
வானம் வெளுக்கும் முன் எழுந்த துரியாவிற்கு; இன்றய வேலைகள் கண்முன் வந்தன.
இன்று வேலைக்கு வேதா வரமாட்டாள் என்பது நினைவில் நின்றது.
காலை காஃபிக்குப்பின்,படியளக்கும் அலுவலக வேலைகளில் ஈடுபட்டு,ஒரு அளவிற்கு செய்து முடித்தாள்.
உறங்கும் குழந்தை ஸரஸாவை எழுப்ப மனதில்லாமல் எழுப்பி உடை மாற்றி உணவளித்தாள்.
காலை உணவாக இட்லி – சாம்பாரும் செய்து, மதிய உணவிற்கு துவையலும் ரசமும் செய்து முடிக்க மணி எட்டு.
அத்தையை குளிப்பாட்டி வேறு உடை மாற்றி உணவு கொடுத்து நிமிர மணி ஒன்பது,
கணவன் வாசுவிடம், இன்று வேதா வரமாட்டாள் , என்பதை நினைவு படுத்தி, வாஷிங் மெஷின் போடுவதும் பாத்திரங்களை சுத்தம் செய்வதும் அவன் செய்ய வேண்டியதிருக்கும் என்பதை , அவன் முகம் பாராமல் சொன்னாள்,
அவன் முணுமுணுத்தது, அவள் காதில் விழாதது போல் பாவனையில் இருக்கத் தலைப்பட்டாள்.
வேகமாக வீட்டை சுத்தம் செய்து முடித்தவளுக்கு, இன்னும் வாசு பாத்திரம் சுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து; வந்த கோபத்தை அடக்கினாள்.
இஷ்டமில்லாமல் செய்யும் வீட்டு வேலைகள் கஷ்டமாய்த் தான் இருக்கும்
அவரவர் வேலை அவரவர் செய்தால் தான் எல்லா வேலையும் முடியும்; அல்லவா?
ஒருவரே எப்படி அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடியும்?
துரியா! ஸரஸாவுக்கு இட்லி நான் உட்கார்ந்த வாக்கில் கொடுக்கிறேன். நீ உன் ஆஃபிஸ் வேலையை பார்க்க வேண்டாமா’ என்று உதவி செய்ய முன் வந்த அத்தையைப் பார்த்து ‘ தேங்க்ஸ் அத்தை’ என்று முறுவல் புரிந்தாள்.
‘ நான் சாப்பிடுகிறேன்; வாசு, நேரமாகிறது எனக்கு, ஃப்ளாஸ்க்கில் இருக்கும் காஃபியை நீ சாப்பிடும் போது அத்தைக்கும் கொடுத்துவிடு.
மதியம் ஒரு மணிக்கு எனக்கு லன்ச் ப்ரேக் இருக்கும் சமயம் , நீயும் வந்து சேர்ந்து சாப்பிட்டால், வேலையும் எளிது; அத்தையும் தனியே சாப்பிட வேண்டாம்; என்று சொல்லி தன் அறைக்குப் போய் தாழ் போட்டுக் கொண்டாள்.
பத்தரை மணிக்கு அலுவலகத்தோடு இணைந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை
மீட்டிங் முடிய இரண்டு மணி ஆயிற்றே, என்று பதட்டத்துடன் வெளியே வந்தவளுக்கு அத்தை தனக்காக காத்திருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.
நானும் குழந்தையும் சாப்பிட்டு விட்டோம்.
வா! உனக்கு உட்கார்ந்த வாக்கில் பரிமாறுகிறேன்.’ என்று இதமாக சொன்ன அத்தையிடம்’ அவன் சாப்பிட்டானா’ என்று கேட்க அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
சாப்பிட்டு முடிக்கும் நேரம், வாசு வர; அவனுக்கும் பரிமாறின அத்தை’ இதை எல்லாம் எடுத்து வை.
எத்தனை வேலையை அவள் பார்ப்பாள்!’என்று சொன்னவளை ‘ஙே’ என்று பார்த்தான் வாசு.

👍👌