறார்கள் – எதிர்பாராமல் ஒரு அற்புதம் நிகழ்ந்து, எதையாவது கண்டுபிடிக்க மாட்டோமா என்ற ஆசையில். ஆனால் இதற்கு மிக அதிக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வேண்டியதிருக்கிறது. நம்மில் எத்தனை பேருக்கு இவை உள்ளன?
மிகக் குறைவான நம்முடைய நேரத்தை, இவ்வாறு பொருளற்ற பயனில்லாத தேடல்களில் இழக்க நேர்வதுதான் யேசுபுரம் நூலகத்தின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். தேடுதல் தேவையானதுதான். ஆனால் தேடுபவர்களுக்கு உதவுவவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தலைப்புகள் எழுதப்பட்ட வழிகாட்டிச் சின்னங்கள்கூட போலியான தெனில், அவற்றை நம்பித் தேடிக் கொண்டிருப்பவர்களின் நிலை என்னவாக இருக்கும் ?
இந்த நூலகம் மிக அதிகமான புத்தகங்களை நம்மிடமிருந்து மறைத்து வைக்கிறது என்பது வேதனையளிக்கும் வேறொரு உண்மை. அலமாரிகளின் கலைந்த சேமிப்புகளுக்கிடையில் வழி தவறித்தான் என்றாலும் இடையறாத தேடுதல்களில் நாம் தேடுவதை என்றாவது ஒரு நாள் கண்டுபிடிக்காமல் இருக்க மாட்டோம் என்ற எண்ணம்தான் சற்று நிம்மதியைத் தருகிறது. இப்படிப்பட்ட ஒரு சாத்தியம்தான் மனதில் ஆசையை வளர்க்கிறது. ஆனால் இந்த ஆசைக்கும், இனி இந்த நூலகத்தில் இடமில்லை. காரணம் யாரும் அறியாமல் ஆயிரக் கணக்கான புத்தகங்கள் புத்தகப் பிரிவிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அவை ஒரு முறை அலமாரியிலிருந்து வெளியே போனால் பின்னர் வந்து சேருவதில்லை. வேறு புதிய ஆயிரமாயிரம் புத்தகங்களும் அலமாரிகளுக்கு வருவதேயில்லை. பழைய புத்தகங்கள் தான் காணாமல் போகின்றன. அலமாரிகளுக்கு புதிய புத்தகங்கள் எப்போதும் வருவதேயில்லை.
இப்படி இரண்டு வகைகளில்தான் நூலகம் சிதைந்து கொண் டிருக்கிறது. இருப்பது இல்லாமல் போகிறது. புதியவைகளுக்கு அனுமதியும் இல்லை. நூலக உறுப்பினர்கள் அவ்வாறு இருபரிணாம் இழப்பைப் பொறுத்துக் கொள்கிறார்கள். கடந்த காலத்தில் சேகரித்ததை யும் நிகழ்காலத்தில் புதிதாக உருவாக்கியதையும் அவர்கள் ஒரே நேரத்தில் இழக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே நிலைமை, இப்படித் தான் இருக்கும் என்பது உறுதியென்றால், அவர்கள் உறுப்பினர்களாக இருப்பது பொருளற்றதல்லவா?
பெரும்பாலான உறுப்பினர்கள் இக்காரணங்களால் தங்கள் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. அவர்கள் இப்போது கடந்த காலமும், நிகழ்காலமுமில்லாத இந்த நிச்சயமின்மைகளிலிருந்து தங்களின் தேடல்கள் பயனற்றுப் போகலாம் என்ற பயங்கரமான புரிதல்களிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்கள். ஆனால் நாங்கள்? ஆயுட்கால உறுப்பினர்களான நாங்கள்?
இந்த வளைந்த சக்கரத்தில் நாங்கள் கட்டப் பட்டிருக்கிறோம். இதன் வளைவை நிமிர்த்த முடியவில்லையென்றால் எங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும். இதன் சுழற்சி நின்று போனால்? இதொரு பகடி தானே, சார்?
பழைய புத்தகங்கள் காணாமல் போவது எப்படி என்று நான் கண்டுபிடித்து விட்டேன். ஒரு உறுப்பினர் வாசித்த பின்னர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவுடன் அது மேஜைக்குக் கீழே உள்ள ஒரு குவியலில் போடப்படுகிறது. பல நாட்களின் தொடர்ச்சியில் அந்தக் குவியல் ஒரு கோபுரத்தைப் போல் மாறுகிறது. இறுதியில் மேஜையின் உயரத் திற்கு மேல் தலையை நீட்டுகிற, தொட்டால் சரிந்து விடுவதைப் போன்ற பல கோபுரங்கள், அங்கே அரைவட்டத்தில் நிறைந்தவுடன் அவை பல கட்டுகளாகக் கட்டப்பட்டு அலுவலகத்தின் உள்ளேயே உள்ள வேறொரு பெரிய அறைக்கு மாற்றப்படுகிறது. தற்காலிகமான மாற்றம் என்றுதான் சொல்லப்படுகிறது.
அதாவது அவற்றை அங்கே வைத்துத் தரம் பிரித்து, திரும்பவும் அலமாரிகளில் அடுக்கி வைப்பதுதான் இப்படிக் கொண்டு போகப் படுவதன் முதல் நோக்கம். ஆனால் இந்த நோக்கம் எத்தனையோ வருடங்களாக கண்டுகொள்ளப் படாமலேயே உள்ளது. எதற்காகத் திரும்பி வரும் புத்தகங்கள் அந்த அறைக்குக் கொண்டு செல்லப்படு கிறது என்று கேட்டால் இன்றைக்கு யாருக்கும் பதில் தெரியாது. கொண்டு போவது என்ற செயல் மட்டும் நடைபெறுகிறது.
இந்த அறையின் தரையில் சென்ற பல வருடங்களாக அவை சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பயங்கரமான இந்தக் குவியல்கள் ஒன்றிற்குப் பின்னால் ஒன்றாக தரைமுதல் கூரைவரை உயரத்தில் அறையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கையகப்படுத்தியிருக்கின்றன. அறைக்குள் நுழைய இனி இடமில்லை. பாதிக் கதவை மட்டுமே இனி திறக்க முடியும். அதனால் அந்த ப்யூன் முதலில் புத்தகங்களை கதவிற்கு வெளியே கொண்டு வந்து வைக்கிறான். பின்னர் ஒவ்வொன்றாக எடுத்து, பாதி திறந்த கதவின் வழியாக கையை உள்ளே நுழைத்து இரு புறமும் மேலே எறிகிறான். அவை என்றென்றைக்குமாக மறைந்து போகின்றன.
வெகு விரைவில் இந்த அறையின் கதவு திறக்கவே முடியாமல் போகும் என்பது உறுதி. அதனால்தானோ என்னவோ அதற்கு அருகில் உள்ள இன்னொரு அறை இன்டெக்ஸ் கார்டு ஒட்டப் படாத ஸ்டாண்டுகள் நிறைந்த ஒரு அறை சுத்தம் செய்யப்படுகிறது. நூலகத்தின் எல்லாப் புத்தகங்களும் இந்த அறைகளுக்குள் காணாமல் போவதற்கு எவ்வளவு வருடங்கள் ஆகும் என்று துடிக்கும் இதயங் களுடன் ஆயுட்கால உறுப்பினர்களான நாங்கள் கணக்கிட்டுக் கொண் டிருப்போம். ஒரு நாள் இந்த இரண்டாம் அறையின் கதவும் திறக்க முடியாமல் போகும். ஆனாலும் நாங்கள் எங்கள் ஆசைகளைக் கை விடவில்லை.
நூலகத்தின் ரெஃபரன்ஸ் பிரிவும் அதன் உள்ளேயுள்ள ஒரு இருட்டு அறையும் எங்களுக்கு முக்கியமான இடம். இன்று வரை அப்படித்தான் இருந்தது. பிறகு நூலகத்தில் அலுவலர்கள் இருக் கிறார்கள். புத்தகங்கள் முழுவதும் நூலகத்திலிருந்து மறைந்து போனாலும் அரசாங்கத்தின் சம்பள ரிஜிஸ்டரிலிருந்து இந்த நூலகத்தின் பெயர் மறைந்து போக அவர்கள் விடுவார்களா? எனக்கு அப்படித் தோன்ற வில்லை. இருக்கும் அலுவலர்கள் பென்ஷன் வாங்கினாலும் புதியவர்கள் இந்த வெற்று அலமாரிகளை மேற்பார்வை பார்க்க வரத்தான் செய் வார்கள். இந்த நிறுவனத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டது எவ்வளவு சரியானது என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.
எங்களுக்கு இன்னும் ஒரு ஆசை இருக்கிறது. கவனக்குறை வுள்ள உறுப்பினர்கள் திருப்பித்தர மறந்துபோன அல்லது அவர்கள் வேண்டுமென்றே திருப்பித்தராமல் இருக்கும் புத்தகங்கள்தான் எங்களுடைய அந்த ஆசை. இந்தப் புத்தகங்கள் திரும்பி வருவது சாத்தியமாக இருக்கும்வரை இந்த நூலகத்திற்கு அழிவில்லை என்பதே எங்களின் வாதம். இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? எங்களுக்குத் தெரிய வில்லை. நாங்கள் தைரியத்தை வரவழைத்து ஆசைப்படுகிறோம், அவ்வளவு தான்.
புரட்சி மனப்பான்மையுள்ள எங்களில் சிலர் அந்தக் கூட்டத்தில் ஒரு ஆலோசனை சொன்னார்கள். புத்தக அலமாரிகள் முழுவதும் காலியாவதற்கு இனியும் தாமதமாகாது என்ற நிலைமை வந்தவுடனே ஆயுட்கால உறுப்பினர்கள் எவ்விதத்திலாவது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை அவரவர்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் சென்று விடவேண்டும் என்பதான் அது. நூலகம் முழுமையாக இல்லாமல் ஆவதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகத்தான் அவர்கள் இதை முன் வைத்தார்கள்.
புத்தகங்களைத் திருப்பித் தராதிருக்கும் உறுப்பினர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நிச்சயமற்ற ஆசையைவிட, நாமே ஒரு தீர்மானத்திற்கு வருவது நல்லது என்று அவர்கள் வாதிட்டார்கள். இது முறையற்ற செயல் என்று நான் உட்பட சிலர் அன்று சொன் னோம். ஆனால் என் மனதிற்குள் நான் இன்றும் யோசித்துப் பார்க் கிறேன். இருத்தல் பிரச்னைக்கு முன்னால் எது தர்மம்? எது அதர்மம்? காரணம், இந்த நூலகத்தில் இனி அதிக புத்தகங்களொன்றும் இல்லை. முதலில் மனிதர்கள் இருக்க வேண்டாம்? பிறகுதானே சார், தர்மமும் அதர்மமும்.
புதிய புத்தகங்களுக்கு என்ன நேர்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். அவற்றின் மீதிருக்கும் காக்கி நிற உறைகள் கூடக் கழற்றப்படுவதில்லை. அவை வருடந்தோறும் தரைப்பகுதிக்குக் கீழே கட்டப்பட்டுள்ள ரெஃபரன்ஸ் பிரிவிற்கு அருகிலுள்ள ஓர் அறையில் குவிக்கப்படுகிறது. நான் ஒரு பழமைவாதி. எனக்கு இன்றைய சிந்தனைகளின் எழுத்துகளின் திசைகள் புரியவில்லை. இருந்தாலும் நான் ஒருமுறை அந்த இருட்டறைக்குள் சென்று அதிலிருந்த ஓரிரு கட்டுகளை அவிழ்த்து என் சாவிக் கொத்துடன் இணைந்த பேனா டார்ச்சின் உதவியுடன் அவற்றைப் பார்த்தேன்.
இவ்வளவு புதிய படைப்புகள், புதிய உருவகங்கள், புதிய உள்ளடக் கங்கள், சிந்தனைகள், உணர்வுகள், அழகுகள்… எனக்கு அறிமுக மற்றவை என்றாலும் ஓர் இருட்டறையியல் கட்டி வைக்கப்பட்டிருந்து என்னை வருத்தப்பட வைத்தது. மற்றொரு விதத்தில் இந்த காட்சி எனக்கு ரகசியமான, ஒரு வகையில் பெருத்த நிம்மதியையும் தந்தது. காரணம் இந்தக் கட்டு பிரிக்கப்படாத புத்தகங்கள் இங்கேயிருப்பது வரை இந்த நூலகத்திற்கு ஒரு எதிர்காலம் உண்டு. மேலேயிருக்கும் அலமாரிகள் காலியாகி நூலகத்தை மூட வேண்டிய நிலைமை வந்தால் நான் அவர்களை கீழே அழைத்து வந்து, இந்தக் கட்டுகளை பெருமை யுடனும் மகிழ்ச்சியுடனும் சுட்டிக் காட்டலாம் – ஆயுட்கால உறுப்பினர் களாகிய எங்களின் ரகசிய சொத்துதான் இந்த அறை.
உண்மையில் ரெஃபரன்ஸ் பிரிவுடன் இணைந்த ஒரு பெரிய அறைதான் இது. ரெஃபரன்ஸ் பிரிவு அலுவலகம் என்பதுதான் இதன் பெயர். ஆனால் வருடக் கணக்கில் அதில் குவிக்கப்பட்ட புத்தகக் கட்டு களும் இருட்டும் சேர்ந்து அது ஒரு சிறுகுகை போலத் தோன்றுகிறது. கடந்துபோன எத்தனையோ வருடங்களின் புதுமைகள் இந்த இருட்டறை யில் தூசு படிந்து மறைந்து கிடக்கின்றன என்று பலமுறை நான் இதன் முன்னால் நின்றபடி யோசித்திருக்கிறேன். இருட்டு மூடி வைத்திருக்கும் இந்தப் புதுமைகள் என்றாவது ஒருநாள் எங்களுடைய இருப்பின் மங்கும் திரியை மீண்டும் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் என்ற எண்ணமும் அப்போது என் மனதிற்குள் கடந்து செல்லும்.
வாசலில் நின்று நிறைய நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் தான் உள்ளேயிருக்கும் இருட்டுடன் கண்கள் பழகும். அப்போது இருட்டின் எல்லையில் சதுர வடிவில் புத்தகக் கட்டுகளுக்கும் கதவுக்கும் இடையிலுள்ள குறுகிய இடத்தில் ஒரு மேஜையையும் ஒரு நாற்காலி யையும் அந்த நாற்காலியில் ஒரு மனித உருவத்தையும் பார்க்கலாம். அந்த உருவம்தான் ரெஃபரன்ஸ் பிரிவு உதவியாளர்.
ஒரு முறை தனியாக இங்கேயிருந்த பல தூண்களுக்கிடையில் அலைந்தபோது, முதன்முதலாக இந்த ரகசியமான அறையால் கவரப் பட்டு இருட்டில் என்னுடைய பேனா டார்ச்சை அடித்துப் பார்த்த வுடன் திடுக்கிட்டு நான் எப்படி பயந்தேன் என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன். அந்த மேஜைக்குப் பின்னர் நாற்காலியில் அமர்ந்து தொலைவைப் பார்த்தபடி இருக்கும் சலனமற்ற உருவத்தை என் கண்கள் எதிர்பார்க்கவே இல்லை.
தனக்குப் பின்னால் திறக்கப்படாத புதுமைகளின், கட்டுகள் பிரிக்கப்படாத நவீனங்களின் ஒரு குவியலாக ரெஃபரன்ஸ் பிரிவு என்ற அந்த பெரிய மங்கிய வெறுமைக்கு, இருட்டில் காவலிருக்கும் இருக்கும் கதவின் வழியாக காணப்படும் நூற்றுக்கணக்கான தூண்க இந்த மனிதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு முன்னால் ளுடனோ, அவைகளுக்கிடையில் வெறுமையாக இருக்கும் மேஜை நாற்காலிகளுடனோ, தெளிவற்றுக் காணப்பட்ட அலமாரிகளுடனோ, தனக்குப் பின்னால் இருளால் சூழப்பட்டிடருந்த புத்தகக் குவியல் களுடனோ, அந்த மனிதனுக்கு எந்த உறவும் இருப்பதாகத் தோன்ற வில்லை.
ஆனால் ஓர் ஆயுட்கால உறுப்பினரான என் வேதனைக்கும் வெறுமைக்கும் நிச்சயமற்ற தன்மைக்குமிடையில் ஒரு நிம்மதியை நான் அந்த மனிதனில் உணர்ந்தேன். ஆயுட்கால உறுப்பினர்களான எங்களை மீட்க வந்திருக்கும் ஒரு சக்தியைப் போல நான் அவரை உணர்ந்தேன். அந்த மங்கிய சாம்ராஜ்யத்தில் எப்போதும் வெளியே போகாத செல்வங்களான ரெஃபரன்ஸ் புத்தகங்களையும் இருட்டி லிருக்கும் புத்தகக் கட்டுகளையும் எங்களுக்காகக் காவல் காக்கும் காவல்பூதம்.
நான் அவரிடம் பேசியதே இல்லை. அவரிடம் பேசி அந்த ரகசிய அறையின் மௌனத்தைக் கலைத்தால் என்ன நடக்குமோ என்ற சந்தேகம், பேச முனையும் போதெல்லாம் எனக்கு வந்தது. அது மட்டுமல்ல அவரிடமிருந்து ஏதாவதொரு சத்தம் பதிலாக வருமென்று எதிர்பார்க்கவும் இல்லை. நான் அவரைக் கண்டுபிடித்தும் நீண்ட நாட்கள் ஆகவில்லை. எவ்வளவு எதிர்பாராமல் அது நிகழ்ந்தது என்று சொன்னேன் அல்லவா? ரெஃபரன்ஸ் பிரிவின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
பல தூண்கள் நிறைந்திருக்கும் ஒரு பாதாள உலகம்தான் ரெஃபரன்ஸ் பிரிவு. இரண்டு கோடிகளிலும் ஒவ்வொரு பல்புகள் மங்கலாக எரிந்து இந்த நிலவறையை வெளிச்சத்தால் இருளச் செய்கிறது. இந்த மங்கலான வெளிச்சத்தில் தூண்களின் பெரிய நிழல்களுக் கிடையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் தனித்த அலமாரிகளில் சில தடிமனான புத்தகங்களின் இருண்ட உருவங்கள் காணப்படு கின்றன. இங்கே ஐந்து மாதம் தொடர்ந்து ரெஃபரன்ஸ் செய்த எனது ஒரு நண்பன் ஆறுமாதத்தைக் கண் மருத்துவமனையிலேயே கழித்தான். அவனுடைய ஒரு கண்ணிற்கு முழுமையான பார்வை இப்போதும் இல்லை. ஐந்து மாதங்கள் தொடர்ந்து இங்கே வந்துகொண்டிருக்கும் அவனுக்கு ரெஃபரன்ஸ் பிரிவு உதவியாளர் என்ற ஒருவரைப் பற்றி இன்றும் தெரியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
ரெஃபரன்ஸ் பிரிவைக் கூட பலரும் பார்த்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. திடமனதுள்ள சிலர் மட்டுமே இங்கே அபூர்வமாக எப்போதாவது இறங்கி வருவார்கள். நான் பலமுறை தைரியத்தைச் சேகரித்துக் கொண்டு இந்தத் தூண்களின் சலனமற்ற உருவங்களின் வழியாக நடந்திருக்கிறேன். என் மங்கலான நிழல் தூண்களோடு அமைதியாக கட்டிப்பிடித்தும் என் காலடியோசை ஒரு பெருமூச்சு போல அந்த இருளில் எழுந்தும் இருக்கிறது.
அந்த அலமாரிகளின் கரிய உருவங்களைத் தொடவும் பரிசோதிக்க வும் துணிந்திருக்கிறேன். என் பரிசோதனையில் அவை பெரும்பாலும் அகராதிகளாக இருந்தன. பெரியதும் சிறியதுமான அகராதிகள் பல மொழிகளின் அகராதிகள். அது தவிர மனித உடற்கூறு பற்றிய மிகப் பெரிய புத்தகம் ஒன்று. படங்களுடன் கூடிய பெரிய பைபிள் வேறொன்று. மற்றொன்று இரண்டு பாகங்களில், ஹேவ்லாக் எல்லீஸின் ‘சைக்காலஜி ஆப் செக்ஸ்’ வேறு சில புத்தகங்கள் நான் ஏற்கனவே ஆங்காங்கே கண்டவை. நான் ஒரு முறை பரிசோதித்துப் பார்த்தேன். (எல்லாம் என் பேனா டார்ச்சின் உதவியால்தான்)
இந்தப் புத்தகங்கள் முழுவதும் பேய்க் கதைகளாயிருந்தன. ஒரு முறை ஒரு புத்தகத்தில் ஒரு பிசாசு ஒரு ஆளரவமற்ற பாதையில் நடந்து செல்லும் ஒருவனுக்குப் பின்னால் மௌனமாகச் செல்லும் பயங்கரமான படத்தைக் கண்ட பிறகு நான் எப்படி அந்த இருளில் உதறலோடும் தளர்ச்சியோடும் திரும்பிப் பார்த்தும், படிகளில் ஏறி மேலே வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இந்தக் குவியலில் நான் கண்டுபிடித்த மற்றொரு புத்தகம் ஜெ. கிருஷ்ண மூர்த்தியின் ‘கமண்ட்ரீஸ் ஆன் லிவிங்’ கின் இரண்டாம் பாகம்.
அன்றைக்கெல்லாம் என்னைத் தவிர வேறொருவரும் அந்தப் பாதாளத்தின் தனிமையில் இருக்கிறார் என்றோ இருட்டில் மறைந் திருக்கிறார் என்றோ எனக்குத் தெரியாது. எப்படியிருப்பினும் ஆயுட் கால உறுப்பினர்களான எங்களுக்கு இந்த ரெஃபரன்ஸ் பிரிவின் மீதும் அதன் காவல்காரனின் மீதும் பெரும் விருப்பம் உண்டாவது இயல்பானதுதானே. காரணம் இங்கேதான் நான் முன்பே குறிப்பிட்டது போல காணாமல் போகாத. மேலே அறைக்குள் எறியப்படும் புத்தகங்கள், இனியும் அவிழ்க்கப்பட வேண்டிய புத்தகக் கட்டுகள் இருக்கின்றன.
ஆனால் சார், இன்று என்னுடைய அந்தச் சிறிய ஆசைக்கும் ஆவலுடன் சேகரித்து வைத்திருந்த நிம்மதிக்கும் பெரிய அடி ஏற்பட் டிருக்கிறது. நான் அவசரப்பட்டு இந்தப் புகாரை இந்த விண்ணப்பத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். இனி என்னால் காத்திருக்க முடியாது. ரெஃபரன்ஸ் பிரிவிற்கும் வீழ்ச்சி துவங்கியிருக்கிறதோ என்று நான் பயப்படுகிறேன்.
இன்று காலையில் ரெஃபரன்ஸ் பிரிவிற்கு நான் இறங்கிச் சென்றேன். அங்கே ஏதோ ஒருவகையான துர்நாற்றம் பரவிக் கொண் டிருப்பதாக எனக்குத் தோன்றியது. அதன் உறைவிடத்தைத் தேடிக் கொண்டே, அந்த அலுவலக அறையை நோக்கி நீட்டிய என் பேனா டார்ச்சின் வெளிச்சத்தில் ரெஃபரன்ஸ் பிரிவின் உதவியாளர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர் தூக்கில் தொங்கி இறந்திருந்தார். அவர் அப்படி தொங்கத் தொடங்கி மூன்று நாட்களாவது ஆகியிருக்க வேண்டும். இதன் அர்த்தம் என்ன? இனி என்ன நடக்கும்? ரெஃபரன்ஸ் பிரிவின் சுமையைத் தாங்க இனி யாராவது வருவார்களா? அங்கேயிருக்கும் புத்தகங்களும் இனி ஒவ்வொன்றாக வெளியே செல்லாது என்று என்ன நிச்சயம்? நான் உடனேயே ஆயுட்கால உறுப்பினர்களின் அவசர காலக் கூட்டம் ஒன்றைக் கூட்டப் போகிறேன். தொடர் நடவடிக்கைகள் பற்றி அவசரமாக ஆலோசிக்க வேண்டிய திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் உங்கள் முன் வைக்கும் இந்த எளிய புகார். கடவுளே, இனி என்ன நடக்க போகிறதோ?

One Comment on “பால் சக்கரியா/ யேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு விண்ணப்பம்”

Comments are closed.