
ராம்சுரத்குன்வருக்குள் விரிந்த விஸ்வநாதம்
காலவெளிக்கு அப்பால் சென்று யோசிக்கும்போதுதான் காசி எனும் ரகசிய தலத்தை தரிசிக்க முடியும். மகாபாரதம் காலம் தொட்டு காசி என்பது துறவிக்கு மட்டுமல்ல மாபெரும் மன்னர்களையும் வசீகரித்தபடி இருந்தது. புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், கபீர், திரைலிங்க சுவாமிகள், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர் என்று எண்ணற்ற ஞானிகள் காசியை வெளிமுகத்தில் மட்டுமல்லாமல் அங்கேயே அமர்ந்து எது உண்மையான காசி என்று அகமுகமாக நின்று தரிசித்திருக்கிறார்கள்.
நர்தாராவிலிருந்து ராம்சுரத்குன்வர் எனும் இளைஞர் காசியை அடைந்தார். ராமகிருஷ்ணர் காசியைப்பற்றிச் தன் சீடர்களுக்குச் சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் அவருக்கு நினைவில் வந்தன.
‘‘இதோ பாருங்கள். நான் ஒருமுறை காசிக்குச் சென்றிருந்தேன். கங்கையில் அமர்ந்து காசி நகரத்தை பார்த்தபோது அது உருக்கிய பொன்போல ஒளிர்ந்தது. அதைவிட ஒவ்வொரு இறந்துபோன ஜீவனுக்கு அருகேயும் காசி விஸ்வநாதர் பைராகி வேடத்தோடு அமர்ந்து ராம நாமத்தைச் சொல்லுவதும், காசி விசாலாட்சி கையிலுள்ள நெய்யை எடுத்து இறந்த ஜீவனின் காதில் விடுவதும் அந்த ஜீவன் மோட்சத்திற்குச் செல்வதையும் என் கண்களால் பார்த்தேன். மேலும், பூமிக்குக் கீழே குகை போன்றிருந்தது. அதற்குள் இறங்கி உள்ளே இருந்த திரைலிங்க சுவாமிகளை தரிசித்தேன். விஸ்வநாதரே உடம்பெடுத்து வந்திருப்பதுபோல் இருந்தது. அவரின் அருகே சென்று ஒன்றா இரண்டா என்று விரலைக் காண்பித்துக் கேட்டேன். அவர் ஒன்று என்றார்’’.
ஆயிரம் வருடத்து காசிச் சந்துகளில் ராம்சுரத்குன்வர் நடந்தபடி இருந்தார். தொலை தூரத்தே கங்கையின் ஆர்ப்பரிப்புச் சத்தம் கேட்டபடி இருந்தது. ஏதோவொன்று தன்னுள் உடைந்தபடி இருப்பதை உணர்ந்தார். கண்களில் நீர் கட்டியது. சட்டென்று ஒரு மண்டபம் போலிருந்த ஓரிடத்திலிருந்து வெளியே பார்த்தவுடன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கங்கை நீராய் உருகிப் பரவியிருந்தாள். கண்களில் நீர் கட்டியது.
கிழே படித்துறையில் இறங்கி வேகமாகச் சென்றார். ஏதோ தாயைப் பிரிந்த குழந்தை தாயைப் பார்க்கும் வேகத்தோடு ஓடினார். மேலே வானம் அடர் கருப்பாக கறுத்தது, எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்கிற தாயின் வயிறு போன்று இருந்தது. ஒவ்வொரு படியாக கடக்கும்போதும் வானிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக இறங்கியது. சட்டென்று சரம் சரமாக மழை அடித்துப் பெய்தது.
அந்த இளைஞன் இரு கைகளையும் விரித்தான். வானம் நோக்கினான். ஓ.. என்று அலறினான். அந்தக் கண்ணீரும் கங்கையின் சாரலும் விண் நீரும் ஒன்றாக சங்கமித்தன. பக்தி எனும் பெரும்புனல் ஊற்று அவரின் இதயத்திலிருந்து பொங்கியது. கைகளை மேல்நோக்கி குவித்தார். வெகுநேரம் அப்படியே நின்றார். பிறகு மெல்ல கைகளை இறக்கினார். தளர்ந்தார். மழை ஓய்ந்தது. ஏதோவொன்று ஜென்ம ஜென்மமாக இருந்ததைச் சுத்தமாக கழுவித் துடைத்திருந்தது. காசியே ஜொலித்தது.
சற்று தூரத்திலிருந்த மணிகர்ணிகா காட்டிற்கு நகர்ந்தார். இரண்டாள் உயரத்திற்கு அடுக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளையும் வறட்டிகளையும் கண்டார். அதன் மேலே இறந்துபோயிருந்த உடலைக் கண்டார். அந்த உடலுக்குக் கீழே பிழம்புபோல் தகதகத்து எரிந்து கொண்டிருந்த அக்னியை கண்டார்.
அக்னி அந்த உடலை அணைந்தது. முறுக்கிப் பிழிந்தது. சரசரவென்று எரிந்தது. ஏதோவொன்று பேரொளியோடு அக்னிக்கும் மேலே வெள்ளிப் பிழம்புபோல் எழுந்து நின்றது. இதென்ன விசித்திரம் என்று வியப்பு குறையாமல் பார்த்தபடி இருந்தார். மெல்ல அது காசி விஸ்வநாதர் ஆலய திக்கு நோக்கி நகர்ந்தது. உள்ளுக்குள் சென்று மறைந்தது.
இப்போது அவரின் கண்கள் அண்ணாந்து பார்க்கத் தொடங்கின. சட்டென்று காசியின் அனைத்து கட்டடங்களும் மறைந்தன. தன் கண்முன்னே சீட்டுக் கட்டுகள் சரியத் தொடங்குவதுபோல் இந்த கண்களும் மனதும் காட்டிய அனைத்துப் படங்களும் மறைந்தன. இப்போது காசிக் கங்கையும் அதற்கு அருகே சுடுகாடாக இருந்த பூமி மட்டுமே தெரிந்தது, சரீரங்கள் ஒருசேர ஜுவாஜ்ஜல்யமாக… பெருஞ் ஜோதி சொரூபமாக எரிவதும்… அந்த நகரமே அதனால் ஜொலிப்பதும் அதனிலிருந்து நூற்றுக்கணக்கில் ஜீவன்கள் அகல் விளக்குகள் அந்தரத்தில் மிதப்பது போல மிதந்து மிதந்து காசி விஸ்வநாதர் கோயிலை அடைவதுமாக இருந்ததைப் பார்த்தவுடன், அங்கேயே இருந்த ஒரு சாம்பல் குவியலின் மீது தளர்ந்து போய் அமர்ந்தார்.
மகா மயானம்… மகா மயானம்… அவி முக்தம்… அவி முக்தம்… என்று உள்ளுக்குள் அலறினார். மெல்ல கண்கள் மூடினார். அந்தச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொண்டார். தன் உடலுக்குள் அதையும் தாண்டி உயிர்ச் சுருளுக்குள் சுருட்டி வைக்கப்படிருந்த பந்து போன்றதொன்று பட்டென்று விரிந்தது.
சட்டென்று உடல் நிமிர்ந்தது. கண்கள் தானாக மூடின. ஆடிக் கொண்டிருந்த தலை சவம் போலானது. கண்கள் அரைக்கண் நிலையில் உள்ளடங்கியது. இடம், காலம், தேசம் எல்லாவற்றையும் தாண்டிய ஒன்றோடு கிடந்தார். எவ்வளவு நேரம் இருந்தார் என்பது தெரியாது. சட்டென்று எழுந்தார். கால்கள் பின்னிப் பின்னி நடந்தார். நடை பழகும் குழந்தைபோல் தரை படரும் கொடிபோல் மெல்ல பரவிப் பாவினார். காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தார்.
இப்போது உடம்பு குலுங்கியது. உச்சித் தலையில் ஜிலீர்… ஜிலீர்… என்றொரு உணர்வு சிலிர்க்க வைத்தபடி இருந்தது. விஸ்வநாதரின் முன்பு தளர்ந்த கைகளோடு நின்றுகொண்டிருந்தார்.
முதலில் தான் எங்கு வந்திருக்கிறோம் என்று தெரிந்திருந்தது. இப்போது எங்கு என்பது மறைந்தது. வந்திருக்கிறோம் என்று மட்டும் இருந்தார். அடுத்து அதுவும் மறையத் தொடங்கியது. வந்தது இந்த சரீரமா அல்லது நானா என்று இரண்டு எண்ணங்கள் எழுந்தன. மெல்ல அதுவே அதாவது விஸ்வநாதரே ராம்சுரத்குன்வருக்குள் கிளர்ந்து எழுந்திருந்த இரண்டு எண்ணங்களை கவனிக்க சட்டென்று சரீரம்தான் என்கிற எண்ணம் அடங்கியது.
அவ்வளவுதான்… ராம்சுரத்குன்வர் தான் சரீரம் என்கிற பிரக்ஞை அழிந்து, நான் என்று ஏதோவொன்று எழுந்து நிற்க அதையும் அதுவே கவனிக்க… அதுவும் அடங்க…. தான் சரீரம், நான் எனும் அகங்காரம் போன்றவை முற்றிலும் மறைந்து எங்கோ ஆழத்தில் சிறு வெளிச்சப் புள்ளியை பார்க்க. அதற்கும் தனக்கும் எந்தவித வேறுபாடும் இல்லாதது கண்டு இரண்டாக இருந்தது போல் இருந்தது இப்போது ஒன்றானது.
தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட ஒரு ஆம்பல் பூப் போல ஒன்றுக்குள் அந்த ஜோதி நுழைய ஆஹா… இதுதான், அந்த இருதய ஸ்தானமா என்று அங்கு நினைப்பதற்கும் ஒருவருமில்லாமல் நான் என்பது முற்றிலும் மறைந்து தானே தானே…. என்று அதுவே அங்கு கிடந்தது. அது… இது… என்று எந்தப் பேதமுமில்லாமல் கிடந்தது.
ராம்சுரத்குன்வர் எனும் இளைஞர் விஸ்வநாதம் எனும் பேருணர்வுக்குள் அடங்கினார். காணாமல் போனார். இனி இவர் இவர் அல்ல. அதுவாகி நின்றார். சட்டென்று யாரோ தோளைத் தொட்டதுபோல் இருந்தது. கண்களைத் திறக்க எதிரே விஸ்வநாதர் சந்நதி வேறு மாதிரி தெரிந்தது.
சே… சே… என்ன பொய்யான உலகம். இப்போது பார்ப்பதில் ஒரு சாரமும் இல்லையே. இதோ என் இருதயத்திலிருந்து குடையை விரிப்பதுபோல விஸ்வநாதர் விரித்துக் காட்டுகின்றாரே. அவரேதான் அந்த குடையை குறுக்கி இருதய ஸ்தானத்தையும் காட்டுகின்றார். நான்… நான்… என்று என் வலப்புற மார்பை சுட்டும் அதே இடத்திலிருந்து இதோ நான் பார்க்கும் காசியும் வருகின்றதே. என்னுள். என்னுள்… இருப்பதுதான் வெளியேயும் காட்டுகின்றதா… என்று மெல்ல கைகூப்பி வணங்கி கோயில் பிராகாரம் வந்தார்.
சட்டென்று தன் சரீரம் பிரம்மாண்டமானதுபோல் இருந்தது. அந்த காசியையே தான் அடைத்து நிற்பதுபோன்று இருந்தது. அவருக்குள் அனைவரும் நடப்பது போலிருந்தது. சட்டென்று சிறு சரீரத்திற்குள் மீண்டும் வந்து அமர்ந்தது. இந்த அனுபவங்கள் அனைத்துமே அவரை அதி பக்குவத் தன்மையை அடையச் செய்தது. சிறு இலையின் அசைவுகூட நடராஜ தாண்டவம்போல் இருந்தது.
தன் கைகளை கட்டிக்கொண்டார். தான் ஒன்றுமே இல்லை என்று முற்றிலும் ஒப்புக் கொடுத்த மனோநிலையில் ஆங்காங்கு சிதையில் எரிந்து கொண்டிருந்த பிணங்களை பார்த்தார். இப்போது உடல் அழிவதைக் குறித்த பயம் அவரிடத்தில் அறுந்து விட்டிருந்தது.
மானிடர்கள் இந்தச் சரீரம் அழிவதைக் குறித்து பயம் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், உள்ளிருக்கும் ஒன்று அழியாது இருக்கின்றது. இவன் அது அழிந்து விடுமோ என்று சரீரத்தை அதன் மீது ஏற்றிப் புரிந்து கொண்டிருக்கின்றான். உண்மையில் சரீரமும் அவனுடையதே.
எங்கோ ஒரு பக்தர் பாடிய பாடல் வரி நினைவுக்கு வந்தது. தேகமும் சித்தமுமே உனதல்ல தெய்வத்தின் கைக்கருவி… உடலும் அவனுடையது. அதற்குள் இருப்பதும் அவனுடையது. ஏதோ ஒன்று தனியாக இருப்பதுபோல் காட்டும் மகா மாயையும் அவனுடையதே. இதோ இப்போது தரிசித்தேனே… சத்தியத்தின் மூல ஊற்று…. இனி அதற்கு இணை உலகத்தில் இல்லை. இதோ நான் பார்ப்பது அனைத்தும் அதன் பிரதி பிம்பங்கள். அதன் தெறிப்புகளே…. என்று தனக்குள் வியந்தபடி முகம் மலர்ந்தார்.
காசியின் படித்துறையில் அமர்ந்தார். அருகே இருக்கும் கங்கை நீரை அள்ளிப் பருகினார். கங்கை ஜலம் கண்ணாடி போல் இருந்தது. அதில் தன் முகம் பார்த்தார். மெல்ல தன் முகம் மறைந்து கபாடியா பாபாவின் முகம் தோன்றியது.
‘‘போதுமா… இப்போதைக்கு இது போதும். மீண்டும் வா’’ என்று சிரித்தபடி கூறினார்.
அலை அலையாக நகர்ந்துகொண்டிருந்த கங்கையின் மீது தோன்றிய அவரின் முகம் மறைந்தது. மேலே செக்கச் சிவந்த வானத்தின் மையத்தில் சூரியன் பெரும் தகிப்போடு சரசரவென மேற்கின் திசையில் சென்று மறைந்தான்.
ராம்சுரத்குன்வர் வாழ்வின் அடுத்த நகர்வை நோக்கி நகரத் தொடங்கினார்.
– தொடரும்
கிருஷ்ணா/அன்பு நண்பர்களுக்கு வணக்கம் – விருட்சம் நாளிதழ்
2. கிருஷ்ணா/யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “கிருஷ்ணா/3. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்”
Comments are closed.