5. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

சீதா கல்யாண வைபோகமே…. ராம கல்யாண வைபோகமே…
ராம்சுரத்குன்வருக்குள் ஏற்பட்ட அகமாறுதலை அவருடைய அண்ணனும் அண்ணியும் அறிய வாய்ப்பில்லை. அவருக்குள் எரிந்துகொண்டிருக்கும் தீயும், கேள்விகளும் வீட்டிற்குள் யாரும் அறியாதவை. இதை எப்படி புரியவைப்பது என்று ராம்சுரத்குன்வருக்கும் வழி தெரியவில்லை.

‘‘அண்ணா என்னை மன்னித்து விடுங்கள். எனக்குத் திருமணம் என்பது இந்தப் பெண்ணோடு இல்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நம் வீட்டில் யாருமே இல்லை. நம் வீட்டில் உள்ளவர்களோடே பேச முடியாதபோது பெண் வீட்டாரிடம் எப்படிப் பேசுவேன் சொல்லுங்கள். எனக்கு யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டுமென்கிற விருப்பமில்லை. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மறுக்கவும் இயலாது என்கிற நிலையில்தான் வீட்டைவிட்டு வெளியேறினேன். என்னால் நிச்சயம் நீங்கள் அனைவருமே அவமானப்பட்டிருப்பீர்கள். நான் இங்கு இருந்திருந்தால் இன்னும் என்னால் அவமானம் அதிகமாயிருக்கும். என்னுள் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அது மெல்ல சமனப்படும்போதுதான் நான் திருமணத்தை குறித்து யோசிக்க முடியும். அந்த மாற்றத்தை அறிந்து கொள்ளவும் அதைப் புரிய வைக்கவும் என்னால் அல்ல… வேறு யாராலும் இயலாது’’ என்று கண்களில் நீர் கசிய ராம்சுரத்குன்வர் பேசினார்.


‘‘சுரத்… இங்கு பாரப்பா…’’ சட்டென்று அண்ணா அவரின் கைகளை பிடித்துக்கொண்டார்.
‘‘நாங்கள் அந்தப் பெண்ணை உன் தம்பியான ராம்தகின் குன்வருக்கு மணமுடித்து கொடுத்து விட்டோம். எல்லோரும் உன்னை திட்டித் தீர்த்தார்கள். ஆனால், உன்னை எனக்கு நன்றாக தெரியுமப்பா நீ எங்களோடு பிறந்திருக்கிறாய் என்பதே எங்களுக்கு பெருமையப்பா. உன்னை பார்க்கும்போது நம் குலத்தில் ஒரு பொக்கிஷம் வந்து பிறந்திருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றும். நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நீ இந்த உலகத்தவன் கிடையாது. உன்னை நான் எப்போதும் கோபித்துக் கொள்ள முடியாது. நீ சரியாகத்தான் முடிவெடுப்பாய். நீ யாரையும் அழ விடமாட்டாய். எல்லோரின் அழுகையையும் துடைக்கவே வந்திருக்கிறாய் என்பதை நான் மின்னல்போல உணர்ந்திருக்கின்றேன். இதை இங்கு யாரிடமும் நான் சொல்ல முடியாது. நீ இப்போது அடுத்தது என்ன செய்யப் போகிறாய் என்று மட்டும் சொல்’’ என்று அண்ணன் பேசும்போது பொறுமையாக ராம்சுரத்குன்வர் கேட்டு விட்டு கண்களை மூடிக்கொண்டார்.


‘‘அண்ணா… நான் அலகாபாத் கிறிஸ்தவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பை படிக்க விரும்புகின்றேன். இன்னும் நான்கு வருடங்களுக்கு நான் படிப்பு படிப்பு என்றிருக்கவே விரும்புகின்றேன்’’ என்றார்.

அண்ணாவும் சரி உன் இஷ்டம் என்று எழுந்தார்.
அதற்குள் குடும்பத்தார் அனைவரும் ராம்சுரத்குன்வரை சூழ்ந்தார்கள். தன் இளைய சகோதரரை நோக்கிச் சென்று அணைத்துக்கொண்டார். தனக்கு நிச்சயித்த பெண்ணை நோக்கி கைகூப்பினார். ஆனால், தால்கிரியா தேவி என்கிற அந்தப் பெண் கோபமாகவே இருந்தாள். அவள் அப்படித்தான் இருப்பாள். எந்தப் பெண்ணும் தன் திருமணம் நின்றுவிடக்கூடாது என்றுதானே பயப்படுவாள். அதனால் பரவாயில்லை என்று ராம்சுரத்குன்வர் அமைதி காத்தார்.

மீண்டும் அந்தக் குடும்பம் நிம்மதியானது.
ராம்சுரத்குன்வர் மீண்டும் கங்கையை நோக்கிச் சென்றார். அருகேயுள்ள கபாடியா பாபாவிடம் சென்று அமைதியாக நமஸ்கரித்தார். கபாடியா பாபா உற்றுப் பார்த்தார்.

‘‘நீ இந்த திருமணத்திலிருந்து தப்பித்து விட்டாயா’’ என்று நேருக்கு நேராக கேட்டார்.
‘‘இல்லை. பாபா… எனக்கு திருமணத்தின் மீது விருப்பம் இல்லை. வெறுப்பும் இல்லை. ஆனால், இந்தப் பெண் எனக்கானவள் இல்லை என்று மட்டும் தெரிந்தது. நான் பரமஹம்சரின் சரிதத்தில் படித்திருக்கின்றேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதா தேவியை திருமணம் செய்துகொள்வற்கு முன்பு பரமஹம்சர் எனக்கான பெண் ஜெயராம்பாடியில் ராமசந்திரர் வீட்டில் வைக்கோல் போர் சுற்றி வளர்க்கப்பட்டு வருகின்றாள் என்று சொன்னாராம் என்று படித்திருக்கின்றேன். அதுபோல எனக்கும் ஏதோ ஒன்று தோன்றுகின்றது. அது இப்போது இல்லை என்றும் தோன்றுகிறது. உங்களைத் தவிர வேறு எவரிடமும் இதைச் சொல்லத் தோன்றவில்லை.’’

‘‘புரிகிறது சுரத் நீ திருமணத்திற்கு எதிரானவனா,,,’’

‘‘இல்லை பாபா… இங்கு இறைவனை அடைய எதுவுமே எதிரானவை அல்ல. அறிந்தவற்றை அறிந்து கொண்டுவிட்டால் இல்லறமோ அல்லது துறவறமோ இரண்டும் ஒன்றுதான். பலாப் பழத்தை அறுக்கும்போது கையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கையில் பலாப் பழத்தின் பசை ஒட்டிக் கொள்ளும் என்பார், பரமஹம்சர். அதுபோல இல்லறத்தில் ஈடுபடும் முன்பு இறை பக்தியை கைக்கொண்டுவிட்டால் நல்லது என்று தோன்றுகின்றது’’ என்று சுரத்குன்வர் பேசப்பேச பாபா மெல்லியதாய் உரத்துச் சிரிக்கத் தொடங்கினார்.

‘‘சுரத்… அது ஒரு புயல்போல மையம் கொண்டால் என்ன செய்வாய். உனக்கு திருமணம் நடந்துவிடுகின்றது உள்ளே வேறொரு தீ பற்றிக்கொண்டு எரியும்போது நீ என்ன செய்வாய்.’’ தோளில் கைபோட்டு நேருக்கு நேராக கண்ணைப் பார்த்துக் கேட்டார்.

‘‘பாபா தெரியவில்லை. ஆனால், இங்கு கொஞ்ச நாட்கள் இருக்கச் சொல்லி ஏதோ ஒன்று என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது. பூமியின் இழுப்பு போன்று என்னை இழுக்க வைக்கும் முயற்சிகளும் என்னைச் சுற்றி நடந்தபடியும் உள்ளன. என்னால் எதையும் தடுக்கவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. என்ன நடக்கின்றதோ அப்போதைக்கு இதைச் செய்… அதைச் செய்… என்று மட்டும் உள்ளிருந்து ஒரு உத்தரவு வருவதுபோல் உள்ளது அப்போதைக்கு அதைச் செய்கின்றேன்.’’

‘‘அப்படியே இரு. அங்கேயே இரு. எந்த முயற்சியும் செய்யாமல் இரு. அதைச் செய்ய விடு. நீயாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று நினைக்கும்போது மெல்ல அந்த எண்ணத்தை உற்றுப் பார். அதற்குப் பின்னால் மனதின் ஆசை மறைமுகமாக இருக்கும். ஆசையே இல்லாத மனதின் விழைவை மெல்ல உணர்ந்து கொள். அது நீ நினைப்பதல்ல. அதனுடைய ஆணை. உனக்குள் அது செயல்படத் தொடங்கி விட்டது. அடுத்து என்ன செய்யப் போகிறாய்.’’ பாபா அன்போடு மீண்டும் கேட்டார்.

‘‘பாபா… அலகாபாத் செல்லப் போகின்றேன். இண்டர்மீடியட் படித்து முடித்து வரப்போகின்றேன்’’ என்று சொன்னார்.

‘‘சரி அதையே செய். எப்போது வந்தாலும் இங்கு வா… நான் சொன்ன புத்தகங்களை படித்தபடி இரு. முக்கியமாக பகவான் ரமண மகரிஷியின் ‘நான் யார்’ என்கிற புத்தகம்’’ என்று சொல்லி முடிக்கும் முன்பு ராம்சுரத்குன்வர் சிலை போல் ஆனார். ஏனோ அவருக்குள் இந்தப் பெயரை அவ்வப்போது கபாடியா பாபா செலுத்தியபடி இருந்தார். காரணமின்றி காரியமில்லை என்பதுபோல் அவர் எங்கு சுற்றினாலும் ரமண சிந்தனையை அவருக்குள் ஏற்படுத்திய வண்ணம் இருந்தார். ராம்சுரத்குன்வரும் சில கணங்கள் தேக சம்மந்தமேயில்லாமல் சர்வ சாதாரணமாக கண்களை மூடி மேனி சிலிர்க்க நின்ற வண்ணம் இருந்தார். மெல்ல கண்களைக் திறந்தார்.

‘‘பாபா… அந்த மகரிஷியை நான் பார்ப்பேனா… நீங்கள் அந்த பெயரைச் சொல்லும்போதெல்லாம் என்னை நான் இழந்து விடுகின்றேன்.’’

‘‘சுரத் நீ அவரை தரிசிப்பது மட்டுமல்ல. அங்கேயே நீ இருப்பாய் என்று நான் சொன்னால் நீ என்ன செய்வாய்’’ என்று முதுகில் தட்டி உரத்துச் சிரித்தார். சட்டென்று வார்த்தையை மாற்றினார். ‘‘நீ புறப்படப்பா… உங்கள் வீட்டில் ஏற்கனவே பயந்து போய் இருக்கிறார்கள். இன்னும் அரைமணி நேரம் கடந்தால் ஊர் முழுக்க தேடத் தொடங்கி விடுவார்கள். அதனால் புறப்படு’’ என்று சொல்லி அனுப்பினார்.

ராம்சுரத்குன்வர் அலகாபாத்திலுள்ள எவிங் கிறிஸ்தவக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பை தொடர்ந்தார். அவ்வப்போது ஊருக்கு வரும்போதெல்லாம் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்தன.

குடும்பத்தார் அனைவரும் ஒன்றுசேர்ந்து, ‘‘இதோ பாரப்பா… நாங்கள் எங்கள் கடமையை முடிக்க வேண்டும். உன்னை மட்டும் தனியே எங்கும் அனுப்ப இயலாது. உன் திருமணத்தை முடித்துவிட்டால் நாங்கள் உன்னைப்பற்றிய கவலையை மறந்திருப்போம். இல்லையெனில், ஊர் எங்களை எப்படிப் பேசும் என்பது தெரியும். இது கிராமம். உன்னை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்று பேசும். இவர்கள் மட்டும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், உனக்கு திருமணம் செய்துவைக்கத் தவறினோம் என்பதுபோலவே பேசுவார்கள். உனக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தால் நீ எங்கிருந்தாலும் நாங்கள் கவலைப்படாமல் இருப்போம்’’ என்று தீர்மானமாகப் பேசினார்கள்.

‘‘சரி.. திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால், சிறிய விண்ணப்பம். நீங்கள் பார்க்கும் பெண்ணிடம் நான் பேச வேண்டும். அப்போதுதான் நான் ஒப்புக் கொள்வேன். நான் தனியே பேசிவிட்ட பிறகு நான் என்ன நினைக்கின்றேனோ அதைச் சொல்வேன்’’ என்றார்.

அந்தக் காலத்தில் பெண்ணோடு தனியே சென்று பேசுதல் என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாருக்கும் பிடித்துப் போனால் நேரடியாக திருமணம்தான். அல்லது வீட்டிலிருக்கும் மூத்த பெண்களுக்கு பெண்ணைப் பிடிக்க வேண்டும். இந்த வழக்கத்தை ராம்சுரத்குன்வர் உடைத்தார். நீங்கள் பார்க்கும் பெண்ணோடு நான் பேச வேண்டும். எனக்கு பிடிப்பது இருக்கட்டும் என்னை அந்தப் பெண்ணுக்கு பிடிக்க வேண்டுமல்லவா என்றும் நினைத்தார்.

பீகாரிலுள்ள பாலன் ஆற்றங்கரையில் உள்ள தஹியா என்ற ஊரிலுள்ள ஹூக்கும் நாராயண் ராய் என்பவரிடம் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக கரஹன்பூரைச் சேர்ந்த மகேஷ்திவாரி என்பவருடன் நர்தராவிற்கு வந்தார். சுரத் மற்றும் அவரது வீட்டிலுள்ளவரைச் சந்தித்தார். வந்தவர் வெகுநேரம் சுரத்தோடு பேசினார். என்னவொரு கூர்த்த அறிவு. எவ்வளவு மென்மையான அணுகுமுறை. கண்களில் ஆழம். நிச்சயம் இந்த பையனுக்கு ராம்ரஞ்சனி தேவியை மணமுடிக்க வேண்டும் என்று ஊருக்குச் சென்றார்.

டாக்டர் லக்ஷ்மிகாந்த் ராய் என்பவரின் வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடத்தலாம் என்று முடிவு செய்தனர். அன்றே ராம்சுரத்குன்வர் ராம்ரஞ்சனி தேவியை சந்தித்துப் பேசலாம் என்று திட்டமிடப்பட்டது.

ராம்சுரத்குன்வர் ராம்ரஞ்சனி தேவியை பொதுவான ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தார். நீங்கள் தனியே போய் பேசலாம் என்று எல்லோரும் சொல்லவும் ராம்ரஞ்சனி தேவி வெட்கத்தோடு ராம்சுரத்குன்வரை ஏறிட்டுப் பார்த்தார்.

ராமரை சீதாப் பிராட்டி பார்ப்பதுபோல் பார்த்தாள். ராம்ரஞ்சனி தேவிக்குள் ஏதோ உயர்ந்த வஸ்துவை தன்னிடத்தில் இறைவன் அளிப்பது போல் உணர்ந்தாள். அவள் தன்னை சிறு பெண்ணாக உணராமல் பெரும் பெண்ணாக உணர்ந்தாள். ராம்சுரத்குன்வரை பார்க்கும்போது ஆண் பெண் ஈர்ப்பு மட்டுமல்லாது ஏதோவொரு இனம் புரியாத பிரியம் அவர்களை சூழ்ந்தது.

‘‘நம் இருவரின் பேருக்கும் உள்ள ஒற்றுமையைக் கவனித்தாயா’’ என்று ராம்சுரத்குன்வர் கேட்டார்.

‘‘கவனித்தேன். இருவரின் பேருமே ராம்… ராம்… என்று தொடங்குகின்றது.’’ என்று பளிச்சென்று பதில் சொன்னாள் ராம்ரஞ்சனி தேவி.

‘‘சபாஷ்… நம் வீட்டிலுள்ளோர் கூட இதை கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், நீ சட்டென்று கவனித்து விட்டாயே’’ என்றார்.

‘‘எனக்கு ராமரை மிகவும் பிடிக்கும். நான் எப்போதும் ராம… ராம… என்று சொல்லியபடி இருப்பேன். அவரே உங்களை இன்று இங்குகொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்’’ என்றாள்.

வியப்பில் உறைந்து போனார் ராம்சுரத்குன்வர். ‘‘நீ என்ன படித்திருக்கிறாய்’’ என்று கேட்டார்.

‘‘நான் ஏழாம் வகுப்பு வரை’’ என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள். அழகும் அறிவும் பக்தியும் சாதுர்யமான பேச்சையும் கண்டு ராம்சுரத்குன்வர் ஆச்சரியப்பட்டார்.
வேண்டாமென்று சொல்ல ஒரு காரணமும் இல்லை. எனவே, எனக்கு பூரண சம்மதம் என்று வீட்டாரிடம் சென்று சொன்னார்.

இதுவரை அல்லாது அன்று அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் இந்த இரண்டு ராமும்.. ராமும்… ஒன்றாக வந்து நில்லுங்கள் பார்ப்போம் என்று கேலியும் கிண்டலுமாக சொன்னார்கள்.
அங்கு அந்த ராம்… ராம்… என்று தொடங்கும் அவ்விருவரும் ஒன்றாக சேர்ந்து நின்றனர். இருவரும் இணைந்து நிற்கும்போது அவர்கள் இருவராக இல்லாமல் அவர்களுக்குள் ராம் எனும் ஒற்றை நாமம் தனியே ரத்னமாக ஜொலித்தது.

One Comment on “5. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா”

Comments are closed.