
ஆகஸ்ட் மாதம் எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவாக விருட்சம் ஆசிரியர் திரு. அழகியசிங்கர் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இருபத்தி மூன்று கதைகள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்து சிறப்பு செய்த விஐபி-களில் அசோகமித்திரன் அவர்களது இரண்டு மகன்களையும் அழைத்து பரிசு பெற்றவர்களை சிறப்பித்த விதம், அவருக்கு செய்த சிறந்த சமர்ப்பணமாக நான் உணர்ந்தேன்.
பொதுவாக சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெறும் கதைகளுக்கு ஒரு ஃபார்மாட் இருக்கிறது. பரிசுபெற்ற சிறுகதைத் தொகுப்பு என்றால் அதில் இருக்கும் பெரும்பாலான கதைகள் அதே ஃபார்மாட்டில் இருக்கும். இரண்டு, மூன்று, சுற்றுகள் தனித்தனி நடுவர்கள் வைத்து தேர்ந்தெடுக்கப்படும் கதைகளே பெரிய வித்தியாசங்கள் இன்றி ஒரே பாணியில் அமைந்திருக்கும். இதில் இந்த போட்டியின் அனைத்து கதைகளையும் நான் ஒருவனே படித்து தேர்ந்தெடுத்தேன் என்று அழகியசிங்கர் அவர்கள் சொன்ன போது சிறுகதைத் தொகுப்பு குறித்து மிக்ஸட் ஒபினியன் எனக்கு இருந்தது.
ஒரு பக்கம், ஒரே நடுவர் என்றால் அவர் மனதுக்கு, அவர் ரசனைக்கு ஏற்ற கதைகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கக் கூடும் என்ற எண்ணம் எழுந்தது. மறுபக்கம், இத்தனை வருடங்களாக விருட்சம் இலக்கிய இதழை ஒரே மனிதராக நடத்தி வருகிற அவரது ரசனை எப்படியும் நன்றாகத் தான் இருக்கும், கதைகளை படித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. நடுவர் ஏமாற்றவில்லை.
எழுதியவர்களைப் பற்றி கதையுடன் இணைக்கப்பட்டிருந்த சுயகுறிப்பு விவரம் படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய முதல் கதை ‘கிணற்றுப்பூனை’ என்கிற கதையையும், பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் திரு. வெங்கடேஷ் எழுதிய ‘மரணமடைந்தவனின் நண்பன்’ என்ற கதையையும் பாரபட்சம் இன்றி சிறப்புக் கதைகளாக அழகியசிங்கர் தேர்ந்தெடுத்தபோது போட்டியின் நம்பகத்தன்மை அதிகரித்தது.
இந்தத் தொகுப்பில் தேர்வான இருபத்தி மூன்று கதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், ஒவ்வொரு சுவை. இதனைப் பற்றி சிலாகித்து திரு. வா. வே. சு அவர்கள் சுவை ததும்ப கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அதன் காணொளிகள் நவீன விருட்சம் யூடியூப் அலைவரிசையில் உள்ளது. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், என் மனதிற்கு மிகவும் பிடித்த சில கதைகளைப் பற்றி மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
திரு. நாகராஜன் எழுதிய ‘ஐநூற்றிஐம்பது ரூபாய்’ என்ற சிறுகதை, விமானப்பயணியே ஆனாலும் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற கருத்தை அழகாக விளக்கியது. திரு. ரமேஷ் கல்யாண் எழுதிய ‘என்னவோவாக இருந்தது’ கதையில் வீட்டிற்கு சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளியின் மீது உரிமையாளருக்கு ஏற்பட்ட இணக்கம் காரணமாக அவர் பேசியதற்கு அதிகமாக பணம் கொடுத்து அவரை திருப்தியுடன் அனுப்பி வைக்கிறார். அவர் கொடுத்த அதிகப்படியான பணம் அவர் மனைவியை அதிருப்தி அடைய செய்தது அந்த கணவனுக்கு மட்டுமல்ல படிக்கும் நமக்கும் என்னவோவாக இருந்தது.
கிணற்றுப்பூனை கதையில் கிணற்றில் மாட்டிக்கொண்டு அல்லாடும் பூனையின் ஈன ஸ்வரம் கதாநாயகனை தூக்கமிழக்க வைப்பதும், அக்கம்பக்கத்தினர் அதனை கண்டும் காணாதது போல அவரவர் வேலையில் மும்மரமாக இருப்பதும், வேகமாக ஓடுகின்ற உலகத்தின் நிதர்சனம் என்று நம்மை சிந்திக்க வைக்கும் கதை. பேனர் கட்டும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் சந்திக்கும் சவால்களை திருமதி. நித்யா அவர்கள் ‘விளிம்பு’ கதை மூலம் சொல்கிறார். பேனர் தொழில் மட்டுமின்றி, பண்டிகைக்கும், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கும் மட்டுமே வருகிற பெரிய ஆர்டர்களை நம்பி தொழில் நடத்தும் விளிம்பு நிலை மக்களின் அவலத்தை இக்கதை உணர்த்துகிறது.
திரு. அபுல் கலாம் ஆசாத் எழுதிய ‘ஒரு கதவு மூடப்பட்டால்’ கதையில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் ஒரு மனிதருக்கு வந்த மாரடைப்பைக் கூட அவர் எப்படி இயல்பாக ஏற்றுக்கொண்டு தன்னை அதற்கு ஏற்றார் போல தயார்படுத்திக் கொள்கிறார் என்று சொல்கிறது. மேலோட்டமாக அக்கதை சொல்லும் அர்த்தத்தை காட்டிலும் கதையின் மூலம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அது திறக்கும் கதவுகள் ஏராளம். ஆசையாக ஒரு வாய் காபி குடித்ததால் வாழாவெட்டியாக வாழும் ஒரு முதியவரின் கதை ‘சுவாசம்’. திரு. சாரதி அவர்கள் எழுதிய இந்தக் கதை மனதில் தங்கியது.
‘அவனைப் போய் கேட்டேன் பாரு!’ என்று திரு.புலியூர் அனந்து எழுதிய கதை எந்த காரியத்திலும் தனித்துத் தெரியும் மாத்தியோசி மாசிலாமணியின் கதை. இது போன்ற எளிமையான, வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதைகளையும் இந்தப் புத்தகத்தில் இணைத்திருப்பது இந்த சிறுகதைப் போட்டியின் தனித்துவம். திருமதி. ரேவதி பாலு எழுதிய ‘அசட்டு மனிதர்கள்’ கதை ஓர் சிறந்த மனோதத்துவ கதை. நம் மனதை வேண்டுமென்றே புண்படுத்தும் மனிதர்களை அசடுகளாக எண்ணி மன்னிக்கத் தூண்டும் கதை.
இந்தத் தொகுதியில் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இருபத்தி மூன்று என்றாலும், இலவச இணைப்பாக அவரே எழுதிய ‘சீத்தாலட்சுமி அடுக்ககம்’ என்ற கதையையும் நமக்கு தொகுப்புடன் கொடுத்திருக்கிறார் திரு.அழகியசிங்கர் . அது அவரது சுயசரிதையோடு சேர்த்து எழுதப்பட்ட சுவாரசியமான கதை. வழக்கமாக சிறுகதைப் போட்டிகள் நடத்துபவர்கள் கூறும் ‘பொறுப்புத் துறப்பு’ வரி, ‘மன்னிக்கவும், உங்கள் சிறுகதை தேர்வாகவில்லை. இது உங்கள் கதையைப் பற்றிய விமர்சனம் அல்ல, போட்டி என்றாலே விடுபடுவது தவிர்க்க முடியாது. தாங்கள் உங்கள் கதையை வேறு போட்டிகளுக்கு அனுப்புங்கள்’ . இந்த மாமனிதர், அழகியசிங்கர் உயரமாக இருப்பதால் மட்டும் அப்படிச் சொல்லவில்லை, அவர் இந்தத் தொகுதியில் தேர்வாகாத சிறந்த கதைகளை பத்திரிகைக் கதைகள் என்று பெயரிட்டு நவீன விருட்சம் இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
அவற்றில் பெரும்வாரியான கதைகளை நான் படித்துவிட்டேன். சிறப்பான கதைகள். அவற்றில் என் கதையும் ஒன்று என்பதற்காக சொல்லவில்லை, நிஜமாகவே சிறப்பான கதைகள். அதனால் அவற்றையும் நான்கு தொகுப்புகளாக கொண்டுவரும் முயற்சியில் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். போட்டியில் பரிசுபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! இவ்வளவு சிறப்பாக போட்டியை நடத்திய திரு. அழகியசிங்கர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
