11. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

விடாது பெய்யும் கருணை மழை

அருணாசலத்திலிருந்து புறப்பட்ட ராம்சுரத்குன்வர் மெதுவாக பாண்டிச்சேரியிலுள்ள அரவிந்தரை சந்திக்கச் சென்றார். ஆனால், அரவிந்தரைச் சந்தித்து பேசமுடியவில்லை. அதனால், வெறுமே அங்கு இருந்துவிட்டு யோகநிலையில் அமர்ந்திருந்த அரவிந்தரை தரிசித்தார். அந்த சாந்நித்தியமே ராம்சுரத்குன்வரை இன்னும் ஆழமாக வேறொரு நிலைக்கும் உணர்த்தியது. மஹரிஷியின் நேரடியான சரி எனும் வார்த்தையும், அரவிந்தரின் யோகமும் எங்கேயோ சில அகக் கதவுகளை திறக்கச்செய்தது.
அரவிந்தர் எழுதிய புத்தகங்களோடு புறப்பட்டார். மீண்டும் தஹியாவிற்கு வருகின்றார்.
அடுத்த நாள் பள்ளிக்குச் செல்லும்போதுதான் அவர் அந்தப் பள்ளியிலிருந்து மாற்றப்பட்டிருப்பது தெரிந்தது.

நேரடியாக அந்தப் பள்ளியை நடத்துபவரிடமே சென்றார்.

‘‘நீங்கள் இந்த குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் இருக்கிறீர்கள். அதனால்தான் இந்த பள்ளியை சரி செய்துவிட்டு நடத்துங்கள் என்கிறேன். ஆனால், நீங்கள் பழிவாங்குவதுபோல் என்னை வேறு ஊருக்கு தூக்கி அடிக்கிறீர்கள். பரவாயில்லை’’ என்று சொல்லிவிட்டு வந்தார்.

சில மாதங்களில் நவல்காட் என்கிற உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றல் ஆகியது. 6.12.1948ம் வருடம் இணைந்தார். அங்கேயே வீடு எடுத்துக்கொண்டு மனைவி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டார்.


வெளியுலகில் எந்த பிரச்னை வந்தாலும் அதை சர்வ சாதாரணமாக சரிசெய்தபடி இருந்தார். அதே சமயம் உள்ளுக்குள் பெரும் ஜுவாலை ஒன்று எப்போதும் சுழன்றுகொண்டே இருந்தது. ரமண பகவானின் அருளாளது வேறொரு அகமுகமான பாய்ச்சலுக்குத் தயாராக்கியது.

எந்த ஊரில் இருந்தாலும் ரமண பகவானின் அந்த சரி என்கிற வார்த்தையும், அந்த சுடர்விடும் முகமும் நெஞ்சில் நிழலாடியபடி இருந்தன.

ஆனால், அதே நேரம் அந்தப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியாக இருப்பதால் எல்லா பொறுப்புகளையும் ஏற்று நடத்தினார். அவர் வீட்டிற்குள் வரும்போது குழந்தைகள் ஓடி வந்து கட்டிக் கொள்வார்கள். ராம்ரஞ்சனி தேவி ஓடிச்சென்று அப்பா சட்டையை கழற்றி விட்டு வருவார். அவரசப்படாதீர்கள் என்றால், குழந்தைகளே என் தெய்வம். என் ராமரும் கிருஷ்ணரும் எவ்விதம் என்னை அசுத்தமாக்குவார்கள் என்று கேட்பாராம்.

மீண்டும் மீண்டும் சுவாமி விவேகானந்தர், ராம்தீர்த்தர், அரவிந்தர், ரமணர், சங்கரரின் புத்தகங்களைப் படித்தபடியே இருந்தார். சட்டென்று தன்னுடைய உணவுமுறையை மாற்றினார். சமைத்து வைத்த உணவுகளை எடுத்துக்கொள்ள மறுத்தார். சுரைக்காயை பால் சர்க்கரையோடு சேர்த்து எடுத்துக் கொள்வார். உப்பு காரம் போன்றவற்றை அறவே ஒதுக்கி வைத்தார். தானியங்களையும் மெல்ல விட ஆரம்பித்தார். கிடைக்கின்ற பழங்களை மட்டுமே உண்டார். அவ்வப்போது பாலை மட்டுமே எடுத்துக்கொண்டார்.
ராம்ரஞ்சனி தேவி அவர் அருகில் வந்தார்.

‘‘நீங்கள் ஏன் நான் சமைத்த உணவை எடுத்துக் கொள்வதில்லை. ஏதேனும் கோபமா..’’

‘‘இல்லை தேவி. என்னால் இனி ருசியோடு இருக்கும் உணவை எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில், என் மனம் ருசியை விட்டு விட்டது. மெல்ல மெல்ல எனக்கு என்ன எடுத்துக்கொள்ள உத்தரவு வருகின்றதோ அதைத்தான் எடுத்துக்கொள்ள முடிகின்றது. உன் மீது எனக்கென்ன கோபம்’’ சுரத்குன்வர் அன்போடு பேசினார்.

‘‘சரி வாருங்கள். கோயிலுக்குச் சென்று வரலாம்’’ என்று ராம்ரஞ்சனி அழைத்தார்கள்.

‘‘நீ சென்று வாம்மா… உனக்கு எதற்காகக் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.’’

‘‘கடவுளைக் காண…’’

‘‘அப்படி உனக்குக் கடவுளை காண வேண்டுமாயின் உன் கடவுளை என்னுள் பார்’’ என்றார்.

ராம்ரஞ்சனி தேவிக்கு வியப்பாக இருந்தது.

‘‘இது கர்வமல்ல தேவி. இருப்பதைத்தான் கூறுகின்றேன். என்னுள்ளேயே பார்க்கலாம். அது இங்கு இருக்கிறது. அதை நான் உணருகின்றேன். இன்னும் சில விஷயங்கள் சொல்ல இயலாது’’ என்று மௌனமானார். மீண்டும் அவரே சரி வா.. கோயிலுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று குழந்தைகள் உட்பட எல்லோரையும் அழைத்துச் சென்றார்.

எல்லோரும் கோயிலிலிருந்து வரும்வரை காத்திருந்து விட்டு அமைதியாக வீட்டிற்கு அழைத்து வந்தார்.

குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். முதலில் ராமா… என்று எழுதி அதற்குப் பிறகுதான் அட்சர அப்பியாசம் தொடங்கி வைப்பார். எதை எழுதினாலும் முதலில் ராமா என்று எழுதுங்கள் என்றார்.

தன்னுடைய மகனான அமிதாப்பை நர்தாராவிற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள கங்கையில் துள்ளிக் குதிக்கும் மீனைக் காணச் செய்தார். மகனிடம் ஒருபோதும் மீனை சாப்பிடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. ஒரு போதும் கடவுளிடம் கடவுள் தவிர என்று வேறு எதையும் கோரக்கூடாது என்றார்.

பள்ளிக்குச் செல்லும்போது எல்லா ஆசிரியர்களையும் விட இவரிடம் எல்லோரும் மிக மிக அன்பாகப் பழகி வந்தார்கள். பீடி, சிகரெட் பிடித்தபடி இவர் முன்னர் யாரும் வரமுடியாது. அப்படி தெரிய வந்தால் இந்தப் பழக்கத்தை கைவிட்டு விடுங்கள் என்று அறிவுரை கூறி அவர்களைத் தடுத்து நிறுத்துவார்.

அவர் எப்போதும் தன் தோளில் ஒரு பையை வைத்திருப்பார். அந்தப் பையில் சில புத்தகங்கள். உலர் பழங்கள். நெல்லிக்காய், சில எலும்மிச்சம் பழத்தை வைத்திருப்பார். மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் அருந்துவார். பள்ளியில் சட்டென்று ஒரு மாணவன் மயக்கமடைந்து விட்டால், மெல்ல அந்த மாணவனை தொட்டு சரி செய்வார். எலுமிச்சம் பழத்தில் உப்பைச் சேர்த்து அருந்தப் கொடுப்பார். வயிற்று வலியில் துடிப்போருக்கு சில சமயம் மண் சிகிச்சை அளிப்பார்.

இவருடன் பணியாற்றிய ஆசிரியர்கள் இவரின் ஆங்கிலத்தையும் கணித அறிவையும் கண்டு பொறாமைப்பட்டனர். ஆனாலும் இவர் கவனிக்காது தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தார்.

பள்ளியில் ஒவ்வொரு பூஜையின்போதும் இவரின் பிரசங்கம் இல்லாமல் இருக்காது.
ஒருமுறை ஆசிரியர்களையும் மாணவர்களையும் அழைத்து சிறிய அழகான உரையை நிகழ்த்தினார்.

‘‘நீங்கள் எதையாவது தேட நினைத்தால் உங்களுக்குள் தேடுங்கள். நான் ஏதோ பெரிய விஷயத்தை சொல்லப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். உங்களுக்குள் இருக்கும் கெட்ட குணங்களை தேடுங்கள். வெளிப்புறத்தில் உள்ள அசுத்தம் உங்களை ஒன்றும் செய்யாது. அது உங்களின் வாழ்வில் மிகச்சிறிய பங்கே வகிக்கும். ஆனால், உங்களுக்குள் பொறாமை, வன்மம், அவமானப்படுத்துவது, கடுஞ்சொற்கள் பேசுவது, தன்னை மேன்மையானவனாக காட்டிக் கொள்வதற்காக விதம்விதமாக நடிப்பது, கபடம் இவற்றையெல்லாம் கவனியுங்கள். அதன் தாக்கத்தை நீங்கள் ஏற்காதீர்கள். உங்களை அது இறைவனை அறிதலில் இருந்து தள்ளி வைத்துவிடும். நீங்கள் இதை ஒதுக்கினாலே போதும் அங்கு ஒழுக்கம் என்பது சொல்லிக் கொடுக்காமலேயே வந்துவிடும். அங்கு நான் ஒழுக்கமாக இருக்கிறேன் என்றும்கூட சொல்ல வேண்டாம்’’ என்று பேசினார்.

பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களைக் கொண்டு நாடகம் நடத்தினார்கள். அதில் இவருக்கு யுதிஷ்டிரர் வேடத்தை ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். ராம்சுரத்குன்வரும் தத்ரூபமாக அப்படியே யுதிஷ்டிரர் போன்றே அச்சு அசலாக அந்த குண நலன்களோடு நடித்தார்.

பள்ளி, வீடு என்று இருந்தாலும் ரமணரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை தகித்துக் கொண்டிருந்தது.

அது 1949 வருடம். ராம்ரஞ்சனி தேவியை அழைத்தார். நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். அந்த மௌனம் தேவிக்கு பயமாக இருந்தது. எப்போதுமே அவரிடம் பிரியமும் இந்தப் தெரிந்து கொள்வோம் பிரியம் நம்மை விட்டு ஏங்கேனும் சென்று விடுமோ என்கிற தவிர்க்க முடியாத பயமும் இருந்தது. அவருக்கும் ராம்ரஞ்சனிக்கு இருக்கும் பயத்தை புரிந்து கொண்டும், தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அக வேள்வியை சில சமயம் புரிய வைத்துக் கொண்டும். சில சமயம் தன் புரிதலுக்கு அப்பால் நடந்து கொண்டிருக்கின்றது என்கிற உண்மையினால் மௌனமுமாக இருந்தார். சட்டென்று மௌனம் கலைத்தார்.
‘‘ராம்தேவி.. நான் திருவண்ணாமலைக்கு மீண்டும் சென்று வருகின்றேன். பகவானான என் குருவை நான் பார்த்தே ஆக வேண்டும். ஏனெனில், என்னுள் நிலை கொள்ளாத தவிப்பொன்று போ… போ… என்று விரட்டிக் கொண்டிருக்கின்றது. ஆகவே நான் செல்கிறேன்’’ என்றார்.
ராம்ரஞ்சனி தேவியால் மறுக்க முடியாமல் இருந்தது. ஏனெனில், அவர் பகவானைப்பற்றி சொல்லும்போது அவரின் முகம் ஜொலித்த ஜொலிப்பை பார்த்து அவர் பேச முடியாமல் இருந்தார். ராம்சுரத்குன்வரின் அருகாமை அவரையும் சேர்த்து அமைதிப்படுத்தியது. ராம்சுரத்குன்வருக்குள் சுழன்ற புயலானது சரீரத்தோடு இருக்கும் நம்மால் புரிந்து கொள்ளுதற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. எனவே, அவர் என்ன சொன்னாலும் ராம்ரஞ்சனி தேவிக்குள் முதலில் பயம் தோன்றினாலும் உள்ளிருக்கும் சக்தி விரைந்து வந்து அதை சமனப்படுத்தியது.
திருவண்ணாமலை நோக்கிய பயணத்தை தொடங்கினார். ஆனால், முதலில் பாண்டிச்சேரிக்குத்தான் சென்றார். அங்கு அவரால் இருக்க இயலவில்லை.
அது கோடை காலம். திருவண்ணாமலையே கந்தக பூமியாக கொதித்தபடி இருந்தது. ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. பகவான் ரமணரை புற்றுநோய் தாக்கியிருந்தது. அதனால், முன்பு போல் பகவானை அவ்வப்போது சென்று தரிசிக்க இயலவில்லை.
திருவண்ணாமலை மலைப் பாதைகளிலும் பாறைகளிலும் உட்கார்ந்து தனியே அழுது கொண்டிருந்தார். அவர் நான் சரீரம் அல்ல என்று தன்னுடைய சீடர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தாலும் அவரை இப்படி பார்ப்பது எங்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கின்றது என்று நினைத்து கண்களில் நீர் உகுத்தபடி ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தார்.
மீண்டும் பகவானை தரிசிக்கலாம் என்று எல்லோருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.
எல்லோரும் மெல்ல நுழைந்தபடி இருந்தனர். ராம்சுரத்குன்வர் மெதுவாக எட்டிப்பார்த்தார். எல்லோரும் ஒவ்வொருவராக நமஸ்கரித்துவிட்டு அமரத் தொடங்கினார்கள்.
பகவான் கொஞ்சம் சாய்மானத்தோடு படுக்கவும் இல்லாமல், அமரவும் இல்லாமல் இருந்தார். கைகளில் கட்டு போடப்பட்டிருந்தது. ராம்சுரத்குன்வர் பகவானின் அருள் பொங்கும் கண்களை கண்டார். அவரின் திருமுகம் மெல்ல மலர்ந்தது. எந்த நோய் இருந்தால் என்ன அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று அந்த அருணாசல பிரம்மம் ஞானாக்னியை திரட்டி ராம்சுரத்குன்வரின் மீது பொழிந்தது. அந்தப் பொழிதலில் சுவடை ராம்சுரத்குன்வர் மட்டுமே அறிய வேண்டும்போல் மெல்லிய புன்னகை பூத்த முகத்தோடுஞ் தலையை மட்டும் அசைத்து வா மகனே… வா… என்பதுபோல வரவேற்றார்.
ராம்சுரத் உடைந்தார். அங்கேயே கால்கள் துவள மண்டியிட்டார். ராம்சுரத்குன்வரின் உடல் அதிர்ந்தபடி இருந்தன. உள்ளுக்குள் அழுகை முட்டிக்கொண்டு முட்டிக்கொண்டு வந்து தொண்டையை அடைத்தது. ஓஞ் என்று அலற வேண்டும்போல் இருந்தது. அது துக்கத்தினால் கூட அல்ல.
என்ன இது இப்படி கருணையை பொழிகின்றது. எல்லோருமே நேசிக்கிறோம் நேசிக்கிறோம் என்கிறார்கள். அன்பு… அன்பு… அன்பு… என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கு முழு உருவம் கொடுத்தால் அது இதுதானா. இப்போது அங்கிருக்கும் எல்லோரும் மறைந்தனர். பகவான் மட்டுமே இருளுக்குள் மத்தியில் ஒளிரும் பௌர்ணமிபோல் ஜொலித்தார். இடையறாது… இடையறாது… கொஞ்சம் கூட விடாது அடித்துப் பெய்யும் மழைபோல பகவான் இவரை பார்த்தபடி இருந்தார்.
அந்தப் பார்வையில் அந்த முகம் அகன்ற பச்சையிலை மத்தியில் பூத்திருக்கும் சிவந்த தாமரை போல் இருந்தது. அந்த தாமரை மீது பௌர்ணமியின் கிரணங்கள் பட்டால் அந்தக் குளம் எப்படி ஒளிருமோ அப்படியும் அந்த குளத்தையும் பௌர்ணமி நிலவையும் அந்த நிலவானது மலரிலும் நீரிலும் படிந்து வெள்ளியாக ஜொலித்து நீர் அலையும்போதெல்லாம் பௌர்ணமி
நிலவும் மெல்லியதாக அசைவதுபோல பகவானின் முகத் தாமரை இருந்தது. பகவானின் முகமான நிலவிலிருந்து வேறொரு நிலவு தோன்றி அது மலர்ந்து அதன் இதழ்கள் அந்த அறை முழுவதும் வளர்ந்து எல்லோரையும் அணைந்து… மறைந்து… மீண்டும் அந்த முகத்திலிருந்து நிலவு வட்ட வட்டமாய் வளர்ந்து அறையை அடைத்து என்று சுருள் சுருளாக அவரின் முகத்தாமரையிலிருந்து ஒளி என்றும் சொல்ல முடியாமல் ஏதோவொன்று இந்த உலகத்தின் எதனோடும் ஒப்பிட முடியாமல் ஒன்று எல்லோருக்குள்ளும் பதிந்தபடி இருந்தது.
ராம்சுரத்குன்வருக்கு எங்கு நிற்கிறோம் என்பது மறந்து போனது. இம்முறை கண்களை பகவான் மூட அனுமதிக்கவில்லை. அப்படியே இரு என்று சொல்லாமல் சொன்னது.
அதனால் அப்படியே பார்த்தபடியே அமர்ந்திருந்தார். இப்போது பகவானுக்கும் அவருக்கும் இருக்கும் சிறிய தூரம் குறைந்தது. சுற்றியுள்ள மனிதர்கள் காணாமல் போனார்கள். தான் அமர்ந்திருக்கிறோம் என்கிற நினைப்பும் மறந்து போனது. கை கால்கள் உடல் என்கிற சரீர நினைவு சட்டென்று விட்டுப்போனது. ஏதோ காற்றில் அசைவதுபோல் மிக லேசானது தன்னை உணர்ந்தார்.
பகவானின் முகமும் தன் முகமும் அருகருகேயும்… நெருக்கமாகவும் அந்தக் கண்களுக்குள் தன் கண்களும் சென்று சேருவதை தன் முயற்சியின்றி உணர்ந்தார். சட்டென்று தன் கண்கள் காணாமல் போனது போன்று உணர்ந்தார். அந்தக் கண்களுக்குள் இந்த கண்கள் சென்று மறைந்து போனது.
இப்போது ஒரே ஒரு கண் மட்டுமே அனைத்தையும் பார்த்தபடி இருந்தது. அது எதையும் பார்க்கவில்லை. ஏனெனில், அதற்கு பார்ப்பதற்கு அன்னியமாக எதுவுமில்லை. வெறுமே பார்த்தபடி இருந்தது. அது ஆதியானது. அந்தம் அற்றது. பார்த்தல் என்பது மட்டுமேஞ் அதுவே எல்லாவற்றினுள்ளும் நின்று பார்க்கின்றது. அது பார்த்தலால் மட்டுமே எல்லாமும் அசைகின்றது.
ராம்சுரத்குன்வர் தன்னை இழந்தார் பகவானின் கண்ணானார் அங்கு அந்தமிலாக் கண்ணாக இருக்கும் வஸ்துவே இங்கு அருணாசலனாகஞ் ரமணர் எனும் சரீரம் தாங்கி வந்திருக்கின்றது என்று எந்தச் சொல்லாலும் உணராதுஞ் அனுபூதியில் உணர்ந்து நிறைந்து தெளிவானார்.
அந்த தெளிவு உணர்ந்த அடுத்த கணம் தான் சரீரத்திற்குள் இருப்பதை உணர்ந்தார். பகவானின் திருக்கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.
மெல்ல விடுவிக்கும்போது தன்னைச் சுற்றிலும் மனிதர்கள் தோன்றினார்கள். பகவான் தோன்றினார். தரையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. வெளியே மயிலின் அகவல் கேட்டது.
பகவான் யாரோ ஒரு அன்பர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மகா நாராயண உபநிஷத்தில் வரும் மந்திரமான ‘‘ந கர்மனா ந ப்ரஜயா… என்பதற்கு பொருளை சொல்லிக் கொண்டிருந்தார்.
கர்மாவினால் அடைய முடியாது. புத்திரப் பிரஜையால் அடைய முடியாதுஞ் மேதைத் தனத்தாலும் அடைய முடியாது பின்னர் எதனால் எனில் ‘‘ந த்யாகேனைக அமிர்தத்வ மானுசு’’ தியாகத்தினால் மட்டுமே அடைய முடியும் என்று சொல்லி முடித்தார்.
ராம்சுரத்குன்வர் நான் எதைத் தியாகம் செய்ய வேண்டும் என்கிற வினா தீவிரமாக அவரை மையம் கொண்டது.
பகவான் இம்முறையும் மென்மையாகப் புன்னகைத்தார்.