
ரமணானுபவம்
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் அண்மை ராம்சுரத்குன்வரை முற்றிலும் அந்தர்முகமாக மாற்றியது. அன்று இரவு முழுவதும் தூங்கினாலும் கண்கள் மூடியிருந்ததே தவிர உள்ளுக்குள் விழித்தபடி இருந்தார்.
இதென்ன விசித்திர அனுபவம். ஏதோ ஒன்று உறங்கச் செல்கிறதே என்று தன்னுள் தனக்கு முற்றிலும் சம்மந்தமே இல்லாத ஒன்றை அன்று கவனித்தார். அது தானே சென்று உடலை பிடித்துக் கொள்வதும், பின்னர் தூக்கம் எனும் அவஸ்தையை அடையும்போது உள்ளுக்குள் இருக்கும் பெருஞ் சக்திக்கு அருகே ஒடுங்குவதுமாக இருப்பதை எந்த வார்த்தைகளின் உதவியுமின்றி புரிந்து கொண்டார். அதற்கு உருவமே இல்லை. இதைத்தான் உருவமற்ற பேயகந்தை என்கிறார்களோ என்று அறிந்தார். இதுதான் என்னை, உலகை எல்லாவற்றையும் உருவாக்குகின்றதா என்று உணர்ந்தார். அது, ராம்சுரத்குன்வர் எனும் பெயரோடு சும்மா ஒட்டிக் கொண்டிருந்தது. காய்ந்த மரத்தில் இருக்கும் பட்டைபோல இருந்தது.
நள்ளிரவு முழுவதும் இப்படியே தொடர்ந்தது. மெல்ல கண்களை மூடினாலும் இதே நிலைதான். கண்களைத் திறந்தாலும் இதே நிலைதான். சட்டென்று விடிவதற்கு முன்னரே தன் உடலை ஏதோவொன்று மீண்டும் எழுப்பியது.
சட்டென்று விழித்துக் கொண்டார்.
ரமணாஸ்ரமத்திலிருந்த மயில் அகவியது. குரங்குகளும் விழித்துக்கொண்டன. ஆங்காங்கு இருந்த பிராணிகள் குறுக்கும் நெடுக்குமாக அலையத் தொடங்கின.
பகவான் ரமண மஹரிஷிகள் அதிகாலையில் அந்த சோபாவில் வந்து அமர்ந்தார். ராம்சுரத்குன்வரும் மெல்ல அவரின் முன்னர் சென்று அமர்ந்தார். கண்களை மூடினார். மீண்டும் மீண்டும் ஏதோவொன்று அவரை உள்ளுக்குள் இழுத்துபோட்டது. வெகு நேரம் அமர்ந்திருந்தவர் விழித்துப் பார்த்தார். சட்டென்று அங்கு பகவானைக் காணவில்லை. உற்று பார்த்தவர். அதிர்ந்தார். ஆனால், அங்கு பகவான் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஒருவர் நமஸ்கரித்துக் கொண்டிருந்தார். அதெப்படி யாருமற்ற சோபாவை ஒருவர் நமஸ்கரித்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் பகவானை நோக்கி கைகூப்பி அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மென்மையாக ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். என்ன ஒரு விந்தை என்று திகைத்து மீண்டும் கண்களை கசக்கியபடி பார்த்தபோது அங்கொரு அதிசயம் நிகழ்ந்தது. மணல் துகள்போல எங்கிருந்தோ ஒன்று படபடவென்று இணைந்து சட்டென்று ரமண மஹரிஷி என்கிற உடலாக அங்கு உருவானது போன்று இருந்தது. இப்போது தெள்ளத் தெளிவாக பகவான் சோபாவில் உட்கார்ந்திருப்பதும், சிரிப்பதும், பேசுவதும் தெளிவாகக் கேட்டபடி இருந்தது.
‘‘பகவானே.. ஞானிக்கு உடலுணர்வு உண்டா’’ என்றொரு பக்தர் கேட்டார்.
‘‘பகவான், மென்மையாகச் சிரித்தபடி, ‘‘நீங்கள் உங்களை உடம்போடு அபிமானித்துக் கொண்டு ஞானியையும் அப்படியே பார்க்கிறீர்கள். அதனால், அவனுக்கும் உடம்பு உள்ளதுபோல் தெரிந்தாலும் அவன் எதனோடும் சம்பந்தப்படாமல் நான் உடம்பு அன்று என்று ஆத்ம சொரூபமாகவே இருப்பான்’’ என்று சொல்லிவிட்டு ராம்சுரத்குன்வரைப் பார்த்தார்.
புதியதாக அந்த திருக்கூட்டத்தில் சேர்ந்துகொண்ட சந்நியாசி ஒருவர் ரிஷியை வணங்கினார். வாய்பொத்தி கேள்வியை கேட்கத் தொடங்கினார்.
‘‘நாம் உயிருடன் இருக்கும்போதே மரணத்தை எதிர்கொள்ள வேண்டுமா? அல்லது மரணம் நேரும் கணத்தில் எதிர்கொள்ள வேண்டுமா? இது முடியுமா?’’ என்று நேரடியாகக் கேட்டார்.
‘‘இல்லை. மரணம் என்பது யாருக்கு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இப்போது இங்கு உடல்தான் நீங்கள் என்று என்னோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் உறங்கும்போது உடல்பற்றிய பிரக்ஞை அதாவது விழிப்புணர்வு இருப்பதில்லை. அப்போது நீங்கள் உங்களை இல்லாமல் போனேன் என்றும் சொல்வதில்லை. அந்த கனவுலகில் வேறெந்த உலகிலோ அல்லது வேறு எதனோடேயே உங்களைத் தொடர்புபடுத்திக்கொண்டு அங்கு நீங்கள் இருப்பதாகவும் நினைத்துக்கொள்கிறீர்கள். பிறகு, அதையும் தாண்டி கனவற்ற நிலையில் மிகவும் சுகமாக இருந்துவிட்டு மறுநாள் சுகமாகத் தூங்கினேன் என்று கூறுகிறீர்கள். இப்போது கனவு நிலையை விட அந்த கனவற்ற நிலையே மாபெரும் சுகத்தைக் கொடுத்தது என்பதை யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தச் சுகமே உங்களின் யதார்த்த சொரூபம்.
நனவு நிலையிலுள்ள உடலுணர்வு மறைந்து, வெறும் கனவில் மிதந்த மனமும் காணாமல்போய், சுகமாக இருந்தேன் என்று சொல்கிறீர்களே அந்த நிலையையே துரீயம் என்று ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அங்குதான் நீங்கள் நீங்களாக யாரையும் சார்ந்திருக்காது சின் மாத்திரமாக, சித் என்று சொல்லப்படும் ஆத்மாவோடேயே இருக்கிறீர்கள். ஆனால், மீண்டும் உலகத்தின்படி பார்த்தால் மறுநாள் இந்த நான் எனும் எண்ணம் எழுந்து உடம்பைப் பற்றிக்கொள்ளும்போது சித் எனப்படும் ஆத்மாவின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து, உடல் எனும் ஜட வஸ்துவிற்கு வரும்போது உடலே நான் என்று ஜீவன் அபிமானித்துக்கொள்கிறது. இப்போது மனம் விரித்த உலகம் அனைத்தும் தெரிகிறது. இவ்வாறு சித்துக்கும் ஜடமான உடலுக்கும் தினமும் மாறிமாறி ஓயாமல் ஓடும் அந்த நபர் யார்? ஞானிகளோ இந்த ஊசல் குண்டுபோல சித்தையும் ஜடத்தையும் இணைக்கும் கயிற்றுக்கு சித் ஜடக் கிரந்தி என்கிறார்கள். இந்த கிரந்தியை அறுப்பதே அதாவது இல்லாமல் செய்வதே எமனைத் தாண்டிச் செல்வதாகும்’’ என்று கொஞ்சம் நிறுத்திவிட்டு சீடர்களை பார்த்தார்.
‘‘மஹரிஷியே, இதெல்லாம் வெகுநாட்களுக்குப் பழக்கப்பட்ட பிறகு சாத்தியமா? இப்போதே முடியுமா?’’
‘‘ஒரு கனவு காணும்போதே இது நிஜமல்ல, நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன் என்று விழித்துக் கொண்டால் இவை யாவும் மறந்து விடும் என்று சிலசமயம் அறிகிறீர்கள் அல்லவா? அதுபோலவே இந்த உடலைத் தனியாகவும், இதிலிருந்து எழும் தன்னுணர்வு என்பதை தனியாகவும் கண்டுகொண்டாலேயே, இந்த அப்பியாச பலத்தினாலேயே மரணத்தின்போதும் இந்தத் தன்னுணர்வு தெளிவாகத் தெரியும்படி விளங்கும்.’’
‘‘பகவானே… அப்போது மரணித்தின்போது…’’
‘‘நான் என்கிற அபிமானம் திடமாக உள்ளவர்கள் தூக்கத்தின்போது எப்படி எதையும் அறியாமல் ஏதேனும் ஒரு இருட்டைப் போய்ப பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல மரணத்தின்போதும் உடலைப் பிரிந்த உயிரும் அதற்கான காலம் வரையில் அப்படியே இருந்துவிட்டு வேறொரு பிறவியை எடுக்கிறது. எனவே, அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டிய இந்த நான் எனும் அகங்காரம் இருக்கும் வரையில் எமன் இருப்பான். அந்த அகங்காரம் அழியும்போது அதாவது சாஸ்திரங்கள் கூறுவதைப்போல மனோநாசம் என்கிற மூலமான அகங்கார நாசம் ஏற்பட்டால் எம வாதையிலிருந்து முற்றிலும் தப்பி விடுவீர்கள்.’’
‘‘உயரப் பறக்கும் பருந்தை காடோ, நிலமோ, சமுத்திரமோ, நெருப்போ என்ன செய்துவிட முடியும். ஆனால், அது உயரப் பறக்க வேண்டும். இந்த உடலே நான் எனும் அபிமான வடிவ அகங்காரத்தை வீழ்த்தி விட்டால் அந்தக் கணமே நீங்கள்
எப்போதுமே உயரத்தில் இருந்திருப்பதையும் சேர்த்து அறிவீர்கள். ஏன், எல்லாமுமாகவும் இருப்பீர்கள். அப்படி உங்களின் சொந்த இருப்பாக இருக்கும் நிலைக்கே அருணாசலம் என்று பெயர். அந்த அருணாசலத்தைத்தான் இதோ நீங்கள் இங்கு புறக் கண்களால் தரிசித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுவாகவே நீங்களும் ஆகவேண்டுமெனில் அதை வலம் வாருங்கள். அப்படி வலம் வரவேண்டுமென்று நீங்கள் நினைக்கும்போதே எமனும் தன்னுடைய மூட்டையைக் கட்டிக்கொண்டு புறப்பட்டு விடுகிறான். அந்த எமனும் தான் யார் என்று அறிந்து இங்கு எமலிங்கமாக எமனுக்குள் அருணாசலத்தை கண்டு லிங்கமாக இருப்பதையே இங்கு நீங்கள் எமலிங்கமாகத் தரிசிக்கிறீர்கள்’’ என்று சொன்னபோது சகலரும் எழுந்து ரமண மகரிஷியை வணங்கினார்கள்.
ஆஹா… ஆஹா… என்று ராம்சுரத்குன்வர் அந்த உபதேசத்தைக் கேட்டு ஆனந்தமானார். அதனால்தான் எனக்கு இப்படியொரு தரிசனமோ என்று சொல்லெழாமல் சும்மா அமர்ந்தார்.
மெல்ல எழுந்தார். திருவண்ணாமலையை வலம் வரலானார். சேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு அருகே சென்று அமர்ந்தார். ஆஹா… என்னவொரு அற்புதமான உணர்வு என்று அங்கேயே நாள் முழுவதும் கிடந்தார். அருணாசலேஸ்வரர் கோயிலை நோக்கிச் செல்லும்போது ஏனோ கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
இந்த உலகில் எத்தனையோ பேருக்கு வீடு இருக்கலாம். ஆனால், வீடுபேறு எனும் மோட்சத்திற்கும் ஞானம் எனும் பொக்கிஷத்தையும் தேடி வருவோருக்கும் அருணாசலேஸ்வரர் வீடே அவர்களுடைய வீடு. ஞானத் தபோதனரை வா என்று அழைக்கும் வீடும் இதுதான். எவர் ஒருவருக்கு வாழ்வு என்றால் என்ன கேள்வி வருகின்றதோ அவருக்குள் புகுந்து அருணாசலேஸ்வரர் தன்னை நினைக்க வைக்கின்றார்.
கோயிலுக்குள் சென்றார். பகவான் பால ரமணராக அமர்ந்திருந்த பாதாள லிங்கத்தினுள் தானும் சென்று அமர்ந்தார். எத்தனை மணி நேரம் அப்படியே இருந்திருப்பார் என்று தெரியவில்லை. மெல்ல எழுந்தார். வெளியே வந்தார்.
பௌர்ணமி நிலவு வெண்ணெய் போல வானத்தில் திரண்டெழுந்தது. அந்த வெண்ணொளியில் மலையே பிரகாசித்தது. ஆங்காங்கு பக்தர்கள் கிரிவலம் வந்தபடி இருந்தனர்.
இப்பேர்ப்பட்ட மலைக்கு இப்படி வெகுசிலர் மட்டும் வருகிறார்களே… எப்பேர்ப்பட்ட மலை இது… ஆனால், இன்னும் பல வருடங்கள் கழித்து லட்சக் கணக்கில் வலம் வரப் போகிறார்களே என்றொரு அழுத்தமாக அவருக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.
அருணாசல மலையின் மீது நட்சத்திரங்கள் தெரிந்தது. மெல்ல உற்றுப் பார்க்க நட்சத்திரங்கள்போல ஒளியுடலோடு யாரோ வந்து மலையில் இறங்குவதைப் பார்த்தார். சட்டென்று அந்தக் காட்சியும் மறைந்தது. அந்த மலைக்குள்ளேயே குபேர
பட்டினம்போல் பெருஞ் செல்வத்தோடும் அளவிலா ஒளியோடும் வேறொரு உலகம் பார்த்து அதிசயத்தார். அருணாசல புராணத்தில் இருப்பதை பகவான் சொன்னதை வைத்து எத்தனை உண்மை என்று கண் கொட்டாமல் பார்த்தார். அருணாசல சிவ… அருணாசல சிவ… அருணாசல சிவ… அருண ஜடா…. என்று சொல்லியபடி இருந்தார்.
பௌர்ணமி நிலாவின் அடியில் விண்ணுயர நிற்கும் அருணாசல சிவத்தை பார்த்தபடி இருந்தார். மீண்டும் ரமணாச்ரமம் வந்தார்.
அவரின் கரங்களில் ஆத்ம விசாரம் என்கிற புத்தகம் இருந்தது.
விருபாட்சி குகையிலும், கந்தாஸ்ரமத்திலும் தியானித்தபடி இருந்தார். நான் எனும் மூல எண்ணத்தை நாடினார். மெல்ல அது தலை சாய்ந்தது. அனுபவத்தின் ஊடாக மெல்ல வெவ்வேறு நிலைகளை அடைந்தார். இன்னும் ஏதோ ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்று மட்டும் புரிந்தது.
அருணாசல வலம் ஆத்ம விசாரத்தை கொடுக்கும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.
ராம்சுரத்குன்வர் எனும் தன் பெயர் அவருக்கு மறந்து போனது போல் இருந்தது. என் பெயர் என்ன… என்று அவருக்குள் கேள்வி பிறந்தது.
அருணாசல மலையைப் பார்த்தார். அதுவொரு புதிய பெயரை இவ்வுலகிற்கு அளிக்கப் போகின்றது என்றும் அவருக்கு தெரிந்திருந்தது.
மறுநாளை காலை ரமண பகவானை நமஸ்கரித்து விட்டு பாண்டிச்சேரியில் இருக்கும் அரவிந்தரைப் பார்க்க தொடர்ந்து பயணித்தார்.
9. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா – விருட்சம் நாளிதழ்
- தொடரும்

One Comment on “கிருஷ்ணா ரம்யா வாசுதேவன் உதவியுடன்/ யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்”
Comments are closed.