
விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் ப.மதியழகன் வாசித்த கவிதை எண்: 7 – 10
திரு
நூறோடு நீயும் ஒன்றாய்
தேரை வடம் பிடித்து இழு
கொல்லையில் பூத்த பூவினை
சூடக் கொடு
வெள்ளியோ, செவ்வாயோ
விளக்கேற்றி வை
பெளர்ணமிக்கும், அமாவாசைக்கும்
அன்னதானமிடு
சத்தியத்தின்படி நட
கடவுள் காரியத்திற்கு
உலகமே வடம் பிடிக்கும்
சித்தார்த்தன் புத்தரானதும்
நரேந்திரன் விவேகானந்தரானதும்
கடவுளின் காரியத்திற்காகத்
தான்!
புகழ்
செய்தியைப் படிப்பவர்களுக்கும்
செய்தியைப் படைப்பவர்களுக்கும்
வித்தியாசம் இருக்கிறது
புரட்சி பற்றி பேசுபவர்களுக்கும்
வீதியில் இறங்கி
போராடுபவர்களுக்கும்
வித்தியாசம் இருக்கிறது
ஒரு அரிச்சந்திரன் நாடகம்
மகாத்மாவை உருவாக்கவில்லையா
இந்த நாட்டிற்கு
அறிவியலாளர்களோ
சட்டமேதைகளோ தேவையில்லை
ஒரு மகாத்மா போதும்!
மூங்கில்
இந்த மூங்கில் காடுகளில்
எது புல்லாங்குழல் ஆகுமென்று
கடவுள் கண்டுபிடித்து விடுகிறான்
எனது மூச்சுக் காற்றை
புல்லாங்குழல் இசையாக்கித்
தருகிறது
என் இசை கேட்க
வந்துவிடுகின்றன கோவில் மாடத்து
அறுதலிப்புறாக்கள்
நிராகரிக்கப்பட்டவர்களுக்கு
ஆதரவாய் என்றும் அழுதுகொண்டிருக்கிறது
என் புல்லாங்குழல் மட்டுமே…
கனவு
கற்பாறைகள் கூட
தண்ணீரில் கரைந்துவிடுகிறது
என்னுடைய கனவுகள்
ஜீரணிக்க முடியாதவை
அவை ஏன் தோன்றுகின்றன
என்னை ஏன் துக்கப்படுத்துகின்றன
இந்த கேள்விக்கு விடைகாண
ஆதிகாலத்திற்குச் செல்ல வேண்டும்
பிரபஞ்சத்தின் தோற்றம்
பெருவெடிப்பிலிருந்து தான்
ஆரம்பம் என்றால்
விதியைத்தான் கடவுளென்று
பெயரிட்டு நாம் அழைக்கிறோம்
இதைக் கண்டுபிடிக்க
அறிவியல் எத்தனை
நூறாண்டுகள் எடுத்துக் கொண்டது
அதுவரையில் நம் தோள் மீது
மதமல்லவா சவாரி செய்தது.
