
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் சென்ற மாதம் வாசித்த எனது கவிதைகள் – மீதி ஐந்தும் ஒன்றாக , அவர் கேட்டுக்கொண்ட படி
6. தரையின் தவிப்பு
அந்தப் பொட்டலின் மேல் தான்
ஒரு வீடு இருந்தது
முற்றம் இருந்தது
அடுப்படி இருந்தது
தட்டு முட்டுச் சாமான்கள்
ஏராளம் இருந்தன
பிறந்தும் வளர்ந்தும்
இருந்தவர்கள் பல பேர்
இப்போது
தரை மட்டும் கிடக்கிறது
தனியாகத் தவித்தபடி
7. காதல் பாசாங்கு
பார்வையில் பிரியம்
பேச்சில் விஷமம்
வராவிட்டால் விசாரிப்பு
வந்தால் புறக்கணிப்பு
கூட்டத்தில் அரட்டை
தனிமையில் மௌனம்
இங்கிட்டும் போகாம
அங்கிட்டும் போகாம
ரெண்டும் கெட்டானாய்
என்னடி பாசாங்கு
8. ஓர சீட்டு ஆசை
தொங்கிக் கொண்டு போகும்போது
உள்ளே போக ஆசை
உள்ளே போன பின்பு
உரசாமல் நிற்க ஆசை
உரசாமல் நின்ற பின்பு
உட்கார்ந்து போக ஆசை
உட்கார்ந்து போகும் போது
ஓர சீட்டு ஆசை
ஓர சீட்டு கிடைத்த பின்பு
வாந்தி வரும் ஓசை
9. சிங்கப்பூர் பேரன்
‘என்னடா தம்பி இப்படி
எளச்சிப் போயிட்டே ‘
‘பனியன் ஜட்டி கெடக்கட்டும்
நான் தொவச்சிப் போடறேன் ‘
‘சாப்பிட்ட பொறகு கொஞ்சம்
தூங்கிட்டுப் போயேன்பா ‘
பிரியத்துக்கு மறுபேராய்
இருந்த அப்பத்தா
செத்துப் போனப்ப – பேரன்
சிங்கப்பூரில் இருந்தான்
10. நிழல் நிறுத்தம்
நான் நடந்து கொண்டு இருந்தேன்
என்னுடைய நிழலும்
என்னோடு சேர்ந்து
நடந்து கொண்டே வந்தது
போகச் சொன்னேன்
போக மாட்டேன் என்றது
காலால் உதைத்துப் பார்த்தேன்
அப்படியும் போகவில்லை
என்னுடைய நிழல் கூட
என் பேச்சைக் கேட்பதில்லை
சூரியனிடம் தான்
சொல்லிப் பார்க்க வேண்டும்

All super ! 👏👏❤️🙏