
19.09. 2025 அன்று இணைய வழி கவியரங்கில்
வாசிக்கப்பட்ட கவிதைகள் : 07 to 10
- மூன்றாம் கிளை
அணிலோடு மூன்றாம் கிளைக்கு
தாவி விட்டிருந்தது மனது
தாவலில்கொஞ்சம்
மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன
ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்
தேன் சிட்டுகளின் கூரிய
அலகுகள் உள்ளிருந்து நீண்டு
உதடுகளை நிமிண்டின
சிறகுகளை ஏந்திச் செல்லும் காற்றே
மனம் என்பது உனது வாகனமா?
ஒளியில் ஏற்றி பால்வீதியில் பறக்க விடு
அந்த சாத்தானின்
அம்சத்தை என்று
கூச்சலிட்டுப் போனது அது
- சிதறல்கள்
நாவுக்கரசரே என்னதான் பதியம் பாடினாலும்
கொரானாவிலிருந்து நீர் தப்ப முடியாது
போலிருக்கிறதே
நான் எந்த கொரானாவைச் சொல்கிறேன் என்று
நீர் புரிந்து கொள்வீர்தானே புத்திசாலி
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கின வேனிலும்
மாசுவண்டறை பொய்கையும் போன்றதே
அடடா ஒரு கருப்பாடு போல்
குறுக்கவும் மறுக்கவும் துள்ளி விளையாடுகிறதே
கயமைகளைச் சுமக்கும் இந்த பொழுது
நீண்ட கைப்பிடி கொண்ட குவளை நிறைய
தழுதழும்பியிருக்கும்
அடர்சிவப்புநிற திரவத்தை
அருந்தி முடித்தபின்
பழரசம் பிரமாதம் என்கிறான்
கார்ப்பரேட் முதலாளி
திரவம் சொல்கிறது
நான் குருதி குருதி
வாசலில் நிற்கும் பன்னீர் மரத்தை
மொய்த்து செல்லும்
நூறுவிழிகளில்
ஒன்றும் அகலவிரியவில்லை
- வித்தியாசம்
உன் மீது விழுந்த மழைத்துளி தான்
என் மீதும் விழுந்தது
ஆனால் நீ ஆசிர்வதிக்கப்பட்ட வன் ஆனாய்
நீ குடித்த பானகத்தை தான்
நானும் குடித்தேன்
உனக்கு சுவைக்கிறது
எனக்கு கசக்கிறது
உதிரும் பூ கூட
ஏந்திய என் கரங்களில்
ஒரு நாளும் விழுந்ததில்லை
உன் தலையில் தான் விழுகிறது
பார்க்கும் மனிதர்களெல்லாம்
உனக்கு தேவர்களாக
எனக்கு அசுரர்களாக
காட்சி தருகிறார்கள்
ஒரு கண்ணில் வெண்ணையையும்
ஒரு கண்ணில் சுண்ணாம்பையும்
வைத்துக் கொண்டு தான் பார்க்கிறது
இந்த வாழ்க்கை
நீ அதிர்ஷ்டசாலி
கடவுளின் பக்கத்தில்
நான் அசுரர்களின் பக்கத்தில்
போகட்டும் இவர்களும் கொஞ்சம்
பிழைக்க வேண்டும் தானே!
- மனது
வெளியில் இருக்கும் மனது
எப்படி உள்ளே வருகிறது
என்று கேட்டால்
நான் என்ன பதில் சொல்வது?
உள்ளேயிருக்கும் ஒன்று
காலியாகி கொண்டிருக்கிறதென்று
வேண்டுமானால் சொல்லலாம்
ஒரு பறவையின் வசிப்பிடத்தை
திறந்த கூடென்றும் அழைக்கலாம்
ஆனாலும் அது அவ்வளவு
பொருத்தமாக இராது
கூப்டுக்குள் நுழைந்து
வெளியேறும் பறவை
ஒரு இறகோ
ஒரு மின்மினியோ
சிறி தானியமோ
என்று ஏதாவதொருபிரியத்தை
மிச்சம் வைத்து விட்டுத் தானே செல்கிறது
நீங்கள் எவ்வளவுதேடினாலும்
அங்கே
ஒரு கபட புன்னகையை
காணமுடியாது
வேண்டுமானால்
வெது வெதுப்பாக உருளும்
ஒரு வெண்முட்டையை
உள்ளங்கையில் ஏந்தி
உருட்டி விளையாடலாம்
