எஸ்ஸார்சி கவிதைகள்

இணையக் கவியரங்கம்
17/20/25

எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்.

  1. தெளிதல்

அயல் மொழி ஆண்டமொழி
அவ்வாண்டை மொழி கொண்டு
எழுதியிருக்கிறார்கள் சுவரெங்கும் நல்லதுகள் பயிராக வேண்டும்.
மாநகராம் பெங்களூரு ராமமூர்த்தி நகரில் தேவாலயம் மய்யமாய்
கிறிஸ்துவின் பிறந்தநாள் கூட்டம்
பல வண்ண பொம்மைக்
குவியல்
இயேசு குழந்தையாய் மாட்டுத் தொழுவம் ஒன்றில்
ஒளிர்ந்து தருகிறார் காட்சி
மின்சார விளக்கு தெய்வீக சாட்சியாய்க்
கனம் கூட்டிக் காட்டியது
மண்டியிடுகிறார்கள்
மன்றாடுகிறார்கள் மகிழ்ந்து நிற்கிறார்கள்
புத்தாடை அணிகலன் புது மலர்கள் எனத்
தின்பண்டங்கள் பரிமாறிய படி மக்கள்
ஆசிவழங்கும்
வெள்ளைச் சீருடை
சிரம்தொட்டுத்தொட்டு ஓய்ந்து போனது சரிதான்
ஆலயவயிலில்
அம்மா அப்பா அண்ணா
தமிழ்க்குரல் கேட்கிறது காய்ந்த தலையோடு
ஈராயிரம் ஆண்டுகள்
முடிந்து போனது
ஏசுவை என்று சரியாய்த்தெளிவது.

  1. மக்களாட்சி

மக்களாட்சி இன்று எங்கே போய் முடிந்திருக்கிறது
மக்களைப்பிரித்துப்பிரித்து
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவே
முயலக் கூடாது என்பதுவாக
இந்தியா என்பதில்லை
அமெரிக்கா என்று சொன்னாலும் இழிக்குணம் இதுவே.
வோட்டுக்கள் பெறுவதெப்படி என்பதுவே ஒரே யுக்தி
மக்களாட்சி என்பது கணக்குப் போடுவதாய்
சுருங்கிப்போனது
அரசியல் என்பது தொழிலாக அனுபவமாகிறது
தியாகமும் சேவையும்
விலாசம் தொலைத்து நிற்கச் சாதியும் மதமும் தோல் நிறமும்
நடத்துகின்றன பேரம்
மக்களாட்சி பாரெங்கும்
நீர்த்துத்தான் கிடக்கிறது
மக்களை மெய்யாக மதிக்கும் முறையொன்று
மலரத்தான் வேண்டும் மாற்றாக.

  1. மொழியுறவு

ஆங்கிலம் படித்து அல்லலுற்றதாகப் பாரதி சொன்னார்
கதையும் கட்டுரையும்
அம்மொழியில் படைத்தவர் பாரதி
கணினி வந்தபின்னே
தமிழ் எழுத்துக்கள் திரையில் வர
ஆங்கில எழுத்துக்கள் வினையாற்றித்
தமிழாய்ப் பிறப்பெடுக்கின்றன
ஏ எம் எம்‌ ஏ ஏ ஆங்கில எழுத்துக்கள் ஒன்றாய்க்கூடி அம்மா என்று திரை காட்டுகிறது அழகாய்.
தமிழின் படைப்புகள் எல்லாம் இன்று ஆங்கில எழுத்தைத்தடவித்தடவி
தமிழில் பிரசவமாகின்றன
வசதிகள் ஆயிரம் கணினியில் உலகம்
சுற்றுகின்றனவே கவிதைகள்
இணைய வழியில் ஆங்கில எழுத்தின் ஆதாரம் தமிழுக்குத் தோழமை
விடைபெற்ற தலைமுறைக்கு இது பழக்கமில்லை
தனித்தமிழ் இயக்கம் பிடிவாதமாய்த் துவங்கினால் கூட
ஆங்கில அறிவு அவசியமாகிறது.
வேறு ஏதேனும் அக அரசியல் உண்டென்று
யூகித்தாலும் மொழிகள்
ஒன்றையொன்று நேசிக்கின்றன மெய்யாக.

. 10 வாழும் பூமியில்

அத்தனை இன்னல்களையும்
மனிதன் தானே முயன்று
வெற்றி கொள்கிறான்
வக்கணையாய்ப் பேசவும்
எழுதவும் இசை பாடவும்
ஓவியம் தீட்டவும்
கற்றுக்கொண்டான்
அறிவியலால் ஆயிரம் சாதனைகள் சாதித்து நிற்கிறான்
மருத்துவத்தில் வானியலில் வேளாண்மை உற்பத்தியில் அறிவியல்
தொழில் நுட்பத்தில் தகவல் அரங்கில் இமயமலையென
சாதித்த வை எத்தனையோ
பிரபஞ்ச ரகசியம் பிடிபடாவொன்று விடுவிக்க முனைந்து
தோற்றுப் போகிறான்
விடுவதாயில்லை மனிதக் குலம் படைப்பின் ரகசியம்
அறியத் துணியும் பயணம்
வாழ்க்கையொரு கோணலாய் அரும்பி முன்னும் பிரான்னும் காரிருள் தான் எஞ்சி நிற்கிறது
அவை விடுபட வேண்டுமா இல்லை வேண்டாவா அறிதல் அத்தனை எளிது மில்லை
தோற்றதில் நிறைவு மனிதனுக்கு தோல்வியோ
வெற்றித்தடத்தில் ஓர் படி
மொத்தமாய்ப்படிகள் எத்தனையுண்டு
யார் அறிவார்.
வாழும் பூமியில்