
16-10-2025 அன்று மாலை சென்னை மயிலாப்பூர் கிளப் உள்ளரங்கத்தில் கலைமகள் தீபாவளி மலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், மலரில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளுக்கு – விழாவுக்கு வரக்கூடிய, வந்திருந்தவர்களுக்கு – கலைமகள் தீபாவளி மலரை நேரடியாக வழங்கும் விழாவாக வித்தியாசமாக அமைந்திருந்தது. மலரில் பிரசுரமாகியுள்ள படைப்புகளைப் பற்றி யாரும் பேசவில்லை என்பது கூடுதல் தகவல்!
மேனாள் தேர்தல் ஆணையத் தலைவர் திரு டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மலரினை வெளியிட, மூத்த பத்திரிகையாளர் திரு மாலன், மற்றும் சாவித்திரி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஆடிட்டர் ஜெ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கலைமகள் பாரம்பரியத்தையும், பெருமைகளையும் பற்றிப் பேசியவ தேர்தல் ஆணையர், எல்லோரும் வாசிக்கும் வண்ணம், கலைமகள் டிஜிடல் வடிவிலும் வரவேண்டும் என்றார். திரு மாலன் தனக்கே உரிய ஸ்டைலில் அரிய தகவல்களைக் கூறினார். பெ.ந.அப்புசாமி, ரா.பி சேதுப்பிள்ளை போன்ற இலக்கியவாதிகளைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவை. கொல்கத்தா இராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று வந்த அனுபவங்களை, இந்த மலரில் கட்டுரையாக எழுதியுள்ளதைத் தெரிவித்தார். பின்னர் பேசிய ஆடிட்டர் ஜெ.பி. தேர்தல் ஆணையருக்கும் தன்க்குமான நட்பினைப் பற்றியும், கலைமகளைப் பற்றியும் சுருக்கமாகப் பேசினார்.
கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள், பதிப்பாளர் திரு பி.டி.ராஜனுடன் சேர்ந்து படைப்பாளர்களைக் கவுரவிக்கும் விதமாக, தீபாவளி மலரை வெளியிடத் திட்டமிட்டதைத் தெரிவித்தார். (‘தாய் சொல்லைத் தட்டாத பிள்ளை’ ராஜன் அவர்கள் தன் பிறந்தநாளை ஒட்டி, நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோயிலில் தன் அன்னையுடன் இருப்பதைத் தெரிவித்தார்!). பின்னர் உ.வே.சா. முதல் கி.வா.ஜ. வரை, ஆன்மீகமும், தேசீயமும், மிகச் சிறிய அளவில் அரசியலும் மட்டுமெ வெளியிடும் பத்திரிகை கலைமகள் என்றார். மலரின் அட்டவணைப் படி ஒவ்வொருவராக, அவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை ஓரிரு வாக்கியங்களில் சொல்லி மேடைக்கழைத்து, மலரினைக் கொடுத்துக் கவுரவித்தார்.
இணைப்புரைத் திலகம் சந்திரமோகன், சிறப்பாக விழாவை நடத்தினார்; வழக்கமான எதுகை மோனை சரவெடி மிஸ்ஸிங், ஆனாலும் இண்டரெஸ்டிங்!
‘கல்கி’ ரமணன், காலச்சக்கரம் நரசிம்மா, பி.என். பரசுராமன், இதயகீதம் ராமானுஜம், தேவி பாலா, ‘க்ளிக்’ ரவி, மீ.விசுவநாதன், வித்யா சுப்பிரமணியன், வல்லபா ஶ்ரீனிவாசன், கண்ணன் கோபாலன், நா.வீரப்பன், ஜெயராமன் ரகுநாதன், அ.பொ.இருங்கோவேள், கே.ஜி.ஜவஹர், மடிப்பாக்கம் வெங்கட், கணேஷ் கிருஷ்ணா, நாவலர் நாராயணன், குச்சனூர் கோவிந்தராஜன், சித்ரூபன், ஜனனி ரமேஷ், ‘இந்து’ நடராஜன், ரேவதி பாலு, ‘இஸ்ரோ’ கிருஷ்ணன், மற்றும் ஓவியர்கள் வேதா, ஜமால், தமிழ், கலைமகள் வடிவமைப்பாளர், சிப்பந்திகள் என அரங்கம் நிரம்பியிருந்தது.
விழாத் தொடக்கத்தில், சுவையான பாதாம் அல்வா, போண்டா, எலுமிச்சை சேவை, காஃபி வழங்கப்பட்டது.
கலைமகள் தீபாவளி மலரில் என் பயணக்கட்டுரையும் உள்ளது என்பதும், விழாவின் நானும் கலந்துகொண்டேன் என்பதும் மகிழ்ச்சியான தகவல்கள்!
