
“நாடகம் சினிமா அல்ல. க்ளோஸ்அப் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் அரங்கத்தின் கட்டுப்பாடுகளாலும், பேசும் வார்த்தைகளாலும், நடிப்பாலும்தான் கவனத்தை ஈர்க்க முடியும். வார்த்தைகளின் வசீகரத்துடன், இயல்பான நடிப்பும் உடல்மொழியும் சேரும்போது நாடகம் வெற்றியடைகிறது” – எழுத்தாளர் சுஜாதா (சுஜாதாவின் நாடகங்கள். முழுத் தொகுப்பு – உயிர்மை).

சிறுகதையோ, நாவலோ நாடகமாக மாறும்போது, அதற்கான பிரத்யேகமான உத்திகளைக் கைக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உரையாடல்களினாலேயே நகர்த்தப்படும் கதை (புனைவது சிரமம் கூட) நாடக பாணியில் இருக்கும். விவரணைகள் நிறைந்த நாடகங்கள், கொஞ்சம் தொய்வு அடையத்தான் செய்யும். இந்த இரண்டினையும் சமமாகக் கையாண்டு, தொய்வில்லாமல், மூலக் கதையின் வடிவமோ, வாசனையோ மாறாமல் மூத்த எழுத்தாளர் சிவசங்கரியின் ஆறு சிறுகதைகளை குறும் நாடகங்களாக அரங்கேற்றியிருக்கும் தாரிணி கோமல் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
ஒரு விரிவான சமூகப் பார்வையுடன், அன்றாடம் நாம் காணும் மனிதர்களின் வாழ்க்கை மூலம் சொல்லவந்த செய்தியினை சுவாரஸ்யமாகவும், தீர்க்கமாகவும் சொல்லும் எழுத்தாளர் சிவசங்கரியின் ஆறு கதைகளும் சிறப்பு. தேர்வு செய்த கோமல் தியேட்டர்ஸ், மூலகதைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் மேடையில் பாத்திரங்களை உயிர்ப்புடன் உலவ விட்டதற்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

“நடனக் கலைஞராகத்தான் வர ஆசைப்பட்டேன். மனதிற்கு இனிய எழுத்தாளராக ஆனது ஒரு சந்தோஷமான விபத்து” என்று சொல்லும் சிவசங்கரி அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களைத் தொகுத்து, தன் எழுத்து மற்றும் குரலில் ஓரு குறுப்படத்தைத் தயாரித்து ஒளிபரப்பினார் தாரிணி. சிவசங்கரி அவர்களின் 83 ஆவது பிறந்த நாளையொட்டி, நாடகங்கள் தொடங்குமுன் ஒளிபரப்பபட்ட இந்தப் படம் சொல்லும் செய்திகள் ஏராளம். சமூகத்திற்கு, ஓர் எழுத்தாளராக, தர்மம் செய்பவராக, சக எழுத்தாளர்களைப் போற்றும் ஒரு படைப்பாளியாக, ஒரு நல்ல மனுஷியாக சிவசங்கரியை அடையாளம் காட்டும் நல்ல ஆவணமாக இருந்தது அந்தக் குறும்படம்.
இனி நாடகங்களைப் பற்றி….
‘கழுதை தேய்ந்து…’ நாடகத்தில், மத்தியதர குடும்பத்தின் நிதி நிலைமையைச் சிறிது நகைச்சுவையுடன் சொல்கிறது. பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், நிதி நிலைமையும், எதிர்காலம் பற்றிய அச்சங்களும், உறவுகளின் தேவையும் அவர்களை தருமம் செய்யவிடாமல் தடுத்துவிடும் அவலத்தைச் சிறப்பாகச் சொல்கிறது. உரையாடல்கள் படிப்படியாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தைக் கரைப்பதைச் சொல்கின்றன. சிவசங்கரி அவர்களின் உரையாடல்களை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார் தாரிணி!
‘தலைவர் வருகிறார்’ – என்றோ எழுதியது, இன்றைய அரசியலுக்கும் பொருந்திப் போவது, சிவசங்கரி அவர்களின் தீர்க்க தரிசனம் அல்லது மாற மறுக்கும் இன்றைய அரசியல்வாதிகள்! கதையில், தனக்குள் பேசிக்கொள்வதை, நாடகமாக்கத்தில், கணவன் மனைவி உரையாடலாக மாற்றியமைத்துள்ளது, தாரிணியின் மேஜிக் டச்! வேலைக்காரி பாத்திரம், அவளது உரையாடல்கள்தான் நாடகத்தின் ஹைலைட் – 15 நிமிடக் கூத்திற்கு ஆகும் விரயங்களில் கூட, வாக் போவதற்கு ஒரு சாலை கிடைத்த சந்தோஷத்தை சொல்வது, எள்ளலின் உச்சம்!
‘சண்டை’ – மீண்டும் உரையாடல்களே கதையை நகர்த்தும் ஒரு சொற்சித்திரம். மும்பை வீட்டு ‘பேக் ட்ராப்’ அழகு. ஒரு கதை எங்கு நிறுத்தப் படவேண்டுமோ, அங்கு நிறுத்தப்படுகிறது. மகிழ்ச்சியும், வருத்தமும், கோபமும் மாறி மாறி வருவது சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.
‘தெய்வம் நின்று கொல்லும்’ – மனதை கனக்கச் செய்யும் கதைதான். ஏற்காடு எஸ்டேட், எஸ்டேட் வீடு, டெல்லி வீடு என காட்சிகள் மாறுவது விறுவிறுப்பு. கத்தி மேல் நடக்கும் கதை – சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ‘ஓவர் ஆக்டிங்’ எனக் காதில் விழுந்தது. இருக்கலாம்… ஆனால் அந்தப் பாத்திரத்திற்கு அப்படித்தான் செய்ய முடியும்! (அவர் கேலியும் கிண்டலுமாக ‘ஹஸ்கி’ வாய்சில் நண்பர்களுடன் பேசுவது, பெண்ணைக் காணாமல் பதபதைப்பது, கடைசியில் வருந்துவது எல்லாம் மேடை நாடகத்தில் சிறப்பாக வந்திருப்பதாகவே நினைக்கிறேன்). நாடகமாக்கம் விறுவிறுப்பாக இருந்தது (சினிமாவில் திரைக்கதை என்பதற்கான சொல், நாடகத்திற்கு என்ன?).
‘ஆயா’ – கதை, நாடகமாக்கம், காட்சிகள் மாறும் வேகம், நடிப்பு என எல்லா வகையிலும் முன்னால் இருப்பது ‘ஆயா’. மேடையில் ஒரு மனோரமா! திருநெல்வேலி தமிழ், உடல் மொழி, முறத்தை எடுக்கும் லாவகம், வெற்றிலை இடிப்பது, இடையே துப்புவது, மும்பையில் குழந்தக்காகக் காலையில் தொடங்கிய ஓட்டம், மாலையில் தளர்ந்து தரையில் அமர்வது, குடும்பப் பெருமை பேசிக்கொண்டே, மகனின் திருமணம் பற்றி வருத்தப்படுவது – மகன் ஊருக்குப் போகச் சொல்லும்போது வருந்துவது, திரும்ப அழைக்கும்போது மகிழ்வது, எதற்காக அழைத்தார்கள் எனத் தெரியும்போது உடைந்து போவது- ‘நாஞ்சில்’ ரேவதி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். சபாஷ்!
‘தெப்பக்குளம்’ – நாடகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், கதை! எப்படி இருந்த குளம் எப்படி வற்றி விட்டது என்பதையும், சுற்றுபுற சூழலைப் பாதுகாக்க எப்படி நாம் தவறிவிட்டோம் என்பதையும், நெகிழ்ச்சியுடன் சொல்லும் கதை. குளத்திற்கேற்ப முரணாக குற்றாலம் நீர்வீழ்ச்சி! ஃப்ளாஷ் பேக் எல்லாம், ஒரே மேடையில் லைட்டிங் துணையுடன் அமர்க்களம். ‘பழைய நினைவுகளுடன்தான் வாழவேண்டும்; மீண்டும் அவை உயிர் பெறுவதற்கு வாய்ப்பில்லை’ – உண்மைதான்.
உறுத்தாத இசை (ஆயாவில் மும்பையில் ஆயா குழந்தையை கவனித்துக்கொள்ளும் இடம், வரண்ட தெப்பக்குளக் காட்சியில் ஒரு வரண்ட இசை) – விஷ்வஜெய். சிறப்பான ஒப்பனை (பெரம்பூர் குமார்), எல் ஈ டி டிசைன்ஸ் (தியாகராஜன்) எல்லாமே அளவாகவும், நிறைவாகவும் இருந்தன.
அனைத்து நடிகர்களும் பாத்திரம் உணர்ந்து, சிறப்பாக நடித்திருந்தார்கள் – அந்தக் கருப்பு டெலிபோன் உட்பட!
ஒவ்வொரு சீனிலும் தாரிணி அவர்களின் உழைப்பு தெரிகிறது. சிவசங்கரி மறைந்து தாரிணியோ, தாரிணி மறைந்து சிவசங்கரியோ தனியாகத் தெரியாதபடி, நாடகமாக்கம் சிறப்பாக இருந்தது.
வாழ்த்துகள் கோமல் தியேட்டர்ஸ்!
