வேலு இராஜகோபால்/ ஈரம்

மூணு வருஷம் முடிந்து, சரியாகப் பதினேழாம் நாள் மாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த, வேலப்பன் லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனான். அவன் பைக் தடுமாறி லாரியில் மோதியது என்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்டில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், அதனால் விபத்து நேர்ந்தது எனவும் கண்டுபிடித்துச் சொன்னார்கள். அவனுக்கு ஏற்கனவே இதயத்தில் கோளாறு இருந்திருக்க வேண்டும். இருபத்தியெட்டு வயதில் இதயத்தில் கோளாறு வரும் என்று யாருக்குத் தெரியும்?
‘ஒருவேளை, மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சொல்லாமல் மறைத்துவிட்டார்களோ என்று ரொம்ப நாள் கழித்து, மூன்றாவது வீட்டில் வாழும் பார்மஸிஸ்ட் சந்தேகத்தைக் கிளம்பினார். அவளுக்கு விதித்தது இவ்வளவுதான் என்று தங்கம் கொஞ்ச நாள் அழுதழுது துக்கத்தை அடக்கிக் கொண்டாள். போஸ்ட்மார்டம் ரிபோர்ட் இறப்புச் சான்றிதழ் வாங்கியபின் எங்கே போனது என்று ஞாபகம் இல்லை. முத்துவேலுக்கு இரண்டு வயதுதான் முடிந்திருந்தது. அப்பனில்லாத பிள்ளையை எப்படி வளர்ப்பது என்று அவளுக்கு மலைப்பாக இருந்தது. எவ்வளவு நொந்து கொண்டாலும், வாழ்நாள் முழுவதும் நெஞ்சைக் குடைந்துகொண்டேயிருக்கும். அவளது மூன்று வருடத் தாம்பத்தியம், அதன் சின்னமான மகன் முத்துவேலை அம்மா வீட்டில் விட வேண்டிய நிலை வந்தது.
இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு தரமாவது தங்கம் மகனை புருஷனுக்குத் தெரியாமல் பார்த்துவிட்டு வருவாள். அவனுக்கும் தெரிந்திருக்கும் என்ற சந்தேகம் உண்டு. பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் நடப்பது இன்னொரு ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை. ‘உண்மை விளம்பிகள்’ நிறைந்த உலகம் இது. ‘அவளுடைய முதல் கணவனின் மகன் தன் வீட்டில் இல்லாமல் இருந்தால் சரி. அவன் பார்க்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டிருந்தான். திருட்டுத்தனமாய் அவள் மகனை பார்த்து வந்தாலும் பரவாயில்லை. அவன் இங்கே இருந்தால் வரறவனுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்’. இப்படியே சில வருடங்கள் கழிந்தன.
இன்றைக்கும் அவனுக்கு முறுக்கு, பண்டங்கள் வாங்கிக் கொண்டுதான் பார்க்கப் போனாள். பார்த்தவுடன், ‘ஏன் வரவே மாட்டேங்குற?’ என்றான்.
‘இந்தாதான் வந்துட்டேன்ல’
‘வந்து மூணுமாசம் ஆச்சு. மாச மாசம் வா’ என்று சொல்லும் போதே உதடு சுழித்துத் தன் கோபத்தைக் காட்டினான். கூடவே கண்கள் கலங்கிக் கண்ணீர் வழிந்தது. அழக்கூடாது என்பது போல் அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
‘இந்த மாசம், காட்டுல நிறைய வேல. அவன் அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சேன். வேணும்னே வராம இருப்பனாடா? நீ என் செல்லக் குட்டியில்ல. அந்த ஆளு கறாராப் பேசினதுனாலதான் …உன்ன இங்க விட…’ சொல்லும் போதே கண்கலங்கி, முந்தானையால் வாயை மூடிக் கொண்டு அழுதாள். அதற்கு மேல் பேச வேண்டியதில்லை. அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு முறை வந்ததும், பிறகு கிளம்பும் போதும் இதையே சொல்லி அழுவாள். ‘சரி சரி அதை விடு. இங்க எங்க காட்ல மல்லிகைப்பூ எக்கச்சக்கமா விளஞ்சிருக்கு. நல்லா விலை போகுது’ முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. அது அவளுக்குச் சேரவேண்டிய காடு. இப்போதைக்கு வந்து பார்க்க முடியாது. அவன் பெரிய மனுஷனாட்டம் பேசுவது அவளுக்கு வியப்பாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளிடம் பள்ளிக் கூடத்தில் நடப்பதையும், கோலிக் குண்டு விளையாட்டில் தான் பெரிய ஆளாகிவிட்டதையும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான். நாலு மணி வரை பேசிக் கொண்டிருந்தாள். கிளம்பும் போது பெரிய மனுசனைப் போல ‘அடுத்த தடவை வரும் போது அந்த ஊர் அல்லா வாங்கிட்டு வா’ என்று உறுதியாகச் சொன்னான். ‘நண்டு நவுசாகக் கிடந்தது இப்படி வாய் பேசுதே’ என்று கவலையும், மகிழ்ச்சியும், வியப்பும், விட்டுவிட்டுப் போகிறோமே என்ற தவிப்பும் அவளை அலைக்களித்தன. அந்த ஊரில் அல்வா வாங்கினால் புருஷனுக்குத் தெரிந்துவிடும். வேறு ஏதாவது பண்ண வேண்டும்.
தங்கம் போய்ப் பத்து நிமிடம் கூட இருக்காது. முத்துவேல் மூசு மூசு என்று அழத் தொடங்கிவிட்டான். புறவாசலில் அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்த அவனுடைய பாட்டி அழுகிற சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, நடுவறையில், பீரோவுக்கு அடுத்திருந்த இடுக்கில் நுழைந்து சுவரைப் பார்த்து கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான். ‘ஏய், ஏய், அம்மா இங்க பக்கத்தில தான போயிருக்கா, இங்க தான் இருக்கா… நீ எப்பப் பாக்கணும்னாலும் ஓடி வந்திருவா. இப்பவே வரச்சொல்லவாடா?’ சொல்லிக் கொண்டே, அவனைத் தன் பக்கம் இழுத்தாள். அவன் வருகிற மாதிரி இல்லை. சுவரோடு உடலை ஒட்டிக் கொண்டு பிடிகொடுக்காமல் இருந்தான். அவனுக்குதெரியும் அவள் வரமுடியாது வரமாட்டாள். அழுகையின் வேகம் குறைவது போலிருந்தது. ‘ஏல, நீ பெரிய பையன், வயசான கிழவி உன்னை இழுக்க முடியுமாடா?, வாம்மா, கண்ணு, நீ என் ராசா’ என்று சொல்லிக் கொண்டே இழுத்தாள். அவன் விருக்கென்று திரும்பிப் பாட்டியோடு தன்னைச் சேர்த்தணைத்து முகத்தை அவளுடலில் புதைத்துக் கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாகக் கேவல் தணிந்தது. அழுகையும் கண்ணீரும் குறைய வெகு நேரமானது.
பூவம்மா பாட்டியை முத்துவேலுக்குப் பிடிக்கும். என்ன கேட்டாலும் வாங்கித் தருவாள். கீழே உட்கார்ந்த பாட்டி பேரனை மடியில் போட்டுத் தட்டி கொடுத்துக் கொண்டிருந்தாள். முத்துவேலுக்கு இப்போது பத்து வயதாகிறது. ஐந்து நாள்களாக அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டும் மனம் வெடித்து அழுகை பலத்தது. ‘இப்பத்தான அழுகறத நிறுத்துன. அதுக்குள்ள என்ன? அதான் அடிக்கடி வருவான்னு சொல்றேன்ல’ தலையைத் தடவிக் கொடுத்துவிட்டு, ஆறுதலாக முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
பூவம்மாவுக்கு ‘தங்கம் எங்க இருக்காளோ? என்ன நினைக்காளோ? அவளும் பாவம் என்ன செய்வா? மகனை நினைச்சு உருகிக்கிட்டுருப்பா!’ என்ற கவலை தொற்றிக் கொண்டது. ‘இன்னும் எத்தனை நாள்தான் இது நடக்கும்?. எனக்கும் வயசாகிட்டது. அவரும் ரொம்ப தளர்ந்துவிட்டார். அவர்களுக்குப் பிறகுபேரனை யார் பார்த்துக் கொள்வார்?. தங்கமும் என்ன செய்வாள்?
‘முதல்ல கட்ன தேவதாசு நல்ல ஆளு. கொஞ்சம் குடிப்பான். மத்தபடி ஒரு குறையும் வக்கல. நெஞ்சில நோவுன்னு எப்படித் தெரியும்? எல்லாம் அவன் விட்ட வழி. குல தெய்வமான கள்ளவண்டானுக்கு கிடா வெட்டுவதாக வேண்டிக் கொண்டாள். சாமி கைவிடவில்லை. அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் நல்ல நேரம் பொறந்துச்சு. அந்த ஆளு நல்லவந்தான். இல்லாட்டி தங்கத்த கட்டிக்கிறேன்னு சொல்லியிருக்க மாட்டான். நல்லாக் காட்டு வேல பாப்பான்னு தெரிஞ்சுதான் வந்தாங்க. அவுக வீட்ல நிலபுலம் இருக்கதுனால. ஆனாலும் இப்படிக் ‘கண்டிஷனாச்’ சொல்லிப் போட்டானே. நாலைந்து வருடமாகத் தனியாகக் கிடந்து உழன்று கஷ்டப்ட்டவளுக்கு ஒரு விடிவுகாலம் வந்ததே! அதே பெருசு. இந்தப் பட்டிக்காட்டில கண்ட பயகளும் அவளைச் சுத்திசுத்தி வந்துக்கிட்டிருந்தானுக. வேல வெட்டிக்குப் போனா சாட பேசிக்கிட்டே பின்னால வருங்க நாய்க.. எம் பிள்ளைக்கு என்ன ஆகுமோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். அதுக்கு இது தேவலை. ஆனால் சாமி இந்தச் சின்னப் பயலுக்கு என்ன செய்ய? அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா?’ பூவம்மா தினமும் எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருப்பாள். ‘யார் மூலமாவது விடிவு வராதா?’
அடுத்த மூன்று மாதங்களாக அம்மா வருவாள் வருவாள் என்று முத்துவேல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வருவதாயில்லை. சில நாட்களாக, ‘அம்மாவைப் பார்க்கணும், அம்மாவைப் பார்க்கணும்’ என்று இரவில் சிணுங்கத் தொடங்கிவிட்டான். பூவம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவள் புருஷன் வழக்கம் போல ‘சரக்கைப்’ போட்டுவிட்டுத் தூங்கிவிட்டார். இரவு பூராவும் அணத்திக் கொண்டேயிருந்தான். காலையில் தூக்கக் கலக்கத்தில் பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று முரண்டு பிடித்தான்.
பாட்டியின் ஊரில் சில வருடங்கள் ஆகிவிட்டாலும், பழைய ஊரிலிருந்த பக்கத்து வீட்டுப் பையன்களை, பள்ளிக் கூடத்துத் பையன்களை அவனால் மறக்க முடியவில்லை. அவனுடைய அப்பா வேலுச்சாமியின் ஊர். அவனப்பா அந்த ஊரில் வீடுகளுக்குப் பெயிண்ட் அடிப்பார், விவசாய வேலை பார்ப்பார். இன்னும் என்னென்னவோ வேலைகள் பார்ப்பார். ஊரில் டீச்சர்ல இருந்து கடைக்காரர்கள், டிரைவர்கள், முடிவெட்றவன் வரைக்கும் எல்லோரையும் தெரியும். அது கூட அவனையும் தெரியும். ‘என் சேக்காளியெல்லாம் அந்த ஊர்ல இருக்காங்க. இங்க ஒருத்தனும் எங்கூடச் சரியாப் பேச மாட்டுக்காங்க. அந்த ஊரில பிரைவேட் ஸ்கூல். எல்லா டீச்சரும் நல்லாப் பேசுவாங்க. இங்க அரசுப் பள்ளி. மொத்தமே அம்பது பேரு கூட இல்ல. பாடம் சரியாச் சொல்லித் தர மாட்டுக்காங்க’ என்று தினமும் பள்ளிக்குப் போய்வந்து பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

புருஷனிடம் எப்படித் தொடங்குவது? என்று தங்கம் மருகிக் கொண்டிருந்தாள். ஏழரை மணிக்கு அவன் உள்ளே வந்ததில் இருந்து பேசத் துடித்த மனதை இறுக்கமாக வைக்க வேண்டியிருந்தது. புருஷன் கருப்பசாமி பெட்ரோல் பங்கில் வேலைபார்த்துவிட்டு இரவு பத்து மணிக்கு வந்தான். பங்க்கில் பெட்ரோல் ஊற்றும் வேலை. நாள்முழுவதும் நின்றுகொண்டே இருக்க வேண்டும். அங்குமிங்கும் அலைவது வேறு. இரவில் வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் உடனே தூங்கிவிடுவான். வாரத்தில் ஓரிருநாள் நடுஇரவில் எழுப்புவான். அவனுடைய தேவை முடிந்ததும் தூங்கிவிடுவான்.
மீன் குழம்பு அவனுக்குப் பிடிக்கும். அதை எடுத்து அவன் தட்டிலிருந்த சோற்றில் ஊத்திக் கொண்டே அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘நீயும் உக்காரு.. ‘ அவன் சொன்ன பின்னாலும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘என்னவோ சொல்ல விரும்புகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. ஏதாவது புதிய பிரச்சனையைக் கிளப்புவாள். பிடி கொடுக்காமல் இருப்பது வசதி. தங்கம் அவனிடம் சொல்லவும் பயந்தாள். சொன்னால் ‘அப்பவே சொன்னேன்ல. அதெல்லாம் முடியாது’ வாயை அடைத்துவிடுவான். கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டியதுதான். உண்மையில் களைப்படைந்திருந்தாலும், இன்னும் ரொம்பக் களைப்படைந்தவன் போல வெளியில் போய்விட்டு வந்து நார்க்கட்டிலில் படுத்துக் கொண்டான். உடனே தூங்கிவிட்டது போல கண்ணை மூடிக் கொண்டான். நடிப்பும் நிஜமும் அவளுக்கும் தெரியும். அவளுக்குத் தெரியும் என்பது அவனுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் எல்லோரையும் போல அவரவர் வசதிக்காக இப்படிச் செய்யவேண்டியிருந்தது.
ஒரு விடுமுறை நாளில் மதியம் சாப்பிட்டுவிட்டுத் அவன் தூங்கப் போகும் போது அருகில் போய் அமர்ந்தாள். கூச்சப்படுவது போலும், அச்சப்படுவது போலும் பாவனை செய்து கொண்டு, ‘ஏங்க, முத்துவேலுக்கு நாலுநாளாக காய்ச்சல் அடிக்குதாம். ரொம்ப தேடி அழுகுறானாம்’. அவன் ஏறிட்டுப் பார்த்ததிலேயே முகத்திலிருந்த இறுக்கமும் கண்ணிலிருந்த சினமும் பதில் சொல்லிவிட்டன. அமைதியாக இருந்தாள்.
‘இப்படி ஒரு மனுஷன் இருப்பானா? ஒரு பக்கம் நல்லவனாகத் தெரிகிறான். இன்னொரு பக்கம் இரக்கம் இல்லாதவனாகத் தெரிகிறான். அவளுக்கு எதை நம்புவதென்று புரியவில்லை. அம்மாவையும் சிறுவனையும் பிரிக்க வேண்டும் என்று இவனுக்கு யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? அவனுடைய வசதிக்கேற்ப யோசிக்கிறான். தாம்பத்தியத்தில் அவனுக்கொன்றும் அவ்வளவு ஈடுபாடில்லை. வீட்டில் மனைவியில்லாமல் வாழமுடியாது. நிறைய இடங்களில் பெண் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. வீட்டு வேலைகள், வயற்காட்டில் வேலை செய்ய ஆளிருக்காது. அதனால் கல்யாணம் பண்ணிக்கொண்டான். அது தெரிந்தும் அவள் சரி என்றாள். அவளுக்கும் வேறு வழி என்ன? இங்கே நாள் பூராவும் ஏதாவது வேலை இருந்தது. வீட்டில் வேலையில்லை என்றால் வயற்காட்டுக்குப் போய் பயிர்களைப் பார்க்க வேண்டும். களை பிடுங்க, தண்ணீர் பாய்ச்ச அவன் ஆள்களை அனுப்பிவிட்டு வேலைக்குப் போய்விடுவான். வேலை செய்கிறவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவனும் கடுமையான உழைப்பாளி. அவள் உடல்வாகிலேயே அதைக் கண்டுபிடித்துவிட்டான். அதனால்தான் திருமணத்துக்குச் சம்மதித்தான். அவளுக்கு காட்டுவேலை பார்க்கவருகிற பெண்களைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது.. முத்துவேலின் முகம் அவள் கண்ணுக்குள்ளேயே இருந்தது. இப்படியே நாள்கள் போய்க் கொண்டிருந்தன.
ஒரு நாள் மதியம் அவள் கண்ணசந்த போது வீட்டுக் கதவைத் யாரோ ஓங்கித் தட்டிய சத்தத்தில் எழுந்து கொண்டே ‘யாரு?’ என்று கேட்டாள். ‘நாந்தாம்மா, கதவைத் திற’ பூவம்மாவின் பதட்டமான குரல். கதவைத் திறந்த போது, அம்மா நின்று கொண்டிருக்க, அவளுக்குப் பக்கத்தில், ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. ‘ஏறும்மா, அவன் ஆஸ்பத்திரியில கிடக்கான். அம்மா, அம்மான்னு புலம்பிக்கிட்டே இருக்கான். காய்ச்சல் வேறு மூணு நாளா இறங்க மாட்டேங்கு. எனக்குப் பயம்மா இருக்கும்மா…’ அவள் குரல் நடுங்கி, முடிக்கும் போது கேவலாக மாறிவிட்டிருந்தது. முந்தானையை எடுத்து வாயை மூடிக் கொண்டாள். ரொம்ப சத்தம் போட்டு விட்டோமோ என்று குரலை அடக்கிக் கொண்டு, ‘அவரு இருக்காரா?’ என்று கைச்சாடையில் கேட்டாள். தங்கம்மா, ‘இதே வர்றேன்’ என்று வீட்டுக்குள்ளே போய், ஒரு துணி மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். ‘அவரு இல்லையாங்கும்? கணவன் வந்தால் கேட்டுவிட்டுப் போகலாம். இது அவன் வருகிற நேரமல்ல. தங்கம் அம்மாவுடன் ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட்டாள்.
அன்று இரவு, ஏழுமணிக்கு தங்கம் வீட்டுக் கதவைத் தட்டிய போது, கருப்பசாமி வந்துவிட்டிருந்தான். ‘எங்க போய்ட்டு வர்றே?’ கரகரப்பான குரலில் அதட்டினான். கொஞ்சம் ‘போட்டுக்கான்’ என்று கணித்தாள். அவன் கேட்டதன் பொருள் ‘எங்கிட்ட சொல்லாம எங்க போன? ஏன் போன? போகக் கூடாதுன்னு சொல்லியிருகேன்ல’.
‘உல வைக்கட்டுமா?’ என்று கேட்டபடியே, சகஜமாக உள்ளே நுழைய முயன்றாள்.
‘உலய பிறகு வையி. முதல்ல பதில் சொல்லு’ அவன் ரொம்பக் கோபப் படுவதை அன்றுதான் கவனித்தாள்.
‘முத்துவேலு காய்ச்சல்ல, பினாத்திக்கிட்டுருக்கான். அம்மா வரச் சொன்னா. அதான் போனன். டாட்டரு ரொம்ப மோசமா இருக்கான். உடல்ல சத்தே இல்லைன்னு சொன்னாரு’.
அந்தப் பையனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்று கேட்ட பிறகு அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. கோபத்தை அடக்க முயற்சித்தான். அவனும் நல்ல மனிதன் தானோ?
‘என்னாச்சு?’
‘சாப்பிடறதில சத்தே இல்லையாம். இரும்புச் சத்து குறைஞ்சு போச்சாம். இன்னும் என்ன்னென்னவோ டாக்டர் சொன்னதில் அவளுக்குப் புரிந்ததைச் சொன்னாள்.
‘உங்கம்மா, அவனைச் சரியாப் பாக்கலையா? அவதான பொறுப்ப ஏத்துக்கிட்டா? ஒழுங்காக் கவனிக்கணுமா இல்லையா?’
‘அவளால பாக்க முடியல. வயசு எண்பதாச்சுல்ல. அவனோட ஓடியாட முடியல. என்னேரமும், அம்மா, அம்மான்னு அழுகுறானாம்’
‘அவனென்ன சவலைப் பிள்ளையா? புரிஞ்சிக்கிற வயசு தானே. உங்கம்மாவுக்குத்தான் சரியாப் பாக்கத் தெரியல’
அவளுக்குக் கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டாள். இவனை எப்படியாவது சமாளிக்க வேண்டும். அடுக்களைக்குப் போய், அரிசி களையத் தொடங்கினாள்.
கொஞ்ச நேரத்தில் அமைதியாகிவிட்டான். பிறகு, கையிலிருந்த பொட்டலத்தை நீட்டினான். இது என்ன என்பது போல் பார்த்தாள். ‘வரும் போது சிக்கன் வறுவல் வாங்கிட்டு வந்தேன்’. வாங்கி இலுப்புச் சட்டியில் அதைச் சூடு பண்ணத் தொடங்கினாள். கோழிக்கறி வாசனை வீட்டை நிரப்பியது. ‘எந்தக் கடை? வாசனை ரொம்பத் தூக்குது’ என்றாள். ‘செல்லம் கடை’ அவன் முகத்தில் புன்னகை அழகைப் பூசியது. அவனுக்கும் கோபம் குறைந்துவிட்டது. சந்தேகமில்லை அவனும் மனுஷன் தான்.
அங்கிருந்தபடியே முனகினாள் ‘உங்களுக்கு நாற்பது வயசாச்சு. உங்க அம்மா பொழுதன்னிக்கும் என் மகன் எங்க? என் மகன் எங்கன்னு தேடுதா. வந்ததும் அம்மா எங்கன்னுதான் நீங்களுங் கேக்கீங்க. அதுவும் ஆஸ்பத்திரியில இருக்கும் போது பொழுதனைக்கும் இதத்தான் கேட்டீங்க. ஆனால் நான் மகனைத் தேடுறதும், என் மகன் என்னைத் தேடறதும் உங்களுக்குப் புரியல்லை. அப்படித் தேடக் கூடாதுன்னு அவனுக்குப் எப்படிப் புரியும்? வயது பத்துதானே ஆகுது’ அவனுக்குப் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் இருந்தது. குரலில் இருந்த பயத்தையும் அவன் கவனித்தான். ‘ரொம்பத்தான் படுத்திட்டனோ’ ஒரு துளி கசிந்தது.
கல்யாணத்துக்கு முன்னால் அம்மாதான் அந்தக் கண்டிஷணைப் போட்டாள். ‘அவளைக் கல்யாணம் கட்டிக்கிருவான். ஆனா, அந்தப் பையன், உங்க வீட்லதான் வளர்க்கணும். இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வரக் கூடாது’. அவனுடைய தங்கை, சண்முகக் கனியும் அதையே சொன்னாள். இன்னொருத்தனுக்குப் பெத்த பிள்ளைய நாங்க ஏன் வளக்கணும் நாளைப்பின்ன பிள்ளை பிறந்தா, அத கவனிக்க வேண்டாமா? யோசிச்சுக்கோங்க….’
பூவம்மாவுக்கும் தங்கத்துக்கும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்தது. ‘எங்க சொத்துல பங்குக்கு யாரும் வந்துவிடக் கூடாது’. உண்மைதான். அவர்கள் வீட்டில் அவனுக்கு மூணு வீடும், இருபது செண்ட் நிலமும் இருந்தது. தங்கத்துக்கு மூணரைச் செண்ட்ல ஒரு வீடும், பத்துப் பவுனும்தான். மூணரைச் செண்ட் வீட்ல அவளுடைய தங்கை, மகேஸுக்கும் பங்கு உண்டு. அவ புருஷனும் பொல்லாதவன். விட மாட்டான்’. சொத்து விஷயத்தில் தன் கட்சி பலமில்லாமல் இருப்பதை அவள் அறிவாள். இருவருக்கும் வேறு வழியில்லை. ஒத்துக் கொண்டார்கள்.
இரண்டு நாள் கழித்து, ஆஸ்பத்திரியிலிருந்து, தங்கம் அவனுக்குப் போன் செய்தாள். ‘அவன் ரொம்ப மோசமா இருக்காங்க. ரத்தம் நிறைய வேணுமாம். மூணு பாட்டில் ரத்தம் கொடுத்தா, அவனுக்குண்டான ரத்தம் அவங்க கொடுப்பாகளாம். நானு ஒரு பாட்டில் ரத்தம் கொடுத்திருக்கேன். நம்ம தெருவில விநாயகர் கோவிலுக்கு எதிர்வீட்ல இருக்கிற, முத்தையா ஒரு பாட்டில் கொடுத்தார். இன்னொரு பாட்டில் வேணுமாம்…’ அவள் இழுப்பதிலேயே புரிந்தது. முத்தையா கொடுத்துவிட்டானா? ‘எப்பவும் என்னைக் கண்டா முறைச்சிக்கிட்டு இருப்பானே.’ பத்து வருஷம் முன்னால் இருவரும் நடுத்தெருவில் கட்டி உருண்டது ஞாபகம் வந்தது. ‘நல்ல மனுஷந்தான். முத்துவேலுக்கு உண்மையிலேயே ரொம்பச் சீரியஸ் போல. கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு ‘நான் இந்தா வர்றேன்’ என்றான். அவன் திட்டிக் கூப்பாடு போடுவான் என்று எதிர்பார்த்த தங்கத்துக்கு வியப்பாக இருந்தது.
வார்டுக்குள்ளிருந்து அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஒரு பாட்டில் எடுத்துட்டாங்க’. ஒட்டியிருந்த பிளாஸ்திரியைக் காட்டினான். லேசாகப் புன்னகைத்தான். அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள். ‘உங்க ரத்தம் அவனுக்குச் சேரும்னு, நர்சம்மா சொன்னாங்க’ என்றாள்.
*
.