வளவ.துரையன்/அது கூட

19-9-25 அழகியசிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5.

மாடொன்று மகனைப் பள்ளியில் சேர்க்க வந்ததாம்.
தலைமையாசிரியர் கரடியார் பள்ளியில்
தாராளமாய் உட்கார்ந்திருந்தார்.
மகனா, மகளா எனக்கேட்டவர்
ஆம்பளையா இருந்தா ஆறேழு கேரட்டு
பொண்ணா இருந்தா எதுவும் வேண்டாம்
சலுகை உண்டு என உரைத்தார்.
மகன்தானுங்க எனச் சொல்லி
கொண்டு வந்ததைக் கொட்டியது மாடு.
“எல்லாம் சொல்லிக்குடுங்க
குரலெடுத்துக் கத்தணும்
கலப்பை நல்லா இழுக்கணும்
பாரத்தைச் சுமக்கணும் வலியெல்லாம்
பொறுக்கணும்
அங்க இங்க ஓடாம கட்டிப் போட்ட
எடத்துலயே கருத்தா இருக்கணும்
புடிக்குதோ புடிக்கலையோ போடறதைத்
துன்னனும் எல்லாம் சொல்லிக் குடுங்க”
மகனை விட்டு விட்டுச் சென்ற மாடு
மாலையில் மகனின் “ம்மா” என்னும் குரல்
கேட்க தொழுவத்தில் ஆவலோடு
காத்திருக்க கன்றும் “மம்மீ”
என்னும் கனத்த குரலோடு ஓடி வந்தது.

One Comment on “வளவ.துரையன்/அது கூட”

Comments are closed.