
சமீபத்தில் டெல்லியிலுள்ள ஒரு நண்பனின் கடிதம் வந்தது. அவன் ரகசிய போலீஸ் மேலதிகாரி. அவன் எழுதியிருப்பதாவது:
நண்பனே, நீ ஒரு எழுத்தாளன்தானே?… வெறும் ஒரு துப்பறியும் நாவல் எழுதுபனாக இருந்தாலும் நான் சொல்லப் போகும் சம்பவம் உனக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுமா என்று பார். ஞாயிற்றுக் கிழமையாதலால் நான் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு சும்மா வழியில் போகிறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் என்னை உற்றுப் பார்த்துவிட்டு கேட்டைத் திறந்து என் சின்னப் பூந்தோட்டத்தினருகே வந்தான்.
தோளில் ஒரு துணி மூட்டையைச் சுமந்து கொண்டிருந்தான். ஆட்டிடையர்கள் வைத்திருப்பதைப் போன்ற ஒரு கோல் அவன் கையிலிருந்தது. தலையில் முண்டாசு கட்டியிருந்தான். இந்த வெயிலில் அதன் மீது ஒரு கம்பளித் தொப்பி. அவன் அணிந்திருந்தது கிழிந்த ஒரு கம்பளி உடைதான். காலை இறுக்கிப் பிடித்திருக்கும் பைஜாமா. முப்பதலிருந்து முப்பத்தைந்து வயதிருக்கும். சிவந்த முகத்தில் குறுந்தாடி இமாலய மலைப் பகுதிகளிலிருந்து வந்தவன் என்பது தெளிவாகத் தெரரிந்தது. உதவி கேட்க வந்திருக்கிறான். நான் அவனைப் பார்க்காத பாவனையில் தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் சிறிது நேரம் காத்திருந்துவிட்டுச் செருமினான். நான் பார்த்தவுடன் குனிந்து வணங்கி, ‘மன்னிக்கணும் ஸாப், நீங்க கொஞ்ச நேரம் ஒதுக்க முடியுமா?’ என்றான்.
முடியும். ஞாயிற்றுக் கிழமைதானே, நிறைய நேரமிருக்கு. ஆனால் காசு மட்டும் தர முடியாது’ என்றேன்.
அவனுடைய முகத்தில் பெரிய நிம்மதி தோன்றியது. அவன் கேட்டைத் திறந்து வழியில் கோலை நீட்டிக் காண்பித்தான். முதலில் கேட்டின் வழியாக ஒரு ஆட்டுக் குட்டி உள்ளே நுழைந்தது. பின்னால் அறுபது செம்மறியாடுகள் கொண்ட கும்பல் ஒன்று நீர்வரத்து போல என்னுடைய சின்ன தோட்டத்திற்குக் கடந்து வந்தன. வளைந்த கொம்புகளும் சிவந்த மூக்குகளும் பூனைக் கண்களும் உடம்பு முழுக்க அழுக்கடைந்த பஞ்சு ரோமமுள்ள ஆடுகள்.
நான் அதிர்ந்து எழுந்து நின்று ‘இதென்ன? என்னுடைய பூச்செடியெல்லாத்தையும் தின்னுடுமே’ என்றேன்.
‘பயப்படாதீங்க ஸாப், நான் சொல்லாமல் அவை அசையாது. வழியில் வரும் ஏதாவது வண்டி இடிச்சால்…’
சில ஆடுகள் என்னைக் கூர்ந்து பார்ப்பதுபோல எனக்குத் தோன்றியது. எப்படியிருப்பினும் குட்டி வால்களை ஆட்டிக் கொண்டு அவை ஒரு அகதிகள் சங்கத்தைப் போல என் தோட்டத்தில் பொறுமை யாகக் காத்துக் கொண்டிருந்தன.
அப்போது இடையன் தன் கையிலிருந்த துணி மூட்டையை அவிழ்த்துக் கொண்டே ‘ஸாப் நான் இவற்றின் உரிமையாளரை இந்த நகரத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். இவற்றை அவரிடம் திரும்பக் கொடுத்தால் பெரிய பரிசு கிடைக்கும் என்பதை நான் அறிந்தேன். ஸாபிற்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா? இந்தப் பாவமான படிப்பறிவற்ற எனக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.’
அவன் மூட்டையைத் திறந்தான். உடைந்த சில எலும்புத் துண்டு களும் நிறைய கரித் துண்டுகளும் ஒரு காய்ந்து போன சாமந்திப் பூ மாலையின் நார்களும் அதிலிருந்தன.
‘என்ன இது?’ நான் பயந்து பின்வாங்கியவனாகக் கேட்டேன். ‘மந்திரவாதமா, வேறு ஏதாவதா?’
‘இல்லை ஸாப்’ அவன் ஆடுகளை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு சொன்னான். ‘இரண்டு வாரங்கள் முன்பு நான் கங்கோத்ரிக்கு
மேலேயுள்ள மலைச் சரிவுகளில் புல்வெளிகளில் ஆடு மேய்த்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தேன். ஆடுகள் இலைகளையும் வேர்களையும் கடித்தபடி பனி உருகி விட்ட, துளிர்க்கத் தொடங்கிய புல்வெளியினூடாக வெயிலில் மேய்ந்தன.
நான் ஒரு கல்லில் உட்கார்ந்து வெயில் காய்ந்தபடி உறங்கி விட்டேன். பேய்த்தனமான அலறலும் ஓசையும் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். மலை இடிந்து விழுகிறதோ, பனி வெடித்து உருளு கிறதோ, பூகம்பம் வந்து விட்டதோ, உலகின் முடிவு ஏற்பட்டு விட்டதோ என்றெல்லாம் நான் பயந்துபோனேன். ஆடுகள் மரத்துப் போய் பயந்து ஒன்றுகூடி நின்றிருந்தன. நான் பயந்துகொண்டே ஆகாயத்தைப் பார்த்தேன். ஏதோ ஒன்று மேகங்களின் பின்னால் போவது போலவோ வருவதுபோலவோ உணர்ந்தேன்.
மனிதனின் பாவம் அதிகமாகி சகித்துக் கொள்ள முடியாத இறைவன் கைலாசத்திலிருந்து அலறிக் கொண்டு எல்லாவற்றையும் விழுங்கி விடுவதற்காக இறங்கி வருகிறார். ‘கடவுளே இந்தப் பாவமான ஆட்டிடையனுக்குக் கருணை காட்டுங்கள்’ என்றேன் நான். தலை குனிந்து வணங்கினேன். இந்த ஆடுகளைக்கூட நான் வேதனைப் படுத்தியதில்லை. இந்தக் கோலினால் பயமுறுத்த மட்டுமே செய்திருக் கிறேன். அப்பாவும் அம்மாவும் வயதானவர்கள். வீட்டிலிருக்கின்றனர். அவர்களுக்கு வேதனையும் வருத்தமும் உண்டாகும்படி நீ எதுவும் செய்து விடாதே. நான் அவர்களின் ஒரே மகன் நான் இல்லாவிட்டால் அவர்களுக்கு உதவ யாருமின்றி இறந்து போவார்கள். நீ என்னை விட்டு விடு’ என்றேன்.
திடீரென ஏதோ ஒன்று என் தலையில் வந்து இடித்தது. நான் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டேன். ஆடுகள் என் முகத்தில் நக்குவதை உணர்ந்த பின்னர்தான் நான் எழுந்தேன். என் தலையின் ஒரு பக்கம் சுரீரென்றிருந்தது. தொட்டுப் பார்த்தால் ரத்தம். என் காலடியில் இந்த உடைந்த குடமும் அதனுள்ளே இந்தக் கரித் துண்டுகளும் சாமந்திப் பூக்களும் கிடந்தன. இதில் என்னவோ ரகசியம் இருக்கிறது. அந்த அலறல்களுக்கும் இவற்றிற்கும் ஏதோ தொடர்பிருப்பதாக நினைத் தேன். வானத்திலிருந்து விழுந்தவற்றையெல்லாம் என் போர்வையில் மூட்டை கட்டினேன். தலை சுற்றுவதைப் பொருட்படுத்தாமல் பத்து நாழிகை தூரத்தில் உள்ள பால் விற்கும் ராணுவ முகாமிற்கு ஓடினேன். அவர்களிடம் முழு விபரமும் சொன்னேன். முதலில் அவர்கள் உரக்கச் சிரித்தார்கள்.
கூட்டத்திலிருந்த ராணுவ அதிகாரி என்னிடம், ‘டேய், உனக்கு அதிர்ஷ்டம் வந்திடுச்சு. இது ஒரு புதையல்தான். இதன் நிஜ உரிமை யாளர் டில்லியில்தான் இருக்கிறார். நீ இதை எடுத்துக் கொண்டு டில்லிக்கு போய்த் தேடினால் அவரைக் கண்டு பிடிக்கலாம். அவர் மகா மனிதர் உனக்கு ஏதாவது பரிசு தராமல் விட மாட்டார்’ என்றார்.
நான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சாப்பாடு போடும் வேலையை ராணுவத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அங்கே எந்நேரமும் சுற்றிக் கொண்டு இருக்கும் சாதுவான ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தேன். ஆனால் இந்த ஆடுகளை யார் கவனிப்பார்கள்? எனக்கு அவற்றைப் பிரியவும் மனம் வரவில்லை. நான் அவற்றை மேய்த்தபடி இந்த மூட்டையையும் தூக்கிக் கொண்டு பத்து நாட்கள் முன்னர் மலை இறங்கத் தொடங்கினேன். நேற்று இங்கு வந்து சேர்ந்தேன். யமுனை யின் கரையிலுள்ள ஒரு புல்வெளியில் நேற்று ஓய்வெடுத்தேன். அருகே ஏதோ மகானின் சமாதியைக் கட்டுகிறார்கள்.
நான் அங்கேயிருந்த வேலையாட்களிடமும் காவலிருந்த போலீஸ் காரர்களிடமும் இந்தக் குடத்தின் உரிமையாளர்களைப் பற்றி விசாரித் தேன். அவர்கள் என்னைச் சந்தேகத்தோடு பார்த்தார்கள். ஒரிரண்டு போலீஸ்காரர்கள் எதையோ அவர்களுக்குள்ளும் பேசிக் கொண்டார்கள். ஒரு போலீஸ்காரன் கோலினால் என் ஆடுகளைக் குத்தினான். அவர்கள் டீ குடிக்கப் போன நேரம் பார்த்து என் ஆடுகளோடு நான் தப்பித்து விட்டேன். புதையல்தானே ஸாப், பயப்பட வேண்டியதுதானே. நான் இன்று மறுபடியும் என் தேடலைத் தொடங்குகிறேன்.
இது ஒரு புதையல்தான் என்றால் என் வாழ்க்கையே மாற்ற மடைந்து விடும் ஸாப். இரண்டு வேளையும் தீயில்சுடப்பட்ட காய்ந்த ரொட்டியும் இரண்டு வறுத்த மிளகாயும் கறுப்புத் தேனீரும் குடித்து வாழும் என் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பாசுமதி அரிசிச் சோறும், வெங்காயமும் எண்ணெயும் ஊற்றிச் சமைத்த பருப்பும் மசாலா பிசைந்து வறுத்த உருளைக் கிழங்கும் கொடுப்பேன். ஆடுகள் இரவில் தூங்க புல் வேய்ந்த குடிசை உண்டாக்குவேன் ஸாப். இந்தப் புதையன் உரிமையாளரை கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். ஸாபின் முகம் ரகசியங்கள் அறியக் கூடியதாய் உள்ளது. அவன் என் பாதங்களைத் தொட்டான். நான் நடுங்கி விட்டேன். ரகசியங்கள் தெரிந்து கொள்ளும் முகம். எனக்கா? அப்படியானால் என்னைப் பார்த்தால்? நான் என் சங்கடத்தை அடக்கினேன். மலை களின் குளிர்ந்த புல் பரப்புகளில் அலைந்து திரிந்த ஆடுகள் நாற்பத்து மூன்று டிகிரி வெப்பமுள்ள என் தோட்டத்தில் முறைத்துக் கொண்டு நின்றன. நான் என் மனைவியிடம், ‘இவனுக்கு ஒரு கப் டீ கொண்டு வா. இந்த ஆடுகளுக்குக் கொஞ்சம் தண்ணீரும்’ என்றேன்.
அவள் கடுப்பான முகத்துடன் டீயைக் கொண்டு வந்து வைத்து விட்டு ஆடுகளை ஒரு பார்வை பார்த்து தலையைத் திருப்பி அங்கிருந்து சென்றாள். நான் ஒரு தொட்டியை முற்றத்தில் வைத்து தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் டியூப்பினால் நீரை நிரப்பினேன். ஆடுகள் வயிறு நிறைய தண்ணீர் குடித்தன. அவை ஒவ்வொன்றும் தண்ணீர் குடித்த பிறகு என் கண்களைப் பார்த்தன.
இடையன் டீயைக் குடித்ததும் நான் அவனிடம், ‘நண்பனே, இது புதையல் என்று தோன்றவில்லை. யாருடையதோ எலும்புத் துண்டுகளாக இருக்கலாம். இதற்கு யார் விலை தரப் போகிறார்கள்?’ என்றேன். என் மனதில் கடந்து போன சில தேவையற்ற சந்தேகங்களை நான் அவனிடம் சொல்லவில்லை. நான் ஒரு ரகசியப் போலீஸ் தானே?
‘வானத்திலிருந்து விழுந்தது ஸாப்!’ என்றான். ‘என்னைத் தேடி வந்ததாகத் தெரிகிறது. பஞ்சத்தில் அடிபட்ட என் விதியைக் கண்டு எனக்குத் தந்திருக்கலாமில்லையா? இல்லாட்டி மறுபடியும் நான் இந்த ஆடுகளையும் இழுத்துக் கொண்டு மறுபடியும் என் பட்டினிக்கே மலையேறணுமா? இங்கேயிருந்துதானே ஸாப் இந்த இந்துஸ்தான் முழுமையும் ஆட்சி செய்கிறார்கள். அவர்கள் யாருடைய தாவது தொலைந்து போன புதையலாக இருக்கலாமல்லவா ஸாப் இது? இந்தக் கரித் துண்டுகளும் எலும்புத் துண்டுகளும் ஒருவேளை ஒரு சிறுதொகை தந்தால்கூடப் போதும், திரும்பிச் செல்வதற்கான வைரங்களும் மாணிக்கங்களுமாக இருந்தால்? அவர்கள் அதற்கு என் பயணச் செலவு மட்டுமாவது பட்டினியில்லாமல் போகும்.’
நான் உள்ளே சென்று மனைவி அறியாமல் நூறு ரூபாய் எடுத்து வந்து கையில் சுருட்டிப் பிடித்துக் கொண்டு ‘நீங்க திரும்பிப்போக எவ்வளவு ரூபாய் வேண்டும்?’ என்று கேட்டேன்.
‘ஸாப் திரும்பி மலையேறிச் செல்ல எனக்கு பதினைந்து நாட்களாகும். ஆடுகளுக்கு ஒன்றிரண்டு இடங்களில் புல் வாங்க வேண்டியிருக்கும். எனக்கு ரொட்டி வாங்க மூன்று ரூபாய்க்குமேல் ஆகாது. அவன் சந்தேகத்தோடு என்னைப் பார்த்தான்.
நான் நூறு ரூபாயை அவனிடம் நீட்டியபடியே ‘நண்பனே நீங்கள் டில்லியில் நடத்தும் இந்தத் தேடல் வீணானது என்றே நினைக்கிறேன். ஒருவேளை அது அபாயகரமானதும் கூட. இந்த எலும்புத் துண்டுகளைப் புதையல் என்று சொல்லி உங்களை அந்த ராணுவ வீரர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்கு இங்கே மதிப்பில்லை. இதன் பயன் முடிந்து விட்டது. நீங்கள் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் திரும்பிச் செல்வதுதான் நல்லது என்பதே என்னுடைய அறிவுரை. இனி எலும்புக் கூடுகள் உங்களுடைய தலையில் விழாமல் இருக்க நான் வேண்டிக் கொள்கிறேன். ராணுவத்தினர்கள் சிரிப்பார்கள். காரணம் எலும்புக் கூடுகளை எறிபவர்கள் அவர்கள்தான்’ என்றேன்.
அவன் என்னை அதிசயத்துடனும் பயத்துடனும் பார்த்தான். ‘இது நிஜமாகவா ஸாப்?’
‘ஆமாம். இந்தச் சத்தியங்கள் தெரியாமல் இருப்பதனால்தான் டில்லியிலிருந்து எலும்புக் கூடுகள் உங்கள் தலைகளில் விழுகின்றன. நீங்களும் இந்த ஆடுகளும் நீண்ட தேடுதல்களுக்குத் தள்ளப்படுகிறீர்கள். நீங்கள் திரும்பச் சென்று ராணுவத்தினரை மகிழ்விக்கும் வேசியின் பொறுப்பிலிருந்து உங்கள் அப்பாவையும் அம்மாவையும் விடுவி யுங்கள். ஒரு வேளை அவர்களுக்குச் சாப்பாடு போடுவதற்கு அவளை அவர்கள் அனுமதிக்காமலும் இருந்திருக்கலாம். ‘
அவன் தயங்கியபடியே அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டான். பிறகு தலை நிலத்தில் தொடும்படியாக குனிந்து வணங்கினான். முதலில் நின்றிருந்த ஆட்டுக் குட்டியை வாரி எடுத்து என்னிடம் நீட்டினான். ‘ஸாப் இந்தக் குட்டியை என்னுடைய அளவற்ற நன்றி யோடு தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். இவள் வளர்ந்து உங்களுக்கும் அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல பால் தருவாள். அடியோ,உதையோ படாத ஓர் அம்மாவின் நல்ல குணமுள்ள மகள்தான் இவள்’ என்றான்.
‘வேண்டாம், இவள் இந்த நகரத்தின் கொடுமையில் நொந்து போவாள். ஒரு வீட்டுவிலங்கை வளர்க்க இங்கேயுள்ளவர்களுக்குத் தெரியாது. இவள் மலையின் குளிர்காற்றில் துளிரான புல் தின்று இந்த வறண்ட பயணத்திற்குப் பின் ஆனந்தமடையட்டும்’ மனைவியின் இருண்ட முகம் கதவுக்குப் பின்னாலிருந்து என்னைப் பார்க்கத் தொடங் கியது.
‘நன்றி ஸாப். நான் இனி டில்லிக்கு ஒரு போதும் வர மாட்டேன். இது ஒரு பெரிய நகரம்தான். இந்துஸ்தானத்தின் பிரபுக்களின் இந்த நகரத்தில் இப்படியாவது வரும் வாய்ப்பு கிடைத்ததே? ஸாப் என்றாவது மலை ஏறுவதாக இருந்தால் என் மலைச்சரிவிற்கு வர வேண்டும் கிராமத்திற்குப் பின்னால்’ அவன் துணி மூட்டையைத் தூக்கி எடுத்தான்.
‘அந்தக் கரித்துண்டுகளைத் திரும்பவும் சுமக்காதே. அதோ தெரிகிறது பார் சாணிக் குழி. அதில் எறிந்து விடு. அப்படியாவது ஒரு நன்மை அதற்கு உண்டாகட்டும்.’
அவன் கரித் துண்டுகளையும் எலும்புத் துண்டுகளையும் எறிந்து விட்டு போர்வையைத் தண்ணீரில் நனைத்துத் தோளிலிட்டான். ‘மனசிலிருந்தும் உடம்பிலிருந்தும் ஒரு பெரிய பாரம் இறங்கியது போல இருக்கிறது ஸாப். ஒரு தூய்மை வந்தது போல’ என்று சொல்லி என்னை மீண்டும் வணங்கி விட்டு ஆடுகளுடன் கேட்டைக் கடந்து போனான்.
எழுத்தாளனே, இந்த ஆட்டிடையனின் பயணத்தால் உனக்கு ஏதாவது பயனுண்டா என்று பார். நீ என்றாவது உன் வளையிலிருந்து வெளியே வந்தால் டில்லியையும் பார்த்து விட்டு வேண்டுமானால் கந்கோத்ரிக்குப் பின்னால் உள்ள அந்த இடையனின் கிராமத்திற்கும் போய் வரலாம். அந்த ஆட்டுக் குட்டி எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க எனக்கு ஆவலாக இருக்கிறது.
இப்படிக்கு
உன்னுடைய அன்பான நண்பன்.
நான் ஒரு கடிதம் எழுதினேன். `என் போலீஸ்கார நண்பனே. உள் ஆட்டிடையனின் கதைக்கு ஒருகதைக்குத் தேவையான அளவு ட்விஸ்ட் இல்லை. வானத்திலிருந்து கேட்கும் அறைலும் ஓசையும். பரவாயில்லை. அந்த ஆட்டுக்குட்டி ஒரு நல்ல கதாபாத்திரம்தான். ஆனால் எண் எழுத்திற்கும் பயண்படது என் புலன்விசாணைக் கதைகளுக்குத் தேவை நீதானே? ரகசியப் போலீஸ்காரா உண்மையைச் கொல் உண்மையில் அந்தச் குடத்தில் என்ன இருந்தது? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்த எலும்பும் கூட்டைப் பின் தொடர்ந்து ஒரு பேய உன் வீட்டில் குடியேறுவதும் ரகசியப்போலீஸ் காரனுக்கும் பேய்க்குமான அடிதடியும் – அதில் ஒரு கதை உருவாக வாய்ப்புண்டு. டில்லிக்கு வர விருப்பமில்லாமல் இல்லை. நான் பயணம் போய்க் கொண்டு இருந்தால் – நாவல் எழுதுவதை விட்டு விடலாம். இங்கேயுள்ள வயல்வேலைகளை யார் பார்ப்பார்கள்?
இப்படிக்கு
உன் அன்பான நண்பன்
கடிதத்தைத் தபால் பெட்டியில் போடும் போது நான் சந்தோசத்தோடு யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் ஒரு போலீஸ்காரன், ஆனால் என்ன? வானத்திலிருந்து எலும்புக்கூடு விழுந்தது என்பதை நம்பவும் ஆட்டுக் குட்டியைப் பற்றி வருத்தப்படவும் முடிகிறதே, அவன் பிழைத்தும் கொள்வான். ஹா…ஹா…ஹா… எலும்புரு் கூடாம்! வானத்திலிருந்து! நோ…என் கிட்டயேவார!
பால் சக்கரியா/அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “பால் சக்கரியா/அலறும் எலும்புக்கூடு”
Comments are closed.