
தொலைத்ததை தொலைந்த இடத்தில் தானே தேட வேண்டும்?
அதற்காகத் தான் இந்த பயணம்.
வாசு மாமா மாதக்கணக்காய் ஐசியூவில் வாசம் என்றாலும் அவரின் வாசம் அங்கில்லை என்றே என் மனதில் பட்டது.
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏழாவது மரத்தின் பொந்தில் இருக்கும் இராட்சசனின் உயிர் என்று அம்புலிமாமாவில் படித்த கதையை வாசு மாமாவுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.
அவரது இறுதிக்காலம் ஆஸ்பத்திரி உபகரணங்களுடன் தான் கழிந்தது.
அதில் அவர் யாரையும் படிக்க முடியவில்லை.
படிக்கப் படிக்க படிப்படியாய் உயர்ந்து கிடக்கும் புத்தகக் குவியலை மாமி உதறித் தள்ளும் வரைக்கும் அவர் படித்துக் கொண்டு தான் இருந்தார்.
அத்தனை புத்தகங்களும் அதனுடன் இருந்த அவரது வலைப்பின்னல் நாற்காலியும் என்று அப்புறப் படுத்தப் பட்டதோ அன்று இவரும் ஐசியூவுக்கு அப்புறப் படுத்தப் பட்டார்.
புத்தகங்கள் தான் அவருயிர். அதுவே ஆட்டம் கண்டால்.. அவர் போய் விட்டார்.
மாமாவின் புத்தக வாசனை அவர் வளர்த்த என்னிலும் உண்டு. கம்பனும் காளிதாசனும் ஒருபுறமென்றால் ஜெயகாந்தனும் நா. பாவும் இன்னொரு புறம்.
“மாமி! மாமாவின் புத்தகங்களை என்னிடம் கொடுத்து விடுங்கள். அப்படியே அவரமர்ந்த அந்த நாற்காலியும்!”
“அவருடனான என் நேரங்களைக் களவாடிய அவைகளை எல்லாம் அப்புறப் படுத்தி விட்டேன்டா!” என்றாள்.
“எங்கு?”
“அதற்கென இருக்கும் முதியோர் இல்லத்தில்!”
“புரியலை மாமி!”
“புதுத்தெருவில் இருக்கும் பழைய பேப்பர் கோடவுனில்டா!”
மனம் வலித்தது. விரைந்தேன்.
வெளிச்சம் ஊடுருவிய ஆளுயர ஜன்னலின் இருபுறமும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன மாமாவின் புத்தகங்கள். உற்றுப் பார்த்தேன். ஒவ்வொன்றிலும் அவரது கையெழுத்து!
“நல்ல விலை தரேன்! அத்தனையும் எனக்குத் தரீங்களா?”
“தாராளமா தம்பி! ஆனா ஒரு நிபந்தனை. வாங்கும் புத்தகங்களோடு இந்த வலைப் பின்னல் நாற்காலியை இலவசமா எடுத்துக்கணும். அதுல..” கடைக்காரன் கண் பயத்தோடு விரிந்ததை நான் கவனிக்க வில்லை.
மாறாக நான் கவனித்தது..
வலைப்பின்னல் நாற்காலியில் வாகாய் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த வாசு மாமாவைத் தான்.

அருமை. கலக்கிட்டீங்க
முடிவு பலே! கங்கிராட்ஸ்!
Excellent அதுவும் ending
மிக்க நன்றி
Thanks a lot
Thank you
Excellent
மிக்க நன்றி
நல்ல கற்பனை. விட்டுப் பிரிய மனம் இல்லாத வாசு மாமா.
மிக்க நன்றி சார்
கதை செம சூப்பர் அதிலும் முடிவு ரொம்ப ரொம்ப அருமை
கலக்கிட்டீங்க மாலா. கடைசி வரி சூபர்ப்
சுருக், நறுக் கதையும் முடிவும் தூள் மாலா!
நல்லா எழுதியிருக்கீங்க மாலா. கடைசி வரி முடிவு சூப்பர்
கீதா