
புஸ்தகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே நானும் என் நண்பன் சீதாராமனும் சிதம்பரத்தில் ரெயில் ஏறினோம்.
உலகத்து மக்களை நல்வழியில் திருப்பி நல்வாழ்வு வாழத் தூண்டுவதற்கு, உலகத்து ஆசாரியர்கள் கையாண்டிருக்கிற வழிகளைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்தது.
சீதாராமன் சொன்னான்: “எந்த நிமிஷமும் சாவை எதிர்பார்த்து வாழுபவன்தான் சரியானபடி வாழ முடியும் என்பதை உலகத்து ஆசிரியர்களில் பலரும் திரும்பத் திரும்பச் சொல்லிவந்திருக்கிறார்
கள்”.
“மனிதனுக்குப் புரியாத புதிர்களிலே சாவுதான் முதன்மை யானது” என்றேன் நான்.
“மனித ஜாதிக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக சாவு என்கிற அனுபவத்தை வைத்துப் பயமுறுத்தியும் அதட்டியும் மனிதனை நல்வழிக்குத் திருப்ப முயற்சிகள் நடந்து வந்திருக்கின்றன”.
“முயற்சிகள் அப்படி ஒன்றும் பிரமாதமான பலன் தரவில்லை” என்றேன் நான்.
ஜாரதுஷ்டிரன் என்கிற தீர்க்கதரிசிதான் முதன்முதலாக மனிதனின் காரியங்களை நல்லவை கெட்டவை என்று பிரித்தான் என்று சொல்கிறார்கள். நல்ல நடத்தைக்கு சொர்க்கத்தையும், கெட்ட நடத்தைக்கு நரகத்தையும் பலனாகச் சொன்னவன் அவன்தானாம்” என்றான் நண்பன்.
“சொர்க்கமும் நரகமும் மனித சரித்திரத்திலே இன்றுவரை பிரமாதமான ஆட்சி செலுத்தி வந்திருக்கின்றன. ஆனால் அதைச் சரியான ஆட்சி என்று சொல்வதற்கில்லை.”
சீதாராமன் சொன்னான்: “மனித சரித்திரத்தை ஒரு போக்கில் திருப்பிய பெருமை ஜாரதுஷ்டிரனுடையது. சாவுக்குப் பின் என்கிற பயம்தான் இன்றுவரை மனிதனிடையே ஆட்சி செலுத்தி வந்திருக்கிறது”.
“இன்றுவரை என்பது உண்மைதான். நரகமும் சொர்க்கமும் இன்று நம்மிடையே அவ்வளவாக பூரணமான ஆட்சி செலுத்த வில்லை. சாவு என்கிற பயம் சாதாரண மனிதனுக்கு ரொம்பவும் தேய்ந்துவிட்டது.’
“இன்றைய கவலைகளில் நாளைய தினத்தின ஞாபகம் மறையத் தொடங்கிவிட்டது; இன்றையக் கவலைகள் விசுவரூபம் எடுத்து மனிதன் கண்களை மறைத்து விடுகின்றன” என்றான் சீதாராமன்.
அல்லது குரு கங் சொன்னது “அப்படியும் இருக்கலாம். போல தெரிந்த விஷயங்களை முழுவதும் தெரிந்து சரி செய்து கொண்டு, பிறகு தெரியாத விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று மனிதன் தீர்மானித்துவிட்ட மாதிரியும் தோன்றுகிறது” என்றேன் நான்.
நண்பன் பதில் சொல்லவில்லை.
நான் சொன்னேன்: “சாவு என்கிற பயங்கரமான, புரியவே புரியாத அனுபவத்தை எதிர்பார்த்து எப்படி எப்படி நடந்து கொள்கிறான் என்பது பற்றிச் சமீப காலத்தில் கூட சில நல்ல கற்பனைகள் தோன்றியிருக்கின்றன.”
ஒரு ஜெர்மன் ஆசிரியரின் ரெயில் வண்டிப் பிரயாணக் கதை ஒன்று ஞாபகம் வந்தது எனக்கு. சற்றுப் பிரபலமாகி அமர்க்களப் பட்ட கதை தான் அது. ‘கடைசி வண்டி’ என்று பெயர் அதற்கு. மலைப்பிரதேசத்தில் ஏறி இறங்கி வளைந்து சுழன்று செல்லும் ஒரு ரெயில் வண்டித் தொடரின் கடைசி வண்டி தெய்வாதீனமாக அந்தத் தொடரிலிருந்து கழன்று விடுகிறது. தானாகவே போய்க் கொண்டிருக்கிறது தனி ஒரு பாதையில், எப்பொழுது என்று தெரியவில்லையே தவிர அதன் முடிவு மட்டும் நிச்சயம்-எதிரில் எழும் பாறையில் மோதி சுக்கு நூறாகிவிடும்- அல்லது செங்குத்தான சரிவில் விழுந்து புரண்டு உருண்டு நொறுங்கி விடும். வேறு முடிவு சாத்தியமேயில்லை. அந்தத் தனி வண்டியிலிருப்பவர்களுக்கு முதலில் தெரியாது. தங்கள் வண்டி
தொடரிலிருந்து விடுபட்டுத் தனிப்பாதையில் சாவை நோக்கிப் போய் கொண்டிருப்பது முதலில் தெரியவே தெரியாது. பிறகு தெரிகிறது. ஆண்பெண் குழந்தைகள் என்று பலர் இருக்கிறார்கள் அந்த வண்டியில். இதோ அதோ என்று சாவை எதிர்பார்க்கிற நிலைமையில் அந்த வண்டியிலிருந்தவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதைச் சுவாரசியமாக எழுதியிருக்கிறான், ஆசிரியன். அந்தக் கடைசி ஒவ்வொரு வினாடியிலும் தங்களில் ஒவ்வொருவருடனும் அவர்கள் எப்படி உறவு கொண்டாடினார்கள் என்பதை ரஸமாக விவரித்திருக் கிறான் ஆசிரியன்.
ரெயில் பிரயாணத்திலேயே இது ஒரு நல்ல அனுபவம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு ஐந்து நிமிஷமோ அரைமணியோ ஒரு நாள் பூராவுமோ சேர்ந்து ரெயிலில் பிரயாணம் செய்பவர்கள் ஒருவிதமான நெருக்கமான உறவு பூண்டு விடுகிறார்கள். உலகில், நாட்டில், ஊரில் நடக்கிற நடக்காத விஷயங்களைப் பற்றிய விவாதத்தில் கலந்துகொள்வது என்பது சாதாரணமாக எல்லோரும் செய்கிற காரியம்.
நாங்கள் சிதம்பரத்தில் ரயில் ஏறும்போது வண்டியில் நாலைந்து பேர் இருந்தார்கள். அவர்களை அதிகமாகக் கவனிக்காமல் நானும் சீதாராமனும் இதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம்.
நான் அந்த ஜெர்மன் ஆசிரியரின் ‘கடைசி வண்டி’ கதையைச் சொல்லி முடித்ததும் எங்கள் சக பிரயாணிகளில் ஒருவர் “கதையின் முடிவு என்ன?” என்றுகேட்டார்.
அப்படிக் கேட்டவர் வைதிக சிரோமணியாகக் காட்சியளித் தார். துல்லியமான யோக வேஷ்டியும், நெற்றியிலும் மேனியிலும் பட்டை பட்டையாக விபூதியும் பளபளத்தன.
ஒரு விநாடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு ‘முடிவு எனக்கு ஞாபகம் இல்லை” என்றேன்.
விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. எனக்கு உண்மையில் அந்தக் கதையின் முடிவு ஞாபகமே இல்லை. ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொள்ள முயன்றேன்-பயனில்லை. முடிவுதான் முக்யம் என்கிற கோஷ்டியைப் சேர்ந்தவனல்ல நான். அந்தக் கடைசி வண்டி எப்படி முடிந்தது? எதிர்பார்த்தபடி சாவை நோக்கி ஓடி நொறுங்கிற்றா, எல்லோருமே இறந்து விட்டார்களா, அல்லது தெய்வாதீனமாக வண்டி நொறுங்காமல் எல்லோருமே உயிருடன் தப்பி விட்டார்களா? எனக்கு ஞாபகம் வரவில்லை.
“முடிவு ஞாபகம் இல்லை” என்றேன் மறுபடியும்.
வைதிக சிரோமணியின் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது.
அதைப் பார்த்த சீதாராமன் சொன்னான்; “அது எப்படி முடிந்தாலும் சரிதானே, அந்தக் கடைசி வினாடியில் அந்த வண்டியில் இருந்தவர்களின் பரஸ்பர உறவும் நடத்தையும்தான் ஆசிரியரின் பார்வையில் முக்யமே தவிர, முடிவு அவ்வளவாக முக்யமல்லவே!”
வைதிக சிரோமணி அப்படி நினைக்கவில்லை என்பதை அவர் முகம் காட்டியது.
சீதாராமன் சொன்னான்: “உலகம் ஒரு குறிப்பிட்ட நாளில் முடிவுறப் போகிறது என்று ஒரு தீர்க்கதரிசி சொல்கிறான். அந்தச் செய்தியின் நிழலில் குறிப்பிட்ட சில மனிதர்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள் என்று விவரித்து நான் கூட ஒரு கதை படித்திருக்கிறேன்.’
“இந்த மாதிரியான கதாசிரியர்களின் அசட்டு கற்பனைகளுக்குத்தான் ஒரு முடிவே கிடையாது!” என்றார் எங்களுடைய சகபிரயாணிகளில் வேறு ஒருவர்.
அவருக்கு வயசு ஐம்பதிருக்கும். வழுக்கைத் தலை பளபளப்பில் ஒரு கத்தை நரைமயிர் படர்ந்திருந்தது. நல்ல சிவப்பான மேனி. தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். பார்த்தால் ரொம்பவும் படித்த மனிதர்போல் இருந்தார். அவர் கையில் ஒரு பெரிய புஸ்தகமும்கூட இருந்தது.
என்ன இவர் திடுதிப்பென்று இப்படிச் சொல்கிறாரே என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன் நான். என் நண்பன் சீதாராமன் இந்த மாதிரி விஷயங்களில் என்னைவிடக் கொஞ்சம் புத்திசாலி. “தாங்கள் ஏதாவது கலாசாலையில் பேராசிரியரோ?” என்று கேட்டான் அவரை.
அவர் சற்றுத் தயங்கினார். பிறகு “ஆமாம்” என்றார்.
சீதராமன் கேள்வியைக் கேட்டவுடனே என் திகைப்பும் ஆச்சரியமும் தணிந்து விட்டன. “ஆமாம்” என்கிற கலாசாலைப் பேராசிரியரின் பதில் எனக்கு வியப்பளிக்கவில்லை.
கலாசாலைப் பேராசிரியர் தொடர்ந்து சீதாராமனைக் கேட்டார். “ஏன் எப்படித் தெரிகிறது?” என்று.
சீதாராமன் சற்று யோசித்தான். இதற்குப் பதில் சொல்லலாமா வேண்டாமா என்று. பிறகு சொன்னான்: “இல்லை இந்த நாட்களில் நல்ல கற்பனைகளுக்கு நண்பர்கள் என்று சொல்லக் கலாசாலைப் பேராசிரியர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?” என்றான்.
இந்தப் பதில் கலாசாலைப் பேராசிரியருக்குத் திருப்தி அளித்ததோ, இல்லையோ எனக்குத் திருப்தி அளித்தது.
“மனித சிந்தனையின் சரித்திரத்திலே உலகத்தின் முடிவைப் பற்றி ஏராளமான கற்பனைகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கின்றன. அவை எல்லாம் அந்தந்தக் காலத்தில் நல்லதற்கும் கெட்டதற்கும் ஆட்சி செலுத்தத்தான் செலுத்தியிருக் கின்றன” என்றேன் நான்.
“மகான்கன் முதல் அரசியல்வாதிகள் வரை பலரும் இந்தச் சிந்தனைகளைத் தங்களுக்கு லாபம் தரக்கூடிய வகைகளில் உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர்” என்றான் சீதாராமன்.
இதுவரை பேச்சில் கலந்து கொள்ளாமல் ஒரு தமிழ்ப் பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கண்ணெடுக்காமல் பார்த்து வந்தவரும் இப்போது பேச்சில் கலந்து கொண்டார். அவரும் நடுத்தர வயதினர். ஏதோ சுமாரான பணக்காரர். ஏதாவது வியாபாரியாக இருக்கலாம் என்று எண்ணினேன் நான். சொன்னார்: “இப்பொழுதெல்லாம் அணுக்குண்டு என்கிறார்கள்; ஜல வாயுக் குண்டு என்கிறார்கள். உலகத்தை அழித்துவிடப் போதுமான சக்தி யுடையவை என்கிறார்களே!” என்று.
பாவம்! பத்திரிகைகளில் படிப்பதிலெல்லாம் பூரணமான நம்பிக்கை வைக்கிற மனிதன் என்று எண்ணிக் கொண்டேன் நான்.
அவருக்கு சீதாராமன் பதில் சொன்னான். “அதெல்லாம் அரசியல் மிரட்டல். மக்களை மக்கள் அடிமைப்படுத்திச் செய்யப்படும் பிரசாரம்.”
அப்படியும் இருக்குமோ என்று அந்த வியாபாரி சிந்தனையில் ஆழ்ந்த மாதிரித் தோன்றியது எனக்கு. என் நண்பன் சொன்னதை அப்படியே சரி என்று ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை என்பதை அவர் முகம் காட்டியது.
வைதிக சிரேஷ்டர் சொன்னார்; “மனிதன் கண்டுபிடித்திருக்கிற கண்டுபிடிக்கப் போகிற எதுவுமே உலகத்தை அழித்து முடித்துவிட முடியாது. இதுதான் மனிதனுக்கு உண்மையில் ரொம்பவும் நம்பிக்கை தருகிற விஷயம்.
அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று எனக்குப் பட்டது. மனிதனால் தன்னையே அழித்துக் கொள்ள முடியாது என்பதுதானே உலக தர்மத்தின் அடிப்படை நியதி.
சீதாராமன் சொன்னான்; “உலகமே அப்படி அழிந்து விட்டாலும் கூட மனிதன் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டு தான் இருப்பான். மஹாப் பிரளயத்திற்குப் பிறகும் ஓர் உலகம் உண்டு என்பதுதான் எல்லோருடைய நம்பிக்கை…”
“இருபதாம் நூற்றாண்டின் நாலாவது மஹாயுத்தத்தின் ஆயுதங்கள் என்னவாக இருக்கும் என்று உலகத்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியை ஒருவர் கேட்டாராம். அதற்கு அந்த விஞ்ஞானி ‘மனிதனின் ஆதிநாளைய ஆயுதங்களாகிய பல், நகம், கல், கழி என்பவற்றிற்கு மீண்டும் திரும்பி விடுவான்’ என்று கூறினாராம்’ என்றேன் நான்.
“அதாவது?” என்று கேட்டார் வைதிகசிரோமணி.
“மனிதனின் நாகரிக வளர்ச்சி(?)யின் காரணமாகக் கண்டுபிடித்த ஆயுதங்களையும் அறிவையும்(?) மூன்றாவது யுத்தத்துக்கப்பால் இழந்துவிட்டு மீண்டும் ஆதி நாட்களின் வாழ்வைத் தொடங்குவான். நாலாவது யுத்தத்தில் மீண்டும் கல் வீசவும், கழி சுற்றவும் தொடங்கிவிடுவான் என்றாராம்!”
“அதெப்படியோ! இன்று நாகரிகம் என்று பெரும்பாலோர் சொல்வதை நாகரிகம், வளர்ச்சி என்று ஒப்புக்கொள்வதே சிரமமாகத் தான் இருக்கிறது” என்றார் வைதிக சிரோமணி.
“இந்த மாதிரியான ‘நாகரிக வளர்ச்சி’ அதன் சின்னங்கள் முடிவு எல்லாவற்றையும் பற்றி விவரமாக நம்முடைய புராணங்களிலெல்லாம் காணப்படுவதாகச் சொல்கிறார்களே?” என்று கேட்டார் வியாபாரி.
“காலம், இடம் உள்பட எல்லாவற்றையும் குறித்து விவரமாகவேதான் கூறியிருக்கிறார்கள்… என்று பவிஷ்யத் புராணம் தொடங்கினார் வைதிக சிரோமணி.
சுலபத்தில் முடியாத புராணம் என்று தெரியும் சீதாராமனுக்கு. அவன் குறுக்கிட்டான்; “முடிவு என்கிற ஞாபகம் தான் சக்தி வாய்ந்தது; முக்கியமானது இல்லையா?” என்றான்.
நான் சொன்னேன்; “நம்முடைய புராணங்களில் மட்டும் என்ன? உலகத்து ஜனங்களின் புராணங்களில் எல்லாம் முடிவுக்குப் பின் என்கிற பிரச்னைகள் எல்லாம் அடிபட்டிருக்கின்றன.’
”இதற்கெல்லாம் ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு. இன்று போலவே அன்றும் எப்போதும் உலகத்தின் முடிவு பற்றியும், மனித குலத்தின் போக்கைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்” என்றான் சீதாராமன்.
கலாசாலைப் பேராசிரியர் சொன்னார்; “சிந்தித்துப் பார்த்துக் கண்ட பலன்தான் என்ன? மனிதன் அன்று போலவே, இன்றும் மனிதனாகத்தான் இருக்கிறான். அழகிய கற்பனைகள் என்று வேண்டுமானாலும் உலகத்தின் முடிவைப் பற்றி கூறியிருப்பவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ளலாம். மற்றப்படி உலகத்தின் முடிவைப் பற்றிய ஜோசியங்கள், மனிதர்களின் வாழ்க்கையையோ, மனிதர்களின் மனோபாவத்தையோ மாற்றுவதாகத் தெரிய வில்லையே!”
“ஆரம்ப காலத்தில் தவிர, யாருக்கும் மனிதனை மாற்றுகிற உத்தேசம் இருந்ததாகத் தெரியவில்லை” என்றேன் நான்.
“இன்றைய அரசியல்வாதிகள் சர்வாதிகாரிகள். சிலருக்கு மனிதனின் மனிதத் தன்மையை மாற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது” என்றான் சீதாராமன்.
பற்றி ஜோசியம் சொன்னவர்களை எல்லாம் பைத்தியங்களாகத்தான் “ஆனால், உலகத்தின் முடிவையும், அதன் விளைவுகளையும் உலகம் மதித்து வந்திருக்கிறது” என்றார் கலாசாலைப் பேராசிரியர்.
இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் வேறு ஒன்று அவர் சொன்னதற்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் சொன்னேன்; “ஏசு கிறிஸ்துவுக்கு எதிர்க் கிறிஸ்து தோன்றுவார் என்று
கிறிஸ்தவ வேதங்கள் கூறுகின்றன”.
“நம்முடைய பத்தாவது அவதாரம் மாதிரி…” என்ற தொடங்கினார் வைதிக சிரோமணி.
அவருடைய பேச்சும் எங்களுடைய சிந்தனைகளும் பாதியில் தடைப்பட்டன.
ரெயில் வண்டி, ஒரே வேகத்தில் சீராக இதுவரை ஓடிக்கொண்டு வந்த ரெயில் வண்டி திடீரென்று பிரேக் போட்டு ஒரு உலுக்கி உலுக்கிவிட்டு நின்றது.
உலகத்தின் முடிவைப் பற்றி அளந்து கொண்டிருந்த எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. உலகத்தின் முடிவை அச்சமயம் வரவேற்க எங்களில் யாரும் தயாராக இல்லைதான்.
“என்ன?° என்ன?” என்று பதறிப்போய் எட்டிப் பார்த்தோம்.
ஒரு ஐந்து நிமிஷங்கள் வரையில் ஒன்றும் விளங்கவில்லை. அதற்குப் பிறகுதான் தெரிந்தது. ரெயில் தண்டவாளத்தில் அசைபோட்டுக் குறுக்கே ஒரு கம்யூனிஸ்டு’ பசுமாடு படுத்து கொண்டிருந்தது. வண்டியை நிறுத்தி அதைத் தண்டவாளத்தை
விட்டு விரட்டப் பத்து நிமிஷங்களுக்கு மேல் பிடித்தது. மீண்டும் எங்கள் வண்டியில் ஒன்றுகூடிப் பிரயாணம் தொடங்கிய நாங்கள் உலகத்தின் முடிவைப் பற்றிய பேச்சைத் தொடரவில்லை.
1966
