வைரமுத்து

ஆசிரியப் பெருமக்கள் வதியும்
திசைநோக்கித் தெண்டனிடுகிறோம்

சூரியன் இல்லையேல்
கோள்கள் இல்லை
நீங்கள் இல்லையேல்
நாங்கள் இல்லை

எரியும் நெருப்பில்
எத்துணை திரிகள்
பற்ற வைத்தாலும்
அது குறைவதில்லை

பல்லாயிரம் மாணவர்க்குப்
பகுத்தறிவு கொடுத்தாலும்
உங்கள் குன்றுநிகர் அறிவு
குன்றுவதில்லை

உங்கள் சாக்பீஸ் சத்தம்
எங்களுக்குச் சங்கீதம்

உங்கள் கண்டிப்பு
தங்கத்தின்
தலைமேல் விழுந்த உளி

நீங்கள்
திருத்திக்கொடுத்த தாள்கள்
எங்கள் கடவுச் சீட்டுகள்

உங்கள் புன்னகை
தகப்பன் தராத தங்கக்காசு

சிலபேர் இருக்கிறீர்கள்
பலபேர் இறந்துவிட்டீர்கள்
கடைசி மாணவனின்
நினைவுக்குள் இருக்கும்வரை
உங்களுக்கு இறப்பில்லை

ஆசான்களே வணக்கம்!