
தாத்தாவுக்கு ஆசை
பேரன் நான் நீச்சலடிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
சுரைக்குடுவையை இடுப்பில் கட்டிவிடுவார்.
தினமும் தன்னுடன் குளிக்க அழைத்துச் செல்வார்.
எங்கள் வயலிலிருக்கும் சதுரக் கிணற்றில்
இறங்கி நீரில் நின்றபடி மிதப்பார். .
தண்ணீர் துறையிலிருந்து குதிக்கச் சொல்வார்
கிணற்றில் நிறைய புடைகளிருக்கும்
புடைகள் நிறைய கையகல நண்டுகளிருக்கும்
நண்டுகளைக் கண்டு பயத்தில் என்
பிடரி சிலிர்க்கும். நெஞ்சம் படபடக்கும்
‘தாத்தா வயிறு வலிக்கிறது.
இன்றைக்கு வேண்டாம். நாளைக்கு
சுற்றுப் பாறையிலிருந்து குதிக்கிறேன்’ என்பேன்.
தாத்தாவின் ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை.
