4. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

புத்தனின் அழைப்பு

ராம்சுரத்குன்வர் என்கிற அந்த இளைஞன் காசியில் தான் பெற்ற பெரும் அக அனுபவத்தை ஏந்திக்கொண்டு காசியை விட்டுப் புறப்பட்டார். எங்கு செல்வது என்று யோசிப்பதற்குள் அவர் மனதில் சாரநாத் என்கிற வார்த்தை வந்தது.

சாரநாத் புத்தர் தன் முதல் பிரசங்கத்தை தொடங்கிய இடம். புத்தரும் ஞானமடைந்த பின்னர் காசிக்குச் சென்று அங்கிருந்தே சாரநாத்திற்கு சென்று தன் முதல் பிரசங்கத்தைத் தொடங்கினார்.

எனவே, ராம்சுரத்குன்வர் மெல்ல காசியிலிருந்து சாரநாத்திற்குள் நுழைந்தார். அங்கிருந்த மான் பூங்காவிற்குள் நுழையும்போது அவர் மனம் இங்குதானே புத்தரின் காலடி பட்டிருக்கும். தர்மச் சக்கரம் என்கிற முதல் போதனையை அவர் இங்குதானே நிகழ்த்தினார் என்று அலைந்து அலைந்து பார்த்தார். மெல்ல தன் எதிரே உள்ள தமேகா ஸ்தூபியை அண்ணாந்து பார்த்தார்.

எப்பேர்ப்பட்ட இடம் இது. ஆத்ம வஸ்துவின் ஆழ்ந்த மௌனத்தை புத்தர் தன்னுடைய வழியில் எப்படியெல்லாம் உபதேசமாக வழங்கினார் என்று அந்த தமேகா ஸ்தூபியை வலம் வரத் தொடங்கினார். அப்படி வலம் வரும்போதே சுற்றிலுமுள்ள பௌத்தத் துறவிகள் ஓம் மணி பத்மே ஹம்… ஓம் மணி பத்மே ஹம்… ஓம் மணி பத்மே ஹம்… என்கிற மந்திரத்தை சொல்லியபடி வலம் வருவதைத் தன் செவியால் கேட்டு மனதில் அந்த மந்திரத்தைத் தன் மனதில் நிறைத்துக் கொண்டார்.

வாழ்வின் பாதைகள் ஆச்சரியங்கள் அடங்கியது என்பதை அவர் அங்கு அறிந்துகொண்டார். ஒரு பெரும் சத்திய வஸ்துவை அடைவதற்கு எத்தனை மார்க்கங்கள். அந்த அத்தனையிலும் பெரும்பகுதியான மதங்கள் இந்தியாவில் பிறந்து பின்னர் உலகம் முழுவதும் எப்படிப் பரவியிருக்கின்றது. இன்று உலகிற்கு புத்தர் எனும் மகானைப் பாரததேசம் அளித்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

இந்த தேசம் முழுவதுமே மகான்களால்தானே ஆளப்படுகின்றது. இதோ இங்கு நின்று உபதேசித்த அந்த மகானின் சத்திய வார்த்தைகள் இன்று உலகம் முழுவதும் ஒலிக்கப்படுகின்றனவே என்று புத்தரைக் குறித்த பிரமிப்பில் அவர் மனம் தளும்பியது. அந்த ஸ்தூபியானது கவிழ்க்கப்பட்ட மலை போன்று இருந்தது. அதைப் பார்த்தபடி தொலைதூரத்தில் சென்று அமர வேண்டும்போல் இருந்தது. மெல்ல அதை வியப்பும் பிரமிப்பும் அகலாத பார்வையோடு வெகுதூரம் சென்று அமர்ந்தார்.

மெல்ல அவரையும் அறியாது அவர் கண் அரைக்கண் மூடிய நிலையில் நின்றது. அவருக்குள் நீ எப்போதும் உன்னுடைய எல்லா மனத் தளைகளிலிருந்தும் உன்னை விடுவித்துக்கொள் என்று உள்ளுணர்வு உந்தியது. மனம் வெளியிலிருந்து வரும் அனைத்து விஷயங்களிலிருந்தும், பற்றிக் கொள்ள வேண்டுமென்கிற உணர்வுகளிருந்தும் முற்றிலும் விடுவித்துக்கொள் என்று உள்ளுக்குள் ஏதோ ஒன்று அழுத்தியது. அது ராம்சுரத்குன்வரின் முயற்சியற்று நடந்தது.

மனம் என்ற ஒன்று இருக்கின்றது. அதை ஒன்றும் செய்யாதே. அதை அப்படியே விட்டுவிடு. என்று மீண்டும் மீண்டும் அவரை ஆட்கொண்டது. அப்படி தனியே இருப்பதை ஒன்றும் செய்யாதே. அது வெளியில் சொல்லப்பட்டு உன் மீது திணிக்கப்பட்ட எதையும் ஏற்காது, மறுக்காது அப்படியே இருந்து விடட்டும். நீ ஒன்றும் செய்யாதே. அப்படி செய்யாமல் இருக்கும்போது அதற்கு அப்பால் இருந்து ஒன்று இயங்குவதை நீ அறிவாய். அது மெய். அது ஒளி. அந்த ஒளியை யாரும் உனக்குத் தரமுடியாது. நீ உனக்கு ஒளியாக இரு. மனதை அகற்று என்று அங்கு வார்த்தைகள் அல்லாது உணர்வுரீதியாக அவருக்குள் புத்தத் தன்மையை அடைந்தார்.

மனம் செயலற்றுப் போனது. காசியில் எந்தத் தன்மை இருந்ததோ அதே தன்மை இப்போது பேரமைதிக்குள் அவரை முகிழ்த்தியது. புத்தர் என்பது வெறும் நபரை மட்டும் குறிக்கவில்லை என்பதை அவர் அறிந்தார். அதுவொரு தன்மை. புத்தம் என்பது அந்த பேரமைதி. மெய்யுணர்வு. எப்போது உலக உணர்வு அறுபடுகின்றதோ அங்கு மெய்யுணர்வு தொடங்குகின்றது. ஆனால், அதற்கு தொடக்கம் இல்லை. முடிவும் இல்லை. அது அநாதி என்பதை அவர் அங்கு உணர்ந்தார்.

காசி சாரநாத் என்று இரண்டு மகத்தான ஆன்மிகத் தலங்கள் அவரை இன்னும் ஆழமாக்கின. மெல்ல அங்கிருந்து புறப்பட்டு சொந்த ஊரான நர்தாராவிற்குத் திரும்பினார். நேராக வீட்டிற்குக் கூடச் செல்லாமல் கபாடியா பாபாவின் குடிலுக்குச் சென்றார்.

அங்கு பாபா இவர் இப்போது வருவார் என்பது போலவே காத்திருந்தார். நேராக அவர் காலடியில் சென்று விழுந்தார். மெல்ல குலுங்கினார். கண்களில் கொப்பளிக்கும் நீரோடு அவரின் திருமுகத்தை கண்டார்.

‘‘பாபா…. பாபா…. என்ன இந்த பிரபஞ்சம் இப்படி இருக்கின்றது’’ வாய் குழறி பேசுவதுபோல் பேசினார்.

‘‘எதையப்பா… கண்டாய். என்ன பார்த்தாய்’’ பாபா மெதுவான குரலில் தலையைத் தடவியபடி கேட்டார்.

‘‘பாபா… இதோ நான் பார்த்துக்கொண்டிருக்கும் பிரபஞ்சம். இதோ இந்த குடில். அந்த மரம். இதோ இந்த மரக் குடுவை. நாம் அமர்ந்திருக்கும் இந்த தரை. இவற்றின் எல்லாவற்றிலும் பின்னாலும் அதுவே உள்ளது. அதுவே உள்ளது. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதுவே என்னுள்ளும் உள்ளது. காசியிலும் அதுவே உள்ளது. சாரநாத்திலும் அதுவே உள்ளது. அது என்றுதான் என்னால் கூற முடிகின்றது. நான் என்று அதோடு தொடர்புபடுத்தும்போது அது போய்விடுகின்றது பாபா. ஆனால், அது என்னை விழுங்கியபோது நான் வேறொன்றாக இருந்தேன். ஆ… தவறு தவறு…. அதுதான் நானாகவும் இருந்தேன். இப்போது இவன்தான்… இதோ உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறானே இவன் வேறாகத் தெரிகின்றான். காசி முழுக்க… காசி முழுக்க…. விஸ்வநாதம்… விஸ்வநாதம்… அதுவே விஸ்வமெங்கும் வியாபித்திருக்கின்றது. என்னால் சொல்ல இயலவில்லை பாபா…

இதோ உங்கள் பின்னாலும் அது இருக்கின்றது என்று நிச்சயித்துச் சொல்கின்றேன். இப்போது அது எப்போதும் என்னுள் விலகாது இருக்க வேண்டும். நான் இதற்கு முன்பு படித்த புத்தகங்கள் அனைத்திலும் விளக்கப்பட்டிருப்பது எத்தனை சத்தியம். நான் என்ன செய்ய வேண்டும். தெளிவாக இருக்கின்றேனே அல்லது குழ்ப்பமாக இருக்கின்றேனா என்பதே தெரியவில்லை. அந்த பேரனுபவித்திற்குப் பிறகு மனம் சொல்வது அனைத்தும் வீணே என்று தோன்றி விட்டது. புத்தர் அந்த தர்ம சக்கரத்தை என்னுள் என் அனுபவ மண்டலத்திற்குள் நிகழ்வதை காண்பித்துக் கொடுத்ததுபோல் உணர்ந்தேன்.’’

ராம்சுரத்குன்வர் பிரமிப்போடு பேசுவதை கண்ட கபாடியா பாபா எழுந்து நின்றார். ஏதோ ஆயிரம் பேருக்கும் முன்பு முழங்குவதுபோன்று கைகளை உயர்த்தினார். வெடித்துச் சிரித்தார்.

‘‘ராம்சுரத்… நீ யாரென்று எனக்குத் தெரியும். உன் உள் அனுபவத்தோடு இப்போது இன்னும் சில நூல்களையும் சேர்த்துப் படிப்பாயா. சுவாமி விவேகானந்தரை நீ அறிவாய் அல்லவா. அவரின் அனைத்து உபதேச நூல்களையும் படி. நெஞ்சில் ஒரு நெருப்புப் பந்தை தள்ளி விடுவார். உன்னை அது இன்னும் சுத்தமாக்கும். ஆன்மிகம் என்பது கோழைகளுக்கானது அல்ல என்பது புரியும். ஆது ஆயிரம் சேனைகளை வெட்டிச் சாய்க்கும் சேனைத் தலைவனுக்கானது என்பது புரியும். அதைத் தாண்டி சுவாமி ராம்தீர்த்தர் என்கிற மகானையும் படி. அவரின் வேதாந்தத்தை நன்கு உள்வாங்கு. துளசிதாசரின் ராம்சரதமானஸ் என்கிற நூலைப் பாராயணம்போல் படிக்க வேண்டும். பகவத்கீதையை நன்கு ஆழமாகப் படி என்றார் பாபா. இந்த நூல்கள் உன்னை இன்னும் ஆழமாக்கும். உன்னை உலகியல் பக்கம் ஒதுங்காமல் வைக்கும். உலகத்தில் இருந்தாலும் அது உனக்குள் வராது பார்த்துக் கொள்ளும். கவலைப்படாதே சுரத். வெகு விரைவில் உனக்குள் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முகத்தில் ஒளி படர்ந்து ஜொலிக்கின்றது. இப்போதைக்கு நேராக வீட்டிற்குச் செல்’’ என்றார்.

ராம்சுரத்குன்வர் வீட்டிற்குச் சென்றாலும் வெகுநேரம் யாரோடும் பேசாமல் தனிமையிலேயே இருந்தார். இவரின் விசித்திரமான நடவடிக்கைகளை கண்ட வீட்டிலுள்ளவர் பயத்தின் எல்லைக்கே சென்றனர். எங்கு எப்போது செல்வார். வீட்டிற்கு எப்போது செல்வார் எனும் நிச்சயமற்ற தன்மை இருந்தது.

இப்படியெல்லாம் இருந்தால் இவரை எப்படியாவது இந்த உலக வாழ்வில் கட்டிப்போட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்தனர். பெண் பார்க்கும் படலத்த்தையும் இவரைக் கேட்காமலேயே தொடங்கியிருந்தார்கள்.

ஒருமுறை பலியா எனும் பக்கத்திலுள்ள ஒரு ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு தெரிந்த வயதான ஒருவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். எந்தவித எதிர்பார்ப்புமின்றி ராம்சுரத் அந்த வயதானவரை மருத்துவமனையில் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். காலை மாலை இரவு என்று அவரின் கட்டிலுக்கு அருகேயே இருந்தார். அருகேயிருந்த ஒருவர் இப்படி பார்த்துக்கொண்டிருக்கிறாரே இவர்தான் தன் மகளுக்கு ஏற்ற மணமகன் என்று நினைத்தார். இந்தக் காலத்தில் இப்படியொரு இளைஞனா என்று ஆச்சரியப்பட்டார்.

அந்தப் பெண்ணின் தகப்பனார். இவரின் இல்லத்திற்குச் சென்றார். ‘‘என் மகள் தால்கிரியா தேவியை உங்கள் மகன் ராம்சுரத்குன்வருக்கு திருமணம் முடிக்கலாம் என்று உள்ளேன்’’ என்றார்.

அவர் குடும்பத்தினரும் சரி என்று தேதியை குறித்தனர்.

ராசுரத்குன்வர் அதிர்ந்தார். திருமணம் வேண்டாம் என்றார். ஆனால், பெற்றோரும், அண்ணனும் அண்ணியும் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடைபெறும் என்றனர். திருமண நாளும் நெருங்கியது. ராம்சுரத்குன்வருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவருக்கு ஒன்றே ஒன்று தெரிந்தது. கங்கையிடம் இதைச் சொல்லி வழி கேட்க வேண்டும் என்று கங்கையிடம் ஓடிச் சென்றார்.

எதிரே கங்கை அப்போதும் புத்தம் புதியதாக தன்னை எப்போதும் மாற்றியபடி நகர்ந்துகொண்டேயிருந்தாள்.

‘‘ஹே… கங்கா மாதா. ஞானம்… ஞானம்… என்று என்னிடம் சொல்லிச் சொல்லி ஆட்கொண்டாய். ஞான சாகரமா… அல்லது சம்சார சாகரமா… என்கிற குழப்பத்தில் நிற்கின்றேன். என்ன செய்வது. எனக்கு வழி தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு திருமணம் வேண்டாம் என்று தோன்றுகின்றது. இவள் அல்ல என்று உள்ளுணர்வு தெளிவாக காட்டுகின்றது. அதனால் இதோ உன்னுள் நான் குதித்து அந்தப் பக்கம் கரையேறுகின்றேன்’’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே கங்கையில் குதித்தார். ஆனந்தமாக நீந்திக் கொண்டே அந்தப் பக்கம் கரையேறினார்.

உலகியல் பக்கத்திற்கு அப்போதைக்கு வேண்டாமென கங்கை மாதாவும் அவரைத் தன்னுள் ஏந்தி ஆசையாக அள்ளி அணைத்து கரையின் இப்பக்கம் சேர்த்தாள். ஊரிலுள்ளோர் எல்லோரும் தேடத் தொடங்கினார்கள். காணாமல் போய்விட்டதாக எல்லோரும் நினைத்தார்கள்.

எங்கெங்கோ சென்று இப்போது தன் வாழ்க்கை இங்கு வந்து நிற்கின்றதே என்று மீண்டும் அலையத் தொடங்கினார்.

சட்டென்று ஒருநாள் இப்போது வீட்டிற்கு போ என்று அவருக்குள் உத்தரவு வர, தன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். அதற்குள் பல மாதங்கள் உருண்டு விட்டிருந்தன.

ஊரின் எல்லையைத் தொட்டார். குடும்பத்தார்கள் கோபம் பொங்க தன்னை நோக்கி நடந்து வருவதை கண்டும் காணாமல் தன் அறைக்குள் சென்று அமர்ந்தார். வீட்டார் அனைவரும் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள்.

அண்ணனும் அண்ணியும் அருகே வந்து அமர்ந்து அழத் தொடங்கினார்கள்.

அந்த அழுகையை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் ராம்சுரத்குன்வரும் கண்களில் நீர் கசிய அவர்கள் இருவரும் சொன்ன விஷயத்தைக் கேட்டு கல்போல அமர்ந்திருந்தார்.

– தொடரும்

கிருஷ்ணா/3. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “4. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா”

Comments are closed.