18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த 10 வது கவிதை
வீடு பூட்டிக் கிடந்தது
தெருவில் போவோரின் பார்வையில்
ரயில் பெட்டித் தொடரான
வீடு
பூட்டி இருப்பது தெரியாது
üவிலுக்விலுக்ýகென்று பார்ப்பவர் கண்களில்
உறுத்திய பெரியவர் நடப்பார்
அவரைக் காணோம்
ஜன்னலோரம் வைத்திருந்த வண்டி
சப்தமிழந்த தூசிகளுடன் கலந்திருக்க
அதைத் தினமும் ஓட்டிச் செல்பவர் எங்கே?
விரிந்திருக்கும் மாடிப்படிக்கட்டில்
பூப்பறிக்க நின்றிருக்கும் சிறார்கள்
காலை நேரத்தை அறிவிப்பார்கள்
எங்கே? எங்கே?
வாசல் üமரகேட்ý அருகில்
மரம்மாதிரி நின்றிருப்பாள் பெண்மணி
üகேட்ý மட்டும்தான் இப்போது
யாருக்கும் உறுத்தவில்லை
வீடு பூட்டியிருப்பது.
கதவின் நாதாங்கியில் அசையாமல்
இருக்கும் கனத்த பூட்டுச் சொல்வது என்ன?
தெருவில் ஒரு சிலருக்கே தெரியும்
கேட்டைக் கடந்து உள்ளே நுழைந்த
கோழிகள் இரைதேட
கோழிகளைத் துரத்தும் சேவல்
மதர்ப்புடன் பூனைகள் நழுவின பயமின்றி
குட்டிப்போட இடம் கண்டுபிடித்த
சந்தோஷத்துடன் நாயொன்று அலைந்து
திரிந்தது
பூட்டிக்கிடந்த நாதாங்கியில்
பூட்டுச் சலசலக்காமலிருக்கிறதா?
பெருமூச்சு கேட்காமலிருக்கிறதா?
இளைப்பாற இடம் கிடைத்ததென்று
பகல்பொழுதில்
சிலர் உள்ளே நுழைந்தனர்
நடைபாதையில்
வீணாய்ப் பேசிப் பொழுதைக் கழித்தனர்
சிகரெட் புகைத்துச் சிலர் போட்டனர்
தனியாய் இரவில் பெண்ணைத் தருவித்து
எதையோ செய்தனர்
ஜன்னல் வழியே
யாரோ பார்க்க
உள்ளே விழித்துக் கிடக்கும்
வாளிகளும் அசையாமல்
தூசிகள் படிய பாத்திரங்களும்
அலங்கோலமாய்த் தொங்கின துணிகள்
மற்றபடி
பூட்டிக் கிடந்த வீடு இன்னும்
பூட்டியே இருந்தது
தவமிருந்து கனத்த பூட்டு
பெருமூச்சு விட மறுத்தது