
பௌர்ணமி யோகம்
ஆன்மிக வாழ்க்கைக்கு திருமணம் என்பது எப்போதும் எவ்விதத்திலும் தடையல்ல என்பதை ராம்சுரத்குன்வரின் வாழ்வில் நிரூபணமாகிக் கொண்டிருந்தது.
பிராரப்த கர்மா என்பதற்கு கடந்த கால ஊழ்வினை என்றொரு பொருளுண்டு. நம்மை நாம் மனமென்று நினைக்கும் மட்டும், இந்த தேகமே நான் என்று நினைக்கும் மட்டும் பிராரப்த கர்மாவை நாம்தான் அனுபவிக்கின்றோம் என்கிற நினைப்பு இருக்கும். அந்தக் கர்மாவினால் ஏற்படும் இன்ப துன்பங்களும் நம்மை பாதித்தபடியே இருக்கும். ஆனால், மகான்களுக்கு இந்த கர்மா என்பது இந்த உடலால் ஏற்பட்டிருக்கின்றது என்று விவேகமாக ஒதுக்கி வைத்துக் கொள்ளத் தெரியும். இன்னொன்று இந்த உலகிலுள்ள எந்த நிகழ்வும் அந்த அளவிலா பெருஞ்சக்தியினால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற ஞானத்தெளிவு இருக்கும். அப்போது திருமணம் வீடு குழந்தைகள் என்று எல்லாமுமே வாழ்வின் ஒரு பகுதியே என்பதைப் புரிந்து தெளிந்திருப்பார்கள்.
ரமண பகவான் ஒரு பாட்டில் தீரமில் அகத்தில் என்கிறார். ஞானத் தேடல் உள்ளவன் ஒருபோதும் கோழையாக இருப்பதில்லை. தீரம் என்றால் எல்லை என்றும், துணிவு என்று இன்னொரு பொருளும் உண்டு. எனவே, தீரமில் அகத்தில் என்றால் தன்னுடைய அகம் முழுவதும் துணிவோடு இருப்பவனே ஞான யாத்திரையில் பரிமளிக்க முடியும் என்கிறார். அந்தத் துணிவில் சிறிது கூட அகங்காரக் கலப்பு இருக்காது. மனதைச் சார்ந்துள்ள துணிவு இல்லை. குருவின் அபயம் என்கிற கை அளிக்கும் துணிவு அது. அங்கு அதனால் பயமும் இருக்காது. எங்கு அகங்காரமற்ற துணிவு இருக்கின்றதோ அங்கு ஞானம் கொப்பளித்துக் கிளம்பும். ஏனெனில், அவன் தன்னுடைய நான் எனும் அகந்தையை கூறுபோட்டு அரிந்துவிடும் தைரியத்தைப் பெற்றுவிடுகின்றான். அவனுக்கு இனி இவ்வுலகத்திலிருந்து பெற வேண்டியது என்று ஒன்றுமில்லை. எனவே, அவனை எதுவும் பந்தப்படுத்துவதும் இல்லை.
பரமாத்ம வஸ்து அதன் இயல்பில் என்னகொண்டு வருகின்றதோ அதை ஏற்றுக்கொண்டு கர்ம யோகியாய் திகழ்கின்றான். வேண்டாம் விடு என்றால் விட்டுவிடுகின்றான். விடுவதும் பெறுவதும் அவன் கையில் இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறான். ஏனெனில், நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தச் சக்திதான் இதோ என் மனைவி… குழந்தைகள்… தாய்… தந்தை… அண்ணன்… அக்காள்… தங்கை… நண்பன்… என்று எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறது. அது தெள்ளிய ஞானம் அளித்த தெளிவு.
இதுபோன்றதொரு உயர்ந்ததொரு பக்குவத்தில்தான் ராம்சுரத்குன்வர் நின்றார். எங்கு அந்த பெருஞ்சக்தி தன்னை நகர்த்துகின்றதோ அதற்கேற்றாற்போல் இருந்தார். இதோ இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள் என்று அந்தப் பரம்பொருள் நிச்சயித்தது. அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
அந்த புதுமணத் தம்பதி சிலகாலம் தஹியா எனும் ஊரில் தங்கியிருந்து விட்டு, பின்னர் நர்தாராவிற்கு வந்தார்கள். சில நாட்கள் கழிந்தன.
‘‘ராம்ரஞ்சனி தேவி… ராம்ரஞ்சனி தேவி… ’’ என்று கேட்டுக் கொண்டே ராம்சுரத்குன்வர் வீட்டிற்குள் நுழைந்தார்.
‘‘இதோ… இங்கிருக்கிறேன்… இங்கிருக்கிறேன்…’’ என்று சொல்லிக்கொண்டே வெளியே ராம்ரஞ்சனி தேவியும் வெளியே வந்தார்கள்.
‘‘வா, வா என்னோடு… சீக்கிரம் புறப்படு’’
‘‘எங்கு… இந்த மாலை நேரத்திலா…’’
‘‘பரவாயில்லை வா… ஒன்றும் பயப்படாதே… நான் அழைத்துப் போகும் இடத்திற்கு வா… ’’ என்று வீட்டிற்குள் அனைவரிடமும் சொல்லிவிட்டு அழைத்துச் சென்றார். வீட்டிலுள்ளோர் ஆஹா… இவன் ஆரம்பித்து விட்டானா… என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அதை எந்தக் காதிலும் வாங்காமல் இருவரும் வெளியே நடந்தார்கள். அந்த அம்மாள் தலையில் கோஷாவை போட்டுக் கொண்டு மெல்லிய மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் தெருவில் நடக்கத் தொடங்கினார்கள்.
‘‘நாம் எங்கு செல்கிறோம்… ’’ என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.
‘‘ஒன்றும் பேசாதே… ஒன்றும் கேட்காதே…’’ என்று அவரும் சொல்லியபடி வந்தார். அவரின் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. நடையில் விரைவு தெரிந்தது. மெல்ல ஊரின் எல்லையைத் தாண்டினார்கள். சட்டென்று திரும்பி ‘‘இதோ என் முன்னால் வா’’ என்றார்.
‘‘ஏன்ஞ் ஏன்’’ என்று ராம்ரஞ்சனி பதற்றத்தோடு கேட்டார்கள். மெல்ல அவர் மனைவியின் கண்ணைப் பொத்தியபடி இப்போது முன்னே நடக்கச் சொன்னார். அவர்கள் இருவரும் மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக்கொண்டே நடந்தனர். அவ்வப்போது ஜாக்கிரதை… ஜாக்கிரதை… என்று சொல்லிய படியே வந்தவர், ‘‘இப்போது புல்தரை வந்துவிட்டது. ஒன்றும் பிரச்னையில்லை’’ என்று ஓரிடத்தில் நிறுத்தினார்.
‘‘ராம் ரஞ்சனி… ராம் ரஞ்சனி தேவி…. நீ இந்த பிரபஞ்சத்தை பார்த்திருக்கிறாயா’’’ என்று மென்மையாகக் கேட்டார். ‘‘அதன் பேரழகைப் பருகியிருக்கிறாயா… அதன் விந்தையையும் ஆட்டத்தையும் பார்த்திருக்கிறாயா… ’’ என்று ராம்ரஞ்சனி என்கிற தன் மனைவியின் கண்களிலிருந்து ஒவ்வொரு விரலாக புல்லாங்குழலிலிருந்து விரலை விடுவிப்பது போல எடுத்தார்.
மெல்ல கழுத்தை மேலே நோக்கி அண்ணாந்து வைத்திருக்கச் சொன்னார். முதலில் கும்மிருட்டாக இருந்தது. சட்டென்று இரண்டு கைகளையும் சட்டென்று விலக்க, அந்த அம்மாள் ஆஹா… ஐயோ…. என்று ஆனந்தத்தில் அலறினாள். மேலே பௌர்ணமி நிலவு தன் கண்ணெதிரே கண்ணின் இமைக்கு அருகே வந்து வட்டமாக ஜொலித்தது. அதன் அருகே நோக்க ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் முத்துக்களை சிதறவிட்டாற் போன்றிருக்க, அந்தப் பௌர்ணமியின் கிரணங்கள் வெள்ளியை உருக்கி வைத்ததுபோன்று கங்கையின் மீது யாரோ உருக்கி உருக்கி ஊற்றியது போலவே பரவிப் பாய்ந்து அது நீரா அல்லது வெள்ளியை அள்ளிக்கொட்டிய ஆறா என்று திகைத்து நின்றாள். கங்கை சீறிப் பாய்ந்தபடி இருந்தது. வெள்ளிக் கங்கையை பௌர்ணமி நிலவின் எதிரொலிப்பில் கண்ட அவர் மனைவி தன் வயமிழந்தாள். இதென்ன இப்படியொரு அழகு என்று கால்கள் துவள சரிந்தாள். சட்டென்று இயற்கையின் அந்தப் பிரமாண்டத்தை கண்ட அந்த மனம் சோர்ந்துபோய் அடங்கியது. பார்வை நிலைகுத்தியது. ராம்சுரத்குன்வர் பிரபஞ்சத்தின் சிருஷ்டியை கண நேரத்தில் அனுபவிக்கும் லயித்த கண்களையே பார்த்தபடி இருந்தார்.
என்னுள் நான் கண்டவற்றை இன்று என் மனைவியும் காண்கிறாளே… ராம்… ராம்…. என்பது ஒரே சொல்தானே… நாங்கள் இருவரும் ஒன்றையே காண்கிறோமோ. இதுதான் அர்த்தநாரி என்கிற ஐக்கியமாஞ் இவள் வேறு நான் வேறு என்கிற பேதம் அறுந்துபோனதேஞ் ஹே… கங்கா மாதா… எனக்கு எப்பேர்ப்பட்ட மனைவியை அளித்திருக்கிறாய். என்னவொரு வாழ்க்கைத் துணைவி இவள். எப்படி பார்க்க வேண்டுமென்று தெரிந்து வைத்திருக்கிறாளா அல்லது நீ கணநேரத்தில் காட்டிக்கொடுத்திருக்கிறாயாஞ் அவர் கண்களில் நீர் பெருகியது. கன்னத்தில் வழிந்தது.
‘‘ஆங்கிலத்தில் honey moon, தேன் நிலவு என்பார்களே…. அது இதுதானா…. பூர்ண சந்திரனை நாங்கள் இப்படி தரிசிப்பதுதான் தேன் நிலவா…. இந்த நிலவின் கிரணங்கள் மென்மையாக கண்ணுக்கு முன்னால் எப்படி படர்கின்றது பார் ராம் ரஞ்சனிஞ் ’’ என்று மென்மையாகக் கூற அவர்கள் மெல்ல அரைக் கண்கள் திறக்க… ‘‘இதோ உன் சுட்டுவிரலை மேலே காட்டு’’ என்றார்.
அந்த மெல்லிய விரலை வட்டத் திகிரியாக ஜொலித்த சந்திரனின் அருகே நீட்ட சுட்டுவிரலின் நுனியை இன்னும் சந்திரனுக்கு அருகே நகர்த்தி… ‘‘ரஞ்சனி… இதோ இப்போது அந்த சந்திரனை உன் சுட்டு விரலால் ஸ்பரிசி பார்ப்போம்’’ என்றார். அந்த பிஞ்சுக் கைகளை அவரே மெல்ல மேலே தூக்கி மெல்ல சந்திரனை சுட்டு விரலால் நீவ சந்திரனின் கிரணங்கள் அவளுக்குள் அமுதமாய் இறங்கியது. ஏதோ மின்சாரம் தாக்கியதுபோல் இருவரும் ஒரு கணம் நடுங்கினர்.
மெல்ல அவ்விருவரும் கைகளை கோர்த்துக் கொண்டனர். தாங்கள் இருப்பது பூலோகமா அல்லது சொர்க்க லோகமா என்று தேக நினைவில்லாமல் அரைக் கண் மூடி மெல்ல நடந்து பாறையின் உச்சிக்குச் சென்று அமர்ந்தனர். உலகம் முடிந்து வானமும் பூமியும் ஒன்றையொன்று நெருங்கியிருந்தது. வானிலிருந்து கங்கை பாய்கின்றதா… அல்லது பூமியிலிருக்கும் கங்கை மேல் நோக்கிப் பாய்கிறாளா எனும் படியாக இருந்தது.
மெல்ல ராம்ரஞ்சனி தன்னிலைக்கு வந்தாள். ‘‘என்னவொரு அனுபவம்… இதைத்தான் எல்லோரும் தேன் நிலவு என்கிறார்களா…’’. என்றாள்.
அவளின் குரல் கம்மத் தொடங்கியது. மெல்ல தலை தடவி ராம்சுரத்குன்வர் ஆசுவாசப்படுத்தினார்.
‘‘எல்லோரும் அல்ல ராம்தேவி… வெகு சிலர் மட்டுமே மனதைத் தாண்டியுள்ள தேனை ருசிப்பார்கள். நீ இப்போது பிரபஞ்சத்தின் ஆதார சக்தியின் திவளையின் அமிர்தத்தை பருகினாய். கண்ணிலிருந்து மனதில் வழிந்து இருதயத்திற்குள் சென்று மீண்டிருக்கிறாய். சந்திரனே மனமாகியிருக்கிறான். அங்கொரு தனி மனம்ஞ் இங்கொரு தனி மனம்… அங்கொரு சந்திரன்… இங்கொரு சந்திரன்… ஆணும் பெண்ணும் இணையும்போது இரு மனம் ஒன்றாகின்றது. இரண்டு சந்திரன் போல் இருந்தது… ஒன்றாகி இதோ இதுபோன்று ஜொலிக்கின்றது. நீயும் நானும் வெவ்வேறாக இருந்தோமல்லவா சற்று முன்னர் ஒன்றானோம். அந்த சந்திரனுக்குள் தேன் பரவியது. அது இங்கு உள்ள தேனீக்கள் சேகரித்த தேன் அல்ல. ஜீவ அமிர்தம்… ஜீவனுக்குள் பொங்கியபடி இருக்கும் அமிர்தம்’’’ ராம்சுரத்குன்வர் ராம்ரஞ்சனி தேவியின் கையைப் பிடித்துத் தூக்கினார்.
அந்தப் பாறையின் மீது இருவரும் நின்றபடிஞ் ‘‘இதோ தேவி நான் சொல்வதை சொல் பார்ப்போம்….’’
‘‘எதைச் சொல்வது’’
‘‘நான் அந்த கம்பீரமான விவேகானந்தரின் வார்த்தையைச் சொல்கிறேன்… மூன்று முறை சொல் பார்ப்போம்’’ என்றார்.
இவர் என் புருஷராஞ் அல்லது அந்த பரம புருஷனே என் புருஷனாக வந்திருக்கிறதா என்றபடி வியப்பின் நுனியில் அவர் கண்களையே பார்த்தாள். அவரோ கண்களை மூடினார்.
‘‘எங்கே சொல் பார்க்கலாம்… அம்ருதஸ்ய புத்ரஹா…’’
‘‘அம்ருதஸ்ய புத்ரஹா… அம்ருதஸ்ய புத்ரஹா… அம்ருதஸ்ய புத்ரஹா…’’ ராம்ரஞ்சனி தேவி என்கிற ராம்சுரத்குன்வரின் மனைவியான அந்தப் பெண் பாரத தேசத்தின் உயர்ந்த ஆத்ம தத்துவமான உயர்ந்த நித்திய அம்ருதத்துவத்தின் புத்திரனே… நீயே அது… நீ சாதாரணன் அல்ல… அந்த அம்ருதமே நீ…’’ என்று சொல்லக் கூடிய மகாவாக்கியத்தை கங்கைக்கரையின் பாறையின் மீது நின்று பௌர்ணமி சாட்சியாக உரத்துக் கூறினாள்.
மெல்ல அவர்கள் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.
‘‘ராம்ரஞ்சனி நமக்கு இப்போது முடிந்திருப்பது தேன் நிலவுஞ் புரிகின்றதா…’’
‘‘புரிந்தது சுவாமி…’’ என்று நகைத்தாள். அந்த சிரிப்பில் கிண்டலும் வெட்கமும் தெரிந்தது.
‘‘ஹோய்… என்ன கிண்டலா…’’ என்று அந்த நிலவொளியில் ஓடித் துரத்த மூச்சிரைக்க இருவரும் ஓரிடத்தில் நின்றார்கள்.
‘‘வா… வா… ஒன்பது மணிக்குள் என் குருநாதரைத் தரிசிப்போம்’’ என்று சற்றே தொலைவில் இருக்கும் கபாடியா பாபாவின் குடிலுக்குள் நுழைந்தார்கள்.
ராம்ரஞ்சனி தேவி மீண்டும் தலையில் கோஷாவாக புடவையை போட்டுக்கொண்டு மென்மையாக நடந்து ராம்சுரத்குன்வரோடு குடிலுக்குள் நுழைந்தார்கள்.
‘‘ஆஹா… ஆஹா… வா… வா… சுரத்… வா… ராம்தேவி….’’ என்று மகளை அழைப்பதுபோல் அழைத்தார்.
அவர்கள் இருவரும் சட்டென்று சேர்ந்து வணங்கினார்கள். ‘‘ராம்… ராம்… ராம்… ராம்…’’ என்று உரக்கக் கூறி ஆசிர்வதித்தார்.
அவர்கள் இருவரும் எழுந்து நின்றார்கள். ‘‘‘மிக்க சந்தோஷம்… மிக்க சந்தோஷம்… சீதையைப்போல் ஜொலிக்கின்றாளே சுரத். அந்த ராமன் உனக்கேற்றவளை இணைத்திருக்கிறானே… நல்ல சந்தான விருத்தியையும் அளிப்பான். சுரத்… அதை உள்ளுக்குள் பார்க்கின்றேன். உங்களின் வயிற்றில் பிறக்க வேண்டிய ஜீவன்களின் சூட்சுமங்களை நான் இங்கு அரூபமாக பார்க்கின்றேன். நல்ல ஜீவன்கள். இது பிராரப்த விஷயம் என்பதை நீ அறிவாய் அல்லவா சுரத். இல்லற வாழ்வில் ஈடுபட்டு நற்செல்வங்களைப் பெற்று அவர்களை நல்லபடியாக வளர்த்து வா. ஒரு பெண் எப்போது பூரணமாகின்றாள் தெரியுமா… அவள் பிள்ளைப்பேறு வாய்க்கும்போதுதான் என்று மீண்டும் ஒருமுறை அவர்கள் இருவரின் தலைமீதும் கரங்களால் தொட்டு ஆசிர்வதித்தார். இதோ நீங்கள் இருவர் மட்டும் இந்த மாம்பழத்தை சாப்பிடுங்கள்’’ என்று அளித்தார்.
அவர்கள் இருவரும் அதைப் பெற்றுக் கொண்டனர். மெல்ல நடந்தனர்.
அவர்களுக்கு முன்னால் குருவருள் எனும் பிரகாசம் வழியை செம்மையாக்கிக் கொண்டே சென்றது.
