
மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு வேண்டிய தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு கூடையில் வைத்து, கூடவே தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டு தன் குழந்தையை ஒழுங்காக ஸ்ட்ராப் போட்டு தன்னோடு அணைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். பத்து நிமிடம் முன்பாகவே வந்து குழந்தையை காப்பகத்தில் விட்டு விட்டு வேகமாக தன்னுடைய பள்ளிக்குள் நுழைந்தாள். அன்றைய வகுப்புகளுக்கு தேவையானவற்றை முந்தின நாளே அவள் தயாராக வைத்து விட்டு சென்றிருந்ததால் நிதானமாக தான் வகுப்புக் குழந்தைகளுடன் ப்ரேயர் ஹாலுக்கு வந்தாள். குழந்தைகள் அனைவருக்கும் அவளை மிகவும் பிடிக்கும். அவளுடைய நேரந்தவறாமையைப் பார்த்து சில சமயம் மற்ற ஆசிரியர்கள் பொறாமைப் பட்டதென்னவோ உண்மை. அன்றைய தினம் இனிமையாக கழிந்தது. மாலை சிறிது சீக்கிரமாகவே குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள் மீரா.
குழந்தையை இடுப்பிலும், கைப்பை, நோட்டு புத்தகங்கள் , மற்றும் கோப்புகள் அடங்கிய கனமான பையுடன் அவள் உள்ளே நுழையும் சமயம், அவள் மாமியாரின் குரல். பக்கத்து வீட்டு மாமியிடம், ” எங்க மீராவிற்கு சாமர்த்தியம் பத்தாது. ஏதோ சின்ன பசங்களுக்கு டீச்சர். சுமாரான சம்பளம். ஏதோ ஓடிக்கிட்டிருக்கு” என்று தன்னைப் பற்றி வழக்கம் போல் புகார்.
மீரா எதுவும் காதில் விழாத மாதிரி உள்ளே சென்று குழந்தைக்கு பால் கொடுக்கத் தயாரானாள்.
11/11/2025
விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் என்றும் அட்டாவதானி – விருட்சம் நாளிதழ்

One Comment on “பி.ஆர்.கிரிஜா/சாமர்த்தியம்”
Comments are closed.