அன்புச்செல்வி சுப்புராஜூ /தத்தித் தாவிடும் மனம்

விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் நான் வாசித்த இரண்டாம் கவிதை

எனது பெயர் வருடி
உதிர்த்துவிடும் உனது
இதழ்களின் மென்மையில்
தீர்க்கிறது நேசிப்பின் தாகங்கள்.

விதிகளும் விதிவிலக்குகளுமாய்
நிரம்பியிருக்கும் வாழ்வியல் குடுவையில்
உள்ளூரிக் கிடக்கும் பெருங்காயத்தை
ஒன்று திரட்டி பிறக்கிறதொரு சுகராகம்.

முடிவிலியாய் தொடரும் உன் குரலின்
ஆலாபனையில் பொதிகின்றன
எனக்கான பிரியத்தின் பொழுதுகள்.

மெல்ல விரியுமென் மனச்சிறகுகள்
வருடும் உன் பார்வைத் தூரிகையால்
வண்ணங்கள் பூசிக்கொள்கின்றன.

உயிரின் குறியீடுகளுக்குள்
ஊடாடும் சிறு திரையை
விலக்கும் வழியறியாது
திறப்பதும் மூடுவதுமாய்
தத்தித் தாவும் மனம்
உயிர்ப்பின் முடிச்சுகளைத் தன்னுள்
இருத்திக் கொள்ளவே விழைகிறது!