
பூமி அழுதது; வான் கருணை கொட்டியது..
அது 1942ம் வருடம். அந்த அழகான கிராமத்திற்கு தஹியா என்று பெயர். பீகார் மாநிலத்தில் வைரானி ஜங்ஷனில் இருந்து வடக்கே 14 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. பலான் நதியின் கரையில் அமைந்துள்ளது.
ராம்சுரத்குன்வர் மனைவி ராம்ரஞ்சனி தேவியை அழைத்துக்கொண்டு தன்னுடைய மாமனார் வீட்டிற்கு வந்துவிட்டார். ராம்ரஞ்சனி தேவிக்கு நான்கு சகோதரர்கள். அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொருவராகத் திருமணம் நடந்தது. எல்லோருக்கும் அது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.
‘‘உங்களுக்கு ஒன்று தெரியுமா…’’ தேவி ராம்சுரத்குன்வரை நோக்கிக் கேட்டார்.
‘‘என்ன…’’
‘‘என் பாட்டி மிகவும் ஆசாரமான பெண். ஈஸ்வர பக்தி அதிகம். அதனாலேயே, பத்ரிநாத், ராமேஸ்வரம், துவாரகை என்று நடந்தும் வண்டி கட்டிக்கொண்டும் செல்வார்கள். இதில் பல ஊர்களுக்கு நானும் செல்வேன். செல்லும் இடங்களிலெல்லாம் நானும் வேண்டிக்கொள்வேன்.’’
‘‘என்ன வேண்டிக் கொள்வாய்’’
‘‘எப்படியாவது அந்த பகவானை தரிசிக்க வேண்டுமென… ஆனால், கொஞ்சம் பயமாக இருக்கும். சரி, அதற்கு நிறைய தவம் செய்ய வேண்டுமோ என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், இப்போது அந்தக் கவலை தீர்ந்து விட்டது. என் கணவரே என்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏதோ உயரத்தில் இருப்பதுபோல் படுகின்றது. உங்களுக்கு அருகே இருக்கும்போது நீங்கள் வேறு ஏதோ ஒரு உலகத்திலிருந்து வந்தவர்போல இருக்கும். ஆனால், மனம் நிம்மதியாக இருக்கும். இதோ இப்போது எங்கள் குடும்பத்திலேயே நீங்கள் ஒருவராக இருக்கிறீர்கள்’’ என்று ஆனந்தமாகப் பேசுவார்கள்.
ராம்சுரத்குன்வர் தன் வாழ்க்கைத் துணையை நினைத்து பூரிப்படைந்தார்.
ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் தொழிலில் ஈடுபாடு உண்டு. அதனால் எப்படியாவது ஒரு அரசுப் பள்ளியில் வேலைக்கு அமர வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அப்போதெல்லாம் அரசுப் பள்ளியில் அமர வேண்டுமெனில் அவர் பீஹாரியாக இருக்க வேண்டும் அல்லது அங்கு அவருக்கென்று நிலம் இருந்தாக வேண்டும். அதனால் மாமனார் இவர் பெயரில் வாங்கினார். அங்கேயே வீட்டையும் கட்டிக் கொடுத்தார்.
‘‘ராம்ரஞ்சனி எனக்கு இஸ்லாம்பூரில் ஒரு இடைநிலைப்பள்ளியில் வேலை கிடைத்துள்ளது. நாம் நாளையே புறப்படலாம்’’ என்றார்.
ஆனால், நான்கு மாதங்களுக்கு மேல் அங்கு தாக்குப் பிடிக்கமுடியவில்லை. அதனால், மீண்டும் பரோனியில் உள்ள ராதாகிஷன் பள்ளியில் சேர்ந்தார். அவர் பெற்ற சம்பளத்தில் எல்லா மாதமும் ஒரு சிறு தொகையை நர்தாராவிலுள்ள தன் மூத்த சகோதரருக்கு அனுப்பினார்.
பின்னர் வெகுநாட்கள் கழித்து பாட்னாவிலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்வியில் இணைந்து 1945ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார், பின்னர், பீஹாரில் கிர்தி எனும் ஊரிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார்.
ராம்ரஞ்சனி தேவி இந்த காலத்தில் கருவுற்றார். அதனால், மீண்டும் மாற்றல் கேட்டு பரோனிக்கு வந்தார்.
ஒருபுறம் உலக வாழ்க்கை ஓடியபடி இருந்தது.
ராம்ரஞ்சனியை அழைத்தார்.
‘‘நாளை முதல் நவராத்திரி தொடங்குகின்றது. அதனால், நான் ஒன்பது நாட்களும் இந்த அறையில்தான் இருப்பேன். தேவைப்பட்டால் மட்டுமே வெளியே வருவேன்’’ என்றார்.
ராம்ரஞ்சனியும் சரி என்றார்.
காலை முதல் இரவு வரையிலும் அந்த அறையைத் தாழிட்டுக்கொள்வார். வெறும் நீரை மட்டுமே உட்கொள்வார். மௌன விரதத்தை மேற்கொள்வார். இப்படியே விஜயதசமி வரை இருந்து விட்டு பிறகு உணவை எடுத்துக்கொள்வார். பேசத் தொடங்குவார்.
அவர்களுக்கு 1945ம் வருடம் அழகான பெண் குழந்தை பிறந்தது. புத்தரின் மனைவி பெயரான யசோதா என்று பெயரிட்டார். எப்போதுமே குழந்தையை யஷோ… யஷோ… என்றுதான் அழைப்பார். ஏனெனில், the light of asia என்கிற புத்தகத்தை அவ்வப்போது படிப்பதாலும் அவருக்கு அதன் தாக்கம் இருந்தது.
காலம் நகர்ந்தது. தஹியாவிற்கும் நர்தாராவிற்கும் போய் வந்தபடி இருந்தார். வாழ்க்கை மெதுவாக நகர்ந்தது. 1947ம் வருடம் மீண்டும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அமிதாப் என்று பெயர் வைத்தார். அமிதாப் என்றால் சூரியன் அல்லது புத்தர் என்பது பொருள்.
தஹியா வரும்போதெல்லாம் அங்குள்ள பாலன் நதிக்கரையில் அமர்ந்துகொள்வார். தன்னுடன் ராம்தத் சௌத்ரி என்பவரையும் அழைத்துக்கொள்வார். அப்போது அவருடன் சத்சங்கமாக இருந்தது அவர்தான். எதிரேயுள்ள நீரைப் பார்த்தபடி ராம்சுரத்குன்வர் சட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.
‘‘சௌத்ரி ஜி… இதோ எதிரே ஓடும் நதியை கவனித்தீர்களா.’’
‘‘ஆமாம் சுரத்…’’
‘‘அந்த நதியின் மேலேயே குமிழ்குமிழாக பொங்கிப் பொங்கி வளர்கின்றதே… அதை கவனித்தீர்களா…’’
‘‘ஆமாம்… நீர்க் குமிழிகள்.’’
‘‘இதைத்தான் புத்தர் நாம் என்கிறார். வாழ்க்கை ஓடும் நதிபோல.. அந்தக் குமிழிகள்தான் நாம்… சட்டென்று கொஞ்சம் வாழ்கிறோம். மறைகின்றோம். ஆனால், நாம் அந்த நதிக்குள் அமர்ந்து அந்த நதியே நாம்தான் என்று நினைப்பதில்லை. எவ்வளவு அழகான பெருக்குள்ள வாழ்வெனும் நதி அது. அதைப்போய் நாம் உணராமல் இப்படி துக்கமும், பயமும், ஆசையுமாக அரற்றிக் கொண்டிருக்கிறோமே என்கிறார். புத்தர் இந்த மானுடம் ஏன் இறக்கின்றது என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார். சௌத்ரி… நான் புத்தரைப் படிக்கப் படிக்க அவரை அறியும்தோறும் என் எதிரே அமர்ந்து யாரேனும் கவலை கொண்டாலும், அழுதாலும், பயத்தால் நடுங்கினாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மெல்ல அவர்களை அணைத்துக் கொள்ள வேண்டும்போல் உள்ளது. நான் என் அருகே வரும் மனிதர்களின் துக்கங்களினால் பாதிக்கப்படுகின்றேன். எனக்கு என்ன வேண்டுமென்று குறைந்துகொண்டே வருகின்றது.’’
‘‘சுரத்… நான் உன்னை கவனித்தபடி இருக்கின்றேன். நீ பெரும்பாலும் இப்போதெல்லாம் வேலைக்குப் போவதைத் தவிர்க்கிறாய். அதனால், உன் குடும்பம் பாதிக்கப்படும் என்பதை அறிவாயா… நான் உன்னைக் குறை சொல்லவில்லை. ஆனாலும், உன்னை எதுவோ ஒன்று அவ்வப்போது சுற்றி வளைப்பதை அறிகின்றேன். அன்றொரு நாள் நீ பாலன் நதிக்கரையில் அமர்ந்தபடியே கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் தியானத்தில் இருந்தாய். உண்மையைச் சொல். உனக்குள் என்ன பார்க்கிறாய்..’’
‘‘உங்களிடம் பொய் சொல்வதற்கு என்ன உள்ளது. என்னுள் ஒரு மையம் இருந்ததை கொஞ்ச நாள் முன்பு அறிந்தேன். அதைத்தான் எல்லோரும் சுரத் என்று அழைத்தார்கள். இப்போது அந்த மையம் அவ்வப்போது மறைந்து போகின்றது. இதோ இந்த நதிபோல ஒன்று உள்ளே ஒன்று ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த நதியானது என்னுள் பாயும்போது என் உடம்பு தூள்தூளான மணலைப்போல மறைந்து போகின்றது. பிறகு ஆச்சரியமாக ஒன்று சேருகின்றது. அந்த மையத்தை யாரேனும் அழைத்தால் என் தலை திரும்புகின்றது. அந்த மையத்தையே கணவன் என்று ராம்ரஞ்சனி நினைத்திருக்கிறாள். அது இந்த உடம்போடு தொடர்பு கொண்டிருக்கின்றது. அதையே சுரத் என்கிறார்கள். அந்த மையத்திற்கு இந்த உலகத்திற்கு தொடர்புகொஞ்சம் உள்ளது. சில சமயம் அதுவும் மறைகின்றது. அது மறையும்போது வேறொன்று உள்ளுக்குள் மலர்கின்றது. இது போயும் வந்துமாக இருக்கின்றது.’’
‘‘என்ன சொல்கிறாய் சுரத்… நீ சொல்வது எப்படி இருக்கின்றது தெரியுமா… ஒருமுறை மாடியில் ராமகிருஷ்ணர் அமர்ந்திருந்தார். கீழே விவேகானந்தர் இருந்தார். சட்டென்று விவேகானந்தர் ஐயோ… என் தலையைக் காணவில்லை… என் தலையைக் காணவில்லை… என்று அலறிக் கொண்டே ஓடினார். ஆனால், மிகச் சரியாக பரமஹம்ஸர் முன்பு போய் நின்றார். அப்போது பரமஹம்ஸர் இப்போதைக்கு இதுபோதும் என்று சொல்ல மீண்டும் தன் தலை இருப்பதை உணர்ந்தார். அதுபோல அல்லவா நீ சொல்கிறாய். உன் குடும்பத்திற்கு இது தெரியுமா…’’
‘‘இல்லை சௌத்ரி.. எனக்கு ஏதேனும் ஆகிவிடும் என்றும் என் குடும்பம் தனியாக தவிக்கும் என்கிற பயம் இருந்தால்தானே இதை நான் சொல்ல முடியும். ஆன்மீகத்தில் நீங்கள் செல்லும்போது நீங்கள் தனி, உங்கள் குடும்பத்தை நீங்கள்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தால் அது எத்தனை அபத்தம் சொல்லுங்கள் பார்ப்போம். எது ரஞ்சனி தேவிக்குள் இருக்கிறதோ அதுவே எனக்குள்ளும்… இதோ இந்த நதியில் வேகத்திலும்.. உங்களுக்குள்ளும்… எல்லாவற்றினுள்ளும் இருக்கும்போது நான் எப்படி இது என் குடும்பம் என்று நினைக்க முடியும். என் குழந்தைகள் இங்கு வரவேண்டுமென்று இருக்கின்றது. அதற்கு இந்த சரீரம் ஒரு நிமித்தம். என்ன சொல்கிறீர்கள். என் மூலம் இன்னும் சில குழந்தைகள் இந்த பூமிக்கு வரவிருப்பதை நான் அறிவேன். ஆனால், என்னால் உங்களைப்போன்ற ஒரு சிலரிடம்தான் வெளியில் சொல்லமுடியும். அதனால் அமைதியாக இருக்கின்றேன். புத்தர் ஒரு பிள்ளையை மட்டும் விட்டு வெளியே சென்றார் என்று நினைக்கின்றேன். ஆனால்… நானோ….’’ சுரத் தலை குனிந்தார்.
அவர் கண்களில் நீர் வழிந்தது. கட்டுப்படுத்தப் பார்த்து தோற்றுப் போனார். குலுங்கிக் குலுங்கி சௌத்ரியின் தோளில் சாய்ந்து அழுதார்.
‘‘ஏனப்பா… இப்படி அழுகின்றாய்’’
‘‘இல்லை சௌத்ரி… என்னுள் நடக்கும் மாற்றங்கள் முற்றிலும் வேறொரு சக்தியால் நடக்கின்றது. அது மெல்ல மெல்ல அணைக்கின்றது. அதுவே சத்தியம் என்பதை சிற்சில கிரணங்களால் எனக்குக் காட்டுகின்றது. அதை இன்னது என்று சொல்ல முடியவில்லை. அது மறையும்போது உலகம், மனைவி, குழந்தைகள் இங்குள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு பெரும் ஆற்றில் இருக்கிறார்கள். அங்கு வெறும் துக்கம், பயம், சோகம், பொறாமை, வன்முறை, வெறுப்பு… என்று எல்லாமும் கலங்கிய குட்டைபோல உள்ளன. ஆனால், அந்த பெருஞ்சக்தி அவர்கள் அழும்போது மேலிருந்து இறங்குகின்றது. அந்த ஓலம் அதிகமாகும்போது அதைத் தாங்க முடியாமல் அங்கிருந்து அந்த ஆற்றோட்டமான stream of conciousness ஐ நோக்கி வருகின்றது. அங்கிருப்பவர்கள் சிலர் அழுகிறார்கள். துடிக்கின்றார்கள். இது பெரும் அவஸ்தை என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.
இப்போது வானம் தரையை நோக்கி வருகின்றது. அது வெறும் தரை அல்ல. உலகம் என்கிற போர்க்களம். அங்கு என்ன செய்கிறோம்… எங்கு போகிறோம் என்று இந்த மாய நீர்ச் சுழலில் மாட்டிக்கொண்டிருப்பவர்களை மேலேற்ற வருகின்றது. அவர்கள் ஏன் விழுந்தார்கள். எப்படி கரையேறுவார்கள் என்பதை அந்த வானத்திலிருந்து கீழே வருவதுதான் அறியும். ஒருமுறை அந்த வானத்தையும் கீழேயுள்ள இந்த பாழ் உலகத்தையும் ஒரு சேரப் பார்த்தேன். அன்று நான் வெடித்து அழுது விட்டேன். ஏன் அழுதேன் எனில் என்னுள் கருணை என்று பெருஞ்சக்தியும் என் புலன்களால் தொடப்பட முடியாத அன்பு எனும் சக்தியும் வெடித்து வெளியே வந்தன.
இதோ அவன் அழுகின்றான்… இவன் ஏமாறுகின்றான்… அவனைப் பயம் சூழ்ந்து நிற்கின்றது… ஐயோ இவன் எப்படி இதிலிருந்து வெளியே வரப் போகின்றான். சௌத்ரி… இந்த நீரை விட அங்கொரு வானம் உண்டு. அதிலிருந்து பொத்துக் கொண்டு வரும் நீர் உண்டு. அதை பருகக்கூட வேண்டாம். தெளித்தாலே போதும். இங்கிருப்போர் அனைவரும் துக்கம் நீங்கி சுகம் பெறுவார்கள். அந்த சுகம்… இந்த வார்த்தையில் உள்ள சுகம் இல்லை. அதையெல்லாம் தாண்டியது. நித்தியத்துவமானது. அமிர்தமானது… அதை உணர்ந்த அன்று ஏதோ பாறைக்கு இடையே கசிவதுபோல என்னுள் கசிந்த நாளன்று… என் மகன் பிறந்தான். அதனால் அவனுக்கு அமிதாப் என்று பெயரிட்டேன். அது புத்தனின் ஒரு நிலையல்லவா… ’’ என்று சுரத்குன்வர் பேசப் பேச சௌத்ரிக்கு என்ன சொல்வதென்றே புரியவிலை.
‘‘இனி நீ என்னப்பா… செய்யப் போகிறாய்..’’ என்று கும்மிருட்டாகிப் போன அந்த இரவில் நிலவு வெளிச்சத்தில் ஜொலிக்கும் ராம்சுரத்குன்வரைப் பார்த்து சௌத்ரி கேட்டார்.
‘‘ஆமாம்… செய்ய வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றுள்ளது. போன வாரம்தான் கபாடியா பாபா அதைச் சொன்னார். அவரைப்போய் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டதைச் சொன்னார்’’ இரண்டு தோளிலும் கையைப் போட்டபடி பேசினார்.
‘‘யாரை’’ சௌத்ரி உற்றுப் பார்த்துக் கேட்டார்.
‘‘அவர் பெயர் பகவான் ரமண மஹரிஷி’’ என்று சொல்லிக் கொண்டே ராம்சுரத்குன்வர் சிலையாகிப் போனார். மெல்ல தளர்ந்தார். கால் பாவியது. தளர்ந்து அமர்ந்தார். நதிக்கரையின் புல் தரையில் மெல்ல கிடத்தி முகத்தில் நீரைத் தெளித்தார்.
‘‘சுரத்… சுரத்…’’ என்று அந்த நிலவொளியில் நீர்பட்டு ஜொலிக்கும் முகத்தை அழைத்துப் பார்த்தார்.
ராம்சுரத்குன்வர் தனக்குள் பௌர்ணமி நிலவும் அதனடியில் பிரமாண்ட மலையும் தெரிந்தது.
‘‘ஆஹா… ஆஹா… என்றார். விரைந்து வருகின்றேன்… விரைந்து வருகின்றேன்…’’ என்று உதடு துடிக்க பேசினார்.
மெல்ல எழுந்து அந்த இருளை பிளந்து கொண்டு நடந்தார்.
‘‘ஸ்மரணாத் அருணாசலம்’’ என்று சௌத்ரியும் தனக்குள் சொல்லிக் கொண்டே துண்டை உதறியபடியே எழுந்து நடக்கத் தொடங்கினார்.

One Comment on “8. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா”
Comments are closed.