சுகன்யா சம்பத்குமார் /டாமி

எட்டாம் வகுப்பு படிக்கும் அவினாஷ் தினமும் தன் வீட்டு பாடத்தை முடித்துவிட்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு விளையாட செல்வான் . அப்படி அங்கு சென்ற போது , ஒரு நாள் அங்கு டாமி தன் குட்டிகளை வயிற்றில் சுமந்து கொண்டு அடிப்பட்ட நிலையில் கிடந்தது ,அதை பார்த்த அவினாஷும் அவன் நண்பர்களும் டாமிக்கு முதலுதவி செய்தனர் .

அன்றிலிருந்து டாமியும் அவினாஷும் நல்ல நண்பர்கள் ஆகினர் . அவினாஷ் விளையாட செல்லும்போதெல்லாம் டாமிக்கு சாப்பிட ஏதாவது எடுத்து செல்வான் , ஒரு கட்டத்தில் டாமி தினமும் அவனை ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பித்தது . அவன் டாமி சாப்பிடுவதை அருகில் இருந்து பார்ப்பான் ,அப்பொழுது அதன் வயிற்றில் இருக்கும் குட்டிகள் சுற்றிக்கொண்டிருப்பதை கையால் தொட்டு பார்ப்பான் .அவனுக்குள் ஏதோ ஒரு சந்தோசம் .

ஒரு நாள் டாமிக்கு மூன்று குட்டிகள் பிறந்தது . அவன் டாமியை பார்க்கும் போதெல்லாம் “இதை ஏன் நாம் வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாது “ என்று நினைப்பான் .

ஆனால் அவன் வீட்டில் 2 வருடமாக அவன் அப்பா அம்மா பேசி கொள்வதில்லை , கூடிய சீக்கிரம் விவாகரத்து வாங்க போவதாக அவன் அம்மா அவனிடம் கூறியுள்ளார் . எப்போதெல்லாம் அவர்களுக்குள் சண்டை வெடிக்கிறதோ , அன்று அவினாஷ் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவனுக்கு முதுகில் 2 அடி விழும் .அவர்கள் கோபத்திற்கு ஒரே வடிகால் அவினாஷ் மட்டுமே , இந்நிலையில் இந்த டாமியை அழைத்து செல்ல முடியாத நிலையில் தினமும் இங்கு வந்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான் .

அதற்கு குளிராமல் இருக்க போர்வை, மற்றும் மழையில் நனையாமல் இருக்க ஒரு சின்ன கொட்டகை மாதிரி ஏற்பாடு செய்தான் . இவை அனைத்திற்கும் தனக்கு தெரிந்த மொழியில் நன்றி கூறியது டாமி .

இவர்கள் நட்பு இப்படி வளர , ஒரு நாள் அவினாஷ் வீட்டில் மிகப்பெரிய சண்டை வெடித்தது , அன்று பள்ளி முடிந்து வந்த அவன் , அப்பா அம்மா இருவரும் அடிதடி சண்டையில் ஈடுபட்டதை பார்த்து தன் பள்ளி பையுடன் ஒன்றும் சாப்பிடாமல் பூங்காவிற்கு சென்றான் .எப்பொழுதும் அவன் சாப்பிடும் ஏதாவது ஒன்றை டாமிக்கு எடுத்து வருவான் . அன்று அவனே எதுவும் சாப்பிடாததால் அவன் ஒரு வித பசி மயக்கத்தில் பள்ளி சீருடையுடன் பூங்காவில் மயங்கி விழுந்தான் .

இதை பார்த்த டாமிக்கு ஒன்றும் புரியவில்லை ,ஆனால் அவினாஷிற்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்று மட்டும் புரிந்தது . உடனே அருகில் இருந்த அவன் வீட்டிற்கு சென்று வாசலில் நின்று வெகு நேரம் கத்தியது . ஏதோ ஒரு தெரு நாய் கத்துவதாக எண்ணி அவினாஷின் பெற்றோர் இருவரும் தனித்தனி அறையில் தாளிட்டு கொண்டு இருந்தனர் .

வெகு நேரமாக கத்திக்கொண்டிருக்கும் டாமியை பார்த்த அவன் நண்பர்கள் , அதை தொட்டு “என்ன ஆச்சு டாமி “? என்ற போது , அவர்களை கூட்டிக்கொண்டு பூங்காவிற்கு சென்றது டாமி .அங்கு விழுந்து கிடந்த அவினாஷை காண்பித்தது . அவர்கள் உடனே அவன் பெற்றோருக்கு தெரிவிக்க , அவர்கள் இருவரும் ஓடி வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

அன்று வரை “நீ பெரிதா , நான் பெரிதா , என்று போட்டிபோட்டு கொண்டு அடுத்தவரை காயப்படுத்தி அழ வைத்தவர்கள் ,இன்று தங்கள் பிள்ளைக்காக சேர்ந்து ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து கண்ணீர் விட்டனர் , சேர்ந்து பிரார்த்தனை செய்தனர் “..

சிகிச்சை முடித்த பின் மருத்துவர் அவர்களிடம் “ஒன்றும் இல்லை ,பையன் எதுவும் சாப்பிடவில்லை போல இருக்கிறது, சாப்பிடாததாலும் மன அழுத்தத்தினாலும் அவினாஷ் மயங்கி விழுந்துள்ளான் , ஏதாவது சாப்பிட கொடுத்து வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் “ என்றார் .

காலையில் சொத்திற்காக சண்டை போட்ட பெற்றோர்கள் , மாலையில் அவர்களின் உண்மையான சொத்து என்ன என்பதை அறிந்தனர் . தன் மகனை இழந்து விடுவோமோ என்ற பயம் அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது “.. கண் விழித்த அவினாஷிற்கு எல்லாம் புரிய , வீட்டிற்கு செல்லும் போது ,அவன் அம்மா “அவினாஷ் , ரொம்ப சாரி டா , இனிமே எங்களால் உனக்கு எந்த பிரச்சனையும் வராது , இருவருக்கும் சில மனஸ்தாபங்கள் இருக்கிறது ,அது காலப்போக்கில் மறையும் வரை இருவரும் பேசிக்கொள்வதை கொஞ்சம் தவிர்க்கலாம் என்று நினைக்கிறோம் உனக்காக இனி நாங்கள் சேர்ந்து தான் வாழ்வோம் ,நீ மகிழ்ச்சியாக இரு , “ என்றாள்.

அவன் அப்பா அதற்கு ஆமோதித்து தலையசைத்தார் . அவனிடம் “அவினாஷ் வீடு நெருங்க போகிறது , உனக்கு ஏதாவது வேண்டுமா , பிஸ்கட்ஸ் வேண்டுமா ? என்று கேட்டார் ….

அவன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “அப்பா , கொஞ்சம் வண்டியை நிறுத்துங்கள் , என்று கூறிவிட்டு பின்னால் பார்த்தால் , டாமி இவர்கள் வண்டி பின்னாடி ஓடி வந்து கொண்டிருந்தது ,அவன் டாமியை தூக்கிக்கொண்டு அதன் குட்டிகளையும் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தான் .”

அன்று டாமி உயிரை அவினாஷ் காப்பாற்றினான் , இன்று டாமியின் முறை …..

“நாம் என்ன செய்கிறோமோ , அது தான் நமக்கு திரும்பி வரும் “….

சசிகலா விஸ்வநாதன்/ உறவு – விருட்சம் நாளிதழ்