பால் சக்கரியா/அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்

மிஸ். அன்னம்மா மத்தாயி என்கிற ஹைஸ்கூல் டீச்சர் ஒரு புனித வெள்ளியன்று ஒரு குளத்தின் அருகேயிருந்த அடர்ந்த காடுகளுக் கிடையில் இறந்து கிடந்தாள். இறந்த பிறகும் அன்னம்மா அழகுட னேயே இருந்தாள். புற்களின் மீது, துண்டு கட்டிக்கொண்டு, யாரோ தாங்கிப் படுக்க வைத்தது போல காணப்பட்ட தன் சுருண்ட முடியால் அலங்கரிக்கப்பட்ட அங்கும் இங்கும் ஒவ்வொரு சிவந்த பருக்கள் விரிந்திருந்த முகத்தில் அமைதி நிறைந்திருந்தது. அவளுடைய கால் விரல்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு தும்பியும் முடிச் சுருள்களுக்குள் ஏதோ மகரந்தத் தூளைத் தேடிக் கொண்டிருந்த ஒரு பட்டாம் பூச்சியும்தான் அவளுடைய பிணத்திற்கு நீண்ட நேரம் துணை யாயிருந்தன. கருமேகங்களில் நீந்திக் கொண்டிருந்த ஒரு பருந்து அவளைப் பலமுறை அதிசயமாய்ப் பார்த்தது.
இறப்பதற்கு முன்பு அன்னம்மா டீச்சர் வீட்டிலிருந்த நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் ஆறு குழந்தைகளுடைய அனைத்து அழுக்குத் துணிகளையும் துவைத்துப் பிழிந்து காயப் போட்டிருந் தாள். இறப்பதற்கு முன்பே மூன்று தம்பிகள், மூன்று தங்கைகளின் படிப்பையும் திருமணத்தையும் நடத்தி முடித்திருந்தாள். எல்லா திருமணங்களிலும் அன்னம்மா தன்னை அலங்கரித்துக் கொண்டு மூத்த அக்காவாக நின்றாள். பெரிய அக்கா ஹைஸ்கூலில் டீச்சராக இருக்கிறாள் என்று ஒவ்வொரு சமயமும் எல்லோரும் பெருமையாகச்
சொல்லிக் கொண்டார்கள். ஆண்கள் உயர்ந்த வரதட்சணைக்காக விலை பேசிய போது குடும்பத்தின் வளமைக்கு முக்கியமான ஒரு உதாரணமாக அன்னம்மாவுடைய அப்பா மூன்று முறையும் ஹைஸ்கூல் டீச்சரான தன்னுடைய மூத்த மகளைத் தான் சுட்டிக் காட்டினார்.
இந்த வரதட்சணைப் பணத்தை வட்டிக்கு விட்டுத் தீர்ந்தபோது இளைய பெண்களின் சீதனங்களின் வளர்ச்சிக்கும், பீஸ் தொகை கட்டுவதற்குமெல்லாம் அன்னம்மாவின் சம்பளம் மிகவும் உபயோக மாக இருந்தது. இவற்றிற்கிடையில் அன்னம்மாவின் திருமணத்தை மட்டும் எப்படியோ எல்லோரும் மறந்து போனார்கள். கடைசி தம்பியின் படிப்பு முடியாதிருந்ததும் அதற்கு ஒரு காரணம். அதனால் தான் எப்போதாவது அன்னம்மாவிற்கு திருமண ஏற்பாடுகளுடன் வரும் யாரிடமும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க அப்பா விரும்ப வில்லை. கோபம் வந்தால் அந்த மனிதர் பிசாசாக மாறுவார் என்பதும் வருபவர்க்கெல்லாம் தெரிந்திருந்தது.
அவ்வாறாக அன்னம்மாவின் மரணம், வர்கீஸ் மத்தாயி என்கிற எட்டாம் வகுப்பு மாணவன் பீஸ் கட்டுவதை ஒரு விதத்தில் பாதித்தது. இனி ரப்பரும், தேங்காயும் விற்ற காசிலிருந்து அவனுடைய பீஸைக் கழித்து விட்டு மீதியைத்தான் கூட்டுறவு வங்கியில் சேமிக்க முடியும் என்பது தெளிவு. இதை யாரும் வெளியே சொல்லவில்லையெனினும், சடலத்தைத் தேவாலயத்திற்குக் கொண்டு செல்வதற்கு முன்பு நடந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது அன்னம்மாவின் அப்பா, அன்னம்மா வின் அம்மாவின் கண்களைப் பார்த்த ஒரு பார்வையில் அது வெளிப் பட்டது. அம்மா கட்டுப்படுத்த முடியாமல் கதறிக் கொண்டே அன்னம்மா வின் விறைத்துப்போன பாதங்களில் தலையை அழுத்தினாள். இந்த உண்மையைத் தவிர்க்க முடியாத ஒரு எதார்த்தமாக அப்போதுதான்
அவர்கள் உணர்ந்தனர்.
சடலத்தின் கால்களில் வெள்ளைக் கான்வாஸ் செருப்புகள் அணிவிப்பது வழக்கமாக இருந்தாலும் ஆடம்பரங்களுக்காகப் பணத்தை வீணாக்க வேண்டாம் என்ற எண்ணத்தால் அவற்றை வாங்கவில்லை. அதனால் அன்னம்மாவின் அம்மாவிற்கு அவளுடைய பாதங்களின் குளிர்மை ஒரு மறையாத நினைவாக நிலைத்திருந்தது. ‘ஐஸ்’ போல் இருந்தது அவளுடைய கால்கள்’ என்று பிறகு விசாரிக்க வந்தவர்களிடம் சொல்லவும் செய்தாள்.
பீடி பிடிப்பதற்கான சில்லறையை எப்போதாவது திருடி யெடுப்பதற்கு ஒரு பழைய பர்ஸ் இனி இருக்காதே என்பது மட்டும் தான் வர்கீஸ் மத்தாயியின் தனிப்பட்ட இழப்பாகத் தோன்றியது. அன்னம்மாவின் சவப்பெட்டியின் மீது மண் போடத் தொடங்கியதும். வர்கீஸ் கல்லறைத் தோட்டத்தின் ஒரு மூலைக்குச் சென்று அன்னம்மாவின் பர்ஸிலிருந்து கடைசியாக எடுத்த காசைக் கொண்டு வாங்கிய கடைசி பீடியைப் புகைத்தான் பீடி புகைத்தலும் சுய இன்பம் காண்பதுவும்தான் வர்கீஸின் ரகசிய சந்தோஷங்களாக இருந்தன. . மனதில் தான் ஒருமுறை இந்த இரண்டையும் ஒருங்கே அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அன்னம்மாவின் பார்வையில் பட்டதை ஒரு சங்கடத்துடன் நினைத்துக் கொண்டான். அவன் வாயிலிருந்து சுருண்டு உயரும் பீடிப் புகை, ஏதோ குப்பையிலிருந்து உயரும் வாயுவைப் போல் சவக் குழியின் மீது படர்ந்து சென்றது.
முதல்நாள் அப்பா அந்தப் பழைய பர்ஸின் ஒவ்வொரு அறையையும் பரிசோதித்த பிறகு பரணின் மீது தூக்கிப் போடுவதற்கு முன்பாகவே வர்கீஸ் அதிலிருந்த ஒரு ரூபாய் எழுபத்தியெட்டு பைசாவை எடுத்திருந்தான். துவைத்துத் துவைத்து நிறம் மங்கிப்போன அன்னம்மாவின் நாலு புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப் பெட்டியின் அடியில் விரித்திருந்த நியூஸ் பேப்பருக்குக் கீழேயிருந்து அப்பாவுக்கு ஆறு ரூபாய் கிடைத்தது. இது அன்னம்மாவுடையதா வேறு யாராவது ஒளித்து வைத்திருந்ததா என்ற பலமான சந்தேகத்தை அப்பா அடக்கிக் கொண்டார்.
சவப் பெட்டி செய்யவும் மற்றவற்றிற்குமான பணம் வங்கியி லிருந்து ஒரு நீண்ட பெருமூச்சுடன் எடுக்கப்பட்டது. சவத்தை அலங்கரிக்க ஒரு மலர்க் கிரீடம் வாங்குவதற்காக அந்த ஆறு ரூபாய் ஒதுக்கி வைக்கப் பட்டது. ஆனால், சாட்டின் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஒரு கிரீடம் பள்ளிக்கூட கன்னியாஸ்திரிகளால் கொடுத்தனுப்பப்பட்ட தால், அப்பா அந்த ஆறு ரூபாயைத் தன் பெல்ட்டின் மற்றொரு அறைக்குள் ஒதுக்கி வைத்தார். கணக்குகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளும் சுபாவமுள்ளவரல்ல அவர்.
போஸ்ட் மார்ட்டத்தில் மரணத்துக்கான காரணம் மாரடைப்பு என்றிருந்தது. அன்னம்மாவின் கன்னித் தன்மைக்கு எந்தவொரு பங்கமும்
வந்திருக்கவில்லை. இதுவும் போஸ்ட்மார்ட்டத்தின் ஒளிரும் கத்திகளும் உறையணிந்த விரல்களும் கண்டுபிடித்த ஒரு உண்மை. அன்னம்மா டீச்சர் அவ்வாறு தன் மரணத்தில்தான் ஒரு ஆணின் தீண்டலை கருணையற்ற பிளத்தலாக அனுபவித்தாள். அவளுடைய குடும்பத்திற்கு இந்த மரண அறிக்கைகள் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது. காரணம் காதலர்களோ, வேறு யாரோ கொலை செய்ததாயிருக்கலாமோ என்ற சந்தேகம் தீர்ந்துவிட்டதே. ஏனெனில், அன்னம்மாவின் அழகு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவளுடைய அப்பாவின் நிம்மதியைக்குலைத்துக் கொண்டிருந்தது.
அந்த அழகு மட்டும் குடும்பத்திற்குப் புரியாத யாருக்கும் வளைந்து கொடுக்காத, ஒரு புலப்படாத சக்தியாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவளுடைய முப்பத்தொன்பதாவது வயதிலும் வரன்களைப் படியேறி வரச் செய்தது. தன்னுடைய பூரண அழகை அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கிக் கொண்டு மழைத் துளிகளைப் போர்த்தியபடி படுத்திருக்கும் அன்னம்மாவின் உறக்கம் கடைசியாக அவள் ஒருமுறை குடும்பத்திற்கு சவால் விடுவது போலத்தான் அப்பாவிற்குத் தோன்றியது. என்ன இருந்தாலும் அவளுடைய மரணத்தைப் பற்றிய கரு வளையம் போன்ற சந்தேகம் போஸ்ட் மார்ட்டத்திற்குப் பிறகும் அப்பாவின் மனதிலிருந்து முழுவதுமாக மறையவில்லை.
ஒரு வேளை அவள் தவறு ஏதாவது செய்திருந்தாலும், அவப் பெயர் எதுவும் இல்லாதபடி எல்லாம் முடிந்து விட்டதே, எல்லாம் அவன் செயல். யோசித்துப் பார்த்தால் அவளும் பெண்தானே; வெற்றிலையில் சுண்ணாம்பு தேய்த்துக் கொண்டே அப்பா சிந்தனை யில் ஆழ்ந்தார். பக்கத்தில் அமர்ந்து பாக்கு வெட்டிக் கொண்டிருந்த அம்மா எதற்கோ தலை குலுக்கினாள். அம்மாவுக்கு இயேசுவினிடத் தில் நிறைந்த பக்தியிருந்தது. புனித இருதயத்தின் முன்னாலிருந்து எழுந்திருக்கவே மாட்டாள். புனித வெள்ளியன்றே அவளுக்கு மரணமடையும் பாக்கியம் கிடைத்ததே. குடும்பத்திற்கு தெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு என்றெல்லாம் அடக்கத்தின் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சிற்குப் போகும்போது தோழிகளிடம் சொல்லிக் கொண்டே வந்தாள்.
‘அவளுக்குப் பதினேழு வயது ஆனதிலிருந்தே திருமணம் செய்ய நாங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்தப் பாக்கியம் அவளுக்குக் கிடைத்ததா பாருங்கள்!’ என்று அம்மா மூக்கில் கண்டு விரலை வைத்துக் கொண்டு சொன்னாள்.நோன்பிற்காக இறைச்சி நறுக்கி, அம்மாவுடையதும் நாத்திகளுடையுதும் கைகள் வலித்தன. புனித வெள்ளியன்று நோன்பு முடிக்க வேண்டிய அவசரமான நேரத்தில் அன்னம்மா இறந்ததற்கு எதிராக அவர்களின் சோர்ந்த கை வி ரல்கள் முணுமுணுத்தன.
அன்னம்மாவிற்கு யேசுவின் மீது என்றும் பிரியமிருந்தது. குழந்தைப் பருவத்தில் இடி இடிக்கும் போதும், பெருவெள்ளம் பாயும் ஓடையைக் கடக்கும் போதும், கைப்பிடியில்லாத ஒற்றையடி மரப் பாலம் வழியாக மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கடந்து செல்லும் போமெல்லாம் அவள் ‘ஈசோ’ என்று அழைத்தது இந்தப் பிரியத்துக்குரியவனைத்தான்.
தன் முப்பத்து மூன்றாம் பிறந்த நாளன்று சர்ச்சுக்குப் போய் பாவ மன்னிப்பு கோரி, அப்பம் பெற்றுத் திரும்பும்போது அன்னம்மா யேசுவிடம் இப்படிப் பேசிக் கொண்டே வந்தாள். ‘இன்று முதல் நீ எனக்குத் தம்பிதான். எனக்கு முப்பத்து மூன்று முடிந்து விட்டது. என் வயதில் நீ இறந்து விட்டாய். இனி எனக்குத்தான் வயது கூடும். இனி நான் உன் அக்கா. நீ என்னிலும் இளையவனாக என் செல்லத் தம்பியாக இருக்க வேண்டும்.’
புனித வெள்ளிகளில் சர்ச்சில் அமர்ந்து அன்னம்மா அவனிடம் ‘பாவம், என்ன வேதனையுடன் நீ இறந்தாய்? இன்றைய உன் மகிமையைக் கனவு காணக்கூட உன்னால் முடிந்ததா? சிலுவையின் மேலே உன் அலறல் பெரிய அலறலாகத்தான் இருந்ததோ?
யேசுவே நீ எவ்வளவு அப்பாவியாக இருந்தாய்?’ என்பாள். அன்னம்மா டீச்சர் தன் ஈரமான கண்களை மற்றவர்கள் யாரும் அறியாமல் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு பலி பீடத்தின் கருப்பு நிறத்திரைச் சீலையின் அசைவுகளை உற்று நோக்குவாள்.
அன்னம்மா ஒரு போதும் தனக்குத் திருமணம் நடக்க வேண்டு மென்று அவனிடம் பிரார்த்தனை செய்ததில்லை. சில சமயம் அவளுக்குப்
பெரிய சங்கடமும் தனிமையும் தோன்றியிருந்தன. சில வேளை இரவுகளில் மூச்சடைப்பும் எதற்கென்றறியாத ஒரு சிலிர்ப்பும் தோன்றி யிருந்தன. அப்போதும் அன்னம்மா ஜெபிப்பாள் ‘ஈசோயே, நீ எனக்குத் ‘ துணையாயிருக்கணும்.’ அப்பா டைபாய்டு வந்து ஆஸ்பத்திரியில் இருந்த போதும் நாத்தனார்கள் தங்கைகளின் பிரசவ தினங்களிலுமெல்லாம் அன்னம்மா அவனிடம் சொன்னாள்: ‘யேசுவே, நீ எங்களைக் கைவிடாமல் காப்பாற்ற வேண்டும். ‘
முப்பது வயது வரைக்கும் அன்னம்மா தன் திருமணத்தைப் பற்றிச் சில முறை நினைத்துக் கொண்டிருந்தாள். மற்ற எல்லோரையும் போல தனக்கும் திருமணம் நடக்குமென்றுதான் நம்பினாள். அப்பாவோ, சகோதரர்களோ தனக்கு ஒரு வரனைக் கொண்டு வருவார்கள் என்று அவள் வெறுமனே நினைத்தாள். பள்ளிக்கூடத்தில் உள்ள ஜார்ஜ் சார், தன் சித்தப்பாவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து அப்பாவுடன் பேசிய அந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் அன்னம்மா திருமணச் சடங்குகள் பற்றி, ஒரு வீட்டைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி, இதயத்திலொரு பரிதவிப்புடன் யோசித்தாள். ஆசைப்பட்டாள். அவர்கள் போன பிறகு, ‘இவனுக்கெல்லாம் வரதட்சணை கொடுத்து மாளாதே, அப்படியே கொடுப்பதாயினும் அதற்குத் தக்கபடியான பெருமை ஒன்றுமில்லாத குடும்பமாக இருக்கிறது’ என்று அப்பா சொல்வதைக் கேட்டவுடன், அவள் அந்த யோசனையையும் அழித்து விட்டாள்.
ஜார்ஜ் சார், வரதட்சணை எதுவும் வாங்காமல் அன்னம்மாவை திருமணம் செய்து கொள்ளத் தயாராயிருந்தார் என்று மேரிக்குட்டி டீச்சர் மூலம் பின்னர் அறிந்து கொண்டாள். வெற்றிலை போட்டுச் சிவந்த உதடுகளும் புன்னகையுமாக நடக்கும் ஜார்ஜ் சாரிடம் அன்னம்மா விற்கு விருப்பமிருந்தது. ஓய்வறையில் அமர்ந்து கேலி பேசி எல்லோரையும் சிரிக்க வைப்பார். மறுநாள் ஜார்ஜ் சார் யாரிடமும் எதுவும் பேசாமல் ஓய்வறையில் ஒரு மூலையில் அமர்ந்து கட்டுரை நோட்டுகள் திருத்திக் கொண்டிருந்தார். சாரின் பக்கத்தில் போய் உட்கார்ந்து ‘வருத்தப்படாதீர்கள்’ என்று ஆறுதல் சொல்ல வேண்டும் போல அன்னம்மாவிற்குத் தோன்றியது. எனக்கும் வருத்தம்தான் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அந்த நிமிடம் அடுத்த பீரியடுக்கான மணி அடித்தது. அன்னம்மா வகுப்பறைக்குச் செல்லத் தயாரானாள்.
அதன் பிறகு அன்னம்மா ஸ்கூலுக்குப் போவாள், வருவாள். எல்லோருக்கும் தன்னாலான வேலைகளைச் செய்து கொடுப்பாள். அம்மாவின் கட்டிலுக்குப் பக்கத்தில் தரையிலொரு பாய் விரித்துப் படுத்துறங்குவாள். மாசக் கடைசியில் சம்பளத்தை அப்பாவிடம் கொடுப்பாள். அப்பா அதை எண்ணி முடியும் வரை கதவிற்கு வெளியே தலை தெரியும்படி நிற்பாள். ரூபாயைப் பெல்ட்டில் செருகிக் கொண்ட பிறகு சமையலறைக்குத் திரும்புவாள். சில சமயம் இருட்டில் பாயில் படுத்துக் கொண்டு அன்னம்மா யேசுவிடம் சொல்வாள்; ‘தானம் கொடுக்க வேண்டுமென்று நீ சொல்லியிருக்கிறாயே? என்னால் அது முடியவில்லை என்று உனக்குத் தெரியுமே ? இல்லையென்றால் தனிமையில் உழலும் நான் என்னால் முடிந்த அளவு பணம் ஏழை களுக்குத் தானம் செய்திருப்பேனே?’
அப்போது உள்ளேயொரு புன்சிரிப்புடன் அன்னம்மா கேட்பாள்: ‘ஆனால் என்ன தானம்தான் நீ கொடுத்தாய்? உன்னிடம் பணம் இருந்ததா? உன்னுடையதெல்லாம் வார்த்தைகளினாலான ஒரு வித்தை யாக அல்லவா இருந்தது. கொஞ்சம் நேசமும் கோபமும்தானே நீ தானம் செய்தாய் ? உன் வார்த்தைகளின் வலையில் நீ எல்லோரையும் விழ வைத்தாய். கடைசியில் நீயும் அதில் வீழ்ந்தாய்.’
இந்த எல்லை கடந்த எண்ணங்களையெல்லாம் அன்னம்மா, எதனாலோ பாவ மன்னிப்பு கேட்கும்போது சொல்லவில்லை. பாயின் மேல் அவளை அழுத்திய இரவுகளின் கனம் மட்டும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்து கொண்டிருந்தது. அவளுடைய நெஞ்சில் கலகல சத்தம் மட்டும் வேர்வையணிந்த மூச்சு முட்டலிற்குள் சென்று மறையும். உடல் தளர்ந்தாலும் அன்னம்மா பயப்படவில்லை.
புனித வெள்ளியன்று நீர் சலசலப்பதும் காற்றடிப்பதும் பசுக்கள் கத்துவதும் பறவைகள் கீச்சிடுவதும் ஒரு அழுகையைப் போலத்தான் நீரில் நின்றுகொண்டு துணி துவைத்த அன்னம்மாவின் பாதங்களில் அன்னம்மாவிற்குக் கேட்டது. பாறைகள் நிறைந்த ஓடையில் பளபளக்கும் வெயில் வீசியெறிந்த ஒரு நிழல் வலையின் கண்ணிகள் சுற்றிக் கொண்டு அசைந்தன. அவளுடைய கணுக்கால் ரோமங்களில் சிறு மீன்கள் உதட்டை அழுத்தின. அவள் தளர்வாகத்தான் சர்ச்சிலிருந்து வந்தாள் சர்ச்சிலிருக்கும்போது ஒரு நீண்ட அழுகையும் சங்கடமும் அவளைச் சூழ்ந்திருந்தன. தேன்கூட்டின் இரைச்சல்போல உரியவனில்லாமல் எழுந்த கூட்டுப் பிரார்த்தனையின் இரைச்சல் அவளை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கியது.
‘இந்த இரைச்சலுக்கிடையில் இந்த மக்கள் உன்னிடம் சொல்வ தென்ன? இதற்காகத்தானா நீ வெயிலிலும் மழையிலும் இருட்டிலும் அலைந்து அடியும் உதையுமேற்று அழுது இறந்தது? பாவம் தம்பி . உருக்கத்துடன் அவள் சொன்னாள். ‘உன்னால் எதுவும் அடைய முடிந்ததில்லை. எல்லாம் வீண்’ – பாவ மன்னிப்புக் கூண்டிற்கு அருகில் மறைந்து நின்று அன்னம்மா கண்ணீர் துடைக்கவும் தேம்பலைத் தடுக்கவும் முயன்றாள். மரண மணியின் தயையற்ற கிடுகிடு சத்தம் உயர்ந்த போது அன்னம்மாவிற்குக் குமட்டியது. ‘உன் மரணத்தை இவ்வளவு பயங்கரமான ஒரு சத்தத்தை வெளிப்படுத்தித்தான் நினைவுறுத்த வேண்டுமா? இரண்டு காதுகளிலும் விரல்களை அழுத்திக் கொண்டு அன்னம்மா வேர்வையும் தலை சுற்றலுமாகக் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.
துணி துவைத்து முடிப்பதற்குள் ஆகாயத்தில் மழை மேகம் மூடியிருந்தது. துணிகளைக் காய வைத்த பிறகு சோர்வு நீங்கட்டும் என்றெண்ணி நீரில் நெடு நேரம் மூழ்கிக் கிடந்தாள். ஆகாயத்தில் மேகத்தின் நிறம் நகர்ந்து செல்லவேயில்லையென்று அவளுக்குத் தோன்றியது. அன்னம்மா எழுந்து நின்று சோப்பு தேய்க்கத் தொடங்கினாள். அப்போதுதான் அடர்ந்த காடுகளில் ஒரு அசைவை ஓரக் கண்ணால் பார்த்தாள். அவள் உடனே அந்தப் பக்கம் திரும்பினாள். ஒரு தலை செடியின் பின்னால் மறைந்தது. அன்னம்மாவிற்கு அடக்க முடியாத கோபம் வந்தது. பெண்கள் குளிக்குமிடத்தில் ஒளிந்து பார்க்கிறார்களா? அது யாரென்று தெரிய வேண்டுமே. அவள் உடனே கரை ஏறி ஒரு நிமிடத்தில் காடுகளுக்குள் சென்றாள். அங்கே ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
‘நீயா?’ அன்னம்மா முணுமுணுத்தாள். ‘நீ இப்படிச் செய்வாயென்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக இன்று நீ பாவம் செய்யலாமா?”
அவன் தோள்களைப் பிடித்துக் கொண்டே அன்னம்மா கேட்டாள். `தம்பி என்னைப் பார்ப்பதற்காகவா இந்த ஓடைப் பக்கம் வந்தாய்? இவ்வளவுதானா உன் சக்தி?’
‘இன்று நீ எனக்காக எவ்வளவோ அழுதாய்?’ இளைஞன் சொன்னான். ‘உன்னை ஆற்றுப்படுத்தத்தான் நான் வந்தேன். சுழித்து ஓடும் இந்த சுத்தமான நீரில் நீ நிற்கும் போதுதானே எல்லா வேலை களையும் செய்து முடித்து, நீ நீயாக மட்டுமே ஒரு நிமிடம் இருக்கும் போதல்லவா, நான் உன்னைக் காண வர வேண்டும். இல்லையா அக்கா? திடீரென்று பார்த்தால் நீ பயந்து விடுவாயோ என்று எண்ணித்தான் ஒளிந்திருந்தேன்.
‘தம்பீ… உன்னைப் பார்த்து நான் பயப்படுவேனா? நீ நலம் தானே? உன் சங்கடங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வந்துவிட்டதா? நான் இன்று சிறிது தளர்வுற்றிருக்கிறேன். என் கண்களில் இருட்டு வந்து விட்டதே. சூரியனுக்கு என்ன ஆகிவிட்டது? நீ என் கைகளைப் பிடித்துக் கொள்.’
இளைஞன் அன்னம்மாவின் இரண்டு கைகளையும் தன் கைகளில் எடுத்து தன்னுடைய உதடுகளில் அழுத்திய பிறகு மெதுவாகச் சரிந்து கொண்டிருந்த அன்னம்மாவைத் தாங்கிக் கொண்டு முணு முணுத்தான்: ‘தூங்கு அக்கா, ஓய்வெடுத்துக் கொள். எனக்கு இன்றும் சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்போது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்.’
அன்னம்மாவின் உடம்பை புற்களின்மீது படுக்க வைத்து விட்டு அவன் கார்மேகங்களிலொரு சிறு புள்ளியாக மறைந்து போனான். அந்த மேகங்கள் பெய்த மழை, அன்னம்மாவை கழுவிய பிறகுதான் அவளுடைய சடலத்தை வர்கீஸ் மத்தாயி என்ற சகோதரன் கண்டதும் கத்திக் கொண்டு ஓடியதும் நடந்தது.

https://daily.navinavirutcham.in/?p=29928

One Comment on “பால் சக்கரியா/அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்”

Comments are closed.