ஐராவதம்/மாறுதல்

நான் மல்லிகாவை மனப்பூர்வமாக விரும்பவில்லை. நான் என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல அவள் காது கொடுக்கிறாள். அவளுடைய தோழமை எனக்கு இன்றியமையாத ஒன்றல்ல. வெறுமையான நேரங்களை வெற்றிகரமாய்ப் போக்கவே நாங்கள் ஒன்று கூடுகிறோம். அவளைப் பற்றி என்னுடைய இந்த எண்ணங்கள் அவளுக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன். மல்லிகா கொஞ்சம் மக்குதான். ஆனால் இத்தகைய விஷயங்களில் பெண்கள் சூசனை மிக்கவர்கள்.
‘கிரேக்க நாட்டில் வீரர்கள் மணம் புரியும்போது பெண்களிடம் ஆறு குணாதிசயங்களை எதிர்பார்ப்பார்களாம்.’
அவை என்ன என்று மல்லிகா உடனடியாக எதிர்க்கேள்வி போடவில்லை. நான் எப்படியும் தொடர்வேன் என்று அவளுக்குத் தெரியும்.
‘பெண் அழகாயிருக்கவேண்டும்; குரல் நன்றாயிருக்க வேண்டும்; பேச்சு இனிமையாய் இருக்க வேண்டும்; ஊசி நூல் கொண்டு தைக்கத் தெரிந்திருக்க வேண்டும்; உலக ஞானம் கொண்டிருக்க வேண்டும். தர்ம சிந்தை உடையவளாய் இருக்க வேண்டும்.ý
‘மற்ற விஷயங்கள் சரி, அது என்ன ஊசி நூல் விவகாரம்?’ மல்லிகாதான் கேட்டாள். என்னுடைய பேச்சு தொடர வேண்டும் என்பதற்கான ஊக்கக் கேள்வி இது. தன்னுடைய அறிவை விருத்தி செய்து கொள்வதற்கான உயர்வுக் கேள்வி அல்ல.
‘காலையில் நான் ஆபீஸ÷க்கு கிளம்பும்போது சட்டை பித்தான் அறுந்துவிட்டது. இரண்டு நிமிஷ வேலைதானே என்று ஊசி நூலை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டேன். ஊசியில் நூல் கோக்க நான் பட்டபாடு! ஆரம்பத்தில் ஒரு முனையில் சிறிய முடிச்சுப் போட நான் எடுத்தப் பிரயத்தனம்! தைத்தப் பிறகு நூல் நுனியில் இன்னொரு முடிச்சுப் போட நான் மேற்கொண்ட முயற்சி! மொத்தம் எட்டு நிமிஷ நேரம் இடைவிடாத கவனத்திற்குப் பிறகு காரியம் நிறைவேறியது. ஊசி நூல் கொண்டு தைக்கத் தெரிந்த பெண்மணி அசாத்திய பொறுமைசாலியாயிருப்பாள் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது.’
நான் பணியாற்றுகிற பொருளாதார ஆராய்ச்சி ஸ்தாபனம் ஒரு தொழிலதிபரின் தயவில் அவருடைய கம்பெனிகளின் நிர்வாக அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் இயங்குகிறது. ஸ்தாபனத்தில் டைரக்டருக்கு அடுத்த ஸ்தானம் என்னுடையது. நான் எழுதித் தயாரித்து அளிக்கிற கட்டுரைகளை டைரக்டர் தன்னுடைய உரையாக பாவித்து வெளி அரங்கங்களில் வாசித்துவிட்டு வருவார். பத்திரிகைகளில் தன் பெயரில் வெளியிடுவார்.
எனக்கு உதவியாகப் புள்ளி விவரங்கள் சேகரிக்க கல்யாணி என்றொரு நங்கை. பம்பாயில் படித்துத் தேறி சென்னையில் உத்தியோகத்திற்கு வந்திருப்பவள்.
மல்லிகா டைப்பிஸ்ட். ஸ்ரீதரன் ஆபீஸ் அஸிஸ்டென்ட்.
எங்கள் ஸ்தாபனத்தின் நூலகம் ரொம்ப சிறியது. நன்கொடையாய் வழங்கிய பழைய புஸ்தகங்கள் அடங்கியது. எனவே நான் அடிக்கடி தகவல்கள் சேகரிக்க வெளி நூலகங்களுக்குச் செல்லுவேன். போகும்போது மல்லிகாவிடம் சொல்லிவிட்டுப் போவேன். அவள் சாப்பாட்டு நேரத்தில் என்னை டிரைவ் – இன் ஓட்டலில் வந்து சந்திப்பாள். அப்பொழுது நடக்கிற சம்பாஷணைகளில் ஒன்றைத்தான் நான் மேலே கொடுத்திருக்கிறேன்.
மல்லிகாவுக்கு சற்று ஸ்தூலமான சரீரம். என்னுடைய அழைப்பை ஏற்று அவள் வெயில் நேரத்தில் இரண்டு பர்லாங் தூரம் நடந்து வருவாள். திரும்பும்போது நான் அவளை டாக்ஸியிலேயோ, ஆட்டோவிலேயோ கொண்டு வந்து விடுவேன். ஏனென்றால் லஞ்ச் அலவன்ஸ் உண்டு.
மல்லிகா தானாக பேசக்கூடிய ஒரே டாபிக் ஹிந்தி சினிமாதான். அதிலும் ஒன்றும் விசேஷமாக இருக்காது, ஃபிலிம் ஃபேர், ஸ்டார் அண்டு ஸ்டைல், ஸ்டார் டஸ்ட், இப்படி பத்திரிகைகளில் வெளியாகிற நடிக, நடிகையரைப் பற்றிய ரசமான, சற்று விரசமான, வாழ்க்கைத் தகவல்களைத்தான் நேரில் கண்டதுபோல் விவரித்துப் பேசுவாள். எனக்கு அத்தகைய விஷயங்களில் ஈடுபாடு கிடையாது. எனினும் தகவல்கள் என்ற முறையில் அவை அத்துபடி. போதாக் குறைக்குச் சில பத்திரிகைகளில் சில நடிக நடிகையரைப் பற்றி சூசகமான தகவல்கள். அவர்கள் யார் என்று கண்டு பிடிப்பதற்குள் மல்லிகா திணறி விடுவாள்.
நானோ சர்வ அலட்சியமாக இன்னார் என்று அவளுக்கு அடையாளம் காட்டுவேன். இந்த ஒரு விஷயத்தில்தான் அவள் என் மேதாவித்தனத்தை ஒப்புக்கொண்டாள். ஆனால் நான் உண்மையில் வேறு அநேக விஷயங்களில் புத்திசாலி. அத்தகைய விஷயங்களில் அவளிடத்தில் ஈடுபாடு ஏற்படுத்த நான் பெரிதும் முயன்றேன். ஆனால் பலன் பூஜ்யம்.
‘சீன தத்துவத்தின்படி உலகத்தில் பத்தாயிரம் வகையான ஜீவராசிகள் இருக்கின்றன -மனிதர்களையும் சேர்த்து. இது அத்தனையையும் இயக்குவது இரண்டு அழியாத அடிப்படைக் கூறுகள். ஒன்று யின். மற்றது யாங். யின் என்பது தியானம், இருட்டு, செயலின்மை, இரட்டைப்படை எண்கள், குளிர்ச்சி இவைகளைக் குறிக்கும். யாங் என்பது வளர்ச்சி, ஒளி, செயல் திறமை, ஒற்றைப்படை எண்கள், உஷ்ணம் இவற்றைக் குறிக்கும். யின் தத்துவத்தின் வெளிப்பாடுகளே பெண்கள், பூமி, ஆரஞ்சு நிறம், பள்ளத்தாக்குகள், ஆற்றுப் படுகைகள், புலி முதலியன. யாங் தத்துவமோ ஆண்கள், ஆகாயம், நீலம், மலைகள், தூண்கள், யாளி இவற்றை சின்னங்களாகக் கொண்டது.’
மல்லிகா இங்கு இடைமறித்தாள்.
‘ஆமாம், நீங்கள் எப்படி கிரேக்க, சீன விவகாரங்களைப் பற்றியே பேசுகிறீர்களே. உங்களுக்கு இந்திய கலாசாரம் பற்றி ஒன்றும் தெரியாதோ?’
‘மல்லிகா, இங்குதான் நீ தவறு செய்கிறாய். நான் இன்னும் முடிக்கவில்லை. யின் என்பதும் யாங் என்பதும் நம்மூர் புருஷ-பிருகிருதி தத்துவம்தான். ஆனால் நான் முதலிலேயே சொல்லியிருந்தால் நீ எழுந்து போயிருப்பாய். நான் ஏதோ உபன்யாசம் செய்யப் போகிறேனோ என்று பயந்து. எனினும் நான் மகாபாரதத்தை இங்கிலீஷில் படித்து வருகிறேன் என்பதை மட்டும் இங்கு உனக்கு இங்கே சொல்லிக்கொள்கிறேன்.’
எங்கள் டைரக்டர், கல்யாணிக்கு வேலை கொடுத்தபோது அவள் தனக்கு – பல விதங்களிலும் உதவியாக இருப்பாள் என்று எதிர்பார்த்திருந்தார். அவருக்கு ஏராளமான கருத்தரங்குகள், மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள் இவற்றில் கலந்துகொள்ள அழைப்பு வரும். அங்கெல்லாம் லஞ்ச், டீ, டின்னர் இவற்றிற்கும் வழி செய்திருப்பார்கள். அத்தகைய இடங்களுக்கு கல்யாணியை அழைத்துப் போக வேண்டும் என்பது டைரக்டரின் உள் மனக்கிடக்கை, எங்கள் ஸ்தாபனத்தின் ஷோ-பீஸ் (காட்சி பொருள்) ஆகவும், அதே நேரம் அவருக்கு ஒத்தாசையாக இருக்கவும். ஆனால் அவளோ அப்படி பொது இடங்களில் அவருடன் தலைகாட்ட மறுத்து விட்டாள்.
டைரக்டரன் பேச்சுக்களைத் தயார் செய்து கொடுப்பது நான்; ஆனால் அவர் என்னை அழைத்துப்போகத் தயாரில்லை. நான் அத்தகைய இடங்களில் மற்ற பெரிய மனிதர்களுடன் தொடர்பு கொண்டு வேறு எந்த வேலைக்காவது தாவிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவருக்கு. நான் அப்படி செய்யக் கூடியவன் என்பது அவருக்கு நன்றாகவே தெரயும்.
எனக்கு கல்யாணி மீது ஒரு கண் உண்டு. அவள் பம்பாய் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பொருளாதாரப் பரிட்சையில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பவள் என்று டைரக்டர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் ஒரு பெண் அதனால் புத்திசாலி என்று முடிவு கட்டிவிட முடியாது. அவள் வெறுமே பாடங்களை உருப்போட்டுக் கூட பரிட்சையில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கமுடியும்.
கல்யாணியிடம் என்னைக் கவர்ந்தது அவளுடைய ஒட்டாத தன்மைதான். நீங்கள் எல்லாம் என்னோடு பழக லாயக்கில்லை என்று சொல்வதுபோல அவள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாள். இது வரட்டு ஜம்பமாகக் கூட இருக்கலாம்; பம்பாயிலிருந்து வேலை தேடி சென்னை வந்தது அவளுக்கே கௌரவக் குறைச்சலாகப் பட்டிருக்கலாம். அதனால் மற்றவர்கள் தன்னை மட்டமாய் நினைத்துவிடக் கூடாதே என்பதற்காக அவள் தன்னுடைய மௌனம் கலந்த அலட்சியத்தை ஒரு கவசமாய்ப் பயன்படுத்தலாம் என்று என்னுடைய புத்தியின் ஒரு மூலையில் ஒரு எண்ணம் தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தது. இருந்த போதிலும் அவள் அலட்சியத்தை ஊடுருவி அவள் மனத்திலிருப்பதை அறிந்துவிட வேண்டும் என்பதை நான் என்னுடைய ஆண்மைக்கு ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டிருந்தேன். முடிந்தால் அவளை வளைத்துப்போட்டுவிட வேண்டும் என்பது என்னுடைய தொலை தூரக் குறிக்கோளாக இருந்தது.
‘ஷி இஸ் ஏ ஜெம் ஆஃப் கேர்ல்’ என்பார் டைரக்டர் என்னிடம் தனிமையில்.
அவளைப்பற்றிய தன்னுடைய நோக்கம் நிறைவோத தாபத்தில் சொல்கிறாரா, அல்லது என்னுடைய பொறமை உணர்ச்சியைத் தூண்டி விடுவது அவர் நோக்கமா? ஆனால் எங்கள் டைரக்டருக்கும், மனோதத்துவத்திற்கும் ரொம்ப தூரம். ஏதோ பூர்வ ஜன்ம புண்ணியம் என்பார்களே அந்த மாதிரி சரியான இடங்களில் தொடர்புகள் அமைந்துவிட்ட ஒரே காரணத்தி னாலேயே அவர் வாழ்க்கையில் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார்.
இப்பொழுது அவர் சமூகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்கு என்னுடைய அறிவாற்றலையே நம்பியிருக்கிறார்; அவர் மூளை வேலை செய்வதை நிறுத்தி சில பல வருடங்களாகின்றன.
ஒருமுறை ஒரு கல்லூரிப் பொருளாதார மன்றத்தில் அவர் பேசப்போனபோது நான் எழுதிக்கொடுத்த பேச்சு அவர் காலை வாரி விட்டுவிட்டது. அதில் நான் எழுதியிருந்தேன் ‘இந்த நாட்டில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான ஜனத்தொகை இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட நபர்களால் ஆனது. சீனாவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான இளைய ஜனத்தொகை கொண்ட நாடு பாரதமே. ஆனால் நம் நாட்டில் அதிகார வர்க்கமோ உலகத்திலேயே முதுமையானது. இந்த நிலைமை மாறவேண்டும்.’
எங்கள் டைரக்டர் மத்திய மாநில அரசுகளோடு வெவ்வேறு விதங்களில் தொடர்பு கொண்டிருப்பவர். எனவே அவர் அதிகார வர்க்கம் என்று குறிப்பிட்டது தன்னையும் சேர்த்துத்தான் என்று அவர் அறியாமல் போனாலும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது. அவர்கள் ஜோராகக் கைதட்டி ‘இந்த நிலைமை மாறவேண்டும்’ என்று கோஷங்களை ராகம் போட்டு எழுப்பி அவரை மேடையிலிருந்து இறக்கி விட்டார்கள். அதற்கு முன்னால் நான் தயாரித்துக்கொடுத்த பேச்சுக்களை எல்லாம் படிக்காமலேயே தன்னுடைய கோட்டுப்பையில் திணித்துக்கொண்டு வெளியிடங் களுக்கு விரைந்து கொண்டிருந்த டைரக்டர் இப்பொழுது கொஞ்சம் உஷார் ஆகி அவற்றைப் படித்துப் பார்க்கிறார். ஆனால் நான் தயாரிக்கும் பேச்சுக்கள் பொருளாதாரத் தகவல்களை வறட்சியாக எடுத்துக் கொடுக்காமல், காப்பிரைட் கட்டுரைகள் மாதிரி பொது சுவாரஸ்யம் கொண்டவையாக அமைந்திருக்கும். எனவே டைரக்டருடைய பேச்சுகளுக்கு வெளியிடங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. அதனால் டைரக்டர் என்னை விரோதித்துக் கொள்ள அஞ்சினார்.
மாறாக சமயங்களில் மூக்குக்கண்ணாடி விளிம்பிற்குமேலே பார்வையை உயர்த்தி என்னை நைச்சியமாகக் கேட்பார்.
‘என்னப்பா, விஷமம் ஒண்ணுமில்லையே?’
‘நம்மகிட்ட விஷமமே கிடையாது சார். எல்லாம் விஷயம்தான். விஷயகனம், மடியில் கனம் இருக்கிறவன் வழியைப் பார்த்துக்கொண்டேதான் போகணும்.’
‘எதற்கெடுத்தாலும் உனக்கு இடக்குதான். ஆமாம், நீ இவ்வளவு புத்திசாலியாய் இருக்கே. அந்தப் பொண்ணு கல்யாணி கிட்டே உன் சரக்கு செல்லுபடியாக மாட்டேங்குதே.’
டைரக்டர் நிச்சயம் தானாக துப்பறிந்து இருக்கமாட்டார். இந்த ஸ்ரீதரன் வம்பு அளந்திருக்கவேண்டும்.
‘அவளுக்குக் கொடுத்து வைக்கலே சார்.’
எனக்கும் கல்யாணிக்கும் அலுவல் ரீதியான சம்பாஷணைகள் நிறைய உண்டு என்றாலும் அதிலும் என் பங்குதான் அதிகம்.
அந்த சம்பாஷணைகளில் இலேசாக அவள் சொந்த வாழ்க்கையைப்பற்றி அறிய நான் துருவித்துருவி கேள்விகள் கேட்டாலும் பதில்கள் ஒற்றை வார்த்தைகளில் வரும்; சமயங்களில் வராமலேயே இருந்துவிடும். அடுத்த கேள்வி கேட்க ஆர்வம் இல்லாதபடி செய்துவிடுவாள். புன்சிரிப்பு அபூர்வப் பொக்கிஷம் மாதிரி எப்பொழுதாவதுதான் தோன்றும். இவளா சிரிக்கிறாள் என்று வியந்து தலையை உயர்த்திக் கண்களை விழித்துப் பார்ப்பதற்குள் நிறுத்திக்கொண்டு விடுவாள்.
பகல் நேரத்தில் உணவாக சப்பாத்தி, பூரி எடுத்து வருவாள். அதையும் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டு விடுவாள். அழுத்தமான நிறங்களில் புடவைகள் அணிவாள்; எனினும் அவற்றிலும் சதுரம், புள்ளி, கோளம் முதலிய கணித வடிவங்களில் ஆன டிசைன்கள்தான் காணப்படுமே தவிர மலர்கள், இலைகள் இவைகளால் ஆன டிசைன்கள் தட்டுப்படாது.
அவள் எனக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறாள் என்கிற உண்மையை ஸ்ரீதரனும் அறிந்திருந்தான். தனக்கே புரிபடாத விஷயங்களைப்பற்றி பேசுவதில் அவனும் என்னைப் போலவே பிரியமுள்ளவன். ஒருநாள் அவன் கல்யாணியைப் பற்றிய தன்னுடைய மனோதத்துவ ஆராய்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டான்.
‘யு நோ, கல்யாணி ஹாஸ் விரிஜினிடி காப்ம்ளெக்ஸ்’ என்று ஆரம்பித்தான்.
‘எக்ஸ்ப்ளெய்ன்’ என்றேன் நான்.
‘அதாவது அவள் தன்னுடைய கன்னித்தன்மைக்கு தேவையற்ற முக்கியத்துவம் அளிக்கிறாள். அவள் சிறு வயதி லேயே தந்தையை இழந்திருக்கவேண்டும். தாயாருடன் தனித்து வாழ்ந்து வந்திருக்கவேண்டும். யாரோ முகம் தெரியாத அந்நியனுடன் தன் தாயார் கூடி வாழ்ந்ததின் விளைவாகவே தான் பிறந்திருக்கிறோம் என்கிற தவறான எண்ணம் அவள் பிஞ்சு மூளையிலே பதிந்து விட்டிருக்கிறது. தன் தகப்பனாரைப்பற்றி அவளுக்கு சரியாகத் தெரிவிக்கப்படவில்லை. தவறு தாயாருடை யதாகவும் இருக்கலாம். எனவே ஆண்கள் மீது தவறான வெறுப்பு அதே நேரம் பெண்ணின் வளர்ச்சி கருதி வாழ்க்கையின் பிரதான பகுதியை ஆண் துணையில்லாமலேயே கழித்துவிட்ட தாயாரின் மீதும் வெறுப்பு. இதைப்போக்க ஒரே வழி இவள் தாயார் மறுமணம் செய்துகெள்வதுதான்.’
‘ஸ்ரீதரா, நீ பாஷைபுரியாத பிரெஞ்சு, ஜெர்மன் படங்களை அதிகம் பார்க்காதே என்று நான் உன்னை முன்னமேயே எச்சரித்திருக்கிறேன்.’
‘பாஷை புரியாமல் என்ன? ஸப்-டைட்டில் காட்டுகிறார்களே?’
‘திரையில் காட்டப்படும் இமேஜையும் பார்க்காமல் ஸப் டைட்டில் படித்துக்கொண்டிருக்கிற கல்ச்சுரல் ஸ்நாபே. நீ அதுபோலவே வாழ்க்கையிலும் ரத்தமும் ஜீவனும் கொண்ட மனிதர்களைப் பார்க்காமல் ஏதோ உருப்படாத தியரிகளை படித்துக்கொண்டிருக்கிறாய்.’
‘நீ கல்யாணி பற்றி என்ன என்ன நினைக்கிறாய்?’
‘ஐ அக்ரி வித் யுவர் விர்ஜினிடி காம்ப்ளெக்ஸ். அவள் தன் கற்பை கண்டிக்கத்தக்க அளவு காபந்து செய்துகொள்கிறாள். ஆனால் உனக்குத் தெரியுமா? தனனுடைய கற்பு கவசத்தை உடைக்க ஒருகாளை தேறவில்லையே என்றும் அவள் வருத்தப் படுகிறாள்.’
‘அப்படியானால் அந்தக்காளை நீ இல்லை?’
‘நான் காளைதான். ஆனால் கல்யாணி வீட்டு மாட்டுத் தொழுவத்தில் கட்டுப்படுவதற்கு விரும்பாதவன்.’
‘நீ கொம்பால் வெறுமே உரசிவிட்டு மட்டும் செல்வதை அவள் எப்படி சகித்துக்கொள்வாள் என்று நீ எதிர்பார்க்கிறாய்?’
‘மல்லிகா சகித்துக்கொள்வதோடு மட்டுமல்ல, வரவேற்கவும் செய்கிறாளே?’
ஆனால் எங்களுக்கு ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. அடுத்த பதினைந்து நாட்களில் மல்லிகாவுக்கு சிதம்பரத்தில் கல்யாணம் நடந்தது. அதைவிட ஆச்சர்யம் அடுத்த மாதத்தில் கல்யாணிக்கும் திருப்பதியில் கல்யாணம் நடந்தது. அன்று எங்கள் டைரக்டர் பம்பாயில் ஒரு செமினாருக்குப் போய் விட்டபடியால் கல்யாணத்திற்குப் போகவில்லை. ஆகஸ்ட் முப்பதுக்கு முன்னால் என்றால் நான் அன்று வரை பாட்டில் விஸ்கி அருந்தினேன் என்று எழுதியிருக்கலாம். ஆனால் உண்மையில் நான் ரஸவடையும், ரோஸ் மில்க்கும் சாப்பிட்டேன். உண்மை கசப்பானது தான்.திரும்பவும் ட்யூட்டியில் சேர்ந்த இரண்டு பெண்களின் குணாதிசயங்களும் வெகுவாக மாறியிருந்ததுதான் ரொம்பவும் சுவாரசியமான விஷயம்.
இப்பொழுதெல்லாம் மல்லிகா என்னுடன் பேசுவதற்கு அவ்வளவு உற்சாகமாகக் காத்திருப்பதில்லை; என்னைக் கண்டாலே ஓரளவு பின்வாங்கக் கூட செய்கிறாள் என்று சொல்லலாம்.
கல்யாணியோ மிகுந்த சுமுகமாக சிரித்த முகத்துடன் மைதீட்டிய கண்களுடன் இலேசான உதட்டுச் சாயத்துடன் சிவந்து கன்றிய கன்னங்களுடன் ஆபீஸில் காட்சி தருகிறாள். நான் அவள் பக்கம் என் பார்வையைத் திருப்பும் போதெல்லாம் அவள் உதட்டோரங்களில் புன்சிரிப்பு தவழுகிறது. இப்பொழுது என்னுடன் பேசுவதற்கு அவளுக்கு சாத்தியமாகி இருக்கிறது.