திருப்பூர் கிருஷ்ணன்/கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்: செப்டம்பர் 9

.

`பொன்னியின் செல்வன்` தொடர் முதல்முறையாக கல்கியில் வெளிவந்து கொண்டிருந்த காலம். (கல்கி கிருஷ்ணமூர்த்தி காலத்திற்குப் பின்னும் அதே தொடர் மீண்டும் மீண்டும் கல்கி வார இதழில் பலமுறை வெளிவந்து சாதனை புரிந்தது.)

கல்கி எழுத எழுத, ஓவியர் மணியம் சுடச்சுட வரைந்த அற்புதமான சித்திரங்களோடு அது வெளிவந்த காலத்தில் தமிழ் வாசகர்களின் உள்ளங்களை அப்படியே முழுமையாக அள்ளிச் சாப்பிட்டது!

எங்கும் பொன்னியின் செல்வன் என்பதே பேச்சு! அடுத்த வாரம் என்ன நடக்கும் என்றறிவதற்காக வாசகர்கள் ஆவலோடு காத்திருந்து கல்கி வார இதழ் வரும் நாட்களில் ரயில்வே ஸ்டேஷன் சென்று கல்கியை வாங்கப் போட்டி போட்டார்கள்.

சில குடும்பங்களில் ஒரே நேரத்தில் யார் கல்கியை முதலில் படிப்பது எனச் சண்டை வந்ததால், ஒவ்வொரு வாரமும் இரண்டிரண்டு கல்கி இதழ்கள் வாங்கத் தலைப்பட்டார்கள்.

மாலை நேரங்களில் ஒருவர் பொன்னியின் செல்வனைச் சத்தம் போட்டுப் படிக்க குடும்பத்தில் அனைவரும் அதைக் கேட்டார்கள். கேட்டபின் அடுத்தவாரம் சம்பவம் எப்படிப் போகும் என்பது குறித்த ஊகங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

வாராவாரம் அந்தத் தொடரை ஆர்வத்துடன் படித்துவந்தார் ஒரு மூதாட்டி. கதையோ வளர்ந்துகொண்டே இருக்கிறது. பாட்டிக்கோ வயது காரணமாக ஆயுள் குறைந்துகொண்டே வருகிறது.

`நான் காலமாவதற்குள் பொன்னியின் செல்வன் முடிந்துவிட வேண்டுமே..கடவுளே! பொன்னியின் செல்வனை முழுமையாகப் படித்துவிட்டு நான் காலமாக வேண்டுமே!` என்று அடிக்கடிப் புலம்புவாராம் அந்தப் பாட்டி. அவர் – பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் பாட்டி.

எக்கச்சக்க முடிச்சுக்கள் அந்த வரலாற்று நாவலில் உண்டு. ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது வாசகர்கள் அடையும் இலக்கிய இன்பமே தனி.

வந்தியத்தேவன், அருள்மொழி வர்மர், சுந்தர சோழர், குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், பூங்குழலி என்று எண்ணற்ற பாத்திரங்கள். `புதுவெள்ளம், சுழற்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாகச் சிகரம்.` என ஐந்து பாகங்களைக் கொண்டு இதிகாசம் போல் வளரும் பிரம்மாண்டமான சரித்திர நாவல் அது. சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதினம் படைக்கப்பட்டுள்ளது.

1950இல் கல்கி வரா இதழில் தொடங்கப்பட்ட இந்த நாவல் மூன்றரை ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இந்த சில சரித்திரச் செய்திகளை நேரில் கண்டு அறிவதற்காக கல்கி மூன்று முறை இலங்கைக்குச் சென்று வந்தார். பக்க அளவில் இதை மிஞ்சிய சரித்திர நாவல் தமிழில் வேறேதும் இல்லை.

இந்த நாவலின் இடையே கல்கி எழுதிய அழகான கவிதைகளும் உண்டு. முக்கியமாக பூங்குழலி பாடுவதாக வரும் `அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன் ? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகம்தான் பதைப்பதுமேன்?` போன்ற கவிதைகள் வாசகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.

*கல்கி எழுத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று அவரது நகைச்சுவை உணர்வு. அவரது சரித்திர நாவல்களிலும் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை.

சங்க காலத்திற்குப் பின்வந்த இடைக் காலத்தில் சைவ வைணவச் சண்டைகளெல்லாம் ஓங்கி இருந்ததல்லவா? அத்தகைய காலகட்டத்தைச் சார்ந்தது தானே பொன்னியின் செல்வன் நாவல்?

எனவே காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அத்தகைய சண்டை சச்சரவுகளையும் சிரிக்கச் சிரிக்க எழுதிச் செல்கிறார் கல்கி.

பொன்னியின் செல்வன் நாவலின் புகழ்பெற்ற பாத்திரமான ஆழ்வார்க்கடியானும் சிவனடியாரும் பேசிக் கொள்கிறார்கள்:

`என்னதான் சொன்னாலும் நாயன்மார்கள் மொத்தம் அறுபத்து மூன்று பேர். ஆழ்வார்கள் பன்னிரண்டே பேர்தான்!` என்கிறார் சிவனடியார்.

`ஆமாம் ஆமாம். கெளரவர்கள் நூறுபேர். பாண்டவர்கள் ஐந்தே பேர்தான்!` என்று பதில் சொல்கிறான் ஆழ்வார்க்கடியான்.

`அந்தப் பன்னிரண்டு ஆழ்வார்களிலும் பேயாழ்வார் பூதத்தாழ்வார் எனப் பேயும் பூதமுமல்லவா இருக்கிறது!` என்பது சிவனடியாரின் கேலி.

`வைணவத்திலாவது ஆழ்வார்களில் தான் பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் கடவுளான சிவனைச் சுற்றியே பூத கணங்கள் இருக்கின்றனவே?` என்று கேட்டு சிவனடியாரின் வாயை அடைக்கிறான் ஆழ்வார்க்கடியான்.

ஆழ்வார்க்கடியான் எத்தனை சாகசக்காரன்! அவனை ஒருவரால் பேச்சில் வென்றுவிட முடியுமா என்ன? இதுபோன்ற பகுதிகளைப் படிக்கும்போது நாம் சைவராக இருந்தாலும் வைணவராக இருந்தாலும் அன்றைய சூழலை எண்ணி மலர்ந்து சிரித்து மகிழ்கிறோம். அதுதான் கல்கி எழுத்தின் வெற்றி.

*பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் குந்தவைப் பிராட்டியையும் நந்தினியையும் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அப்படிக் கச்சிதமாக வார்க்கப்பட்ட பாத்திரங்கள் அவை. அவர்கள் இருவர் சுபாவத்தையும் ஒப்பிட்டுக் கல்கி எழுதும் இடம் இது:

`ஒருவன் நரகத்தில் விழப் போகிறவனாய் இருந்தால் அவனைத் தடுத்து நிறுத்திக் குந்தவை தேவி சொர்க்கததுக்கு அவனைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவாள். அது ஒருவித சக்தி.

நந்தினி என்ன செய்வாள் தெரியுமா? அவளுடைய சக்தி இன்னும் ஒருபடி மேலானது என்றே சொல்ல வேண்டும். நரகத்தையே சொர்க்கம் என்று சொல்லிச் சாதித்து அதை நம்பும்படியும் செய்து நரகத்தில் சந்தோஷமாகக் குதிக்கும்படிச் செய்துவிடுவாள்.`

இதைவிடச் சிறப்பாக வேறு எப்படி அந்தப் பாத்திரங்களின் இயல்பை வர்ணிக்க முடியும்?

வார இதழ்களில் கல்கியின் பழைய எழுத்துக்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வாசகர்களைக் கவர்கின்றன. நாட்டுடைமையான அவர் எழுத்தைப் பல பதிப்பகங்கள் மீண்டும் மீண்டும் வெளியிடுகின்றன. ஏன் தெரியுமா?

கல்கியின் எழுத்துக்கள் சங்கீதம் மாதிரி. சங்கீதத்தை மறுபடி மறுபடிக் கேட்டு அனுபவிப்பது போலக் கல்கியின் எழுத்துக்களையும் மீண்டும் மீண்டும் வாசித்து அனுபவிக்க முடியும்.

அந்தத் தனித்தன்மையாலேயே அவர் எழுத்துக்கள் அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நிற்கின்றன.