
வனதுர்கை கோவிலில் அன்று விஜயதசமி பூஜைகள் விமர்சனமாக
நடந்துகொண்டிருந்தது. நான் கோவிலுக்குச் சென்று அம்மனை வேண்டிக்கொண்டேன்..
‘தாயே, இன்று புதுமனை புகு விழா நடத்தி உன் எல்லைக்குள் வந்திருக்கிறோம்.
இரண்டு அடுக்கக வீடுகள் வாங்கி இரண்டையும் விற்க நேர்ந்தது. இந்த
தனிவீடாவது எங்களுக்கு நிலைத்திரு்க்கும்படி அருள் பாலிக்கவேண்டும்’
எனக்குத் தெரிந்ததும் என்னால் முடிந்ததும் அவ்வளவுதான். தாய்
இறந்துபோக தந்தை மறுமணம் செய்துகொண்டு பாராமுகமாக என்னை
வளர்த்த தாத்தா ஊட்டிய பக்தி. உறுதியான நம்பிக்கை..
முதல்நாளே அருணாவும் அரவிந்தும் குறைப்பட்டுக் கொள்ளத்
துவங்கிவிட்டார்கள்.. ‘எல்லாரும் தனிவீட்டிலிருந்து அபார்ட்மெண்டுக்கு குடிபோகிறார்கள்.
எல்லாரும் கிராமத்திலிருந்து நகரத்துக்கு போகிறார்கள். நாமென்னடாவென்றால்
நகரத்தைவிட்டு கிராமத்துக்கு வந்திருக்கிறோம்..ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ்
வருகிறது. ஸ்கூட்டரில் போனால் வழிநெடுக ரோடு குண்டும் குழியுமாயிருக்கிறது.
மனுஷ நடமாட்டமே இல்லை. ஒரு பெப்சி குடிக்கணும்னாக்கூட பக்கத்துலே
கடை கண்ணியில்லை’
“வீடுகள் நிறைய வர வர கடைகள் வந்துரும். விடுகள் வர வர
மனிதர்கள் நடமாட்டம் அதிகமாகும். அப்பார்ட்மெண்ட் லட்சணத்தைப்
பார்த்தீங்க இல்லையா?….. அதுக்குத்தான் தனி வீடு வாங்கிட்டு
வந்திருக்கோம். ரெண்டு பேரிடமும் செல்போன் இருக்கு. ஸ்கூட்டர் இருக்கு.
சிடிக்கு போறது ஏதோ காஷ்மீருக்கு நடந்து போவதைப் போல் அலுத்துக்
கொள்கிறீர்கள். ஒண்ணே கால் கோடிக்கு கேட்ட் கம்யுனிட்டியில் வில்லா வீடு
வாங்கி அதில் இருக்கச் சொன்னால் உங்களுக்கு வலிக்கிறதா?” பிள்ளகளின்
வாயை அடைத்தேன்.
அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயமிருந்தது. வயலாக இருந்த இடத்தை
லே-அவுட்டாக மாற்றியிருக்கிறார்கள். மொத்தம் நானூறு வீடுகள். இதுவரை சுமார்
எழுபது வீடுகள்தான் கட்டி விற்றிருக்கிறார்கள. அதுவும் இங்கொன்றுமாக
இருக்கின்றன.. லே-அவுட் போட்டவர்கள் பிரபல பில்டர். நாட்கள் கூடக்கூட விலை
அதிகமாகும். நமக்கு வேண்டியபடி கிடைக்காதென்பதால் வீடைக் கட்டி முடிக்கச் சொல்லி
குடிவந்துவிட்டோம். லே-அவட்டின் நாற்புறத்தில் ஒருபுறம்தான் காம்பௌண்டு சுவர்
எழுப்பியிருக்கிறார்கள். பல இடங்களில் இன்னும் சர்வே கற்கள் தரையில்
உட்கார்ந்திருக்கின்றன.. தொலைவில் தென்னந்தோப்புகள் வாழைத் தோட்டங்கள்
தெரிகின்றன. மெயின்கேட்டுக்கு வரும் வழியில் கோழிப்பண்ணைகளில் கோழிகள்
கொக்கரித்துக்கொண்டேயிருக்கும். இப்போதைக்கு கிராமம் போலத்தானிருக்கிறது.
புதிதாக குடிவந்திருக்கும் பல வீடுகளின் வாசலில் கார் நிற்கிறது.
மூன்று கிலோமீட்டர் தள்ளி ஒரு பெரிய மால் இருக்கிறது. செல்போனில்
அழைத்தால் குண்டூசியிலிருந்து கார் வரை எல்லாமே வீட்டுக்கு
கொண்டு வந்து தருகிறார்கள். சற்று தாமதாகவேனும் யூபர், ஓலா வாகனங்கள்
வருகின்றன. புதிதாக குடி வந்திருப்பவர்களில் இரண்டு டாக்டர்கள் இருப்பதாக
கட்டுமானக் கம்பெனியின் மேனேஜர் சொன்னார். அவர்களுடைய கைப்பேசி
எண்களை ரிசப்ஷனில் நோட்டீஸ் போர்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
நகரத்தின் வசதிகளும் உண்டு.
இப்படி சமாதானப்படுத்துவதற்கும் சாமதானப்படுவதற்கும் காரணம்
அடுக்கக வீட்டுக்கும் எங்களுக்கும் ராசியில்லை. அப்படி நினைக்கிறேனே தவிர உண்மை
என்னவென்றால் பில்டர்கள் செய்கிற அடாவடிதான். முதலில் ஒரு
அபார்ட்மெண்ட் வாங்கினோம். ஜன்னல்களுக்கு கதவில்லை. பில்டரிடம்
கேட்டபோது ‘அக்ரிமெண்டில் ஜன்னலுக்கு கதவு வைக்கவேண்டுமென்று
எங்கேயுமில்லை’ என்று சப்பைக்கட்டு கட்டினார்கள். எல்லாரும் சேர்ந்து
நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இரண்டு வருஷம் கழித்துப் பார்த்தால் பலத்த மழை பெய்தால் சுவர் மூலைகளில்
தண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதன்கூட மேலடுக்குகளின் வீட்டுக் கழிவறைத்
தண்ணீரும் சேர்ந்து கொண்டது. வீடே நாற்றமடித்தது. அபார்ட்மெண்ட் உரிமையாளர்கள்
அனைவரும் சேர்ந்து கட்டிடக் கம்பெனிக்குப் போய் கூச்சல்போட்டோம்.
அபார்ட்மெண்ட் வாங்கும்போது இருந்த அதே ஆட்கள்தானிருந்தார்கள்.
ஆனால் ‘பழைய கம்பெனி பார்ட்னர்கள் பிரிந்துவிட்டார்கள். கம்பெனி பெயர் அதுவேதான்.
ஆனால் வேறு பார்ட்னர்கள் சேர்ந்திருக்கிறார்கள்..- ஒன்றும் செய்ய
முடியாது’ என்றார்கள்.. அடியாட்களை வைத்து என் கணவரையும் இன்னும்
சிலரையும் மிரட்டினார்கள். சனியன் தொலைந்தால் போதுமென்று அடிமாட்டு
விலைக்கு விற்றோம். நிறைய பணநஷ்டம். ‘உன்னை நம்ப நம்ப சோதிக்கிறாயே
என்று அம்பாளிடம் முறையிடுவேன். அவளுக்கு என் குரல் கேட்கவில்லையோ?
என்று கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்வேன்.
இரண்டாவது அபார்ட்மெண்ட் இன்னொரு விதத்தில் கொள்ளிக்
கட்டையால் தலைசொரிந்துகொண்ட கதையானது. எங்கள் வாசலுக்கு
எதிரிலிருந்த அபார்ட்பெண்ட் திங்கள் முதல் வியாழன் வரை பூட்டிக்
கிடக்கும். வெள்ளிக்கிழமை மாலையில் ஆண் பெண் ஜோடிகள் இரண்டு
மூன்று வரும். லோ நெக் ஜாக்கெட், பிறப்புறுப்புக்கு இரண்டங்குலம் மேலே
லோ-ஹிப் சேலை கட்டிக்கொண்டு முப்பதிலுள்ள பெண்கள் வருவார்கள்,
தொடைகளைக் காட்டும்படி அரை ட்ராயருடன் இருபதைக் கடந்த
பெண்கள் வருவார்கள். வெள்ளி இரவு துவங்கி ஞாயிறு மாலைவரை
குடி, கும்மாளம், பலத்த பாட்டுச் சத்தத்தோடு பொழுதைக் கழிப்பார்கள். நடு நடுவே
ஸ்விக்கி, சொமாட்டோ மூலமாக டிபன்,காபி சாப்பாடு வரும். அதைவாங்கிக்
கொள்ள அலங்கோலமாக பெண்கள் வாசலுக்கு வருவார்கள். வெட்கம் கெட்ட
முண்டைகள். மாமிசம் சாப்பிடுகிறோமென்பதற்காக அதை கழுத்திலா
கட்டிக் கொள்வார்கள்? ஒரு காவல் துறை அதிகாரி அடிக்கடி வருவார்.
ஒவ்வொருமுறையும் அவருடன் வரும் பெண் மாறியிருப்பாள். அரசியல்வாதிகள் ஒரு
சிலர் வந்துபோனதாக மற்றஅபார்ட்மெண்ட்காரர்கள் சொன்னார்கள்.
குடியிருப்போர் சங்கத்தின் மூலமாக எதிர் வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு
என் கணவரும் மற்றும் சிலரும் பேசினார்கள். ‘என்னுடைய அபார்ட்மெண்ட்.டில் என்ன
நடக்கிறதென்பது உங்களுக்குச் சம்மந்தமில்லாத விஷயம். அபார்ட்மெண்டில் ஒவ்வொருவர்
ஒவ்வொரு மாதிரியிருப்பார்கள்.. நீங்கள்தான் அனுசரித்துப் போகவேண்டும்.
உங்களால் முடியாதென்றால் அபார்ட்மெண்டுக்கு குடிவரக்கூடாது. தனி
பங்களாவில் குடியிருக்கவேண்டும்’ என்று பதில் வந்தது..
அந்த மனிதர் . அரசு ஒப்பந்தக்காரர்.. எதிர் கட்சியிலிருந்தாலும் அமைச்சர்களுக்கு மிகவும்
வேண்டியவரென்பது. பிறகு தெரிந்தது.
பருவப் பெண்ணையும் பையனையும் வைத்துக் கொண்டு அந்த
அபார்ட்மெண்டில் எப்படியிருப்பது? அபார்ட்மெண்டை வாடகைக்கு விட்டுவிட்டு
வேறு போர்ஷனோ தனிவீட்டுக்கோ போய்விடலாமென்றேன். ‘எதிரே நடப்பதைப்
பார்த்தால் வாடகைக்கு வருகிறவர்கள் மட்டும் இங்கே இருப்பார்களா? என்ன
பேசுகிறாய்?’ என் கணவர் கடிந்து கொண்டார். ‘மூன்று மாதம் பொறுத்துக் கொள்.
இந்த வீட்டையும் விற்றுத் தொலைப்போம். நமக்கு சொந்த அபார்ட்மெண்டுக்கு
கொடுப்பினை இல்லை போலிருக்கிறது’ என்றார் என் கணவர்.’ அபார்ட்மெண்டை
விற்பதாக குடியிருப்போர் சங்கத்தில் தெரிவித்தோம். விளம்பரம் கொடுத்தோம்..
எங்களுக்கிருந்த சலிப்பில் சனி விட்டால் போதுமென்று சீரியல் நடிகை ஒருவருக்கு
வந்த விலைக்கு விற்றுவிடலாமென்று முடிவு செய்தோம், ஒருநாள் எதிர் அபார்ட்
மெண்ட் உரிமையாளரிடமிருந்து போன் வந்தது. என் விலைக்கு விற்கப் போகிறீர்கள்
என்று கேட்டார். சொன்னோம். ‘அவசரப்படாதீர்கள். நீங்கள் சொல்லும் விடையைவிட
முப்பதாயிரம் அதிகமாக விற்றுத் தருகிறேன். எனக்குப் பத்தாயிரம் கொடுப்பீர்களா?
என்றார். ஒப்புக்கொண்டோம்.. நாற்பதாயிரம் அதிகமாக ஒரு புது நடிகைக்கு விற்றுக்
கொடுத்தார். அவருக்கு ஒப்புக்கொண்டபடி பத்தாயிரம் கொடுத்தோம். . .
நாங்கள் விற்ற அபார்ட்மெண்ட் மிக வசதியானது… முதல்மாடி. லிப்ட் வேலை
செய்யவில்லையென்றாலும் மாடிப்படியேறி சென்றுவிடலாம். தண்ணீர் தட்டுப்பாடு
கிடையாது.. மாடியிலிருந்து கீழே இறங்கிவந்தால் வீட்டுக்கு வேண்டிய அத்தனை
பொருட்களையும் வாங்க வசதியாக கடைகள். எனக்கு துக்கம் தாங்கமுடியவில்லை.
அம்பாளிடம் மீண்டும் முறையிட்டேன். ‘ஏன் இப்படி இம்சிக்கிறாய்? நானும் என்
கணவரும் என்ன பாவம் செய்தோம்? எங்களுக்கு மட்டும் வில்லங்கம் ஏன் வீடு
தேடி வருகிறது? நட்டப்படுத்துகிறாய்? ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏன் துரத்துகிறாய்
?குடிசையாய் இருந்தாலும் சொந்தமாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.
இத்தனை சிறிய ஆசையை நிறைவேற்ற உனக்கு மனமில்லையா.?’ பூஜை செய்யும்
போதெல்லாம் தெய்வத்திடம் மன்றாடினேன். தாத்தாவை நினைத்துக் கொண்டேன்.
தொண்ணூறு வயது வரை வாழ்ந்த தாத்தா சொல்வார். ‘பிரார்த்தனைகள்
வீண்போகாது. நம்மைப்போல் எத்தனைபேர் அம்பாளிடம் கோரிக்கை வைத்திருப்பார்கள்?
அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்ற காலதாமதம் ஆகத்தானே செய்யும்?
நீ கேட்டது கிடைக்கவில்லையென்று கோபமோ அவநம்பிக்கையோ வரக்கூடாது.
நன்றே வரினும் தீதே விளைகினும் நயந்தேன் உன் பாதம்’என்று அபிராமிப் பட்டரைப்
போல உறுதியான மனமிருக்கவேண்டும். அம்பாள் நிச்சயம் கைகொடுப்பாள் என்பார்.
இருந்தாலும் மனம் சங்கடப்படத்தானே செய்கிறது?.
‘உலகத்தில் எத்தனையோ பேர் மேலே வானம் கீழே பூமி என்று வாழ்கிறார்கள். கடன்
வாங்கவும் கட்டுவதற்குமாவது கடவுள் நமக்கு படியளக்கிறான். எப்படியும் வாழ்நாள்
முழுக்க கடன் கட்டப்போகிறோம். கல்விக்கடன் வாகனக்கடன், வீட்டுக்கடன். சில்லறைக்
கடன்கள்… கடன் கட்டத்தான் நாம் சம்பாதிக்கிறோம். அனுபவித்து விட்டாவது போய்ச்
சேருவோம்’ பாதி நகைச்சுவையாகவும் பாதி எரிச்சலாகவும் பேசிய என் கணவர்
இந்த லே-அவுட்டுக்கு அழைத்து வந்து காண்பித்தார். கட்டுமானக் கம்பெனிக்கார்ர்களே
வங்கிக் கடனை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.. வீட்டை இரண்டு மாதத்தில்
கட்டித் தரவேண்டுமென்று நிபந்தனை வைத்தோம். எங்கள் நல்ல நேரம். கட்டுமானக்
கம்பெனியின் உரிமையாளர் நாங்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே வந்தார்.
‘அட்வான்ஸ் கொடுங்கள். அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுங்கள். விஜயதசமி
அன்று கிரகப் பிரவேசம் வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
‘அவ்வளவு சீக்கிரம் வேலைகள் முடிந்துவிடுமா? என்றார் என் கணவர்.
‘வேகமாக ஒரு வீட்டைக் கட்டி முடித்தால்தான் நான் என் முதலீட்டையும்
லாபத்தையும் நான் வேகமாக எடுக்கமுடியும். அதனால் ஒரு வீட்டுக்கு
அட்வான்ஸ் வாங்கினதும் வேலை ஆரம்பமாகிவிடும். தச்சுவேலை எலட்ரிகல்
வேலை குழாய் இணைப்புகள் வேலையின்போதுதான் சற்று தாமதமாகும்.
உங்கள் வசதிப்படி உங்களைக் கலந்தாலோசித்து செய்து தருவோம்.’.’
பதினைந்து நாட்களுக்கு முன்பே வீடு தயாராகிவிட்டது. வீட்டுக்குப்
பக்கவாட்டில் ஒரு சிறிய பூந்தோட்டம். செடிகள் நட்டிருந்தார்கள். அந்தக்
காலத்து வீடுகள் போல வாசலில் இருபக்கமும் சிறிய சாய்வுத்திண்ணைகள்.
அதன் கிழே காலணிகள் வைக்கும் ஷெல்ப். நிறைய ப்ளக் பாயிண்டுகள்
இருந்தன. மூன்று பெட்ரூம்கள். இரண்டு பெரியவை. ஒன்று சிறியது.
அதன் சுவர்களில் டிசைன்கள். மாடுலர் கிச்சன். இதையெல்லாமவிட
எனக்குப் பிடித்த இரண்டு விஷயங்கள். ஒன்று சமையலறைக்கு எதிரே
டாய்லெட் இல்லை. இரண்டு பணிப்பெண் கிச்சன் வழியாக சர்வருக்குப்
போகவேண்டாம். சிறு குறைகளைச் சொன்னோம். உடனே சரி செய்து
கொடுத்துவிட்டார்கள். . .
இன்று விஜயதசமி நாளில் புதுமனை புகுவிழா நடத்தினோம்.. காலையிலிருந்து
மதியம்வரை உறவும் நட்பும் வந்துவிட்டுச் சென்றார்கள்..
மாலையில் லே-அவுட்டிலுள்ளவர்களை அழைத்திருந்தோம்.. நிறையப்
பேர் வந்திருந்தார்கள்.. அனைவருக்கும் இனிப்பு காரம் காபி பரிசுப் பொருட்கள் எல்லாம்
கொடுத்து அளவளாவி, கேட்டரிங் காரருக்கு பணப்படுவாடா செய்து வீட்டைச்
சுத்தம் செய்து படுக்கச் செல்லும்போது இரவு மணி பன்னிரண்டாகிவிட்டது..
‘தாயே, இந்த வீடாவது எங்களுக்கு அனுகூலமாகட்டும்’ என்று வீட்டில்
வைத்திருந்த காமாட்சியை வணங்கினேன். பதினைந்து நாள் அலைச்சல்.
படுத்ததும் தூங்கிப் போனேன்.
வீட்டு வாசலில் முப்பது வயதான ஒரு பெண் நிற்கிறாள். வாளிப்பான
சரீரம். பிரகாசமான முகம்… காதணியிலிருந்து நீலம் ஜ்வலிக்கிறது. ‘வாருங்கள். என்றவள்
தயக்கத்துடன் கேட்கிறேன். ‘நீங்கள் யார்? இதற்குமுன் பார்த்த ஞாபகமில்லை.
அதனால் கேட்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’
‘இந்த லேஅவுட்டுக்கு அடுத்தாற்போலிருக்கிறேன். இந்தப் பக்கமாக
போய்க்கொண்டிருந்தேன். வாசற்கதவு திறந்து கிடக்கிறது. வீட்டில் பேச்சு
சத்தம் கேட்கவில்லை. கதவைத் தாழ்ப்பாள் போடாமல் தூங்கிவிட்டீர்களென்று
தோன்றியது. தாளிட்டுக் கொள்ளுங்களென்று சொல்லத்தான் வந்தேன்’
கணத்தில் பதறி எழுகிறேன். உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. இதயம்
படபடக்கிறது. சுற்று முற்றும் பார்க்கிறேன். வாசற்கதவு திறந்து கிடக்கிறது.
பின்புற க்ரில் க்ரில் கேட் திறந்து கிடக்கிறது.. புதுத் துணிமணிகள் ஓரிரு
வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் முன் கூடத்தில் அப்படியே கிடக்கின்றன..
நன்றி சொல்லலாமென்று அந்தப் பெண்ணைப் பார்க்கிறேன். அந்தப் பெண்
அங்கே இல்லை.. வாசலுக்கு வந்து பார்க்கிறேன். பூஜை மணியின்
சத்தம் மெலிதாக் கேட்கிறது. அது வனதுர்க்கை கோவிலிருக்கும் திசையில்
வேகமாகச் செல்கிறது..
