
நாமகிரி பாட்டிக்கு எப்போதும்
மூன்று
நார்மடி புடைவை உபயோகத்தில்
உடம்பில் ஒன்று
இரண்டாவது துவைத்த மூங்கில் கொடியில்
உலர்ந்த மற்றொன்று ஓலையாய்ச்
சுருக்கப்பட்டு
வைக்கோல் பிரிபோல் கொடி ஓரம்.
பழம் நார்மடி புடவைகளும்
பாட்டியிடம் கணக்கு இருக்கும்
கிழிந்தாலும் எறிய மாட்டாள்
ஆங்காங்கு மரவட்டைத் தையல்
அவளே தைத்து வைப்பாள்
ஊசியில் நூல் மட்டும்
பேத்திகள் கோர்த்துத் தரவேண்டும்
ரொம்பப் பழசானாலும் விடமாட்டாள்
மடித்து மடித்து அழகாய்
எங்கள் படுக்கையில் விரிப்பாள்
அருகில் அவளும் தூங்குவாள்
பாட்டி போல்
பூனை உடம்பு நார்மடி விரிப்பு
மெத்து மெத்தென்று
பாட்டியின் நிறமும்
நார்மடி புடைவைகள் நிறமும்
ஒன்று
நார்மடி புடைவைகள் ஒவ்வொன்றாய்
இல்லாமல் போகும் காலம் இனி
பாட்டிக்கு நேற்று தசாஸ்து.
