
- என்னுடைய எளிமையான பிரார்த்தனை
எனக்கு மிக மிகப் பிரியமானவராகிய பேரன்பிற்குரிய பப்பாவின் புனிதமான காலடிகளை நான் வணங்குகிறேன். பேசுவதற்குரிய விஷயம் எதுவும் என்னிடம் இல்லாத காரணத்தினால் சாதாரணமாக நான் ஒன்றும் பேசுவதில்லை. நான் யாவரிடமும் சரியான முறையில் அன்பு செலுத்த முயற்சி செய்கிறேன், அதாவது, அனைவரையும் பப்பாவின் விவித அவதாரங்களாகவே கண்டு அன்பு செலுத்த விரும்புகிறேன். இதில் நான் நூறு சதவீத வெற்றியை அடைந்து விட்டதாக என்னால் உறுதியாகக் கூற இயலாது, ஆனாலும், என்னுடைய முயற்சியை நான் கைவிடவில்லை. நம்முடைய முயற்சி அதிகரிக்கும்தோறும், நமது ஆனந்தமும் அதிகரிக்கிறது. நாம் ஒருவரை முழுமையாக சிநேகிக்கையில், நமக்கு மிகுந்த ஆனந்தம், உண்டாகிறது, நம்மால் அனைவரையுமே சிநேகிக்க முடிந்தால் நம்முள் எல்லையற்ற ஆனந்தம் பொங்கிப் பெருகும். அதே போல், ஒருவரால் சிநேகிக்கப் படுவது மிகப் பெரிய ஆனந்தமென்றால், அனைவராலும் சிநேகிக்கப் படுவது அளப்பரிய ஆனந்தத்தைத் தரவல்லது. இது சிநேகம் மற்றும் ஆனந்தத்தின் விளையாட்டேயாகும்.
உண்மையான சிநேகம் என்பது, மற்றவரையும் நாமாகவே கருதி, நாம் நம்மை சிநேகிப்பது போலவேஅவரையும் சிநேகிப்பது தான். மற்றவர் வேறு ஒருவராகத் தோன்றினாலும், உண்மையில் நாம் அனைவரும் ஒன்றேயாவோம். சரியாகச் சொல்வோமானால், இந்த விரிந்து பரந்த அண்டவெளி முழுமையுமே நமது பேரன்பிற்குரிய பப்பாவின் ஸகுண ஸ்வரூபத்தின் வெளிப்பாடேயாகும், இந்த வெளிப்பாட்டின் ஒவ்வொரு அணுவினுள்ளும் அவரே இருக்கவும் செய்கிறார். நாம் அனைவரும் ஒன்றே, அதாவது, பப்பாவின் விரிந்து பரந்த அண்டவுடலின் கூறுகளேயாவோம். அந்த அண்டவெளிப்பாட்டிலிருந்து விலகி நின்று, உங்கள் அனைவரியும் பப்பாவின் கணக்கற்ற விவித உருவங்களாகக் காண்பது எனக்கு மிகுந்த ஆனந்தத்தையளிக்கிறது. இப்படியே தொடர்ந்து அனைவரையும் நம்மால் சிநேகிக்க இயன்றால், அதுவே நாம் செய்யும் மிகச் சிறந்த செயலாகும். நாம் எதுவுமே பேச வேண்டிய தேவையில்லை; நாம் யாருக்கும் எதற்காகவும் நன்றி கூற வேண்டியதுமில்லை, ஏனென்றால் நம்முடைய பற்றுவரவனைத்துமே பேரன்பிற்குரிய பப்பாவுடனே தான் நடக்கின்றன. இரண்டே இரண்டு தான் நடைமுறையிலிருக்கிறது, அதாவது, நானும், பல்வேறு விதமான தோற்றங்களில் காட்சியளிக்கின்ற என்னுடைய பேரன்பிற்குரிய பப்பாவும் தான். எண்ணிறந்த உருவங்களின் வாயிலாகத் தான் விளையாடுகின்ற விளையாட்டில், பப்பா , அந்த உருவங்களில் தன்னையே மறைத்துக் கொள்கிறார். அறியாமையாகிய முகமூடியை அந்த உருவங்கள் ஒவ்வொன்றின் மேலும் இட்டு, தான் உண்மையில் அதுவல்ல என்பது போல் தோற்றமளிக்கிறார். நான் என்ன செய்கிறேனென்றால், நான் உங்களைக் கண்டவுடனேயே என்னுடைய தலையை உங்கள் பாதகமலங்களில் வைத்து வணங்குகிறேன், ஏனென்றால் நீங்கள் அனைவருமே பேரன்பிற்குரிய பப்பாவின் அவதாரங்களேயல்லவா?
இன்றைய தினத்தில் என்னுடைய ஒரே பிரார்த்தனை என்னவென்றால், உங்கள் அனைவரையும் பேரன்பிற்குரிய பப்பாவின் விவித உருவங்களாகக் காணும் அனுபவத்தில் நிலைத்து நின்று, அதே சமயம், அவருடைய எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான இருப்பினை உணரவும் வேண்டும். உங்களில் யாரெல்லாம் உண்மையையறிய அவாவுறுகிறீர்களோ, அவர்கள் விருப்பத்திற்கிணங்கி அவர்களை மூடியிருக்கும் அறியாமையாகிய முகமூடியை விலக்கி, உங்களைத் தன்னோடு ஐக்கியப்படுத்தி, அதன்மூலம் நீங்கள் இப்போது உங்களுடைய அறியாமை காரணமாக அனுபவிக்கும் துன்பங்களிருந்து உங்களை விடுவிக்குமாறு இந்த சந்தர்ப்பத்தில் நான் பேரன்பிற்குரிய பப்பாவிடம் தொழுது வேண்டிக் கொள்கிறேன்.
அவரோடு நமக்கிருக்கும் ஐக்கியத்தினை உணர்ந்து நாம் அனைவரும் பேரானந்தத்தில் திளைக்குமாறு பேரன்பிற்குரிய பப்பா அருள்புரிவாராக.
