ஞான ஒத்திகை
ராம்சுரத்குன்வர் கல்லூரிப் படிப்பை தொடர மீண்டும் அலகாபாத் சென்றார். அதற்கு முன்பு மனைவியை தஹியாவில் விட்டுச் சென்றார். 1939ம் வருடம் இண்டமீடியட் தேர்வானார். பிறகு அதே கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்பில் 1941ம் வருடம் தேர்ச்சி பெற்றார்.
அந்தக் காலத்தில் ஒழுக்கச் சான்றிதழ் இல்லாமல் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள். அதன்படி 1941ம் ஆண்டு அவருக்கு கீழேயுள்ளவாறு சான்றிதழ் அளித்தது.
Mr. Ramsurat kunwar has shaped well, and in regarded as one of the very good student. Hard working and sincere. A healthy young man of very good character, he is a player of volley ball and a considerable wrestler. He is gifted with an acute sense of duty and discipline and can be relied upon.
ராம்சுரத்குன்வர் அவர்களின் வெளியுலகில் வாழ்வு மாறிக் கொண்டேயிருந்தது. ஆனால், உள்ளே மட்டும் ஒரு ஞானத் தீ பந்துபோல் சுழன்றுகொண்டிருந்தது. அது வெளிப் பார்வைக்குத் தெரியாமலிருந்தது. அவரும் தன்னுள் நிகழும் அக மாற்றங்களைச் சிலரைத் தவிர வேறொருவரோடு பகிர்ந்துகொண்டதில்லை. ஆனால், இதற்கு இணையாகப் படிப்பு, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் தன்னை ஈடுபாட்டோடு வைத்துக் கொண்டார். மல்யுத்தப் போட்டிகளில் பங்குகொண்டு அதிலும் முதல் பரிசைப் பெற்றார். உடம்பை இதற்காகவே உறுதியாக வைத்திருந்தார். அதே சமயம் மனதை இளகியதாக வைத்திருந்தார். ஏனெனில், அந்தக் காலத்தில் கங்கை வெள்ளத்திலும் அடர்ந்த காடுகளிலும் இரவிலும் அச்சமின்றி உலா வந்தபடியிருந்தார்.
நர்தாராவிற்கும் தஹியாவிற்கும் மாறிமாறி அலைந்து கொண்டிருந்தார். இவர் இவ்வாறு வரும்போது தனியே தங்குவதற்கென்று அவருடைய மாமனார் பெரிய அறை ஒன்றைக் கட்டி வைத்தார். சிலசமயம் பாலன் ஆற்றங்கரைக்கு அருகே அமர்ந்திருப்பார். அவ்வாறு ராம்ரஞ்சனி தேவியையும் அழைத்துச் செல்வார். அங்கிருக்கும் சிவன் கோயிலில் வெகுநேரம் கண்மூடி அமர்ந்திருப்பார். மெல்லியதாக தியானம் கலைந்து எழும்போது கண்களில் அக்னி கொப்பளித்திருப்பதுபோல் சிவந்திருக்கும்.
‘‘ராம்ரஞ்சனி நாளை காலையே நாம் நர்தாரா போக வேண்டும்’’ என்றார்.
‘‘ஏன்… நேற்றுதானே வந்தோம். என்ன அவசரம்’’ என்று ராம்ரஞ்சனி தேவி கேட்டார்கள்.
‘‘இல்லை… என்னுள் ஒன்று தோன்றுகிறது’’ என்றார்.
அங்கிருந்து புறப்பட்டு நர்தாரா அடைந்தார்கள். வீட்டிலுள்ள அனைவரிடமும் நீங்கள் அனைவரும் உடனே புறப்படத் தயாராகுங்கள். எல்லா துணிமணிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆடு, மாடுகளை அழைத்துக் கொள்ளுங்கள். உடனே உடனே… என்று சொன்னபோது எல்லோரும் ஏன் இப்படி எப்போதும் புரியாத புதிராக ஏதேனும் செய்துகொண்டிருக்கிறான் என்றபடி முணுமுணுத்தார்கள்.
ஆனால், அனைவரையும் புறப்படச் சொல்லிவிட்டு மொத்த வீட்டையும் காலி செய்து விட்ட பின்னர், தந்தையின் அருகே போய் வா… என் தோளில் ஏறிக்கொள்ளுங்கள். கொஞ்சம் மேடான அல்லது வெளியூருக்குச் செல்ல வேண்டும். சைக்கிளில் முடிந்தால் அமர்ந்துகொள்ளுங்கள். எது முடியுமோ என்று தன்னை உடம்பு முழுவதும் வேட்டியை சுற்றிக்கொண்டு அதை அப்படியே தொட்டில் போல் ஆக்கி அதில் தந்தையை அமர வைத்து அந்த குடும்பம் மெல்ல கிராமத்தை விட்டு புறப்பட்டது. அதற்குள் ஊருக்குள்ளும் இந்தத் தகவல் பரவி எல்லோரும் ஏன் செல்கிறீர்கள் என்று கேட்கும்போது, வானத்தில் இடி இடித்தது. மின்னல் வெட்டியது. மெல்ல கருமேகங்கள் சூழ்ந்தன.
தயவுசெய்து எல்லோரும் வெளியேறுங்கள் அவ்வளவுதான் சொல்வேன் என்று கூற அந்தச் சிறிய கிராமத்திலிருந்து மக்கள் மேடான பகுதியை நோக்கி நடந்தனர். இவர்கள் நடக்க நடக்க அவ்வூரை கடும் இருள் சூழ்ந்துகொண்டது. திரும்பிப் பார்க்கும்போதே அவர்கள் குடும்பத்தினருக்கு ஏதோ விபரீதம் நிகழப் போவதை உணர்ந்தபடி இருந்தனர்.
ராம்சுரத்குன்வர் வானம் பார்த்தார். இடிச் சத்தம் பத்து மைல் தூரம் வெடித்துச் சிதறியதுபோல் பெருஞ்சத்தத்தோடு வெளிப்பட்டது. மிகமிக பாதுகாப்பான ஊர்களுக்குச் சென்றுவிட்ட நிம்மதியை அவர்கள் அனைவரும் அடைந்தனர்.
இப்போது குருநாதர் எங்கிருப்பார்? என்று நினைத்து கண்மூட உள்ளுக்குள் அவர் சிரித்தார். இவரும் நிம்மதியானார்.
வானம் தன் பரிவாரங்களோடு பூமியை நோக்கி வந்தது. பேயாட்டம் ஆடியது. மேகங்கள் மேகங்கள் யானை யானையாக வந்திறங்கின. மழையான மழையாக பெய்துகொண்டே இருந்தன. கங்கையில் நீர் ஏறியது. மெல்ல கரையைத் தாண்டியது. வானம் தன்னிருப்பை முற்றிலும் கரைத்து விட்டுத்தான் போவேன் என்பதுபோல தன் அனைத்துக் கதவுகளை முற்றிலும் திறந்து விட்டிருந்தன. இதென்ன கடல் தலைகீழாகி மேலேயிருந்து கொட்டுவதைப்போல் இருந்தது. அனைவரும் பயந்தனர். கங்கையில் வெள்ளம் பொங்கியது. கரை உடைந்தது. அருகிலுள்ள தோப்புகளுக்குள் பாய்ந்தது. நர்தாரா என்கிற அந்த கிராமத்திற்குள் ஆக்ரோஷமாக புகுந்தது. எல்லாருடைய வீடுகளையும் தரைமட்டமாக்கி விட்டுச் சென்றது.
ராம்சுரத்குன்வரின் வீட்டிற்குள் கங்கை வெள்ளம் புகுந்தது. நீர் எல்லா இடங்களிலும் சூழ்ந்து சென்று கொண்டிந்தபோது, கொஞ்சம் கங்கை பொறுத்தாள். அந்த கிணற்றருகே நகர்ந்து கிணற்றை மூழ்கடித்தாள். உயரம் ஏறாது… கிணற்றின் இரு பக்கங்களிலும் கட்டை கட்டி நடுவே கட்டையை விட்டு அதன் நடுவே கயிற்றையும் சகடையும் பார்த்து சற்றே பணிவாக தாழ்ந்து தாழ்ந்து நகர்ந்தாள்.
என் பிரிய சகா… இங்குதானே மரணம் குறித்த ஞானம் பெற்றான் என்று சற்றே குழைந்து நெளிந்து கிணற்றை மட்டும் நிரப்பி நகர்ந்தாள்.
மழை விட்டது. சூரியன் மெல்ல மேலேறினான்.
ஒரு வாரம் கழித்து நீர் கொஞ்சம் கொஞ்சம் வடிந்தாலும் மேய்ச்சல் நிலங்களும் வீட்டும் பெரும் பாதிப்புக்குள்ளானது. இனி எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று அனைவரும் சோகமானார்கள். ராம்சுரத்குன்வரின் தந்தை மனதளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளானார். மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் கங்கை விழுங்கியதே என்று நினைந்து நினைந்து குமைந்தார். அதற்குப் பிறகு பல மாதங்கள் கழித்து மரணமடைந்தார்.
மூன்று சகோதரர்களும் ஒன்றாக அமர்ந்தனர். ஆளுக்கொரு பொறுப்பை ஏற்போம். குடும்பத்தை மீட்போம் என்று பேசினர். ஆனாலும், ராம்சுரத்குன்வர் எதுவும் பேசவில்லை. ஆனாலும் பரவாயில்லை என்று மனார்ரக்கன் குன்வர் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
ராம்ரஞ்சனி இங்கு வா என ராம்குன்வரின் தம்பியின் மனைவி தால்கிரியா தேவி அழைத்தாள். ஏற்கனவே, தன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை ராம்சுரத்குன்வரின் மீது என்று கோபத்தில் இருப்பவள் அவள்.
‘‘இதோ பார். உன் கணவனைத் தவிர இங்கு எல்லோரும் ஏதேனும் வேலையை செய்தபடி இருக்கிறார்கள். ஆனால், உன் புருஷன் மட்டும் எப்போதும் கங்கையை பார்த்துக்கொண்டும். சாதுக்களை சந்திக்கின்றேன் என்று ஏதேனும் பேசிக் கொண்டிருந்து விட்டு நடு இரவில் வீடு திரும்புவதும் எனக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால், ஒன்று இந்த வீட்டில் இருந்தால் இருங்கள். இல்லையெனில் வெளியேறுங்கள். இதோ இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தும் வெள்ளத்தில் போய்விட்டன. நாளை எங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் சேர்க்க வேண்டுமெனில் இப்படி கூட்டம் கூட்டமாக அமர்ந்து பொழுதைப் போக்கினால் நடக்காது. ஒன்று இங்கிருந்தால் வேலையை செய்யச் சொல். அல்லது வெளியேறுங்கள்’’ என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லியபடி இருந்தாள்.
பல மாதங்கள் நேரடியாகவே தால்கிரியா தேவி அவமானப்படுத்தியபடி இருந்தாள். அவரின் சகோதரர்கள் அனைவரும் அவளை அமைதியாக்க மேற்கொண்ட நடவடிக்கை வீணாகிப் போனது.
‘‘ராம்சுரத்… நீ என் சகோதரன். நாமெல்லாம் திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது இப்போதுதான் தெரிகின்றது. உன்னை அவள் அப்படிப் பேசுவதை என்னால் பொறுக்கவும் முடியவில்லை. எதிர்த்துப் பேசினால் இன்னும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுகின்றாள். அவர்கள் வீட்டிலிருந்து வந்து நம் குடும்பத்தை பேசுகிறார்கள். நிச்சயமாக உன் சகோதரர்களாகிய எங்கள் இருவரையும் தவறாக நினைக்காதே. ராம்ரஞ்சனி பல நேரம் கண்களில் நீரோடு தோட்டத்தில் அமர்ந்திருப்பதை நாங்கள் பார்க்காமல் இல்லை. உன்னிடம் கூட அவள் அதை மறைத்து விடுகின்றாள். ஏதோ அவளை பார்க்கும்போது எங்களுக்கு சாராதாதேவியை பார்ப்பது போலிருக்கும். அப்படியொரு பொறுமை. உன் நிலை என்னவென்றே எங்களுக்கு புரியவில்லை. ஆனால், ஏதோ ஒன்றை நீ விழுங்கிவிட்டதுபோல் இருக்கிறாய். இப்படியும் சொல்லலாம். ஏதோ ஒன்று உன்னை விழுங்கிக் கொண்டிருக்கின்றது. அதனால், கொஞ்சம் பொறுத்துக்கொள். கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் இதோ பக்கத்தில் உனக்கு ஒரு வீட்டை கட்டித் தருகின்றோம்’’ என்று கண்களில் நீர் மல்க தன் சகோதரர்கள் பேசுவதைக் கேட்டுவிட்டு ராம்சுரத்குன்வர் அவர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டார்.
மறுநாள் விடிந்தவுடன் ராம்ரஞ்சனி தேவி குளித்து முடித்து தயாராக இருந்தாள். ராம்சுரத்குன்வர் தன் சகோதரர்களை அழைத்தார்.
‘‘சகோதரா… நான் குஜராத் செல்லலாம் என்று உள்ளேன். அங்கு ஏதேனும் வேலையில் அமர்ந்துவிட்டு மீண்டும் வருகின்றேன்’‘ என்று கை கூப்பிவிட்டு மெல்ல அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினார்.
இப்போது சொந்த ஊரை விட்டு வெளியேறுகிறோம். அடுத்து என்ன நடக்கும். ஒருவேளை ஒவ்வொன்றாக என்னுள்ளிருந்து பிரிந்து பிரிந்து போகுமோ? இவளுக்கு யார் பதில் சொல்வார்கள். நானே உலகமென்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
நர்தாராவை தாண்டும்போது கபாடியா பாபாவை பார்க்க வேண்டும்போல் இருந்தது. சட்டென்று அவரின் குடிலை நோக்கி நகர்ந்தார். அவரும் வா.. வா.. அருகே அழைத்தார்.
நமஸ்கரித்தார்.
‘‘ஒவ்வொன்றாக உலகம் என்னிலிருந்து பிரிந்து போவதை உணர்கின்றேன். சட்டென்று சொந்த ஊர் அறுந்தது. சகோதரர்கள் தொலை தூரமானார்கள். அடுத்து எங்கே செல்ல வேண்டுமென்று தெரியவில்லை. ஆனால், உள்ளுக்குள் ஒன்று என்னை அவசரப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதோ ராம்ரஞ்சனி என் நிலையைக் கண்டு பயப்படுகின்றாள்… என்ன செய்வது பாபா…’’
‘‘ஒவ்வொன்றாக விடும். ஆனால், எல்லாமுமாக ஆகி ஒன்றாகும். புரிகின்றதா. இதோ இது ஒரு சரீரம். அது சரீரம். அவர்கள் அனைவரும் சரீரம். இல்லையா… ஆனால், இவர்கள் அனைவரையும் விட வைக்கும். விட்டது போலிருக்கும். ஆனால், இந்த பிரபஞ்சமே உனக்கு உடலாகும்போது நீ என்ன செய்வாய். வேண்டாம் என்பாயா… அல்லது நீ என்ன செய்ய முடியும். ராம்ரஞ்சனி வெளியில் இருப்பவள் அல்ல. அவளே நீயாக இருக்கின்றாய் எனும் நிலை வரும்போது விடுவதற்கும் பிடிப்பதற்கும் என்ன பொருள் உள்ளது. ஆனால், அதைக் கடக்கும்போது அத்தனை வலிக்கும். கங்கை உன் ஊரை மூழ்கடித்தது உன் ஊருக்கு அல்ல. அது உனக்காக இறை நிகழ்த்திய பாடம் என்பதை நீ அறிவாயா… உன்னை ஞானம் வந்து மேகமாகச் சூழும்போது என்ன செய்யப் போகிறாய். இதோ இந்த கல்லாக இருக்க விரும்புகிறாயா… அல்லது அந்த ஞானமாகப் பாய விரும்புகிறாயா’’ என்று கேட்டு கண் மூடினார்.
ராம்ரஞ்சனி தேவி அதிர்ச்சியானாள்.
‘‘பாபா… பாபா… அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். ஆனால், என்னை மட்டும் தனியே விட்டு விட்டுச் செல்ல வேண்டாம் என்று கூறுங்கள். நீங்கள் சொன்னால் கேட்பார். அவர் ஞானத்திற்கு நான் ஒருக்காலும் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனால், இவரில்லாது நான் என்ன செய்வேன் என்று பயமாக உள்ளது. இப்போது நீங்கள் பேசிய பேச்சுக்கள் அச்சத்தை தருகின்றன’’ என்று கண்களில் நீர் கசிய பேசினாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் கபாடியா பாபாவும், ராம்சுரத்குன்வரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
கபாடியா பாபா, ‘‘சுரத் இப்போதைக்கு இது குறித்து ஒன்றும் அவசரமில்லை. போ புறப்படு அதற்கான காலம் இப்போதைக்கு அல்ல…’’ என்று ராம்ரஞ்சனியை பார்த்து சிரித்து ஏனம்மா… பயம் என்று சிரித்தார்.
சட்டென்று அங்கு கங்கையும் க்ளுக்… என்று சிரித்து விட்டு கடந்தாள்.
- தொடரும்


One Comment on “யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா”
Comments are closed.