
பரபரவென இயங்கிக் கொண்டிருந்தாள்; ஹேமி .பூந்தி தேய்த்து சீராவில் போட்டு அவ்வப்போது கிளறி கொடுத்துக் கொண்
டிருந்தாள். முந்திரியும் பாதாமும், பிஸ்தாவும் திராட்சையும் பிஸ்தாவும் நெய்யில் வறுத்து கொட்டியாயிற்று. லட்டு உருட்டி பிடித்துவிட்டால் வேலை முடிந்தது. வீடு முழுவதும் ஏலமும் ஜாதிபத்திரியும் பச்சைக்கற்பூரமும் மணந்து கொண்டிருந்தது. பெண்கள் சஹானா வரும் அஹானாவும் கல்லூரி விடுதியிலிருந்து நேற்றே வந்து விட்டிருந்தார்கள். தீபாவளிக்கு புது உடுப்புகள் வாங்க, கடைவீதிக்கு அவருடன் சென்றிருந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் சுபாங்கனும் ஸ்நேகாவும் வந்து விட்டால் வீடு அமளி துளிப்படும். பேச்சும் சிரிப்பும், கிண்டலும் கேலியுமாக வீடு அமர்க்களப்படும்.
இரவு உணவு சமைத்தாகி விட்டது. பால் பாயசசமும், சின்னவெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு பொரியலும், தீபாவளி இரவு உணவில் முக்கியம். அவர்கள் வீட்டு வழக்கம் அது.
‘அம்மா! பிள்ளைகள் வர நேரமாயிடுத்து. நீங்க வேற சேலை உடுத்தலையா? நான் கிளம்பறேன். நாளை ஒரு நாள் லீவு போட்டுக்கறேன். தீபாவளி நோம்பு கழித்து நாளை மறுநாள் தான் வருவேன்’ என்றாள்’, கோமதி. ‘என்னிக்கும் தாண்டி வேலை. நிதானமாக வா. புது உடுப்பு இனிப்புகள் காரம் பட்டாசு மத்தாப்பு எல்லாம் பையில் போட்டு வைச்சுருக்கேன். மறக்காம எடுத்துட்டு போ. லட்டு மட்டும் அப்புறமா எடுத்துக்கோ’ என்றபடி கூடுதலாக அவள்கையில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை அவள் கையில் வைத்து அழுத்தியபடி’ தீபாவளி வாழ்த்துகள். நல்லபடியாக கொண்டாடு’ என்று அவளை அனுப்பி வைத்தவள்; லட்டு உருண்டைகளை அழகாக பிடித்து வைத்து சம்படத்தில் போட்டாள்.
இவ்வளவு நேரம் வேலை பார்த்ததால் அயர்வாக இருந்தது. குளித்துவிட்டு புடவை மாற்றலாமா; என்று யோசித்த நேரம், அழைப்பு மணி ஒலிக்க, சுபாங்கன் தான் மனைவி ஸ்னேஹா, பேரன் விபுவுடன் நின்றிருந்தான். ‘வீடே ‘கம கம வென ஏலக்காய் வாசனையில் ‘சும்மா ‘கும்’மென மணக்கிறது. அத்தை லட்டு பண்ணியிருக்காங்க’ என்றபடி விபுவை ஹேமியிடம் தந்தாள். பேரனை ஆரத்தழுவி உச்சியில் முத்தமிடும் சமயம் விபு’ போ! பாட்டி! இறக்கிவிடு; என்னை. ஒரே வேர்வை வாசனை’ என்று மழலையில் சொல்லிய வண்ணம், முகத்தைப் முறித்துக் கொண்டே அவளிடமிருந்து விலகி ஓடியே போனான்.
இரவு சாப்பாடு தயார். ஸ்நேஹா! உணவு மேசையை சித்தமாக்கு. நான் ஒரு நிமிடத்தில் குளித்து விட்டு வருகிறேன்.’ என்று திரும்பும் முன், அஹானாவின் குரல்’ அம்மா! நீ பிறகு குளி.பசி வயிற்றைக் கிள்ளுகிறது. வெளியே ஒன்றும் சாப்பிடவில்லை. அண்ணன் வந்தாச்சா?’ என்று கேட்டபடி இரவு உணவுக்குத் தயாராக; உணவு பரிமாறுவதில் முனைந்தாள் ; ஹேமி எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது உற்சாகமாகத்தான் இருந்தது. உணவு அருந்தும் போதே’ வாங்கி வந்த உடுப்புகளை பார்த்து மகிழ்ந்தோம். ‘அம்மா! இந்த வருடம் உனக்கு இரண்டு பட்டு புடவைகள். அப்பா ஒன்று; நான் ஒன்று. ஒன்று நல்லியிலும், இன்னொன்று போத்தியிலும். அதிர்ஷ்ட காற்று அடிக்குது, உனக்கு; என்று அஹானா, தான் சம்பாதிக்க ஆரம்பித்ததை சந்தடி சாக்கில் காண்பித்துக் கொண்டாள். ஸ்நேஹா, ‘ அத்தை உங்களுக்கு சந்தேரி ஸில்க். பாருங்கள்! நம் இருவருக்கும் ஒரேமாதிரி வாங்கினேன். ‘ என்று காண்பிக்க; ஹேமிக்கு மூன்றும் மிகவும் பிடித்திருந்தது. “அம்மா! தீபாவளிக்கு எந்த புடவை கட்டப் போகிறாய்? ‘ என்று சுபாங்கன் கேட்க’ தெரியவில்லை! ஏதோ ஒன்று நாளை காலையில், ஒன்று மாலை, இன்னொன்று நோம்புக்கு’ என்று ஹேமியின் கணவர் ஶ்ரீ வத்சன் சுலபமாக விடையளித்தார். அவரவர் அரட்டை கச்சேரியில் மூழ்க; ஹேமிக்கு அடுப்படி வேலை முடிய ன இரவு பதினொன்று மணி ஆயிற்று. பேரன் விபுவுடன் அவள் கணவர் ஶ்ரீ வத்சன் பேசி சிரித்துக் கொண்டிருப்பது காதில் விழ; ‘ரூமில் படுத்தால், தூங்கிவிடுவோம்’ என்ற அச்சத்திலும், ‘ இந்த நேரத்திற்கு மேல் குளிக்க அசிரத்தையாகவும் இருக்க; அப்படியே சோஃபாவில் சரிந்து உறங்க ஆரம்பித்தாள்.
திடுக்கிட்டு எழுந்தவள் மணியைப் பார்க்க மணி மூன்றரை என்று காண்பிக்க, காஃபிக்கு டிகாஷன் போட்டவள், ஒரு முறைமைக்கு அடுப்புக்கு கோலமிட்டு வென்னீருக்கு தவலையை அடுப்பில் தூக்கி வைத்தாள். எல்லா புது உடுப்புகளையும் மஞ்சள் தடவி பூஜை அலமாரியில் அடுக்கி இஞ்சி லேகியம் இனிப்புகள், மத்தாப்பு பட்டாசு எல்லாவற்றையும் எடுத்துவைத்து விளக்கேற்றி நமஸ்கரித்தவள்; குழந்தைகளை எழுப்பி எல்லோருக்கும் தாம்பூலம் கொடுத்து தலைக்கு எண்ணைய் வைத்தாள். அடுத்து அடுப்படி வேலையில் மூழ்கிவிட்டாள். ஶ்ரீ வத்சன் துரிதப்படுத்த கிடைத்த ஒரு இடைவெளியில் கங்கா ஸ்நானம் செய்து, நைட்டியில் புகுந்து கொண்டு, மீண்டும் சமையல் அறையில் இயங்க ஆரம்பித்தாள். எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்து சொல்லிக் கொண்டது , காதில் விழுந்தது.
தீபாவளி இனிப்புகளை கையில் எடுத்துக் கொண்டவாறே, எல்லோரும் ஹேமிக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியவாறே காபிக்கு சமையலறைக்கு படையெடுத்தனர். உற்சாக அலை இல்லம் முழுவதும். பேரன் விபுவின் ஆசைக்கு இணங்கி அரைமணிநேரம் அவனுடன் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தாள். அடுத்தடுத்து காலை சிற்றுண்டி , பகல் உணவு, விருந்தினர் வருகை என்று நாள் போனதே தெரியவில்லை.
மாலை , அந்தி சாய கோமதி புது சேலையில் ஹேமியிடம் ஆசிவாங்க வந்தவள், ‘ இவளுடைய புடவைகளைப் பார்த்து’ எல்லாம் நல்லா இருக்கு. ஆமா! நீங்க ஏன் புது புடவை கட்டவில்லை? ‘ என்று கேட்க; அப்போதுதான் ஹேமிக்கே தோன்றியது’ ‘ஆமாம்! நான் ஏன் புதிது உடுத்திக் கொள்ளவில்லை? போன வருடம் வரை அவள் அத்தை தொணதொணத்துக் கொண்டே இருப்பாள்’ புதுசு கட்டிட்டு அப்புறமா வேலை செய், என்று.’ அத்தையோடு தீபாவளி புதிசும் போச்சா’ என்று நினைத்துக் கொண்டவள், ‘புதிது கட்டிக்கோ; என்று சொல்ல, இப்போது அத்தை இல்லை’ என்று கோமதியிடம் மெல்லிய குரலில் சொல்ல; பின்புறம் வந்து நின்ற ஶ்ரீ வத்சன். ‘ இப்போது த புதிசு உடுத்தி வா; பிள்ளையார் கோயில் சென்று வரலாம்’ என்று கனிவுடன் சொல்ல ஹேமி புன்னகைத்தாள்.

Yathaartham arumai