அழகியசிங்கர்/துளி 224

19.10.2025

இன்று காலைதான் சீதை ஜோசியம் என்ற நாடகத்தைப் படித்து முடித்தேன். நார்லா வேங்கடேசுவர ராவ் என்ற தெலுங்கு எழுத்தாளர் சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றவர்.

இந்த நாடகம் சற்று வித்தியாசமான பார்வை கொண்டு எழுதப்பட்டது.

இந்தப் புத்தகம் முன்னர் இந்தியாவிற்கு வந்த ஆரியர்,’ ‘வாழ்ந்த மக்களை’ விரட்டிவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு தென்னகம் நோக்கி முன்னேறிய ஒரு வரலாறாக இராமாயணத்தை ஆராய்கிறது. இந்த ஆய்வை வஞ்சமிலாப் பெண் சீதை வாயிலாக நாடகப்பாங்கில் வெளிப்படுத்துகிறது.

இராமாயணத்தைப் படிக்கும்போது ராமர் கோணத்தில்தான் எல்லோரும் வாசித்திருக்கிறோம். இந்த நாடகம் சீதையை மையப்படுத்துகிறது.

சீதை இந்த நாடகத்தில் இராமர் முதல் எல்லோரையும் கடுமையாக விமர்சிக்கிறாள். மையப் பாத்திரமாகச் சீதையைச் சித்தரிக்கிறார் ஆசிரியர்.

ஆசிரியர் தான் நினைத்திருக்கும் கருத்துக்களைச் சீதா என்ற பாத்திரம் மூலம் தொட்டு விடுகிறார்.

ஒரு இடத்தில் ராமனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சீதை இப்படிச் சொல்கிறாள்.

“ஆயுதங்களுக்கு ரத்த தாகம் இருக்கிறது. அது நரபலியைக் கோருகிறது. ஆயுதம் தரித்தவுடன் கருணை வள்ளலாயினும் கொடூரமாக மாறி விடுவார். அமைதியைக் கடைப்பிடிப்பபவர்களாயினும் யுத்தத்திற்கு தயாராகிவிடுவார். முக்கியமாக சத்திரியன் கையில் ஆயுதம் இருக்கக் கூடாது. அது நெருப்புக்கு அருகில் பஞ்சு இருப்பதைப் போன்றது.

நாடக ஆசிரியர் ஒருவித்தியாசமான போக்கில் பேசா மடந்தையான சீதையைப் பேச வைத்திருக்கிறார்.

ஒரு நல்ல நாடகத்தைப் படித்து முடித்த திருப்தியைக் கொடுத்தது.

சீதை ஜோசியம் – நார்லா வேங்கடேசுவர ராவ் – தமிழில் இரா. மனுவேல் சாகித்திய அக்காதெமி வெளியிட்ட இப் புத்தகம் விலை ரூ.30.