கிருஷ்ணா/அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

 

இன்று முதல் நானும், ரம்யா வாசுதேவன் அவர்களும் இணைந்து எழுதிய ‘‘ யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்’’ எனும் நூலை தொடர்ந்து முகநூலில் பதிவிட இருக்கிறோம். இது கட்டுரையாக அல்லாமல் ஒரு புனைவுக்குரிய வடிவத்தில் எழுதப்பட்டது.

ஒரு ஞானியின் வாழ்க்கை நம்மைப் போன்றே தொடங்கும். மெல்ல சென்று கொண்டிருக்கும்போதே. சட்டென்று தாவி வேறொரு உயரத்தை அடையும். அந்த அடைந்த இடத்திலிருந்து அவரை மீண்டும் நம் இடத்திற்கு பொருத்த முடியாது. அங்கு ரிஷியாகி விடுவார். மூலம் காண முடியாது. கூடாது. ஏனெனில், அது இங்கிருப்பவரை மேலேற்றும் காக்கும் படகாக மாறும். மாற்றத்தை விளைவிக்கும். அந்த மாற்றத்தை நோக்கியே இந்த புனைவு சென்றபடி இருக்கும். படித்து விட்டு அபிப்ராயம் கூறுங்கள்.

இதோ ‘‘யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்’’ நூலின் முதல் அத்தியாயம்.

1 . யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

பெண்ணின் நெற்றித் திலகம்போல பாரதத்தை அழகாக்குபவளே கங்கை. கங்கா மாதாஞ் கங்கா மாதாஞ் என்று பாரதமே துதிக்கும் தாய் அவள். ஏன் தெரியுமா? அவள் பெற்றெடுப்பது சாதாரண பிரஜைகள் அல்லர். அவள் ஞானியரையே பெற்றுப் போடுகின்றாள். அவளின் அருட்சுழலில் சிக்காத ஞானியர் இங்கு எவருமிலர். பக்தியும் வைராக்கியமும் ஞானகங்கையின் இரு தோழிகள்.

இரண்டு மிடறு நீரை உண்டு கரையில் அமர்ந்து மனம் இழந்த ஞானியரின் கதையே இங்கு ஆயிரம் ஆயிரம். எனவே, கங்கை என்பவள் நீர் அல்ல. அது நீர் வடிவில் வந்த ஞானத்தாயின் அன்புப் பிரவாகம். அந்த கங்கையைத்தான் ஞானிகளும் சாதுக்களும் பிரதட்சணமாக வருவதையும் நம் தேசத்தினர் வழக்கமாக வைத்திருந்தனர். வலம் வரும் தோறும் பிறவித் தளையை அறுத்தபடி இருந்தனர். அப்படித்தான் அந்தக் குக்கிராமத்தின் வழியே சாதுக்களும் ஞானியரும் யோகியர்களும் கங்கையை ஒட்டி மெதுவாக நடந்தபடி இருந்தனர்.

அந்த அழகான கிராமத்திற்கு நர்தாரா என்று பெயர். உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் அது. கங்கை நதிக்கரையின் ஓரத்தில் அந்த ஊர் அமைந்திருந்தது. கங்கை சில சமயம் ஊருக்கும் புகுந்து ஊழி தாண்டவம்போல் ஆடிவிட்டுச் செல்வாள். சில சமயம் சாந்த சொரூபியாக சலசலத்தபடி நகர்வாள். அந்த கிராம மக்கள் இரண்டுக்குமே தயாராக இருப்பார்கள். பெரும்பாலான மக்கள் விவசாயிகள். கங்கைப் பாசனத்தில் கொழுத்துக் கிடக்கும் பூமி அவை.

நர்தாரா கிராமத்தில் பூமிக்கர் என்கிற பிராமண சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்ந்துவந்தனர். இவர்கள் அனைவருமே பெரும்பாலும் நிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். வேதம் சொல்லும் பிராமணர்களாக இல்லாமல் விவசாயம், பசுக்கள், எருதுகளைப் பராமரித்தல் என்றிருந்தனர்.

அந்த ஊரிலேயே எளிமையான தம்பதியராக ராம்தத் குன்வர் குசம் தேவி என்போர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியனருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவர் மனர்ரக்கன் குன்வர், இரண்டாமவர் ராம்சுரத் குன்வர், மூன்றாமவர் ராம்தகின் குன்வர். இதில் நம் பகவானே (யோகிராம்சுரத்குமார்) ராம்சுரத் குன்வர் ஆவார். ராம்சுரத் குன்வர் 1 – 12 – 1918ம் வருடம் பிறந்தார். இரண்டாவது குழந்தையான ராம்சுரத்குன்வரை தாயார் குசம் தேவி சுரத்ஞ் சுரத்ஞ் என்றே அன்போடு அழைத்தார்.

ராம்சுரத் குன்வர் அதிகாலை எழுந்து விடுவான். எழுந்ததும் ஏனோ கங்கை அவனை அழைத்துவிடுவாள். அகண்ட அந்த கங்கையைக் கண்ணில் வியப்பு பெருகப்பெருகப் பார்த்துத் தீர்த்தபடி இருப்பான். கரையில் அமர்ந்து அந்த பிரவாஹத்தை அவதானித்தபடி இருப்பான். சுருள் சுருளாக சுழித்துக்கொண்டோடும் கங்கை சித்தத்தை சீராக்கியபடி இருந்தாள். பாறையில் முட்டி மோதி தெறிக்கும் அந்தச் சப்தத்தின் நடுவே ஈசனின் டமருகம்போல் ஒலிப்பதை உணர்ந்தான். எதிரே இருக்கும்? மெல்ல அரூபமாக தன்னைச் சுற்றிலும் ஓடுவதுபோல உணர்ந்தான். ஈரம்போலும் தன்னை ஏதோவொன்று உரசியது. அது முதலில் தன் கைகளைத் தொட்டு நனைத்தது. கண் திறந்து பார்த்தான்.

கங்கா சற்று தூரத்தில் நகர்ந்தபடி இருந்தாள். தன்னை ஏதோவொன்று மெல்ல ஈரமாக அணைந்ததே, என்ன அது என்று யோசித்தபடி கண்களை மெல்ல மூடினான். அந்த சிறிய பாறையில் சம்மணமிட்டு அமர்ந்தான்.

இப்போது கங்கையின் சப்தம் தன் செவியை நிறைத்தது. தன்னைச் சுற்றிலும் ஏதோ ஒன்று அடர்ந்து பரவி தன்னைச் சூழ்வது தெரிந்தது. அது நீர்மைபோலும் இருந்தது., ஆனால், அது கங்கையாகச் செல்லும் நீர் அல்ல. அது கங்கையின் சூட்சும வடிவம் என்பதை ராம்சுரத்குன்வரால் உணரமுடிந்தது. மெல்ல அது தன்னைச் சூழட்டும் என்று தன்னை தன்னிலிருந்து விடுவித்துக்கொண்டான். கங்கை எனும் தேவதை மெல்ல கரம் தொட்டாள். கன்னம் வருடினாள். ராம்சுரத் குன்வர் சிலிர்த்தான். முதுகுத் தண்டுவடம் சொடக்கென்று அதிர்ந்தது. நேராக நிமிர்ந்து அமர்ந்தான். அவள் மெல்ல தலை தடவினாள். சிரத்தின் உச்சி தொட்டாள். அவன் அமர்ந்த பாறை மெல்ல மூழ்கத் தொடங்கியது. இப்போது வெளியே அடியாழத்தில் பெருஞ் சக்தியோடு பொங்கிப் பிரவகித்தவள் சட்டென்று அந்த பாலகனான ராம்சுரத் குன்வருக்குள் ஊடுருவினாள். அவன் குலுங்கினான். இவன் பாலகனல்ல பிரமாண்டமானவன் என்பதை அறிந்தாள். அவனை நிறைத்தாள். அவனும் அந்த அம்ருத கங்கா ஸ்நானத்தில் நனைந்தான். மனம் தாண்டி இருதயம் அவனுக்குள் கொப்பளித்தபடி இருந்தது. இதென்ன பேரானந்தம் என்று சொல்லக் கூட அங்கு எவருமில்லை.

மெல்லச் சூரியன் மேலெழுந்தது. பாலகனின் தோலில் வெம்மையாகப் படர்ந்தது. ஏதோவொன்று உரசுகின்றதே என்று கண்கள் திறந்தான். சற்றே தூரத்தில் பிரவாகமாகக் கங்கை ஓடுவதும், அந்த நீரின் திவலை கூட தன் மீது படாமல் தன்னை சூட்சுமமாக அவளே நிறைத்ததையும் கண்டு விவரமறியாத அந்த வயதில் வியந்து கங்கையைப் பார்த்தான். இவள் ஆதி தாய் என்று வணங்கினான். அண்ணாந்து திகழ் சக்கரமாகச் சுடர்ந்தெறியும் சூரியனை அந்த சுரத் வணங்கினான். சூரிய வம்சமே இவன் என வானிலுள்ளோர் வியந்து சூட்சுமமாகப் பார்த்தனர்.

மெல்ல ஊருக்குள் நுழைந்தான்.

மனர்ரக்கன் அதற்குள் ராம்சுரத்குன்வரை தேடிக்கொண்டிருந்தார்.

‘‘சுரத்ஞ் சுரத்ஞ்’’ என்று கூப்பிட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தார்.

‘‘என்ன அண்ணா….’’

‘‘வா…. பௌசலாவிலுள்ள பள்ளியில் உன்னை சேர்த்து விடுகின்றேன். நீயாவது நம் வீட்டில் படி. அதிலும் நீ ஆங்கிலத்தை நன்கு கற்க வேண்டும். பிரிட்டீஷ் ஆட்சியில் ஆங்கிலம் கற்றால் நல்ல வேலைக்குப் போகலாம்.’’

‘‘அண்ணா… ஏனோ எனக்குக் கங்கையில் குறுக்கும் நெடுக்கும் நீந்திக் குளிப்பதுதான் பிடித்திருக்கின்றது. விளையாட்டில் பெரியாளாக வரவேண்டும்.’’

‘‘இல்லை சுரத்… நீ படிக்க வேண்டும். நிறைய பேருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வா போகலாம்.’’ என்றார், மனர்ரக்கன் அண்ணா. இருவரும் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு வழியிலுள்ள கிராமதேவதை, வீட்டிலுள்ள சாளக்கிராமம், எல்லாவற்றையும் வழிபட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றான். பாடங்களைக் கேட்ட மாத்திரத்தில் மனதில் பதியவைத்துக் கொள்வான். பள்ளி விட்டவுடன் வீடு. வீட்டிலிருந்து மீண்டும் கங்கை. இப்போது பிள்ளைகளோடு பிள்ளையாக கங்கை நதியோரத்தில் விளையாடிக்கொண்டிருப்பான். மெல்ல இருள் கவ்வும்போது கங்கையினிடத்தில் விடைபெற்று வீடு திரும்புவான்.

அன்று இரவு அம்மாவிடம் அந்த பால சுரத்குன்வருக்குள் ஏனோ இருப்புக்கொள்ளவில்லை. வெளியே கூதற்காற்று. தொலைதூரத்தில் ஆர்ப்பரித்து பொங்கியோடும் கங்கையின் தூரத்து ஒலி என்று அவரின் உள்ளம் நர்தாரா கங்கையை நோக்கியே இருந்தது. சட்டென்று எழுந்தான். வீட்டிலுள்ள சப்பாத்தி ரொட்டி இவற்றை எடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி ஓடினான். சில சாதுக்கள் கையில் விளக்கோடு வந்திருந்தனர். பல சந்நியாசிகள் ஆங்காங்கு அமர்ந்திருந்தனர். அந்தச் சிறுவன் அவர்களைத் தேவதா சொரூபமாகப் பார்த்தான்.

‘‘நான் உங்களை வணங்குகிறேன் சுவாமி’’ என்று சொல்லி நமஸ்கரித்தான்.

‘‘இங்கு பாரப்பா… நீ என்னை வணங்குவதா… நீயும் வணங்கப்படுபவனல்லவா’’ என்றார், முகம் நிறைந்த பூரிப்போடு ஒரு சந்நியாசி.

‘‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் சுவாமி’’ பால குன்வர் பணிவோடு வினவினான்.

‘‘இது அதாவது… நான் எங்கிருந்து வருகின்றோம் என்பது முக்கியமல்ல.’’ தன் உடலைச் சுட்டிக் காட்டினார்.

‘‘புரியவில்லை சுவாமி…’’

‘‘இதற்கு இந்த பூமியோடு தொடர்பு அறுந்துபோயிற்று. இவன் இனி அந்தப் பக்கம் வாரான். கங்கையோடு நடந்து கங்கையோடு இருந்து கங்கையில் ஒடுங்குதலப்பா’’

‘‘எப்படி இது சாத்தியம்’’

‘‘நாங்கள் இப்படி வருவதற்குப் பெயர் கங்கா பிரதட்சணம் என்று பெயர். கங்கோத்ரியில் தொடங்கி கங்கா சாகரான கங்கை கடலோடு கலக்கும் வரையுள்ள தூரத்தை அப்படியே பிரதட்சணமாக வருதல். கிட்டத்தட்ட ஐயாயிரம் மைல்கள் இருக்கும். எப்படி வைத்தாலும் ஐந்தாறு வருடங்கள் ஆகும். சில சந்நியாசிகளுக்கு இதுவே தவம். கங்கையோடு இருத்தல் என்பது ஞானத்தோடு இருத்தல். பக்தியோடு இருத்தல். உனக்குத்தான் இதெல்லாம் புரியுமேப்பா…’ அந்த சிறுவனை அறிந்தவாறே அவரும் பேசினார்.

ராம்சுரத்குன்வரின் பெற்றோருக்கு சுரத் இவ்வாறு செல்வது பழக்கமாகி விட்டது.

எப்போது சாதுக்கள் அதிகமாக வருவார்கள் என்று பார்த்து, அவர்களுக்குத் தேவையான உணவுகளை அளித்து அவர்களோடுநிறைய பேசியபடி இருப்பான். இதுவே ராம்சுரத்குன்வர் வாழ்வினில் முக்கிய இடமாக இருந்தது.

எவரால் இந்த உலகத்தில் இருந்தபடியே இந்த உலகத்திற்கு அப்பால் சென்றுவிட்டவர்களை கவனிக்க முடிக்கின்றதோ அவர்களுக்கே இந்த உலகின் நிலையற்ற தன்மையை உணர முடியும். இதற்கெல்லாம் அப்பால் என்ன உள்ளது என்று யோசிக்க முடியும். எப்படி எவரால் யோசிக்க முடிகின்றதோ அவர்களுக்கு சற்று தூரத்தில் குரு எனும் அற்புதம் கைகளில் பூச்செண்டோடு காத்துக்கொண்டிருக்கும்.

அப்படித்தான் ஒருவர் சுரத்குன்வருக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அந்த மகானின் பெயர் சுவாமி முனிஷ்வரானந்தஜி மகராஜ். அவரை கபாடியா பாபா என்று அழைப்பார்கள். மேற்கு வங்கத்தில் நீதிமன்றத்தில் ஜட்ஜாக இருந்திருக்கின்றார். ஒரு வழக்கில் தன் மருமகனுக்கே மரண தண்டனை விதிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட அதை நிறைவேற்றிவிட்டு இதென்ன வாழ்க்கை இப்படி விளையாடுகின்றது என்று விரக்தியோடு வீட்டை விட்டு வெளியேறினார்.

அங்கிருந்து நேரடியாக நர்தாராவிற்கு அருகேயே ஆசிர மக் குடில் அமைத்து தங்கியிருந்தார். கபாடியா பாபா என்று அனைவரும் அன்போடு அழைத்தனர். கபாடியா என்றால் மண்பாண்டம் என்று பொருள். ராம்சுரத்குன்வருக்கு அவருடைய அந்த பேரமைதி தவழும் முகமும், எப்போதும் அவர் நாவினில் புரளும் ராம நாமமும் கட்டிப்போட்டது. தன் வயதொத்த சிறுவர்கள் அவரைக் கண்டு விலகி ஓடினார்கள். ஆனால், சுரத் அவரின் மீது பேரன்பு கொண்டிருந்தான். அவரிடமிருந்து விலக்க ஒண்ணாத ஒரு ஈர்ப்பு சக்தி அவரைச் சுற்றிலும் இருப்பதை அறிந்திருந்தான். அந்தப் பிணைப்பு இருதயத்தோடு இதயம் பேசுவதுபோலிருந்தது.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற நூல்களை கபாடியா பாபா விளக்கிப்பேசினார். ஏற்கனவே, தாயார் சொன்ன புராணக் கதைகள் இங்கு வேறொரு உருக்கொண்டன. ராம்சுரத்குன்வரின் அகத்தை கபாடியாவின் சொற்கள் மெல்ல மாற்றின.

இனி ராம்சுரத்குன்வர் எனும் சிறுவனுக்குள் ஞானச்சூரியன் தன் கிரணங்களை காட்டத் தொடங்கியது. இனி அது சிறுவனல்ல. ராம்சுரத்குன்வர் எனும் தேடல்கொண்ட சாதகர். பெரும் பக்தர். ஞானப்பசியின் வேரை அறிந்துகொண்ட பித்தர்.

எங்கேயோ மிச்ச சொச்சமிருந்த உலகத்தின் பக்கமிருந்த மனதை கபாடியா பாபா என்கிற மகத்தான் தன் பக்கம் திருப்பினார். குரு எனும் விளக்குக்கு முன்னால் சுரத் ஒளிர்ந்தார்.

இனி இவ்வுலகில் நடைபெறும் ஒவ்வொரு அசைவும் தனக்கு உபதேசங்களாக மாறும் என்று நினைக்கவே இல்லை.

தன் வாழ்வையே மாற்றப்போகும் செயலொன்று அப்போது போகிறபோக்கில் நடந்தது.

தன்னுடைய தாயார் கிணற்றடியில் நின்றுகொண்டிருந்தார்கள். சுரத் சட்டென்று கயிற்றை எடுத்து கிணற்றுக் கரையின் மீது வீசினார். அங்கிருந்த பறவையின் மீது கயிறுபட்டு கீழே விழுந்தது. ஓடிச் சென்று பறவையை அள்ளித் தூக்கினார். இரண்டு மிடறுகள் நீர் அருந்த வைத்தார். நேராகக் கங்கைக்குச் சென்று கங்கா தீர்த்தத்தை எடுத்துப் புகட்டினார். அது மெல்ல மெல்லத் துடிப்பு அடங்கி அவரின் கரங்களிலேயே மரணித்தது. பல மணி நேரம் அழுதபடி இருந்தார். குற்ற உணர்வில் தவித்தார்.

இதுவரை உயிருடன் இருந்த பறவைக்குள்ளிருந்து எது வெளியேறியது. எது மரணித்தது. எது இந்தப் பறவையின் உடலை உதறி வெளியே சென்றது. உயிர் என்பது என்ன? மரணித்தல் என்றால் என்ன?

பறவையைக் கையில் வைத்துக்கொண்டு மரணம் என்றாலென்ன? மரணம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார். அது வெறும் வாய் வார்த்தையாக இல்லை. நெஞ்சுக்குள் பாறை வைத்து அழுத்தியது போன்று மனதை அழுத்தியது.

எல்லோரும் இறப்பதை பார்க்கின்றேன். இத்தனை வயதில் இதோ இந்த கிராமத்திலிருப்பவர்களெல்லாம் மரணித்தபடி இருக்கின்றார்களே. அதையெல்லாம் பார்த்திருக்கிறேனேஞ் ஆனால், இந்தக் குருவியின் மரணம் மட்டும் என்னை வேறென்னவோ செய்கின்றதே…

அந்தச் சிறு பறவையிடம் நெஞ்சு தாங்காமல் மன்னிப்பு கேட்டார். அதற்குப் புரியுமோ… புரியாதோ… என்றெல்லாம் கவலைப்படவில்லை. தனது கையை விசிறிபோல் விரித்தார். அதன் மேல் பறவையை படுக்க வைத்துக் கொண்டார். மெல்ல கங்கா ஜலத்தின் பிரவாஹத்தில் அந்தச் சிறு பறவையைக் கிடத்தினார். அது கங்கையினூடே நகரத் தொடங்கியது. தொலைதூரத்தில் சென்று மறைந்தது.

ராம்சுரத்குன்வர் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக கபாடியா பாபாவின் ஆஸ்ரம வாயிலை அடைந்தார். கபாடியா வா என்பதுபோல் அழைத்தார்.

ராம்சுரத்குன்வர் அவர் பாதங்களில் தடேரென்று விழுந்தார். வெடித்து அழத் தொடங்கினார். சரி… அழட்டுமென்று பாபாவும் அமைதி காத்தார்.

‘‘பாபாஜி… மரணம் என்றால் என்ன’’ என்று தலைதூக்கிக் கேட்டார்.

அவ்வளவுதானே என்று அவரும் சொல்லத் தொடங்கினார்.

கங்கை ஒரு கணம் நின்று திரும்பி சாரலை அள்ளித் தெளித்து வீசி நகரத் தொடங்கியது.

– தொடரும்

One Comment on “கிருஷ்ணா/அன்பு நண்பர்களுக்கு வணக்கம்”

Comments are closed.