முனைவர்.நா.பா.மீரா / மாற்றம் ஒன்றே மாறாதது

அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள் 54

சங்கரி… என்னடி ஆச்சரியமா இருக்கு? உன் குரல் கேட்டு எவ்வளவு நாட்களாச்சு… ஊர்ப்பக்கமும் ரொம்ப வரவே மாட்டங்கறே… நல்லா இருக்கியாடி?… கோமதியின் மடைதிறந்த பேச்சுக்கு…
ஊம்… நல்லா இருக்கோம்டி கோமதி… எனச் சுரத்தின்றி ஒலித்தது சங்கரியின் குரல்.
என்னாச்சுடி சங்கரி… சுரத்தே இல்லாம பேசுற…
எப்படிச் சொல்றதுன்னே புரியலைடி கோமதி… தென்காசியிலேயே பிறந்து… வளர்ந்து ஆளான எனக்கு ஆரம்பத்திலேருந்தே… இந்தப் பெங்களூர் வாழ்க்கையே பிடிக்கலை…
அவர்கிட்டச் சொன்னா… சுத்தப்பட்டிக்காடுன்னு கிண்டல் பண்ணிடுவாறோன்னு… அமைதியாவே கிட்டத்தட்ட இருபது வருஷங்கள் கடந்து போயிடுச்சு… சற்றே இடைவெளி விட்டாள்… சங்கரி.
உன் வீட்டுக்காரர் நல்லாத்தானே பார்த்துக்கறார்… ஏதும் உங்களுக்குள்ள கருத்து வேறுபாடா… வேலை… மாற்றல் அப்படி… இப்படின்னு பெங்களூரிலே செட்டிலானாலும் அவருக்கும் திருநெல்வேலிதானே பூர்விகம்?
கருத்து வேறுபாடுகள்தான்டி… ஆனா அவரோட இல்லை… பசங்களோட… இந்த ஊரோட அசாத்தியமான நாகரீக மோகங்களுக்குப் பொண்ணும் பையனும் அடிமை ஆகிடுவாங்களோன்னு பயமா இருக்குடி கோமதி…
நீ தேவையில்லாமக் குழப்பிக்கறயோன்னு எனக்குத் தோணுது சங்கரி…
தென்காசியில பொறந்து வளர்ந்த என் பசங்களே படுநாகரீகமாப் பேசறதும்… உடை உடுத்துறதும்.. அப்படி இருக்கறச்ச உம் பசங்க பெங்களூர் வாசிங்க… நாகரீகமா இருக்குறதுல பெரிய தப்பொண்ணும் எனக்குத் தெரியலை… நம்ம காலம் வேற, இப்ப இருக்குற தலைமுறையோட அணுகுமுறை வேற…
அப்படித்தான் என் வீட்டுக்காரரும் சொல்றாரு… ஆனாலும்… ‘உன் நண்பர்களைச் சுட்டிக் காண்பித்தால் நீ யாரென்று கண்டுபிடிப்பது சுலபம்னு’… ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சது நினைவுகளா மேலெழும்பி வர்றப்ப பயமா இருக்குடி கோமதி…
ஏதோ… பிரச்சினை… அதனால்தான் இப்படிப் பேசுகிறாள் என்று புரிந்து கொண்ட கோமதி…
சரிடி… ஒண்ணு பண்ணலாம். இந்த முறை ஆடித்தபசுக்குப் பசங்களை எப்படியாவது அழைச்சிட்டு வந்துடு… நேர்ல சந்திச்சா உனக்கும் ஒரு தெளிவும், தீர்வும் கிடைக்கும்… என்ற கோமதியிடம் ஒப்புதல் அளித்துச் சிறிது நேரம் பேசிவிட்டுப் போனை அணைத்தாள் சங்கரி.
மகன் வைபவின் ஆன்லைன் ரம்மி மோகமும்… பருவ வயதின் விளிம்பில் இருக்கும் வைஷாலியின் பாலின பேதங்கள் தகர்த்த நட்பு வட்டமும்… ஏனோ… நினைக்கும்போதே முகம் சுளிக்க வைத்தன சங்கரியை.
குடும்பம்… குழந்தைகள் வளர்ப்பு… உன்னுடைய பொறுப்பு. சம்பாதிக்கும் பொறுப்பு மட்டுமே என்னுடையது… என்ற அளவில் இயங்கிய கணவனுடன் ஆற அமரப் பேசக்கூட நேரம் கிடைக்கவில்லை சங்கரிக்கு.
குழந்தைகளாய் இருந்தவரை சங்கரியோடு ஊர்ப்பக்கம் வந்தவர்கள்… வளர்ந்தவுடன் எதிர்ப்புத் தெரிவிக்க… அவர்களைத் தனியேவிட்டு நகரத் தயங்கிய சங்கரியும்… ஊருக்குச் சென்றே பல வருடங்கள் ஆகிறது.
மகன்… மகளின் எதிர்காலத்தைக் குறித்த பயம் அவளை வாட்டியது… அதுவும் முந்தைய நாள் மகள் வைஷாலியுடன் அவள் கல்லூரித் தோழி ஷிவானி பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு ஆடிப்போனாள்.
ஏய் வைஷீ… எனக்கென்னவோ இந்தக் கல்யாணம்… குழந்தை குட்டிகள்… தேவையில்லாத பாரம்… சுத்த வேஸ்டுன்னு தோணுது…
நீ என்ன நினைக்கிற இந்த லிவ் இன் டுகெதர் பத்தி… எந்தக் கட்டுப்பாடும் இல்லாம சுதந்திரமா வாழ்க்கைய அனுபவிக்கலாம்…
குழந்தைங்க கூடத் தேவையில்லாத கமிட்மெண்ட். ஒத்து வரலைன்னா குட்பை சொல்லிட்டு விலகிக்கலாம்… அதை விட்டுட்டு நெறைய செலவு செஞ்சு கல்யாணம் கழிச்சக் கொஞ்ச நாளிலேயே பிரிஞ்சா… செலவுக்குச் செலவு… மன உளைச்சல் வேற… என்ன சொல்றே?
நோ கமெண்ட்ஸ் யா?… என்ன தான் இப்படி ஒரு மறுமொழியைப் பெண் தோழிக்குத் தந்தாலும்… தோழி சொன்னதை எதிர்த்தோ… மறுத்தோ பேசவில்லையே இவள்… என்ற எண்ணமே சங்கரியின் மனதை முள்ளாய்த் தைத்தது. நம் தலைமுறை இப்படி எண்ணியிருந்தால் இவர்கள்தான் இந்த மாதிரி வீண் வம்பு வளர்க்க முடியுமா?
வாடி சங்கரி… வைஷாலி, வைபவ் வாங்க… மூவரையும் குதூகலமாக வரவேற்ற கோமதி…
சுருதி… முகுந்த் இவங்க தங்கறதுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுங்க… ரெண்டு பேருமே… முடிஞ்ச அளவு இவங்களோட நேரம் செலவழிக்கிறா மாதிரிப் பார்த்துக்குங்க…
உங்க வீடு மாதிரி நெனைச்சு சுதந்திரமா இருக்கலாம் கண்ணுகளா… என்ற கோமதியை வைஷாலி, வைபவ் இருவருக்குமே பிடித்துப் போய்விட்டது.
வைஷாலி கல்லூரி முதல் வருடம்… முகுந்த் மூன்றாம் வருடம்… இருவருக்கும் அலைவரிசை ஒத்துப்போக வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்திலேயே அரட்டை அடிக்கத் துவங்கிவிட்டனர்.
பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சுருதி பனிரெண்டாம் வகுப்பிலிருந்த வைபவோடு சகஜமாகப் பழகினாள்.
சங்கரி… கோமதி தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கால நினைவுகளுக்குச் சென்று குதூகலிக்க…
கோமதியின் கணவர், அவரது பெற்றோர் என அனைவரும் தந்த உபசரிப்பில் சங்கரி மட்டுமல்ல வைபவ், வைஷாலியும் நெகிழ்ந்து போயினர்.
கோமு… பேசாம அவர்கிட்ட நீங்க சமாளிச்சிக்கங்கன்னு சொல்லிட்டு இந்த ஊரிலேயே வந்து செட்டிலாயிடலாமுன்னு தோணுதுடி…
சங்கரி சொல்வதில் காரணம் இருந்தது… இவர்களுக்குக் கல்யாணமான புதிதில் ஓரிரு முறை பெங்களூர் வந்துபோன… இருவரின் பெற்றோருக்குமே அந்தச் சூழ்நிலை ஒத்துவராமல் போக… இவர்களை ஊருக்கு வரச்சொல்லி ஒதுங்கிவிட்டனர்.
குழந்தைகளின் ஒட்டுதலில்லாத தன்மையில் நாளடைவில் இவர்கள் ஊருக்குச் செல்வதும் குறையத் தொடங்கியது.
இருவரின் பெற்றோரும் ஒருவர் பின் ஒருவராக இறக்க… ஊரில் இருந்த சொத்துக்களையும் கணவர் விற்றுவிட… சொந்த மண்ணோடு இருந்த தொடர்பே அற்றுப்போனது.
நல்லாத்தாண்டி இருக்கும் சங்கரி… ஆனா பாவம் உன் வீட்டுக்காரர் சாப்பாட்டுக்குத் திண்டாடுவாரே?
சங்கரி சொன்னபோது வேறுவழியே இல்லாமல் ஊருக்குவர ஒப்புக்கொண்டவர்களா இவர்கள்?
தன்னோடு பெங்களூர் திரும்ப இசைவார்களா?… என எண்ணும் அளவுக்கு சுருதியோடும், முகுந்தோடும் ஒட்டிக்கொண்டனர் வைபவும், வைஷாலியும்.
பெரியவர்கள் கோயில்களாகத் தேடிச் செல்ல சிறியவர்களோடு குற்றாலம்… திருப்பரப்பு நீர்வீழ்ச்சி… சினிமா… என்று நாளுக்கு ஒரு இடமாக அழைத்துக் கொண்டு சுற்றினான் முகுந்தன்.
சுருதி மூலமாக கிரிக்கெட், பேட்மிண்டன் என்று விளையாட வைபவுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்க… அவனது ஆன்லைன் ரம்மி மோகமும், மொபைலும் போன இடம் காணப் பொழுதில்லை வைபவுக்கு.
முகுந்துக்கு ஆண், பெண் என ஒரு பெரிய நட்புவட்டமே இருந்தது. அனைவருக்கும் அவன் வைஷாலியை அறிமுகப்படுத்தி வைக்க…
ஏனோ இவர்கள் பழகும் விதம்…
தன் நண்பர்கள் கூட்டத்திலிருந்து சற்றே வித்தியாசமானதாகவும்… அதே சமயத்தில் இன்னதென்று பிரித்தறியா நிலையில் உவப்பானதாகவும் இருக்க…
இங்கு வந்த ஓரிரு நாட்கள் பெங்களூர் நண்பர்களிடம் , ஆன்லைன் சாட் செய்து கொண்டிருந்தவள்… பிறகு மெதுவாகக் குறைத்து… ஹாய் ஆல், குட்டே… குட் நைட் என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
வைஷீ… நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு சொற்பொழிவுக் கூட்டத்திற்குப் போகப்போறோம்…
சுதாமூர்த்தின்னு ஒரு பெண்மணி, அவங்க பேசுறதக் கேட்டா, நேரம் போறதே தெரியாது. நேரடியா இல்லாம, நம்ம தலைமுறைக்குத் தேவையான அறிவுரை, மெஸேஜ் எல்லாமே இருக்கும்.
உனக்கு, எந்த அளவு பிடிக்கும்னு தெரியலை. கிட்டத்தட்ட மூணு மணி நேரம், இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வீட்டுலயே மானேஜ் பண்ணிக்கறயா? நாளைக்கு உங்களை வெளியே கூட்டிட்டுப் போறேன்…
வீட்டுலன்னா, போரடிக்கும் முகுந்த். சுருதி, வைபவோட நானும் வர்றேன். போரடிச்சா நாங்க உங்களைத் தொந்தரவு செய்யாமத் தனியாக் கிளம்பி வந்துடறோம் சரியா?
மனமேயில்லாமல் அவர்களை அழைத்துச் சென்றான் முகுந்தன்.
தங்கள் நண்பர்கள் குழுவுக்கு முதலிலேயே வாட்ஸ் ஆப் மூலமாக இவர்களையும் சொற்பொழிவுக்குக் கூட்டி வரும் தகவலைப் பகிர்ந்த முகுந்த், ஒருவேளை அவர்கள் இடையில் கிளம்பினால் தானும் கிளம்ப நேரிடும் என்று பதிவிட்டிருந்தான்.
டவுனிலிருந்த வெல்கம் மஹால்…
மாலை ஐந்து மணிக்குத் தொடங்கவிருந்த சொற்பொழிவுக் கூட்டத்திற்கு நான்கு மணியிலிருந்தே அந்த ஹால் நிறையத் தொடங்கிவிட்டது.
முகுந்தன் இவர்களுடன் தனது நண்பர்கள் குழு முன்னரே வந்து பிடித்துவைத்த இடத்தில் அமர்ந்தான்.
சுதாமூர்த்தி பேசுவதற்குக் கையில் மைக்கை எடுத்தவுடன் எள் இறைத்தால் ஓசை கேட்கும் அளவிற்குக் கூட்டம் அமைதியானது. முகுந்தனின் அருகில் அமர்ந்திருந்த வைஷாலி ஆர்வமாகக் கவனிக்கத் தொடங்கினாள்.
நண்பர்களே! இன்று நான் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பு ‘தலைமுறைகள்’ அசுரவேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பொருளாதாரமும்… தொழில்நுட்ப வளர்ச்சிகளும்…
சமூகத்தை வளர வைக்கிறதுக்கா… அல்லது வீழ்த்தறதுக்கா…
உதாரணத்துக்கு எங்க தலைமுறையையும், உங்க தலைமுறையையும் இணைத்து நான் சில மணிநேரங்கள் எனக்குத் தெரிந்தவற்றைப் பேசப் போகிறேன். ஆனால் இந்தத் தலைப்புக்கான இறுதி மெசேஜ் உங்களுடையதாத்தான் இருக்கணும்.
கூட்டம் கை உயர்த்தி ஆமோதிக்க… தன் சொற்பொழிவைத் துவங்கினார் சுதா மூர்த்தி…
தலைமுறை இடைவெளிகள்… எவ்வளவு அழகான பதம்… வசதிகளும், தொழில் நுட்பங்களும்… அதிகம் புழக்கத்துல இல்லாத சூழ்நிலைதான் எங்கள் தலைமுறை சந்தித்தது, இன்றோ பிறந்த குழந்தை தொடங்கிப் பெரியவர்கள் வரை அலைபேசியின் ஆதிக்கம் தான்… இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் மலைப்பாம்பு கணக்காக விழுங்கி வைத்திருக்கிறதோ?
வாழ்க்கையின் ஊடே… குழந்தைப் பருவம் தொடங்கி… ஒவ்வொரு பருவமும்… கண்முன் நிறுத்திய விதவிதமான அனுபவங்கள்… அவை தாங்கி வந்த சுகங்கள்… சோகங்கள் ஆச்சரியங்கள்… போன்ற பல நுண்ணிய உணர்வுகள்… எங்கள் தலைமுறை காட்டிய பாதை…
அனுபவங்களை நாங்கள் வாழ்ந்து உணர்ந்தோம்… ஆனால் இன்றைய உங்கள் வாழ்க்கைமுறை… அவற்றை முன்னரே காட்சிப்படுத்தி கட்டுப்பாடுகளற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறதோ?…
ஒருநாள் நம் வாழ்வில் கழிந்து போனாலும்… இழந்த நாள் இழந்ததுதான்… இது எல்லாத் தலைமுறைக்கும் பொதுவே… இழந்த குழந்தைப் பருவத்தை… வளர்ந்து விட்டநிலையில் புதுப்பித்து வாழ முடியாதுதானே!
ஆனால் அதன் அனுபவங்களை மனக்கண்ணில் கொண்டு வந்து சுகிக்க முடியுமே! அதற்கு ஒவ்வொரு பருவத்தையும் அதற்கேயுரிய இயல்புத் தன்மையுடன் கடக்க வேண்டும்.
விளையாட்டு… வாசிப்பு… பொழுதுபோக்கு இப்படி எல்லாத் தேவைகளையும் ஒட்டுமொத்தமாகக் கவனிக்கத்தான் ‘அலைபேசி’ என்னும் ‘அதிசயமனிதன்’ இருக்கிறானே… என்று எண்ணினால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்…
தொழில்நுட்பங்கள்…..
இன்று செயற்கை நுண்ணறிவு, ரோபோ என்று சொல்லப்படும் அனைத்துமே மனிதகுலத்தின் அறிவு ஈந்த பரிசுகள்தாம்…
இயற்கையும் மனிதனை அடிமைப்படுத்தும்… செயற்கையும் அதே வேலையைச் செய்யும்… இயற்கையின் வசப்படுத்தலுக்கும்… செயற்கையின் வசப்படுத்தலுக்கும் நூலிழை வித்தியாசம்தான்.
ஆனால், பக்குவமின்றி கையாண்டால் வாழ்க்கையே சூனியமாகிவிடும். புரியும்படி சொல்ல வேண்டுமானால்,
இயல்பாகப் பயணித்து வாழ்க்கையை உங்கள் வசப்படுத்துங்கள்…
விரைவான தகவல் பரிமாற்றங்கள்… தயக்கங்கள் களைய வைத்தக் கற்றல்களும், தேடல்களும்… தொழில்நுட்பம் ஈந்த இனிய அனுபவங்கள்.
நல்ல விளைபயிர்களின் ஆங்காங்கே புற்கள் இருப்பது போல… இந்த இனிய அனுபவங்களின் ஊடே தேவையற்ற தகவல்களோ…
கலாசாரச் சீண்டல்களோ முன்வரின்… ஒதுக்கி வாழப் பயணித்தால் எல்லாம் சுகமே!
அது உங்கள் கையில் நண்பர்களே! என்று பேசி முடித்தவுடன் கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது.
முகுந்த் எப்படிச் சொல்றதுன்னே தெரியலே எங்களோட திருநெல்வேலி ட்ரிப் ரொம்பப் பயனுள்ளதா அமைஞ்சதா உணருகிறேன், ஆமாண்ணா, அந்த மேடமோட பேச்சு நிறையச் சிந்திக்க வைக்குது… வைபவும், சுருதியும் கோரஸாக வைஷீவுடன் சேர்ந்து கொண்டனர்.
சங்கரி தன் மக்களிடம் எதிர்பார்த்த மாற்றங்கள் வரும் காலம் வெகுதொலைவில் இல்லையோ?

ஆசிரியர் குறிப்பு

பெயர்: நா.பா.மீரா
வயது: 52 கல்வித் தகுதி: வேதியியலில் முனைவர் பட்டம் தொழில்: காப்புரிமைகள் தொடர்பான வெளியீடுகள் தொடர்பான புகழ்பெற்ற நிறுவனத்தில் பொருள் நிபுணராக (SME) பணிபுரிதல்
பொழுதுபோக்குகள்: பார்வையற்றோருக்கான வாசிப்பு மற்றும் பதிவு செய்தல், ஒவ்வொரு சனிக்கிழமையும் திருநின்றவூரில்
 உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று சாத்தியமான சேவைகளைச் செய்தல்
ஆர்வமுள்ள பகுதி: கடந்த இரண்டு வருடங்களாக கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுவது
வெளியீடுகள்: நான் அமுதசுரபி இதழில் பொது மற்றும் கோயில் தொடர்பான கட்டுரைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களுடன் சில நேர்காணல்களை எழுதியுள்ளேன்.
தீபம். நாபாவின் பொன்மொழி புதையல், பொன்மொழிகளில் இருந்து தொகுத்த சிந்தனைகளை கட்டுரை மற்றும் சிறுகதைகள் என் சொந்த வெளியீடுகள்.
  சிந்தனை சுடர்களை பகுதிகளாக வெளியிடுகிறேன்

One Comment on “முனைவர்.நா.பா.மீரா / மாற்றம் ஒன்றே மாறாதது”

Comments are closed.