
வீடு வந்தடைந்தேன். அறுவை சிகிச்சை நல்லபடி முடிந்தது. ஆனால், மருந்துப் பயன்பாடு உண்டாக்கும் தீவிரமான அழற்சிக்கு மீண்டும் ஆளாகியுள்ளேன்.
பத்தாண்டுகளுக்கு முன் இன்னதென்று கண்டறியப்படாத காய்ச்சலால் பீடிக்கப்பட்டேன். ஒரு மாதம் தாண்டி நீடித்த அந்தக் காய்ச்சலின்போது, சில லட்சங்கள் மதிப்பிலான மருந்துகள் என் உடலில் செலுத்தப்பட்டன. ‘இந்தக் காய்ச்சலாக இருக்குமோ! அந்தக் காய்ச்சலாக இருக்குமோ!” என்று ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி கொடுக்கப்பட்ட மருந்துகள் கல்லீரலைக் கடுமையாகப் பாதித்தன. உடல் முழுக்க சிணப்புகள் உண்டாயின.
நாற்புறமும் கரை அறுத்துக்கொண்ட ஆறு போன்றதானது உடல். எதற்கு சிகிச்சை அளிப்பது என்றே மருத்துவர்களுக்குத் தெரியாமல் போனது. மரணத்துக்கு மிக அருகில் இருந்தேன். நான் திரும்புவேன் என்ற நம்பிக்கை அலுவலகத்தில் யாரிடமும் இல்லை. ஒரு மாதம் கழிந்த நிலையில், காய்ச்சல் நின்றது. ஏனைய பிரச்சினைகளை வீடு சென்று பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி திரும்பினேன்.
துறையில் சிறந்த நிபுணர்களிடமும் தீர்வு இல்லை. அதீத மருந்துப் பயன்பாடுதான் காரணம் என்றார்கள். “இன்னும் இனம் காணப்படாத அழற்சி வகைகள் நூற்றுக்கணக்கில் உண்டு; அதில் ஒன்றாக உங்களுடையதைச் சொல்லலாம்” என்றார்கள். தினமும் லிவோசீட்ரஸின் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது சிணப்புகள் உண்டாகி உடல் வீங்கிவிடும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இப்படி கழிந்தது.
வாராது வந்த வரம் என்றுதான் தொடுசிகிச்சையை (அக்குபஞ்சர்) குறிப்பிட வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை தொடுகை பெறுதல், உணவு – தூக்கம் இரண்டிலும் கவனம், கொஞ்சம்போல் யோகப் பயிற்சி மூன்றும் இணைந்து மாற்றம் நிகழ்த்தின. மிக விரைவில் கல்லீரல் பழைய நிலைக்கு மீண்டது. முற்றிலுமாக சரும பிரச்சினையிலிருந்தும் விடுபட்டேன். இந்தப் பத்தாண்டுகளில் தவிர்க்க முடியாத சூழலிலேயே அலோபதி / சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டேன். ஹெர்னியா போன்று அறுவை தவிர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே மருத்துவமனை சென்றேன்.
மனித குலம் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு மருத்துவமுறைக்கும் சில சிறப்புகளும் சில எல்லைகளும் இருக்கின்றன. ‘இது ஒன்று மட்டுமே சர்வரோக நிவாரணி’ என்று சொல்லத்தக்க இடம் எதற்குமே உருவாகிடவில்லை. எந்த ஒரு முறையையும் எது ஒன்றுக்கும் எதிராக நிறுத்துவதைக் காட்டிலும், முரண்படாத
சாத்தியக் கூறுகளை எடுத்துக்கொள்ளுதல் நல்வழி என்று நம்புகிறேன். இப்படித்தான் பத்தாண்டுகள் ஓடின.
இப்போது ஓர் அறுவை. சின்ன விஷயம்தான் என்றாலும், இதயச் செயல்பாடு சார்ந்து மருத்துவர்களுக்கு அச்சம் இருந்தது. மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் அறுவையை முடித்தனர். இந்த அளவில் சிகிச்சை முழு வெற்றி. ஆனால், எந்த மருந்து கொடுத்தாலும் உடல் திரும்ப அடிக்கிறது. மயக்க மருந்து, ஆன்ட்டிபயாடிக் உள்ளிட்ட மிக அத்தியாவசியமான ஓரிரு மருந்துகளைக்கூட உடல் ஏற்கவில்லை. மீண்டும் பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலை. தினமும் சிட்ரஸின். அதுவும் போதிய பலன் இல்லை.
காயம் கொஞ்சம் ஆறி, நிலைமை மேம்பட்டதும் தொடுசிகிச்சை நோக்கிச் செல்ல வேண்டும். யோகா நோக்கி நகர வேண்டும். கூடவே இந்த முறை ஒரு முக்கியமான உணவை கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைத்திருக்கிறார். அதை அன்றாடம் ஆக்கிக்கொள்ள வேண்டும்: பழைய சோறு.
நிறைய நண்பர்கள் செல்பேசிக்கு அழைத்திருக்கிறீர்கள்; செய்தி அனுப்பியிருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி. இந்தச் செய்தியே நண்பர் வழியாகப் பதியப்படுகிறது என்றறிக. உடல் கொஞ்சம் தேறியதும் நானே அழைக்கிறேன். ‘சோழர்கள் இன்று’ நூலை என் கையொப்பத்துடன் கேட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் பணம் செலுத்தியுள்ளதாக அறிகிறேன். ஒரு வாரம் அவகாசம் தருக. நூல் வந்தடையும்.
