
அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 130 ‘ ஆவது இதழ். அசோகமித்திரன் நினவுப் பரிசு முதல் மூன்று பரிசு பெற்ற கதைகளோடு சிறப்புக் கதைகள் சிலவற்றையும் சேர்த்து, மற்றும், கவிதை, கட்டுரைகளோடு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு அழகியசிங்கரின் பேத்தி ஆரபி வரைந்த அட்டைப்படத்தோடு சிறப்பான இலக்கிய இதழாக வெளிவந்துள்ளது.
இதில் ப சகதேவன் அவர்களின் கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் விருட்சத்தின் கதை விதையில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. விதை விழுந்த 1988 ஆம் வருடத்திலேயே , சந்தா கட்டிய வாசகன் என்ற முறையில் இந்தக் கட்டுரையை ஆர்வத்துடன் முதலில் படித்து விட்டேன்.
அதில் இருந்து முக்கியமான சில பகுதிகள்.
‘விருட்சத்தின் பிறப்புக்குப் பின்னால் ஒரு நீண்ட கதை இருக்கிறது . அது ஒரு நாகரிகத்தின் பண்பாட்டின் கதை ‘
‘ஒரு சிறு குழுவினர், பெரும்பான்மை சிந்தனைப் போக்குக்கு எதிராகத்
தங்கள் எதிர்ப்பைக் காண்பிப்பதற்காக , தங்களுக்கான கலை இலக்கியச் சிந்தனைகளுக்காக , படைப்பாற்றலுக்காக , தாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு மேடை . ‘
‘ஞானக் கூத்தனும். பழமலையும் இருவேறு சிந்தனைப் பள்ளிகளை சேர்ந்தவர்கள். ஆனால் இருவரும். கவிதை என்ற தளத்தில் விருட்சத்தில் ஒன்றிணைந்தார்கள். ‘
‘எந்த ஆரவாரமும் இல்லாமல் , ஒரு சிற்றிதழ் மூலமாக , இலக்கியச் சந்திப்புகள் மூலமாக ,ஒரு இலக்கிய உணர்வுள்ள குழுவை , துடிப்போடு வைத்திருக்க முடியும் என்பதற்கு விருட்சம் அமைப்பு நிரூபணமாக உள்ளது .
‘நகுலன், காசியபன். அசோகமித்திரன் , ஞானக்கூத்தன், ஆர் .ஸ்ரீநிவாசன், ஆத்மாநாம்,ஆனந்த், ஐராவதம், போன்றோரது வாழ்வு நோக்கு, இலக்கிய நோக்கு என்பவற்றிற்கு விருட்சம் அளித்த அளவிற்கு வேறு எந்த இதழும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ‘
‘மரபு சார்ந்தும், மரபுக்கு மாறாகவும், ஓர் இலக்கிய இதழ் செயல்பட முடியும் என்பதற்கு விருட்சம் முன்னோடியாக இருக்கிறது ‘
‘இலக்கியத்தையும் , அழகியலையும் மட்டும் முன்னிறுத்தும் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகமாக விருட்சம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது .’
கட்டுரையின் உள்ளே இன்னும் பல விரிவான விஷயங்கள் விருட்சம் பற்றி. தொடர்கிறது இனி வரும் இதழ்களிலும் இந்தக் கட்டுரை .
இப்போது வெற்றிகரமாக அவர் நடத்திக் கொண்டிருக்கும், வாட்சப் குழுக்கள் பற்றியும், நவீன தினசரி பற்றியும் வரும் இதழ்களில் தொடர்வார் ப சகதேவன் அவர்கள். அழகியசிங்கரின் நீண்ட கால நெருங்கிய நண்பர் , புதுமைப் படைப்பாளி என்ற முறையில் விருட்சத்தின் வரலாறை எழுத இவர் பொருத்தமானவர்.
இந்தக் கட்டுரைத் தொடர் நிச்சயம் இலக்கிய உலகிற்கு மிக முக்கியமான பொக்கிஷம். அழகியசிங்கர் என்ற இலக்கியவாதியின் இலக்கிய முகத்தைச் சரியான முறையில் அனைவர்க்கும் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்ய ஆரம்பித்திருக்கும் ப சகதேவன் அவர்கட்கு நன்றியும் வாழ்த்தும் .
——————–
