வளவ.துரையன்/அரச கட்டளை

19-9-25 விருட்சம் அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.
10

இங்கே எல்லாமே நிரம்பி வழிகின்றன.
அதுதான் அரச கட்டளை.

விடைகள் இல்லாத வினாக்களின்
படையெடுப்பால்
ஆராய்ச்சி மணி அலறுகிறது.

வாழையிலைகள் எருக்கிலைகளாக
ரோஜாக்கள் பிச்சிப் பூக்களாக
நகர்வலம் வருகின்றன.

பாதுகைகளின் ஆட்சியோ பரமனின்
செங்கோலோ எல்லாமே நெருஞ்சிதான்.
கழுத்தை நெறித்தபின்
காலில் விழுந்து கதறுகிறார்கள்.

வார்த்தைகள் சமாதிகளாக
வாயெல்லாம் மூடிப்போக

எல்லாமே கள்ளப் புன்னகையைக்
கண்ணாலே காட்டி நடிக்கின்றன.

ஆமாம்.
அதுதான் அரச கட்டளை.

வளவ.துரையன்/அம்மாவின் கொடி – விருட்சம் நாளிதழ்