9. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பேரருள் பொங்கும் அந்த அந்தமிலாக் கண்கள்

அது 1947. விரைவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விடும் என்று எல்லா இடங்களிலும் பேசத் தொடங்கிய காலகட்டம். ராம்சுரத்குன்வருக்குள் ஏதோ ஒரு நிம்மதி பரவிற்று.

கோடைகால விடுமுறையில் தன் சொந்த ஊரான நர்தாராவிற்கு சென்றார். சற்று நேரம் இருந்துவிட்டு நேராக கபாடியா பாபாவை பார்க்கச் சென்றார்.

கங்கைக் கரையின் மீதுள்ள பாறையில் உச்சி வெயிலின் மீது கண்களை மூடிய படி அமர்ந்திருந்தார். கானல் தெறித்துக் கொண்டிருந்தது. ராம்சுரத்குன்வர் சற்று அருகே சென்றார். அவரின் வருகையை உணர்ந்தவர் அங்கிருந்தபடியே பேசத் தொடங்கினார்.

அந்த தகிக்கும் பாறையில் அமர்ந்து இன்முகத்தோடு வரவேற்றதை கண்டு சுரத்குன்வர் ஆச்சரியப்பட்டார்.

‘‘வா…. சுரத்…. எப்படி இருக்கிறாய்’’ பாபா மென்மையாக கேட்டார்.

‘‘நன்றாக இருக்கின்றேன். தேசமெங்கும் சந்தோஷம் தெரிகிறது பாபா…’’ சுரத்குன்வர் சொன்னவுடன் மெல்லியதாய் சிரித்தார்.

‘‘ஓஹோ… சுதந்திரம் கிடைக்கப் போகும் விஷயத்தை உணர்ந்து சொல்கிறாயா.’’

‘‘ஆமாம்… பாபா’’

‘‘நீ சற்று நேரத்திற்கு முன்பு நான் இந்தப் பாறையின் மீது அமர்ந்திருந்தபோது என்ன நினைத்தாய்’’ சட்டென்று பாபா கூர்மையானார். எப்படி நான் நினைத்ததை இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்தார்.

‘‘நான் பாறையில் அமர்ந்திருக்கும்போது நீ நினைத்தாய் அல்லவா… அக்னிபோல் கொதிக்கும் பாறையில் எப்படி அமர்ந்திருக்கிறாய் என்று..’’

‘‘ஆமாம்… பாபா…’’

‘‘அப்படித்தான்… இப்போது மக்கள் இருக்கிறார்கள். புரிகிறதா.’’

‘‘ஓஹோ… கொதிக்கும் பாறையில் பாரத தேசம் அமர்ந்திருக்கின்றது’’ சுரத்குன்வர் சரிதானே என்பதுபோல் பார்த்தார்.

‘‘ஆமாம்.. மிகச் சரி. சுதந்திரம் அடைந்துவிட்டால் எப்படி இருப்பார்கள் தெரியுமா.’’

‘‘எப்படி இருப்பார்கள் பாபா…’’ தயக்கத்தோடு கேட்டார்கள்.

‘‘இதோ இப்படி இருப்பார்கள்…’’ என்று சட்டென்று சுட்டெரிக்கும் பாறையிலிருந்து கீழே இருக்கும் புல் தரையில் குதித்தார்.

சட்டென்று சுரத்குன்வர் புரிந்து கொண்டார்.

‘‘ஓஹோ… அப்போதும் வெப்பம் சுடும் அல்லவா…’’

‘‘நிச்சயம் சுடும். மேலிருக்கும் சூரியன் மாறாதல்லவா… அதுவும் கோடையில் வெயில். சுரத்… இப்போது புரிகின்றதா. நீ வெளியில் கிடைக்கும் சுதந்திரத்தின் அளவு என்பது இதே நிலத்தில் அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கு…’’

‘‘அப்போது எது உண்மையான சுதந்திரம்’’

‘‘get out of it… immediate… That is real freedom” என்று ஆங்கிலத்தில் கூறினார்.

‘‘எப்படி பாபா…’’

‘‘அதோ கங்கையில் சென்று குதித்துப் பார். அப்போது தெரியும். இன்னொரு அக்னி உண்டு’’

‘‘என்ன பாபா…’’

‘‘கொதிக்காத அக்னி. வெளியே சுடும். உள்ளுக்குள் சுடாது. அதுவே அங்கு க்ஷேத்ரமாக விளங்குகிறது. அங்கு ஒரு ஞானாக்னி நடமாடுகின்றது’’

‘‘யார் பாபா…’’

‘‘ரமண மகரிஷிதானப்பா…’’ இனிமையான குரலில் தோள் பிடித்து பேசினார்.

ராம்சுரத்குன்வர் குழைந்தார். எப்போது கேட்டாலும் ஏதோவொரு சிலிர்ப்பு பரவி அடங்குகின்றது.

‘‘நான் அவரை எப்போது பார்ப்பேன் பாபா..’’

‘‘முன்னரே உனக்கு சொன்னேனே சுரத்… உடனே புறப்படப்பா… அவர்தானப்பா உன் குரு. அவரை நீ பார்க்க வேண்டுமப்பா…’’

‘‘அப்போது நீங்கள்… பாபா…’’

‘‘அதைப் பிறகு பார்ப்போம். அவர் இருக்கும் க்ஷேத்ரத்தை திருவண்ணாமலை என்பார்கள். அங்குள்ள அந்த மலையே அருணாசலம்….’’

இந்தப் பெயரை உச்சரித்தவுடனேயே மின்சாரம் தாக்கியதுபோல உணர்ந்தார். மேனி முழுவதும் சிலிர்ப்பு பரவிப் பரவி மெல்ல அடங்கியது. தன் வயமிழந்து நின்றிருந்தார். கை கால்களெல்லாம் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. மெல்ல கண்கள் விரித்துப் பார்த்தார். கபாடியா பாபா.. தலை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். முதுகைத் தடவியபடி இருந்தார். அப்படியே ராம்சுரத்குன்வரை அணைத்துக் கொண்டார்.

‘‘சுரத்… என் அன்பு மகனே… நீ தேடுவது அங்கு கிடைக்கும். யுகத்திற்கு ஒருவர் அதுபோல் அவதரிப்பார்கள். அவரைச் சென்று தரிசித்து விட்டு வா… சென்று வா…’’ என்று ஆசிர்வதித்தார்.

நேராக சொந்த ஊரிலிருந்து தஹியா சென்று தன் மனைவியைச் சந்தித்தார்.

‘‘ராம்ரஞ்சனி நான் உடனடியாக என் குருவைப் பார்க்கச் செல்கின்றேன்.’’

‘‘யார் கபாடியா பாபாதானே…’’ தேவி ஏதோ குழப்பத்தோடு பார்த்தார்.

‘‘அவரும்தானம்மா… இவர் பெயர் ரமண மஹரிஷி… தென்னிந்தியாவில் திருவண்ணாமலை எனும் ஊரில் வசிக்கிறார். நான் சென்று வருகின்றேன். நீ குழந்தைகளைப் பார்த்துக் கொள். வந்து விடுகின்றேன். ஒன்றும் கவலைப்படாதே’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

ராம்ரஞ்சனி தேவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதோ கணவர் மிகப் பெரிய நிலையைத் தொட்டிருக்கிறார் என்று புரிகின்றது. ஆனால், எங்கு தன்னைவிட்டு சென்றுவிடுவாரோ என்கிற பயமும் நெருக்கியபடி இருந்தது. சில சமயம் மாலை நேரம் ஆனாலே போதும் வாசலுக்கு வந்து அமர்ந்து விடுவாள். அவர் வந்தபிறகுதான் நிம்மதி அடைவாள். அவ்வப்போது நீங்கள் எங்கும் சென்றுவிடமாட்டீர்களே என்று கேட்டபடி இருப்பாள். ஏனோ அவர்களை இடைவிடாமல் ஒரு பயம் துரத்தியபடி இருந்தது.

ஆனாலும், அவர் ஏதோ ஒன்றிற்காக படைக்கப்பட்டிருக்கிறார் என்று மட்டும் தெரிந்தது. என்ன ஆனாலும், அவர் சரியானதைத்தான் செய்வார் என்னும் நம்பிக்கை இருந்தது. இப்போது திருவண்ணாமலைக்கு செல்கிறார் என்றவுடன் கொஞ்சம் பயமும் வந்துபோனது. என்ன செய்யப் போகிறார்…. சிவனைத்தானே தரிசனம் செய்யப் போகின்றார். அதிலென்ன தவறு உள்ளது. அந்த சிவனுக்குத் தெரியாதா… அவரை என்ன செய்வதென்று… அந்த சிவனுக்குத் தெரியாதா… என் குழந்தைகளை என்ன செய்வதென்று… இதோ ரமண மகரிஷிக்கு தெரியாதா… எங்கள் வாழ்வினை என்ன செய்வதென்று… என்று மெல்ல பயந்தபடியே சிந்தித்தவர்கள்… இப்போது மெல்ல பயம் களைந்தாள். எல்லாமுமே அவர் இஷ்டப்படிதானே நடக்கின்றது என்று வீட்டிற்குள் சென்றாள்.

ராம்சுரத்குன்வர் தென்னிந்தியாவின் பக்கம் தன் பயணத்தை துவக்கினார். மெல்ல எப்படியோ பயணித்து திருவண்ணாமலையை அடைந்தார்.

வெகுதொலைவே அந்த மலையைக் கண்டவர் அதிர்ந்து நின்றார். சட்டென்று உற்றுப் பார்த்தார். ஹா… ஹா… என்று அதிர்ச்சியடைந்தார்.

மலை சட்டென்று மறைந்து வெறும் வெளியாக ஸ்ணீநீuuனீ ஆக இருந்தது. ஏதோ கவிழ்த்து வைக்கப்பட்ட மாபெரும் மலையாக இருந்தது. சட்டென்று மெல்ல மெல்ல கற்களும் மண்ணுமாக மலை நிமிர்ந்து நின்றது.

இதென்ன இப்படி ஒரு தரிசனம் என்று அதிர்ந்தார். அந்தப் பாதையில் ஒரு ஆண்டி ராப்பகல் இல்லா வெறுவெளி வீட்டில் ரமித்திடுவோம் வா அருணாசலா… அந்த தமிழ் பாட்டு அவருக்கு முதலில் புரியவில்லை. அருணாசலா… எனும் வார்த்தை மட்டும் காதில் விழுந்தது.

‘‘சுவாமி பகவான் ரமணரின் ஆஸ்ரமத்திற்குச் எப்படி செல்வது’’ என்று கேட்டார்.

அந்த ஆண்டி இதோ இப்படி செல்லுங்கள் என்று வழி காட்டினார்.

அன்று கோடையாக இருந்தாலும் மெல்லிய தென்றல் வீசியது. மெல்ல மேகங்கள் திரண்டன. தூறல் போட்டது. சில்லென்று காற்று வீசியபடி இருந்தது.

ராம்சுரத்குன்வர் ரமணாச்ரமம் என்று பலகை தாங்கிய அந்த இடத்திற்குள் நுழைந்தார்.

அதுவரை ராம்சுரத்குன்வரின் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மனம் மெல்ல அடங்கியது. வெகு தொலைவே நிழலாக யாரோ சிலைபோல் அமர்ந்திருப்பது போன்று பட்டது. மெல்ல மெல்ல அருகே சென்றார். மகரிஷி தன் கண்களைக் கூட இமைக்காமல் சிலைபோன்று அமர்ந்திருந்தார். எங்கேயோ அந்தப் பார்வை நிலை குத்தியபடி இருந்தது. ஒரு காலை மடக்கியும் இன்னொரு காலை நீட்டியபடி அந்த ரமண பிரம்மம் அமர்ந்திருந்தது. ஒரு கையை தன் மடக்கிய காலின் முட்டியின் மீது வைத்து ராஜ கம்பீரமாக தலையைத் தூக்கியபடி இருந்தார். மாலையின் இருள் மெல்லியதாகக் கவிழும் நேரம் அது. ஆங்காங்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. சுகந்தமான சாம்பிராணியை அருகிலிருந்து சிறிய கும்மட்டி அடுப்பில் தூவினர். அருகே இருப்பவர் பகவானுக்கு மெல்லியதாக விசிறிக்கொண்டிருந்தார்.

தீபங்களின் ஒளி அந்த முகத்தில் பிரதிபலிப்பது போலிருந்தது ராம்சுரத்குன்வருக்குஞ் மெல்லிய அக்னியின் தழல் முகம் முழுவதும் அசைந்தாடுவது போன்றிருந்தது. அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கிருக்கும் அந்த வஸ்துவிலிருந்து பேரமைதி ஒன்று தன்னைச் சூழ்ந்ததை உணர்ந்தார். அது இங்கிருக்கும் மௌனமல்ல. அது எங்கேயோ இடமறியாத…. உலகம் அற்றுப்போன… வான், வெளி, பூமி, நட்சத்திரம், பூமி, அதற்கும் அப்பாலுமாய்… அதையும் தாண்டி இன்னதென்று தெரியாத மனமறியாத மனதால் ஸ்பரிசிக்க முடியாத இடத்திலிருந்து ஏதோவொன்று ராம்சுரத்குன்வரை துளைத்துக் கொண்டு சென்றது.

அந்த அரிய உருவத்திலிருந்து கண்களை அவரால் நகர்த்த முடியவில்லை. இதோ என் கண்ணெதிரே இருப்பதுதான் பிரம்ம வஸ்துவாஞ் யுகம் யுகங்களாக எல்லோரும் தேடிக் கொண்டிருப்பது எதையோ அதுவே இங்கு இப்படி அமர்ந்திருக்கிறதா… வேதங்களும் உபநிஷதங்களும் எதை விளக்க முடியாமல் திணறுகின்றதோ அதுதானே இங்கு மானிட சரீரத்தில் வந்து அமர்ந்திருக்கின்றது. இது எல்லாமுமாக இருந்துகொண்டு தன்னை ஒரு சரீரமாக கருணையோ தன்னை இங்கு காட்டிக் கொண்டிருக்கின்றது. இதுவே சிவம். இதுவே விஷ்ணு. இதுவே பிரம்மம். இதுவே அம்பாள். இதுவே கங்கை. இதுவே கபாடியா பாபாவாக அங்கும் உள்ளது. என்னை அங்கிருந்து இங்கு அழைத்திருக்கின்றது.

ஏதோ என் சிந்தனையை அறுப்பதுபோல் என்னை ஏதோ இறுக்குகின்றதே என்ன அதுஞ் என்ன அது தன் உடல் மெல்லியதாக நடுங்கத் தொடங்கியது.. அதுவும் அடங்கியது. மனம் இப்போது தனக்கு வேறாகப் பிரிந்ததுஞ் அங்கிருந்த அறை முழுவதும் தானே இருப்பதுபோல் இருந்தது. மெல்ல வெளியே இருக்கும் மரம் காற்று செடி கொடிகளுக்குள் தன்னைப்போன்றதொரு என்று சொல்ல முடியாமல்ஞ் தானே போய் அமர்ந்து விட்டதொரு உணர்வுஞ் சட்டென்று தான் பகவானின் அருகே சம்மணமிட்டு அமர்ந்திருப்பது போலும் தோன்றியது. கண்கள் திறந்திருந்தது. இப்போது அந்த கண்களை பகவான் தன் திருப்பு என்பதுபோன்று கட்டளையிட்டது போன்று தோன்றியது. அந்த மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தார். அந்தக் கண்… இல்லை… இல்லை… அந்த அந்தமிலாக் கண்… ராம்சுரத்குன்வருக்குள் புகுந்தது. சட்டென்று ராம்சுரத்குன்வருக்கு வெளிப் பிரக்ஞை அழிந்தது. அப்படியே சிலையானார். வெளியே சிலையாக அமர்ந்திருந்த பகவானின் கண்கள் சுரத் என்கிற சூரிய வம்சத்து வழி வந்த பக்தனை உற்றுப் பார்த்தது. அங்கும் இங்கும் பார்வையை நகர்த்தவே இல்லை. அருகிலிருந்த பக்தர்கள் சிலர்… அடடா… அடடா… என்று மனதிற்குள் ஆனந்தமானார்கள்.

நேரம் அழிந்தது. இடம் மறைந்தது. எங்கேயோ நிலை கொண்டிருந்த ராம்சுரத்குன்வரை பகவான் சற்று விடுவித்தார். கண்களில் பிரகாசத்தோடு பகவானைத் தரிசித்தார். அமர்ந்திருந்த சுரத்குன்வர் முட்டி போட்டாற்போல் அமர்ந்து கைகளைக் கூப்பிக்கொண்டு மந்தஹாசத்தோடு அதாவது புன்னகை தவழ வழியும் முகத்தைக் கண்டு பிரமித்துக் கிடந்தார்.

என்ன நிலை இது சொல்ல முடியவில்லையே… மனம் எங்கே சென்றது… வார்த்தைகள் ஒடிந்து மடங்கி விழுகின்றனவே… அஹாஞ் ஆதி அந்தமில்லாதது இங்கு இப்படி என் எதிரே அமர்ந்திருக்கின்றதே என்று சொற்கள் இல்லாது தழுதழுத்து அமர்ந்திருந்தார்.

காணாமல் போயிருந்த மனம் சட்டென்று ஒன்று கூடியது. அதில் ஒரு பிரார்த்தனை வடிவில் எண்ணம் தோன்றியது.

‘‘எனக்கு எப்போதும் இந்த நிலையை அருளுங்கள் பகவான்’’’ என்று வேண்டிக் கொண்டார்.

எதிரே பகவானின் திருமுகம் மலர்ந்தது. அந்த அமுதத் திருவாய் திறந்தது. அதிலிருந்து சரி என்ற சொல் உதிர்ந்தது.

தமிழே தெரியாத ராம்சுரத்குன்வருக்கு சரி என்ற வார்த்தையே பகவானின் பிரசாதம் போன்று கிட்டியது. சரி எனும் வார்த்தைக்கு முழுப் பொருளும் புரிந்தது.

எல்லோரையும் பிரசாதம் உண்ண வாருங்கள் என்று அங்கிருந்த ஒருவர் அழைத்தார். பகவான் ராம்சுரத்குன்வரை பார்த்து போய் உண்டு வாருங்கள் என்பதை கண்களாலேயே சொன்னார்.

மெல்ல எழுந்தார். பின்னாலேயே நடந்தார். பிரசாதக் கூடம் சென்றார்.

– தொடரும்

8. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா – விருட்சம் நாளிதழ்

One Comment on “9. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா”

Comments are closed.