முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/இரண்டாம் இரவு

பிடிக்கவேயில்லை பவித்ராவுக்கு.அவளது மனநிலை அறியாமல் உறவுகளும், நட்புக்களும் திருமண ஏற்பாடுகள் செய்ததும், இன்று எல்லா சம்பிரதாயங்களைச் செய்து வருவதும் வெறுப்பூட்டியது.
அவளுக்கு இது இரண்டாவது திருமணம்! அவள் கணவன் ஷ்யாம் மணமாகி மூன்று மாதங்களிலேயே இறந்து போனான். ஊட்டிக்கு நண்பர்களுடன் சென்றவன், திரும்பவேயில்லை.காரை ஓட்டிய நண்பர்களுள் ஒருவன் தூக்கக் கலக்கத்தில் ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், மற்ற நண்பர்கள் படுகாயத்துடன் தப்ப, இவன் மட்டும் இறந்தே போனான்.மூன்று மாதங்களே வாழ்ந்தாலும் முழுமையான வாழ்வு பவித்ரா வாழ்ந்தாள்.அவன் பெண் பார்க்க வந்த நாள் நினைவுக்கு வந்தது.தன் அக்கா மற்றும் அம்மா அப்பாவுடன் வந்தவனுக்கு முதல் பார்வையிலேயே பவித்ராவைப் பிடித்தது.அவன் அக்காவும், அம்மாவும் பவித்ராவிடம் சமைக்கத் தெரியுமா என்று கேட்க, எரிப்பது போல் அவர்களைப் பார்த்தான்.
” அவங்களுக்குத் தெரியவில்லைன்னா என்ன? நான் வட இந்தியாவில் பல வருடங்களாகத் தனியாக இருந்ததால் எனக்குச் சமைக்கத் தெரியும்.எனக்கு அவங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு.அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு கேளுங்க”, என்று வெளிப்படையாகப் பேசி அவர்களை அடக்கினான்.
பவித்ரா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.சற்றுக் கருப்புதான்.மீசையும் முரட்டுத் தனமாகத் தான் இருந்தது.கூரிய நாசி, திருத்தமான முகம் என்று ஆணழகனாகத் தான் இருந்தான். “மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது.முரடா உன்னை ரசித்தேன்”, என்ற பாடலில் வருவது போல் அந்த முரட்டுத் தோற்றமும், ரசிக்கக் கூடியதாகத்தான் இருந்தது.சிரிப்பே காட்டாத உதடுகள்.எப்போதாவது அரும்பும் புன்னகையில் முகத்தின் கரடு முரடுத் தனம் மறைந்து,கள்ளமற்ற குழந்தையாக மாறி விடும் அற்புதம்! சட்டென்று தலையைக் குனிந்தவள் முகம் குங்குமச் சிவப்பாக மாற, பிடித்திருக்கு என்பதாகத் தலையசைத்தாள்.
அதன் பிறகு வாழ்க்கை சொர்க்கமாகி விட்டது.மூன்றே மாதத்தில் அவர்கள் திருமணம் நடைபெற்றது.உடன் டெல்லியில் குடித்தனம்.தேனாக இனித்தது வாழ்க்கை.திகட்டத் திகட்ட இன்பம்! ஏதாவது சொல்லி அவளைச் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பான்.
தினசரி எங்காவது ஒரு இடம் சென்று விடுவார்கள். பௌர்ணமி இரவில் தாஜ்மகாலுக்கு அழைத்துச் சென்றான்.இருவரும் நிலவொளியில் கைகோர்த்து பளிங்கு நிலவுக்குப் போட்டியாக மிளிரும் தாஜ்மகாலில் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்த இனிப்பான தருணங்கள்.அடக்கமான பெண்ணாக வளர்க்கப்பட்ட அவள் அறிவுக்கும், அழகுக்கும் அவன் அடிமையானான்.காண்போர் எல்லாம் காதல் திருமணமா என்று கேட்குமளவு நெருக்கம்! அவனைக் கண்டதும் அவள் கன்னங்கள் சிவக்கும்.அவன் விழி ஒளிரும்.இருவர் முகங்களும் மலரும்.இவ்வாறு கவிதையாகவே வாழ்ந்தனர் இருவரும்!
திடீரென ஒருநாள் ஊரிலிருந்து அலைபேசி வந்தது.அவனது பாட்டி மிகவும் முடியாமல் இருப்பதால் அவனைப் பார்க்க ஆசைப்படுவதாக.
பவித்ராவுக்கு வயிற்றில் மெய்யோ பொய்யோவென்று ஸ்வேதா குட்டி உருவாக்கியிருந்தாள்.
அதனால் அவள் அம்மாவை ஊரிலிருந்து அவளுக்குத் துணையாக வைத்துவிட்டு ஊருக்குக் கிளம்பினான் மனைவியைப் பிரிய மனமில்லாமல்.
என்ன செய்வது? அவள் இருக்கும் நிலையில் பயணம் கூடாதே!
இவனைப் பார்த்ததும் பாட்டி எழுந்து உட்கார்ந்து விட்டாள்.நண்பர்கள் வற்புறுத்தியதால் ஊட்டிக்கு இரண்டு நாட்கள் டூராகப் போனவன், விபத்தைச் சந்தித்து உயிரை விட்ட பரிதாபம்!
பவித்ரா செய்தியைக் கேட்டதும்,உடைந்து அழுது பரிதவித்தாள்.மூன்றே மாதத்தில் தன் மணவாழ்க்கை முடியும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.இப்படி அற்பாயுசில் அவன் உயிரைப் பறித்த கடவுள் அவர்கள் திருமணம் நடைபெறாமல் செய்திருக்கலாமே.விதியின் விளையாட்டை என்னவென்று சொல்வது ?
கருவுற்ற காலத்தில் அதிர்ச்சியைச் சந்தித்ததால் ஸ்வேதா குட்டி காது சற்றுக் கேட்காமல், பேசவும் இயலாமல் பிறந்தது.
அதன் பிறகு சென்னைக்கு வந்து வேலை தேடிக் கொண்டு இதோ ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. ‘எத்தனை நாள் தனியா இருப்பே? குழந்தைக்கும் அப்பா வேண்டாமா?”அம்மா, அப்பா இருவரின் தொல்லை மட்டுமில்லாமல் மாமனார், மாமியாரின் தொல்லையும் சேர்ந்து கொள்ள மனமேயில்லாமல் இதோ இந்த இரண்டாம் திருமணத்திற்குச் சம்மதித்து விட்டாள்.
திருமணம் முடிந்தது.ஊஞ்சல்,அம்மி மிதித்தல் நலுங்கு என எல்லாவற்றிலும் அவன் நினைவுதான் பவித்ராவுக்கு.
இதோ இவளை அலங்கரித்து, பால் சொம்பைக் கையில் தந்து உள்ளே அனுப்பவிருக்கிறார்கள்..அவளுக்கு ஷ்யாமுடன் நடந்த அந்த நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது.
“என்ன இது அநாகரிகம்! எல்லா உறவினர்களும் , நண்பர்களும் வெளியே லாலி பாட, நாங்கள் இருவரும் ரூமுக்குள்ளாகவா?நாங்கள் இருவரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்கி விட்டு மறுநாள் இங்கு வருகிறோம்’, என்றான்.அதனால் சம்பிரதாய சாந்தி முகூர்த்தம் அவர்களுக்கு நடக்காமல் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
இன்று…
அலுவலகத் தோழி திவ்யா,”என்ன பவித்ரா! மூஞ்சியை இப்படி வச்சிக்கிட்டிருக்கே? சிரி…’ , என்றாள்.
” எப்படி திவ்யா சிரிப்பேன்? எனக்கு ஷ்யாம் நினைவாகவே இருக்கு,” _ இது பவித்ரா.
“கொஞ்சம் இரு”,_ தோழி தன் அலைபேசியில் காட்டிய படத்தைப் பார்த்து
பவித்ரா அதிர்ந்தாள்.
இது யார் ஷ்யாமுடன்…அட அரவிந்த்…
“என்ன திவ்யா?”
“ஆமாம்.அரவிந்த் ஷ்யாமோட ஃபிரண்டுதான்.அந்த விபத்துல தெய்வாதீனமாக உயிர் பிழைச்சவர். அவர்தான் ஷ்யாமோட கடைசி நேரத்தில் இருந்தவர்.இந்த வீடியோவையும் பார் .”
அந்த வீடியோவில் அரவிந்த், பவித்ராவை மணந்து கொண்டு, அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஷ்யாம் பலவீனமான குரலில் வேண்டியிருந்தான்.
“அந்த விபத்தில் அரவிந்த்துக்கும் பலத்த அடி பட்டதால் டெல்லிக்கு உடனே வந்து உன்னைப் பார்க்க முடியவில்லை.
எப்படியோ அரும்பாடு பட்டு, உன் அலுவலகம் வந்து என்னைச் சந்தித்தார் அரவிந்த்.
பக்கத்து வீட்டு இளைஞன் உன்னைப் பார்த்து ஜொள்ளு விட்டதும்,அவன் வீட்டு முதலாளி கிட்டே நீ புகார் கொடுத்து அவனைக் காலி பண்ண வைத்ததும், உன் கிட்டத் தவறாக நடக்க முயன்ற மேலதிகாரியின் மேல் நீ புகார் கொடுத்து , அவன் உன்னை மிரட்டியதும், பிறகு கம்பெனி தலைமை அவனுக்குப் பணியிறக்கம் செய்து , இடமாறுதல் தந்ததும் அவருக்கும் தெரியும் நான் சொன்னதால்.
உன் வலி, வேதனை, ஆண் துணையில்லாமல் இருக்கும் அழகான, இளமையான உனக்கு, இந்தச் சமுதாயம் கொடுக்கும் சித்திரவதை எல்லாம் தெரியும்.இந்த அரவிந்த் ரொம்ப நல்லவர் . உன்னையும், ஸ்வேதா குட்டியையும் நல்லாப் பார்த்துப்பார்.தயவு செய்து அரவிந்தோட உன் வாழ்க்கையைத் தொடங்கு பவித்ரா.அதுதான் ஷ்யாமோட ஆசை “, கண்ணீருடன் கூறினாள் திவ்யா.
நடந்த எந்த உரையாடலையும் அறியாத அரவிந்த், கல்யாணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து தன்னுடன் முகங்கொடுத்துப் பேசாத பவித்ரா,பால் சொம்பைத் தந்து விட்டு, பாசத்துடன், மரியாதையுடன் காலில் விழ , அவள் மாற்றத்தின் காரணம் புரியாதவனாகவே, அவளைத் தாங்கிப் பிடித்தான்.
வெளியே ஷ்யாமின் நண்பன் அரவிந்த் , பவித்ராவுக்கு ஷ்யாமின் ஆசைப்படி வாழ்வு கொடுக்க வந்தபோது , ஷ்யாம், பவித்ராவை மறுமணம் செய்து கொள்ளச் சொன்னதற்கு ஆதாரம் இல்லையென்று பவித்ரா மறுப்பாள் என்பதால் செயற்கை நுண்ணறிவு மூலம் காணொளிப் பதிவை உண்டாக்கி, பவித்ராவைச் சம்மதிக்க வைத்த நிம்மதியில் உறங்கினாள் அவள் தோழி திவ்யா.

6 Comments on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/இரண்டாம் இரவு”

  1. நல்வாழ்விற்காக,பொய்மையும் வாய்மையிடத்தே குறள்நெறியை பின்பற்றியது சிறப்பான சிந்தனை.

Comments are closed.