பால் சக்கரியா/செய்தித் தாள்

பாலாய்க்குப் பக்கத்திலுள்ள சேர்ப்பூங்கல் என்ற இடத்தில் ஒரு நாள் காலையில் இன்னும் திறக்கப்படாமல் இருந்த கடைக ளொன்றின் திண்ணையிலமர்ந்து பதினான்கு பிச்சைக்காரர்கள் செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதானவர்களும், மத்திய வயதினரும், இளைஞர்களும் இருந்தனர். குண்டானவர்களும், ஒல்லியானவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் உள்ளவர்களும், நிறமுள்ளவர்களும் இருந்தனர். குள்ளமானவர்களும் நடுத்தர உயர மானவர்களும் இருந்தனர். ஒரு கையில்லாதவர்களும், ஒரு கண் தெரியாதவர்களும், ஒரு காலில்லாதவர்களும் இருந்தனர். அழுக்கான உடைகளைத்தான் எல்லாரும் உடுத்தியிருந்தனர். என்றாலும் முழுக்கக் கிழிந்த உடைகளை அணிந்தவர் யாருமில்லை. சிலர் வேட்டியும் துண்டும், சிலர் சட்டையும் அணிந்திருந்தனர். செருப்பு போட்டவர்கள் சிலர் இருந்தனர். நாலைந்து பேர் பீடி புகைத்துக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் பெண்கள் யாரும் இருக்கவில்லை. எல்லோருடைய முகங்களும் மகிழ்ச்சி இழந்திருந்தன. வாழ்க்கை மீதிருந்த வெறுப்பு எல்லோருடைய முகங்களிலும் பிரதிபலித்தது.

இந்தப் பிச்சைக்காரர்களின் கூட்டம் உண்மையில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கவில்லை. செய்தித்தாள் வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவன் வாசிக்க மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந் தனர். வாசித்துக் கொண்டிருந்தவர் பிச்சைக்காரனல்ல. தன் மனைவிக்கு வேறு ஒரு ஆளோடு தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த பிறகு, முப்பத்தைந்து வயதுடைய மனைவியையும் பதினான்கு, பனிரெண்டு வயதுடைய குழந்தைகளையும் பிரிந்து வீட்டை விட்டு

வெளியேறிய ஒரு மத்திய வயதுடையவன். அவன் முற்றும் துறந்த வாழ்க்கையை ஆரம்பித்து சில வாரங்களே ஆகின்றன.

ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிந்து தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாத தூரத்திலிருந்த சேர்ப்பூங்கலை அடைந்தான். அங்கே வழியருகே நின்றிருந்த குழந்தை யேசு சிலையைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மின் விளக்கு அலங்காரத்தில் கவரப்பட்டு நிற்கையில் அவன் கண்கள் குழந்தை யேசுவின் முகத்தில் பதிந்தன. தன் மகனின் முகமே யேசு விற்கும் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்தச் சந்தோஷத்தி லேயே அங்கேயிருந்த ஒரு கடைத் திண்ணையில் படுத்துத் தூங்கினான். பின்னர் அங்கேயே தங்கி விட்டான். ஆனால், பிறகு எப்போதும் குழந்தை யேசுவின் முகத்தை அவன் பார்த்ததேயில்லை. தன்னுடைய மகனின் முகம் நினைவில் வந்து இதயத்தைக் காயப்படுத்துவதை அவன் அனுமதிக்கவில்லை.

சந்திரன் என்ற பெயருடைய அவன் கடைத் திண்ணையில் உறங்குவதும், பத்திரப்படுத்தி வைத்திருந்த பணத்திலிருந்து சிறிது சிறிதாக செலவு செய்து சாப்பிட்டுக் கொள்வதும் மீனச்சல் ஆற்றில் குளித்து, துவைப்பதுமாக காலத்தைக் கழித்தான். அப்படித்தான் பிச்சைக் காரர்களின் குழுவோடு பழக்கமானதும், அவர்களுக்குப் பத்திரிகை வாசிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டதும். படிப்பு வாசனை உள்ள வர்கள் இந்தக் கூட்டத்தில் இருந்தாலும் தினசரிகளின் பக்கங்களில் உள்ள செய்திகளை அணுகவும், தேவையானதை கண்டடையவும் உள்ள திறன் தங்களுக்கில்லை என்ற எண்ணம் அவர்களிடையே இருந்தது.

இது வாழ்க்கையின் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பையே காட்டுவதாக இருந்தது. கடைத் திண்ணையில் அமர்ந்து ஒரு பழைய செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த சந்திரனை அவர்கள் அணுகி தங்களின் விருப்பத்தைச் சொன்னவுடன்தான் அவன் அவர்களின் செய்தி வாசிப்பவன் ஆனான். அவனை ஒரு பிச்சைக்காரனாகத் தான் நினைத் திருந்தனர். ஆனால் அவனுக்கும் தங்களுக்குமிடையே ஒரு அடிப்படை வித்தியாசம் இருந்ததை அவர்கள் அறியவில்லை பர்சும் அதில் கொஞ்சம் பணமும்.

மடியில் ஒரு செய்தித்தாள் வாங்குவதற்கான பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொண்டனர். தினமும் செய்தித்தாளின் பக்கங்களில் காணப்படும் மரணம் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் விளம்பரங்களைப் படித்துக் காண்பிப்பதுதான் அவனுடைய முக்கியமான வேலை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் சமீப இடங்களிலுள்ள சடங்குகள், விருந்துகள் நடக்கும் வீடுகள், கோவில்கள், மசூதிகள், கல்யாண மண்டபங்கள் போன்றவற்றைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு அங்கே செல்வார்கள். சந்திரன் அவர்களுக்குத் தன்னாலான விதத்தில் வழிகளும் பேருந்துத் தடங்களும் முகவரிகளும் கண்டுபிடிக்க உதவியாயிருந்தான். அது மட்டுமின்றி யாசகர்களுக்கு அதிகம் தானம் கிடைக்கும் இடங்களைக் கண்டுபிடித்துக் கொடுக்க வும் அவன் அறிந்திருந்தான். இப்படியாக சந்திரன் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தான்.

தங்களுக்குக் கிடைப்பதில் ஒரு பகுதியைச் சந்திரனுக்குக் கூலியாகக் கொடுக்க அவர்கள் சம்மதித்தனர். ஆனால் சந்திரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அரைச் சந்நியாசியைப் போல அலைந்து திரிபவன்தான் என்றாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு உழைக்காமல் கிடைக்கும் பொருட்களின் மீதான உதாசீன மனோ பாவம் மட்டுமல்ல இதற்குக் காரணம். பணச் செலவில்லாமல் தினமும் பத்திரிகை படிக்க முடிவதையே அவன் கூலியாக நினைத்தான். வீட்டை விட்டு வெளியேறிய போது கையில் எடுத்துக் கொண்ட பணமும் அண்டர்வேரின் பாக்கெட்டில் ரகசியமாக மறைத்து வைத் திருக்கும் தன் தங்கச் செயினும் எத்தனை நாளைக்குத் தனக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யுமோ என்ற பெரியதொரு பய உணர்வை ஏற்படுத்தியிருந்தாலும் ஒரு நிஜமான பிச்சைக்காரனாகத் தன்னை மாற்றுவதைப் பற்றிய எண்ணம் மனதை தளரச் செய்வதாலும், அவன் தன் கைப் பணத்தை மிகவும் பத்திரமாகத்தான் செலவு செய்து வந்தான். ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டான். மற்ற வேளைகளில் அவனுக்குப் பசியே தோன்றுவதில்லை.

அவன் வீட்டை விட்டு வெளியேறிய நாலாவது வாரத்தில் பிச்சைக்காரக் கும்பலுக்காக பத்திரிகை படிக்கும்போது, ஒரு விளம்பரத் தில் அவனுடைய கண்கள் நிலைத்தன. அது அவனுடைய மனைவி யின் விளம்பரம், ‘சந்திரண்ணா மன்னிடுச்சிடுங்க. திரும்பி வாங்க.

நானும் ரமேஷும் மல்லிகாவும் காத்திருக்கோம்’ உயரமான ஓரிடத்தி லிருந்து கீழே வீழ்வது போன்ற ஒரு பயத்தை அவன் உணர்ந்தான்; மூச்சு முட்டியது. ஒரு மாய உலகத்தைப் பார்ப்பது போல அந்த விளம்பரத்தை உற்றுப் பார்த்தான். அவன் கண்களில் நீர் நிரம்பியது. பட்டெனக் கண்ணீரைத் துடைத்தபடி வாசிப்பைத் தொடர்ந்தான்.

இன்று மணமக்கள் ஆகின்றனர். பாலா பத்ராசனப் பள்ளியில் 11 மணிக்கு பேபிச்சனும் மேரியம்மாவும்’ மீதியுள்ள விளம்பரங் களையும் செய்திகளையும் வாசித்து ஒவ்வொரு பிச்சைக்காரனுக்கு மான அன்றைய பயண இடங்களை விளக்கிய பிறகு வழக்கத்திற்கு மாறாக பத்திரிகையை கசக்கிச் சுருட்டி வீசினான். ஒன்றிரண்டு பிச்சைக் காரர்கள் அதிசயமாக அவனைப் பார்த்தனர். பத்திரிகை காற்றில் உருண்டு குழந்தை யேசுவின் சிலைக்கு முன்னால் அனாதையாய் நின்றது. அந்தப் பத்திரிகையைத் திரும்ப எடுக்க வேண்டுமென்றும், தன் மனைவியின் அழைப்பை மேலும் ஒரு முறை வாசிக்க வேண்டு மென்றும் அடக்க முடியாத ஆசை அவனுக்குத் தோன்றியது. ஆனால் அந்த ஆசையை அவன் சற்று நேரத்தில் அடக்கிக் கொண்டான். மறுபடி வீசிய காற்றில் அது அருகிலிருந்த ஓடையில் விழுந்தது.

கடை திறக்க வந்த முதலாளியின் காலடியோசையைக் கேட்டுத் தான் அவன் பகல் கனவுகளிலிருந்து மீண்டான். இன்றுதான் தன் வீட்டை விட்டும் மனைவி குழந்தைகளின் அருகாமையை விட்டும் வெளியேறிய நூற்றைம்பதாவது நாள்.

சந்திரன் பத்திரிகையைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினான். ‘ஈராட்டுபேட்டை அரீக்குன்று வீட்டின் அன்னக்குட்டி மாத்யூ கால மானார். இறுதிச் சடங்கு மதியம் மூன்று மணிக்கு அருவித் துறை தேவாலயத்தில்.’ இறுதிச் சடங்கில் யாரெல்லாம் பங்கெடுப்பது என்று தீவிரமான ஆலோசனைக்குப் பிறகு பிச்சைக்காரர்கள் முடிவுக்கு வந்தனர். கடை முதலாளியின் உருவம் தூரத்தில் தென்படுகிறதா என்று தலையுயர்த்திப் பார்த்த பிறகு, சந்திரன் அடுத்த விளம்பரத்தை படிக்கத் தொடங்கினான். பல நேரங்களில் கடை திறக்க முதலாளி

வந்து சேரும் வரை செய்தி வாசிப்பு நீண்டிருந்தது.

சில செய்திகளிலும் விளம்பரங்களிலும் பிச்சைக்காரர்கள் தங்களின் உணவுத் தேவைகளுக்கு அப்பால் கவனம் செலுத்துவதே அதற்குக்காரணம். ஒரு குழந்தையின் மாணத்தைப் பற்றி அவர்கள் அதிக செய்திகளை அறிய விரும்புவர். அவர்கள் மூக்கின்மீது விரல் வைத்தும் வேதனையின் சமிக்ஞைகள் செய்தும் துன்பத்தில் ஆழ்ந்து போவார்கள். அந்தக் குழந்தையின் படத்தைப் பார்க்க விரும்பினால் சந்திரன் அதை எல்லோருக்குமாகக் காண்பிப்பான். சில சமயம் யாராவது ஒருவன் செய்தித்தாளை கையில் வாங்கி கண்களுக்கருகே வைத்து அதைப் பார்ப்பான்.

குடும்பத்தின் ஒட்டுமொத்தத் தற்கொலை, சாலை விபத்தில் ஒரே குடும்பத்தினரின் மரணம் என்று இப்படிப்பட்ட துயரங்களைப் பற்றி அறிவதற்கு அவர்கள் மிக விருப்பத்தோடு இருந்தனர். சில நேரம் ஒருவன், ‘காசும், பணமும், காரும் எல்லாம் இருந்தென்ன பயன்? ஒரு நிமிசத்தில் எல்லாம் போயிடுச்சே?’ என்பான். ஒருநாள் ஒரு விளம்பரத்தைப் பார்த்த ஒருவன் சிறிது நேரத்திற்குப் பின் தாழ்ந்த குரலில் ‘அது என் மகள்’ என்றான். மற்ற பிச்சைக்காரர்கள் பரிகாசத் தோடு அவனைப் பார்த்து சிரித்தார்கள். யாராலும் நம்ப முடியாத பொய்யைச் சொன்னதற்கு அவனை அனுதாபத்தோடு பார்த்தனர். ஆனால் அவன் பொய் சொன்னதாகச் சந்திரனுக்குத் தோன்றவில்லை.

வேறொருவன் அவனைப் பார்த்து, ‘அப்படின்னா நீங்களே அந்தக் கல்யாணத்துக்குப் போங்க’ என்றான். ‘என் மகள் கல்யாணத்துக்கு நான் எப்படி போறது?’ என்றான் அவன். மற்றவர்கள் அதை ஒரு நகைச்சுவையாகச் சிரிக்கவும், அவருடன் பேசிப் பயனில்லை என்று சமிக்ஞை செய்யவும் செய்தனர். தன் குழந்தைகள் பள்ளிக்குப் போகும் போது ஒளிந்து நின்று பார்த்ததைப் பற்றிய ஞாபகம் வந்தது சந்திரனுக்கு. அவன் துயரத்தோடு அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட பிச்சைக் காரனைப் பார்த்தான். அவன் தன் சிந்தனையில் முழுகி தொலைவில் பார்வை பதித்து மௌனமாக இருந்தான்.

இன்றைய செய்தித்தாளில் இறுதிச் சடங்கு திருமண விளம்பரங்களையும் மற்ற செய்திகளையும் சந்திரன் வாசித்து முடித்திருந்தான். மேம்போக்காக அவன் பக்கங்களைப் புரட்டினான். இறுதிச் சடங்குகள் எப்போதும் வராத ஒரு பக்கத்தில் ஒரு செய்தியை நடுக்கத்துடன் அவன் பார்த்தான். சந்தேகத்தைப் போக்க அவன் செய்தித்தாளை முகத்தருகே கொண்டு வந்தான். சந்திரன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய முகத்திலும் கண்களிலும் பல்வேறு உணர்ச்சிகள் பொங்கின. அவன் மௌனமாக வாசித்தான்: ‘நீலேஸ்வரம். பிரபல வழக்கறிஞரும் சமூகப் பணியாளருமான கிருஷ்ணதாஸ் (38) காலமானார். திருமணம் ஆகாதவர். நம்பிக்கையின்றி சந்திரன் செய்தியை மறுபடியும் படித் தான். அவனுடைய கண்கள் மீண்டும் மீண்டும் அந்தச் செய்தியின் வார்த்தைகளின் மீது சஞ்சரித்தது. தன்னுடைய இதயம் துடிப்பதை அவன் உணர்ந்தான்.

ஒரு பிச்சைக்காரன், ‘என்ன பாக்கறே? நமக்கு பயன்படற செய்தியா?` என்று கேட்டான். ‘இல்லை’ என்றான் சந்திரன். ‘இன்னைக்கு எல்லாம் முடிஞ்சுதா?’ ‘முடிஞ்சுது’ அவன் பத்திரிகையைக் கீழே வைத்தான். பிச்சைக்காரர்களைப் பார்த்து, ‘நானொரு விஷயம் சொல்லப் போறேன்` என்றான். அவர்கள் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். இப்படி மனம் விட்டு பேசுவது அவர்களுக்குள் இதுதான் முதல்முறை. ‘நாளையிலிருந்து நான் இங்கே இருக்க மாட்டேன். திரும்ப வீட்டுக்குப் போறேன்’ என்றான் சந்திரன். இந்த வார்த்தைகள் பிச்சைக்காரக் கும்பலில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள். அவர்களின் கண்கள் சந்தேகத்துடன் அவன் பக்கம் திரும்பின. ‘என் மனைவியின் காதலன் இறந்து விட்டான். இனி நான் திரும்ப வீட்டுக்குப் போகலாம்’ என்றான்.

பிச்சைக்காரர்களில் சிலருக்கு அவன் சொன்னது என்னவென்று புரியவில்லை. புரிந்து கொண்டவர்கள் விழித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர். அவனுடைய வாழ்வின் ரகசியத்திற்குள் தங்களைத் தள்ளி விட்டு, அவன் ஓடிப் போவது போல அவனுடைய சொற்கள் அவர்களைத் தாக்கின. மேலும் அவனை இழப்பதான இயலாமையையும் அவர்கள் உணர்ந்தனர். ‘அப்ப நாங்க என்னாகறது?’ என்றான் ஒருவன். அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் தூரத்திலும் அவர்கள் அவனையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். கடை முதலாளி ஒரு கையில் டார்ச்சும் இன்னொரு கையில் உணவுப் பொட்டலமும், சாவிக் கொத்து அடங்கிய பிளாஸ்டிக் பையுமாக் வந்து சேரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ‘என்னால் போகாமல் இருக்க முடியாது. என் மனைவி மன்னிப்பு கேட்ட ஒரு விளம்பரம் முன்பே வந்திருந்தது’ என்றான் சந்திரன். ‘எங்களோட பிரச்சினை யெல்லாம் தீர்ந்து கொண்டே இருந்தது’ ஒரு பிச்சைக்காரன் ஆதங்கத்தோடு சொன்னான்.

‘என்னால் போகாமல் இருக்க முடியாது’ திரும்பவும் சொன்னான். ‘எங்களோட பத்திரிகையைப் படிக்காமலிருந்தா இவன் என்ன செஞ்சிருப்பான்?’ ஒரு பிச்சைக்காரன் முணுமுணுத்தான். சந்திரன் செய்தித்தாளைக் கையிலெடுத்து மீண்டும் தன் மனைவியின் காதலனின் மரண அறிவிப்பைப் பார்த்தான். பின்னர் முகத்தைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றான். சந்திரன் கீழே வைத்த செய்தித்தாளை ஒரு பிச்சைக்காரன் எடுத்துப் பரிசோதித்தான். ஒன்றும் புரியாமல் அவன் அதைக் கையில் வைத்துக் கொண்டிருந்தான். ‘அப்படீன்னா நாளைக்கி பேப்பர் வாங்க வேண்டாமா?’ என்றான் ஒருவன். ‘வாங்கு நான் படிக்கிறேன்’ என்றான் இன்னொருவன். மற்றவர்கள் அவனைத் துச்சமாகப் பார்த்தார்கள். அவன் ஒரு மடையன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ‘ஏங்க, நாங்க சொல்றதக் கேளுங்க. எங்களின் வருமானத்தின் நான்கில் ஒரு பகுதியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்களால் நாங்கள் நிறைய பலனடைந்தோம். இருவர் ஒரே குரலில் சொன்னார்கள்.

ஒருவன் அவனை தன் விரலால் தொட்டபடி, ‘எல்லோருக்கும் தானே மனைவியும் குழந்தையும் இருக்காங்க. உங்களுக்கு மட்டு மென்ன ரொம்ப ஸ்பெஷல்? நீங்க ஓடிப் போய் என்ன செய்யப் போறீங்க?’ சந்திரன் முன்னால் நடந்தான். பின்னால் திரும்பி கை அசைத்தபடியே, ‘பிறகு பார்க்கலாம்’ என்றான். முதலில் கோபம் கொண்ட பிச்சைக்காரர்கள் அவனைப் பார்த்து முணுமுணுத்தனர். ‘என்ன பார்க்கலாம்? வெட்கமில்லாதவன், திருடன், எப்பவும் பாக்க வேண்டாம்.’ மற்றொருவன் ‘காதலன் இறந்து போனதால் மனைவி இவனை ஏற்றுக் கொள்வாள் என்பதற்கு என்ன உத்திரவாதமிருக்கு ? எல்லாம் வெறும் ஆசை’ என்றான்.

சந்திரனின் பயணத்தை அவர்கள் வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். ‘இவன் போறதுக்குள்ள அந்தப் பொம்பள தற்கொலை செஞ்சுக்கிட்டிருப்பா. இவன் சும்மா போறான்’ ஒரு பிச்சைக்காரன் சொன்னான். ஓரிருவர் தலையாட்டினர். ‘ஒரு வேளை அவன் அவளைக் கொல்லத் தான் போவான். அந்தக் காதலன்தான் செத்தாச்சில்ல’ என்றான் ஒருவன். வேறொருவன் ‘எதுவும் சரிப்பட்டு வரலன்னா அவன் இங்கேயே திரும்பி வருவான்’ என்றான்.

கடை முதலாளி திண்ணையில் ஏறி நின்றிருந்தார். அவருடைய சாவிக் கொத்தின் சத்தம் கேட்டது. பிச்சைக்காரர்கள் எழுந்து முற்றத்திற்கு வந்தனர். அவர்கள் எட்டி நடந்து சந்திரன் போன வழியை எதிர்பார்ப்புடன் பார்த்தனர். அவன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டனர். தமக்குள் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் உலகம் முழுவதுமுள்ள பிச்சைக்காரர்களுக்கு மட்டுமே உரித்தான வேகத்தை குறைத்து, மெதுவாகக் காலடிகள் எடுத்து வைத்து பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றனர்.

அவர்களின்மீது கரும்புகை வீசிக்கொண்டு பூஞ்ஞாறு-கோட்டயம் விரைவுப் பேருந்து, அவர்களைக் கடந்து சென்று நின்றது. அவர்கள் தங்களுடைய பாதங்களின் வேகத்தைச் சற்று கூட்டினர். எனினும், சந்திரன் பேருந்தில் ஏறுவதையும் பேருந்து அவனையும் சுமந்து கொண்டு பாய்ந்து போவதையும் மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது. அந்தக் கூட்டத்தின் பின்னால் குழந்தை யேசுவின் சிலையைச் சுற்றி மின்சார ஒளி பரவியது. அவர்களில் ஒருவன் சங்கடத்தோடு தலை யாட்டியபடியே, ‘எல்லாம் வெறும் ஆசை’ என்றான்.

பால் சக்கரியா/அலறும் எலும்புக்கூடு – விருட்சம் நாளிதழ்