
நேற்று (25-10-2025) சனிக்கிழமை சென்னையில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன
ஒன்று, இலக்கியம் சம்பந்தப்பட்டது இன்னொன்று நாடகம் சம்பந்தப்பட்டது.
அம்புஜம்மாள் தெரு சீனிவாச காந்தி நிலையத்தில் (வழக்கம் போல ஒவ்வொரு மாதமும் நாலாம் சனிக்கிழமை மாலையில் நடைபெறும்) ‘குவிகம்’ அமைப்பின் நேரடி இலக்கிய அளவளாவல் நடைபெற்றது. ஆனால் இன்று அது ஒரு முக்கியமான லட்சியத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
40 ஆண்டுகளாக வெளிவரும் இலக்கியக் காலாண்டிதழான ‘விருட்சம்’, 13 ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவரும் ‘குவிகம்’மின்னிதழ், மற்றும் நான்கு ஆண்டுகளாக வெளிவரும் ‘பூபாளம்’ இரு மாத இதழ் ஆகிய மூன்று சிறு பத்திரிகைகளும் ஒன்றாக இணைந்து 2025 ஆண்டுக்கான தீபாவளி மலரை முதன்முறையாக தயாரித்து வெளியிட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

200 ரூபாய் விலையில் மொத்தம் 70 படைப்பாளிகளின் சுமார் 200 பக்கம் கொண்ட இந்த தீபாவளி மலர், ஏற்கனவே தீபாவளி மலர் சந்தையில் கொடி கட்டி பறக்கும் ‘கலைமகள்’, ‘அமுதசுரபி’, ‘லேடிஸ் ஸ்பெஷல்’ ஆகியவற்றுக்கு சவால் விடும் அளவுக்கு சரக்கு மிகுந்ததாக இருந்தது. வண்ண ஓவியங்கள் இல்லை என்பது மட்டுமே ஒரு குறை. அதற்கு காரணம் விளம்பரங்கள் என்று எதுவுமே இல்லை!
இந்த வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மீ விஸ்வநாதன், டாக்டர் ஜெ பாஸ்கரன், கணேஷ் ராமன், ராஜகோபாலன் மற்றும் அழகிய சிங்கர், கவிஞர் ஆர் கே ஆகியோர் பேசினார்கள்.
அண்மையில் தான் ஓர் அரசுடமை வங்கியின் மூத்த பொது மேலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற இலக்கியவாதியான (அல்லது இலக்கியவாதி ஆகிவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும்) கணேஷ் ராமன் அவர்களின் பேச்சு, மலரில் இடம் பெற்ற 70 படைப்பாளிகளையும் ஆழமாகத் தொட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆறு மணிக்கு இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், அனைவரும் அருகில் உள்ள நாரதகான சபா அரங்கிற்கு விரைந்தோம். அங்கு ஒரு அற்புதமான நாடக முயற்சி ஏற்பாடாகி இருந்தது.
மரியாதைக்குரிய மூத்த எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் ஆறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து நாடகமாக்கி வழங்கினார், புகழ்பெற்ற நாடக இயக்குனரான தாரிணி கோமல் அவர்கள்.
ஒவ்வொன்றும் வித்தியாசமான கருப் பொருளைக் கொண்ட நாடகங்கள். நாடக நடிகர்கள் ஒவ்வொருவரும் மிகமிக அற்புதமாக நடித்தார்கள் என்றால் மிகையாகாது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிவசங்கரி அவர்களைப் பற்றிய அற்புதமான காணொளி ஒன்று திரையிடப்பட்டது. அவ்வளவு சிறிய காணொளியில் அம்மையாரின் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் தொட்டுக்காட்டி இருந்தது நெகிழ வைப்பதாக இருந்தது.
பார்வையாளர்களைக் கவர முடியாமல் தமிழ் நாடகம் தட்டுத் தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், தாரிணி கோமலின் ‘சிறுகதை டு நாடகம்’ என்னும் புது வழியைத் தயாரிப்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என்பதே நாடக ஆர்வலர்களின் கோரிக்கை.

எனது முகநூல் பதிவை மறுபிரசுரம் செய்தமைக்கு நன்றி ஆசிரியர் அவர்களே!