ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 84/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி:  தீபாவளி வாழ்த்துகள்
அழகியசிங்கர் : உங்களுக்கும் 
ஜெகன் :  புது உடைகள் வாங்கினீர்களா?
அழகியசிங்கர் :   வாங்கவில்லை. ஏற்கனவே வாங்கியது.
மோகினி : பட்டாசு
அழகியசிங்கர் :  எனக்குப் பட்டாசு வெடிக்கிற வயதா?
மோகினி :  நிறையா புத்தகங்கள் கொண்டு வருகிறீர்கள் போலிருக்கு.
ஜெகன் : உண்மையில் நினைத்துப் பார்க்க முடியாத புத்தகங்கள் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வருகிறார்.
அழகியசிங்கர் : ஆமாம்.  எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கொண்டு வந்து அழகு பார்க்கிறேன்.
ஜெகன் : நீங்கள் கொண்டு வரும் புத்தகங்கள் எல்லாம் விற்குமா?
அழகியசிங்கர் : பெரிய அளவில் விற்காது.  நானும் எல்லோரும் எதிர்பார்க்கிற மாதிரி அதிக பிரதிகள் அச்சிடுவதில்லை.
மோகினி : சமீபத்தில் உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?
அழகியசிங்கர் : சாமாவின் புத்தகம். என் ஒன்றுவிட்ட சகோதரர் அவர். ஆரம்பத்தில் நேற்றைய நிஜம் என்ற பெயரில் ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்துள்ளது. 1980களில் வெளிவந்த தொடர்கதை. அதைக் கண்டுபிடித்து ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்து அந்தப் புத்தகத்தைத் தயாரித்தேன். 
மோகினி : அந்தப் புத்தகத்திற்குக் கூட்டம் நடத்தினீர்கள் போலிருக்கிறது. 
அழகியசிங்கர் : கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  சாமிநாதனின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களைக் கூப்பிட்டுக் கூட்டம் நடத்தினேன்.

சாமா குடியிருக்கும் இடத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டார்கள். சமாவிற்குச் சமீப காலமாய் உடல்நிலை சரியில்லை. அவனால் பேச முடியாமல் அவஸ்தைப் படுகிறான். காணொளி எடுக்கவில்லை என்ற குறை எனக்கு. கூட்டம் நடத்தும்போது முக்கியமான சில விஷயங்களைத் தவற விடுகிறோம். எல்லோருக்கும் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தேன்.
ஜெகன் : புத்தகத்தைப் படிக்க வேண்டுமே?
மோகினி : அதுதான் முக்கியம்.
அழகியசிங்கர் : பொதுவாகப் புத்தகத்தை யாரும் படிப்பதில்லை. ஏன் நான் கூட படிப்பதில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறேன். மிகக் குறைவான பக்கங்கள் கொண்ட புத்தகங்களை எடுத்துப் படிக்கிறேன். இரண்டு மூன்று நாவல்களை எடுத்துப் படிக்கிறேன். இன்று சீதை ஜோசியம் என்ற தெலுங்கு மொழிபெயர்ப்பில் வந்த நாடகத்தை எடுத்துப் படித்து முடித்தேன். நான் சொல்வது என்னவென்றால் முன்பு புத்தகங்களை அதிகமாகப் படிப்பவர்கள்தான் நடுவில் மாறி விட்டது. நம் கவனம் வேறு எங்கோ போய்விட்டது. திரும்பவும் நம் கவனத்தைப் படிக்கக் கொண்டு வர வேண்டுமென்று தோன்றுகிறது. நான் முயற்சி செய்கிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
மோகினி : இரவு பத்தாகிவிட்டது.
அழகியசிங்கர் : ஆமாம். ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நாம உரையாடுவதைத் தொகுத்து ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் என்ற புத்தகம் தொகுதி 1 கொண்டு வந்து விட்டேன். 60 உரையாடல்கள் கொண்ட தொகுதி அது. 126 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.
ஜெகன் : இது மகிழ்ச்சியான செய்தி.
மோகினி : நான் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
அழகியசிங்கர் : குறிப்பாக 3 பேர்களுக்கு அந்தப் புத்தகத்தை அனுப்ப நினைக்கிறேன். ஒன்று மனுஷ்யப் புத்திரனுக்கு, இரண்டு தமிழவனுக்கு, மூன்று முபீனுக்கு..
ஜெகன் : அனுப்புங்கள்
மோகினி : இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.
அழகியசிங்கர் : நாம் கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.
(இரவு : 10.16)