
அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள் 55
கணேஷ் கூடத்தின் நடுவே ஐஸ் பெட்டியில் கிடந்தான். சடலமான பின்னும் அவன் முகத்தில் அவனுடைய டிரேட்மார்க் புன்னகை உதட்டில் ஒரு சிறுகீற்றாகத் தெரிந்தது. ஐஸ் பெட்டியின் அருகே, அதை லேசாக அணைத்தவாறு தலை கவிழ்ந்து தரையில் அமர்ந்திருந்தாள் சங்கரி. ‘ஒரு வருடத்துக்கு முன்பு அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்னி சாட்சியாய்க் கைப்பிடித்து ‘உன்னை வாழ்நாள் முழுவதும் காப்பேன், உனக்குத் துணையிருப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்தவன் இன்று ‘அம்போ’ என்று என்னைத் தனியே விட்டுவிட்டுப் போய் விட்டானே! நான் இனி என்ன பண்ணுவேன்?’
‘மணமான தினத்திலிருந்து என்னைக் கண்ணின் இமை போல் காத்து வந்தாயே! இருவரும் சேர்ந்து எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம். அதைப்பார்த்துப் பொறுக்காத யமன் பொறாமைப்பட்டுத்தான் லாரி ரூபத்தில் வந்து உன்னைப் பறித்துக்கொண்டானோ?’ என்றெல்லாம் மனதுள் புலம்பினாளே ஒழிய அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரவில்லை. அதிர்ச்சியில் பிரமை பிடித்தவள் போல் ஆகி விட்டாள் அவள்.
சேதி கேட்டுத் திருவண்ணாமலையிலிருந்து வந்தனர் அவள் அண்ணாவும், மன்னியும். “ஐயோ! சங்கரி, உன் கதி இப்படியாச்சே! கடவுள் ஏண்டி உன்னை இப்படிச் சோதிக்கிறார்? என்று ஒப்பாரி வைத்தபடியே அவள் அருகில் ஒடிவந்து அவளை இறுக அணைத்துக்கொண்டே, வராத அழுகையை கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொண்டே புலம்பலானாள் அவள் மன்னி. ஆனால் அண்ணாவோ, கூடப்பிறந்த தங்கையின் கதி இப்படி நிர்க்கதி ஆகிவிட்டதே. .தன்னால் எதுவும் அவளுக்குச் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி உந்தக் கலங்கினான். சோகத்தின் மொத்த உருவாய் மாறி அவள் கையைப்பற்றியவாறே அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று குழம்பினான். பொங்கி வரும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.
அண்ணா தன்னைத் தன்கூடத் திருவண்ணாமலைக்குக் கூட்டிக் கொண்டு போவானோ என்ற ஒர் நப்பாசை சங்கரிக்கு எழுந்தாலும், மன்னியின் முகத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது இதற்கு வாய்ப்பே இல்லையென்று. அப்பா, அம்மாவின் இறப்புக்குப் பிறகு அண்ணன் அவளுக்கு வரன் பார்த்துத் திருமணம் செய்து கொடுத்ததே பெரிய விஷயம். இதற்கு மேல் அவனிடமிருந்து எந்த சப்போர்ட்டும் எதிர்பார்க்க முடியாது.
‘என்னவொரு துரதிருஷ்டக்கட்டை நான்!!! நான் ஆசைப்படுபவர்களெல்லோரும் என்னை விட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். முதலில் அப்பா, அப்புறம் அம்மா, இப்போ அருமைக்கணவன். நான் மட்டும் ஏன் இன்னும் உயிர் வாழ வேண்டும்? என்னை மட்டும் யமன் ஏன் விட்டுவைக்க வேண்டும்?’
திருவண்ணாமலையில் திருமணம் முடிந்த மறுநாளே சென்னையில் குன்றத்தூரில் தனிக்குடித்தனம் வைத்தான் கணேஷ், அப்பாவும், தம்பியும்
அருகில் காட்டுப்பாக்கத்தில் அப்பாவின் தனி வீட்டில் இருந்த போதும். “தம்பி சுரேஷ் ஒரு குடிகாரன். கண்ட நேரத்துக்கும் வீட்டுக்கு வருவான், போவான். அவன் நண்பர்களும் வருவார்கள் சிலசமயம் வீட்டிலேயே மொட்டை மாடியில் குடிப்பார்கள்.. அதனால் அந்த வீடு உனக்குச் சரிப்படாது, சங்கரி” என்று சொல்லி இந்த வீட்டுக்குக் கூட்டி வந்தான். அவனுடன் இருக்கும்போது இந்தச் சிறியவீடு சொர்க்கமாக இருந்தது. இனி என் கதி? கணவனை இழந்த சோகம் நெஞ்சைப்பிழிந்தாலும், அடுத்த வேளை, தன் கதி என்ன, எங்கு போவது, என்ன செய்வது என்ற கவலை விஸ்வரூபமெடுத்து அவளை வாட்டியது. தான் அனாதையாக நிற்பது போலத் தோன்றியது அவளுக்கு.
சுரேஷ், கணேஷின் தம்பி, குடிகாரன், போக்கிரி, பொல்லாதவன் என்றெல்லாம் பெயரெடுத்தவன், அண்ணன் ஆக்ஸிடென்டில் இறந்த செய்தி கேட்டதிலிருந்து ஆஸ்பத்திரிக்குப்போய் சடலத்தை போஸ்ட்மார்ட்டத்துக்குப்பிறகு வாங்கி வந்து, தகனத்திற்கும் மற்ற காரியங்களுக்கும் ஏற்பாடு செய்தான். அண்ணா மீது அவன் எவ்வளவு பாசமும், மரியாதையும் வைத்திருந்தான் என்று வந்திருந்த உறவுகள் அனைவரும் வியந்தனர்.
பதிமூன்றாம் நாள் சுபஸ்வீகாரக் காரியங்கள் முடிந்து, சாப்பாடும் முடிந்தவுடன், சங்கரியின் அண்ணாவும், மன்னியும் ,தங்கள் கடமை முடிந்தது என்பதுபோல், ஊருக்குக் கிளம்பி விட்டார்கள். மாமனார் சபாபதி, அவளிடம் வந்து ,”இதோ பாரம்மா, இனி, நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம். உன் அண்ணனால் உன்னைக் கூட்டிக்கொண்டு போக முடியாதென்பது தெரிகிறது. ஆகவே, நீ எங்களுடன் வந்து விடு. இப்பொழுதே கிளம்பி வா” என்றார்.
அதற்குள் சுரேஷும், “மன்னி, சமையல் பாத்திரங்கள், மற்ற சாமான்கள் எல்லாவற்றையும் பேக் பண்ணி விட்டேன், அண்ணாவின் உடைமைகள், அவன் துணிமணிகள் எல்லாவற்றையும் இரண்டு சூட்கேஸ்களில் வைத்து விட்டேன். நீங்களும் ரெடியானால் நாம் கிளம்பி விடலாம். வண்டிக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டேன்.” என்றான்.
இவ்வளவு நறுவிசாக, அக்கறையாக, பொறுப்பாக இருப்பவனைப்போய் பொல்லாதவன், குடிகாரன், முரடன் என்றெல்லாம் சொல்கிறார்களே என்று வியக்கத்தான் முடிந்தது அவளால். ஒருவேளை, குடிக்க ஆரம்பித்து விட்டால் .ஆளே மாறிவிடுவானோ? பயம் வந்து என்ன பயன்? அவளுக்குத்தான் வேறு வழியில்லையே!
‘நான்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்லவேளை. மாமனார் துணையிருக்கிறார்! தெய்வமாய்ப்போன கணவரும் காப்பாற்ற மாட்டாரா? கணேஷின் இன்ஷுரன்ஸ் பணமும், சேமிப்பும், என் நகைகளும் இருக்கின்றன என் வாழ்வாதாரத்துக்கு. கொஞ்ச நாள் கழித்து என் படிப்புக்கேற்ற ஒரு வேலையைத் தேடிக்கொண்டு ஒர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் சேர்ந்து கொண்டு விடலாம். அதுவரை மட்டும் அந்த வீட்டில் இருக்கலாம். என்றெல்லாம் மனதுள் கணக்குப்போட்டவாறு மாமனாருடனும், மைத்துனனுடனும் காட்டுப்பாக்கம் வீட்டுக்குள் வந்தாள் சங்கரி.
வந்த மூன்றாம் நாள். வீட்டின் சுவற்றையொட்டி வெளிப்புறமாக இருந்த குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தாள். சுவற்றின் மேற்புறமாக இருந்த சிறிய ஜன்னலை யாரோ மெதுவாகத் திறப்பது போன்ற சத்தம் வரவே, கண்களைத்திறந்து மேலே பார்த்தாள். யாரோ எட்டிப்பார்ப்பது போல, இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தது. “யாரது? யார் அங்கே ஜன்னல் பக்கம்?” என்று அவள் பயந்துபோய்க் குரல் கொடுக்கவும், கண்கள் மறைந்து, ஜன்னல் கதவு படக்கென்று சாத்தப்பட்டது. அவசரம் அவசரமாகப் புடைவையைச் சுற்றிக்கொண்டு அவள் வெளியே வந்து பார்த்தால், சற்றுத்தொலைவில் காம்பௌண்ட் சுவரருகே சுரேஷ் மொபைலில் பேசிக்கொண்டே போவது தெரிந்தது.
சீச்சீ! நீ ஒரு குடிகாரன்மட்டுமல்ல. ஒரு காமாந்தகாரனும் கூட. அதனால்தான் உன் அண்ணா என்னை இந்த வீட்டுக்கு வரவிடாமல் தனிக்குடித்தனம் வைத்தாரா? குன்றத்தூரில் என் வீட்டில் இருந்த இரன்டு வாரமும் நல்லவன் போல வேஷம் போட்டாயே! நீ சபலபுத்திக்காரன் , பெண் சபலமுள்ளவன் என்பதால்தான் என்னை உன்னிடமிருந்து இவ்வளவு தூரம் பாதுகாத்தாரா உன் அண்ணா? இனிமேல் நான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் இங்கிருந்து போய் விட வேண்டும். பாத்ரூம் ஜன்னல் கதவை உட்பக்கமாக இறுக்கித் தாழ் போட்டு வைத்தாள் அவள்.
அடுத்தவாரம் ஒரு நாள். மதிய உணவிற்குப்பிறகு தன் அறையில் சற்றுக் கண்ணயர்ந்தாள் சங்கரி. அரைகுறைத் தூக்கத்தில் தன் தலைமுடியை யாரோ கோதி விடுவது போல உணரவே சட்டென்று கண் விழித்தாள். அந்தக்கரம் மெல்லமெல்லக் கீழிறங்கி, கன்னத்தை வருடி, உதட்டுக்கருகில் வருவது போல் தோன்றவே,, படக்கென்று கரத்தைத் தட்டிவிட்டு, எழுந்து உட்கார்ந்தாள். ஒரு கை ஜன்னல் வழியே இழுபடுவதை உணர்ந்து, ஜன்னலருகில் வந்து எட்டிப்பார்த்தாள். ஜன்னலை விட்டு விலகி சுரேஷ் அவசர அவசரமாக எட்டி நடைபோடுவது தெரிந்தது.
“அடச்சீ! என்னவொரு கீழ்த்தரமான ஆள் நீ! மன்னி என்பவள் தாய்க்குச் சமம். ஆனால் நீ இப்படி பெண்பித்துப்பிடித்து அவலமாக நடந்து கொள்கிறாயே! சில நேரங்களில் மன்னி மன்னியென்று மரியாதை தருகிறாய். காமம் தலைக்கேறினால் இப்படித்தான் கண்மண் தெரியாதோ? மாமனாரிடம் இதைப்பற்றிச் சொல்லலாமா? வேண்டாம், அந்த வயதான மனிதரைக் கஷ்டப்படுத்த வேண்டாம். இனிமேல், பகலிலும், கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தூங்குவோம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டாள் அவள். இதையெல்லாம் சொல்லி அழக்கூட நாதியில்லையே என்று தன் அனாதரவான நிலையை எண்ணியெண்ணி நெஞ்சுக்குள் பொருமினாள்.
மூன்று வாரங்கள் அவளுக்கு பயத்திலேயே கழிந்தன. ஒரு புதன்கிழமை இரவு, படுக்கையில் படுத்துக்கொண்டே மொபைலில் ஏதோ பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள், அறைக்கதவைத் தாழ் போடமலேயே. நள்ளீரவில், ஏதோ ஒன்று அவள் கன்னத்தில், கையில், மார்பில், இடையில் ஊர்வது போல் இருக்கவே அவள் அரைத்தூக்கத்திலேயே அந்தப்பூச்சியைத் தட்டி விட்டாள். ஆனால், தட்டிவிடத் தட்டிவிட, விடாமல் அதுவும் மாறி மாறி உடம்பின் பாகங்களில் படரவே, அப்போதுதான் அவளுக்கு உறைத்தது படருவது பூச்சியல்ல, ஒரு ஆணின் கையென்று, சுரேஷின் கையென்று. பளிச்சென்று முழுவதும் முழிப்பு வர, அந்த விரல்களை, கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “சுரேஷ், உன்னைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டேன். இனி நீ என்னிடமிருந்து தப்பிக்கவே முடியாது. இவ்வளவு கீழ்த்தரமானவனா நீ! உன் அண்ணா எத்தகைய உத்தமர்!! அவருக்குத் தம்பி நீ, உடன்பிறந்தவன் நீ என்று சொல்லவே எனக்கு நா கூசுகிறது” என்று அவள் தன்னை மறந்து கோபத்தில் கத்தத் துவங்க, கதவருகில் ஒரு உருவம் பட்டென்று லைட் சுவிச்சை அழுத்த, பளிச்சென்று வெளிச்சம் உள்ளே பரவ, “அப்பா, இங்கே பாருங்கள் உங்கள் பையனின் லக்ஷணத்தை” என்று கதவருகில் நின்று லைட்டைப்போட்ட மாமனாரிடம் சொல்ல வாயெடுத்த சங்கரி, அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய்த் திறந்த வாய் மூடாமல் ‘ஆ ஆ’ என்ற சத்தம் மட்டுமே கேட்க ஸ்தம்பித்துப் போனாள். ஆம். அவள் கட்டிலருகே அவள் மாமனார், கதவருகே சுரேஷ், ஓடிவந்த வேகத்தில் மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தான். “இது எப்படி? என்ன கண்கட்டு வித்தை நடக்கிறது இங்கே!” நடப்பது எதையும் ஜீரணிக்க முடியாமல் தவித்தாள் சங்கரி.
கட்டிலருகே வேகமாக வந்த சுரேஷ், தன் தந்தையை நோக்கி, “உங்களை அப்பா என்று கூப்பிடவே வெட்கமாக இருக்கிறது. எத்தனை முறைதான் உங்களைக் காப்பாற்றுவது? இந்தக்கேவலமான சபலபுத்திதானே அம்மாவை அவமானம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றது. அது போதாதா? இன்னமும் இந்த வயதிலுமா உங்கள் தாபம் அடங்கவில்லை? உங்களைப்பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.” என்றான்.
உடனே சங்கரியைப் பார்த்தான். “மன்னி, இவரிடமிருந்து உங்களைக் காப்பாற்றத்தான் அண்ணா தனிக்குடித்தனம் வைத்தான். நான் கல்யாணமே செய்து கொள்ளவில்லை. ஆனால், இனியும் உங்களை இந்த வீட்டில் வைத்திருப்பது சரியில்லை. மன்னி என்பவள் தாய்க்குச் சமம். உங்களை என் தாயாக வரித்து நான் காப்பாற்றுவேன். என்னை நம்பி என்கூட வருவீர்களா?”
‘நானா தாய்? நீதான் என் தாய். தாயாக என்னைக்காக்கிறாய்’ என்று மனதுள் எண்ணீயவாறே, அந்தத் தாயுமானவனின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு அவனைப்பின் தொடர்ந்தாள் அந்தப் பேதைப்பெண்.
ஆசிரியர் குறிப்பு
புஷ்பா விஸ்வநாதன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அங்கு பணியாற்றிய போது அவர் சார்ந்த துறையின் மீது 500 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்று எழுதியுள்ளார்.
பள்ளிநாட்களிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் எண்பதுகளிலிருந்து கதை, கவிதைகள் எழுதி வருகிறார். இவரது கதைகளும், கவிதைகளும் நவீன விருட்சம் போன்ற இணையதளங்களிலும், குவிகம், விருட்சம், சிறகு போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இசையிலும் ஆர்வம் கொண்ட இவர் கீபோர்டும் வாசிப்பார்.
முனைவர்.நா.பா.மீரா / மாற்றம் ஒன்றே மாறாதது – விருட்சம் நாளிதழ்

அருமையான கதை.
காமத்திற்கு வயது வரம்பு இல்லை.
சபல புத்தி உள்ளவர்கள் எந்த வயதிலும் திருந்த மாட்டார்கள் என்பதுக்கு ஒரு எடுத்துக் காட்டு இந்த சிறுகதை.
கொஞ்சம் பழைய முடிச்சு. ஆசிரியரின் நடையில் தெளிவு.