
கரூர் சம்பவத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அனுப்பியிருப்பது சில செய்திகளை சொல்கிறது.
கரூர் துயர சம்பவத்துக்கு திமுக காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் இருக்கிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் இந்த செய்தியை சொன்னபோது அவரது முதல் ரியாக்ஷன் திமுகவை பற்றி தான் இருந்தது. ஏரியா மளிகை கடை அண்ணாச்சி திமுகவை வறுத்தெடுத்து விட்டார். மக்கள் செண்டிமெண்ட் விஜய் பக்கம் தான் இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. விஜய் பக்கம் தவறு இருக்கிறது என்றாலும் அதை மன்னிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
திமுகவின் வேகமான நடவடிக்கைகளே அவர்களுக்கு வில்லனாகி போனது. கரூர் அரசு மருத்துவமனையின் முதல் விஷுவல் காட்சிகளை மக்கள் பார்க்கும் பொழுது அங்கெ செந்தில்பாலாஜி இருந்தது, அடுத்த ஒரு மணி நேரத்தில் அன்பில் மகேஷ் அங்கெ வந்தது, சென்னையில் முதல்வர் தலைமை செயலகம் சென்றது, சம்பவம் நடந்து முழுமையாக இறப்பு எண்ணிக்கை கூட வெளிவருவதற்கு முன்னதாக 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. அதையடுத்து உடனடியாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது, இரவோடு இரவாக ஸ்டாலின் கரூர் வந்தது, துபாயிலிருந்து உதயநிதி வந்து சென்றது என திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் ஜெட் வேகத்தில் துல்லியமாக இருந்தது. அந்த அதீத துல்லியமே சந்தேகப்பட வைத்தது.
இதே திமுக ஆட்சியில் நடக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுங்கள் என்று பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொண்டை தண்ணீர் வத்த கத்திய போதும் கண்டுகொள்ளாத ஸ்டாலின் அரசு, இந்த சம்பவத்தில் யாருமே எதையுமே கேட்கும் முன்னர், எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டது. திமுக இவ்வளவு விரைவாக செயல்படுவதிலேயே சந்தேகம் பலமானது.
தனது துரித செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்தமாக விஜயின் மீது பழி போட்டுவிடலாம் என்கிற திமுகவின் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் மண்ணை வாரி போட்டன. எடப்பாடி, சீமான் இருவருமே அடக்கி வாசித்தனர். உச்சமாக அண்ணாமலையின் பிரஸ்மீட் மக்களின் பார்வையை ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் திருப்பியது. அரசு, மக்கள், விஜய் என்று அனைவர் மீதும் குறை சொன்னவர், அரசின் நிர்வாக தோல்வியை தெளிவாக சுட்டிக்காட்டியதை கட்சி பாகுபாடின்றி மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அந்த பக்கம் திமுகவும் தன் பங்குக்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை இறக்கி விட்டது. அரசின் மீது எந்த தவறும் இல்லை, விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மீது தான் மொத்த தவறும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த வாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அண்ணாமலை சொன்னது போல் மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டரை சஸ்பெண்ட் செய்திருந்தால் கூட ஓரளவு திமுக பக்கம் நியாயம் இருந்திருக்கும்.
நேற்று வரை விஜய்க்கு தனது பூரண ஆதரவை வழங்கிய மீடியா அப்படியே யூடர்ன் போட்டது. கரூர் பிரச்சார காட்சிகளை வைத்து தவறு எங்கே நடந்தது என்று விசாரணை ஆரம்பித்தார்கள், விஜய் ரசிகர்களின் அடாவடிகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பினார்கள்.
இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பி வந்தார்கள்.
திமுகவின் தொடர் நடவடிக்கைகளை போல் பாஜகவும் தொடர்ச்சியாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக பாஜக தலைவர்கள் அனைவருமே கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மத்திய நிதியமைச்சர் நேரில் கரூர் விரைந்தார். இதற்கு அடுத்த கட்டமாக தான் உண்மை கண்டறியும் குழு.
இத்தனை அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்து பார்த்தால் இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.. ஏனெனில் அரசியல் கட்சிகள் ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் என்றால் அதன் மூலம் சில ஆதாயங்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம்.
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை காட்சிகளை பார்த்த பொழுதே அவர்களது அறிக்கை எப்படி இருக்கும் என தெளிவாக தெரிகிறது.
அதே போல் உண்மை கண்டறியும் குழுவிடம் மக்கள் சொன்ன விஷயங்கள், மற்றும் அவர்களது கேள்விகளை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஆளும்கட்சிக்கு எதிராக தான் அறிக்கை கொடுப்பார்கள் என்பது வெளிப்படை.
ஆக இந்த சம்பவத்தில் திமுகவுக்கு நேர் எதிர் நிலைப்பாடு எடுக்கிறது பாஜக.
அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்பதற்காக இதை செய்கிறது என்று கடிவாளம் கட்டியது போல் ஒற்றை பார்வையில் இந்த நிகழ்வுகளை பார்க்கக்கூடாது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணிகள் இருக்கிறது.
அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்பதை விடவும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் கூட அது பாஜகவுக்கு வெற்றி தான். ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருக்கிறார் என்ற செய்தியை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ராகுல் + விஜய் பேச்சு செய்தி பரவக்கூடாது என்பதற்காக தான் விஜய் + குருமூர்த்தி சந்திப்பு என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்பது இப்போது புரியும்.
கரூர் துயரத்துக்கு பின்னால் திமுக இருக்கிறது, செந்தில்பாலாஜி இருக்கிறார் என்ற சந்தேகங்களை இன்னும் மக்கள் மனதில் ஆழமாக விதைத்தால் கூட அது தேர்தல் அரசியலுக்கு பயன்படும்.
2026 தேர்தலில் செந்தில்பாலாஜியை பெரிதும் நம்பியிருக்கிறது திமுக. அந்த இடத்தில கொஞ்சம் டேமேஜ் செய்ய முடியும். நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் செண்டிமெண்ட் ஒத்துழைத்தால் செந்தில்பாலாஜியை தள்ளி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு பயனில்லாத ஒரு நிலையை உருவாக்கலாம்.
அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு நேர் எதிரான ஒரு அறிக்கையை பாஜக முன்வைக்கும் போது, திமுகவுக்கு எதிராக இருப்பவர்கள் அதை ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இங்கே பாஜகவுக்கு எதிராக ஒரு பொதுக்கருத்தை முன்வைத்து அதை எப்படி அனைத்து கட்சிகளையும் திமுக ஏற்றுக்கொள்ள வைத்ததோ, அதே அரசியலை இன்று திமுகவுக்கு எதிராக செய்யப்போகிறது பாஜக.
கரூர் சம்பவத்தில் மக்கள், ஒன்று திமுகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும், அல்லது பாஜகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். விஜயும் பாஜக வெளியிடும் அறிக்கையை ஆதரித்தே ஆக வேண்டும். இது போன்ற செக்மேட் அரசியலை திமுக தான் எப்போதும் செய்யும், இன்று பாஜக அதை திறம்பட செய்கிறது.
அரசுத்தரப்பின் தோல்விகளை நீதிமன்றம் கேள்வி கேட்கும் பொழுது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும். திமுக எப்போதும் கேள்விகளுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் தற்போது விஜய் தரப்பு மற்றும் பாஜக தரப்பு இணைந்து கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அதனால் தான் விஜய் பாஜக பக்கம் போகிறார், விஜயை ஆர் எஸ் எஸ் தான் இயக்குகிறது என்ற நேரெட்டிவை நேற்றே கையில் எடுத்திருக்கிறது திமுக.
ராகுல் + விஜய் பேச்சு அவர்கள் தொடர்பில் இருப்பதை காட்டுகிறது. விஜயுடன் ராகுல் பேசியிருக்கிறார் என்று தெரிந்து தான், ஸ்டாலினை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார் ராகுல் என்று செய்தி வெளியே வந்ததோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஸ்டாலினை தொடர்பு கொண்டது பற்றி ராகுல் ட்வீட் போடவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
கரூர் துயர சம்பவம் தமிழக அரசியலில் சில திருப்பங்களை ஏற்படுத்த போகிறது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.
பின்குறிப்பு : இந்த பதிவு விஜயை நியாயப்படுத்துவதோ, திமுகவை நியாயப்படுத்துவதோ, அல்லது பாஜகவை நியாயப்படுத்துவதோ அல்ல. நடக்கின்ற சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இவையனைத்துமே என்னுடைய அனுமானங்கள் மட்டுமே. இந்த சம்பவத்தை பொறுத்தவரை விஜய், அரசு, மக்கள் என்ற வரிசையில் அனைவரின் மீதும் தவறு இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
